பா
ல் கறந்து கொண்டிருக்கும்போது வேற்று மனிதர் யாராவது வந்தாலே பால் கறக்கும் மாடு ஏறக் கட்டிக் கொள்ளும். சரியாக ஒத்துழைக்காது போகும்.
பிடித்தமானவர் வந்து பால் கறந்தால் பால் அதிகம் இருக்கும்.
புதுமாடுகளைக் கொண்டுவந்து தொழுவத்தில் கட்டியதும் சாணி போட்டாலோ, நீர் விட்டாலோ சந்தோசமாகிவிடும் சம்சாரிகளுக்கு. வீட்டுக் குப் புதிதாக வந்தவர்களிடம் “சவுகரி மாக இருக்கிறீர்களா?” என்று விசாரிப்பதைப் போல “புதுமாடு சாணி போட்டதா?’’ என்று விசாரிப்பார்கள்.
எருது கட்டு மாடுகளுக்கு தொழுவம் அந்நியமாகவே தெரிந்துகொண்டிருப்பது நல்லது. வேற்று மனிதர்களைப் பார்க்க விடக் கூடாது.
முக்கியமாக கவனிக்கப்படக் கூடாதது சுழிகள்! யாவும் நற்சுழிகளாக அமைந்திருந்தால் அந்த மாடுகள் வேலையில் கட்டியடிக்கத்தான் லாயக்கு.
நல்ல பையனை யாரும் ‘சுழிப் பயல்’என்று சொல்லுவோமா?
எருது கட்டில் காளைகளை ஓட விடுவது இல்லை. நின்று ‘விளையாட’வைக்க வேண்டும்.
மக்கள் பதறாமல், சிதறாமல் உட்கார்ந்து பார்த்து ஆனந்தப் பட வேணும். மனிதனின் தோழன் மாடு அல்லவா!
‘கிட்டே வராதே முட்டுவேன்’ என்று அது காட்ட வேண்டும்; முட்டிவிடக் கூடாது என்பதுதான் விளையாட்டின் சாராம்சம். தந்திரம் காட்டி வெல்ல வேண்டும்; அதனிடம் - அது வைத்திருக்கும் - தங்கக் காசை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்வதற்குத் தோதாக அமைக்கப்பட்டிருக்கும். எப்படி?
ஆட வந்த மாட்டின் கழுத்தில் ‘பட்டரை வார்’என்று சொல்லப்படும் தோலினால் ஆன கழுத்துப் பட்டை இருக்கும். மூக்கணாங்கயிறு கிடையாது.
எருது வடம் (தேர் வடத்தைவிட சிறியது; கமலை வடத்தையும் விட பெரியது) அதன் நீளம் மைதானத்தின் சரிபாதி. ஒரு நுனி, மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு; மறு நுனி, பத்து இளவட்டங்களின் கைப் பிடியில் இருக்கும். யாருக்கும் பயம் இல்லை.
மாடு இடது பக்கம் போக ஆரம்பித்தால் இளவட்டங்கள் வலது பக்கம் போவார்கள். வலது பக்கம் போனால் இடது பக்கம்.
மாட்டினால் சுற்றிச் சுற்றிதான் வர முடியும். எருது கட்டுக் காளையைக் கொண்டுவந்த இரண்டு பேர் மூக்கணாங்கயிற்றை உருவிக்கொண்டு, காளையைக் கோபப்படுத்திவிட்டுப் போய்விட்டார்கள். கோபம் அடைந்த காளை முன்னத்தங்கால் குளம்பினால் தரையைப் பிறண்ட ஆரம்பித்தது. வடப் பிடிப்பை விலக்க சிலுப்பியது. மேலும் கோபம் அடைந்தது.
அப்போதுதான் ஓர் இளவட்டம் வருகிறான்; அதன் கொம்புகளின் நடுவில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க.
காளை வலது காலால் தரையை நோண்டுகிறதா? இடது காலால் நோண்டுகிறதா என்று இளவட்டன் கவனிக்கிறான். வலது கால் என்றால் இவன் இடது பக்கம் போக வேண்டும் என்பது கணக்கு.
அவனை நையாண்டி செய்வதுபோல மேளக்காரர்களின் வாசிப்பும், ஒலி அசைப்பும் இருக்கிறது. அந்த அடிப்பு, தரையில் கால்கள் நிலைகொள்ள முடியாமல் நாட்டியம் பண்ண வைக்கும்!
‘தொடு முனை’என்று ஒரு சொல் மாடுகள் சம்பந்தப்பட்டது. மாட்டைத் தொடவே வேண்டாம். கை அசைப்பே போதும். கூச்சம் என்றால் அப்படி ஒரு கூச்சம்.
இதுபோல மனுசரிலும் ஆணிலும் உண்டு, பெண்ணிலும் உண்டு. ‘பெண்ணிலுமா?’ அய்யோ அதை எப்படிச் சொல்ல!
“என்னய்யா சொல்றீங்க? எப்படிக் குழந்தைக் குட்டி பிறக்கும்? எப்படி குடும்பம் நடத்த?” என்று கேட்கிறீர்களா? சங்கடம்தாம்.
ஒரு உலக மகா ஜோதிடன் ஒருவன் இருந்தான். நாம, சொல் அகராதி தயாரிப்பது போல அவன் நட்சத்திர வாரியாக நேரம், விநாடி என்று ஒவ்வொரு நிலைக்கும் பலன் எழுத ஏடும், எழுத்தாணியுமாக உட்கார்ந்தான். குறிப்பிட்ட ஓர் இடத்தில் எழுதத் தொடங்கும்போது சந்தோசம் தாங்காமல் ‘‘அடியே அடியே…’’ என்று தன் பெண்டாட்டியைக் கூப்பிட்டான். அவளுக்கும் ஒரு சந்தோசம் வந்துவிட்டது.
நாள் கணக்காக பெண்டாட்டி முகம் பாராமல் ஏடும், எழுத்தாணியுமாக திரும்பிப் பாராமல் கிடந்தவன் திடீரென்று கூப்பிடுகிறானே!
‘‘அடியே நமக்கு கஷ்டமெல்லாம் போச்சி. நான் ராஜாவாகவும் நீ ராணியாகவும் ஆகப் போகிறோம். எப்படி என்றுதானே கேட்கிறாய்? சொல்றேன் கேட்டுக்கோ” என்று சொன்ன விசயம் இதுதான்:
“இன்ன நாள், இன்ன தேதி, இன்ன நட்சத்திர முகூர்த்தத்தில் தம்பதியர் கூடி சாந்தி செய்தால் அவர்களுக்கு உலகத்தை ஆளும் பிள்ளை பிறப்பான் என்று இருக்கிறது!” என்றான்.
“அப்படியா, அது எந்த நாள்? எந்த நேரம்?” என்று ஆசையாக ஆவலோடு கேட்டாள்.
“அது இன்றிலிருந்து நாலாம் நாள். நடு ராத்திரியில் வருகிறது” என்று சொன்னான்.
“அய்யோ இன்னும் நாலே நாள்தானே இருக்கு; செஞ்சிரலாமேங்கெ…” என்றாள்.
முடிவெடுத்துவிட்டார்கள்.
மறுநாள் அந்த ஊரின் மகா ராஜாவின் – அரண்மனையில் இருந்து - இவனுக்கு அவசரம் என்று அழைப்பு வந்தது. ஏதோ கட்டிடம் கட்ட நாள் பார்க்கணுமாம்.
போயிட்டு வந்திரலாமே. அரண்மனை ஆத்துக்கு அந்தப் பக்கம்தானே இருக்கு. படகிலேயே போய் படகிலேயே திரும்பிடலாம் என்று புறப்பட்டான். ராஜ தரிசனம் நல்ல சகுனம்தானே!
சன்மானங்களும் நிறையவே கிடைக்கும்.
‘‘போயிட்டு வந்திருங்கெ’’ என்று அவன் பொண்டாட்டியும் சொல்லிட்டாள்; இன்னும் ரெண்டுநாள் இருக்கே அதுக்கு” என்றாள்.
மறுநாள் மழை. சக்கைப் போடு போட்டது. எதிர்பார்க்கவே இல்லை. விடாமல் அடித்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. ‘‘படகு போகாது’’ என்றார்கள்.
இப்போது மழை பெய்ய வாய்ப்பே இல்லையே.
இது என்ன மழைக்காலமா? கோடை மழைதானே, பூமி குளிரட்டும், நல்லதுதானெ!
ஒருநாள் வீணாகிவிட்டது. பரவாயில்லை. காலையில் மழை வெறித்து வானம் துலாம்பரமாக இருந்தது.
மனைவி சந்தோசமாக வழியனுப்பி வைத்தாள். சரியாக அவளே அந்த நேரத்தைச் சொல்லி ஞாபகப்படுத்தினாள்.
ஆற்றைக் கடக்க படகில் கால் வைத்தபோது, படகில் ஒரு கண்ணுமாக வானத்தில் ஒரு கண்ணுமாக இருந்தான். தெரிந்த படகோட்டிதான். ‘‘இன்னைக்கு மழை வருமா?’’ என்று படகோட்டியிடம் கேட்டுப் பார்ப்பமெ என்று கேட்டார்.
அவன் சிரித்தான். ஜோதிடரே கேட்கிறார் நம்மிடம் மழை வருமா என்று!
மகாதேவனுக்கே தெரியாதாம் மழை எப்போப் பெய்யும், பிள்ளை எப்போப் பிறக்கும் என்று.
படகில் இருந்து தரையில் கால் வைத்ததும் அரண்மனையின் வண்டி வந்து தயாராகக் காத்துக் கொண்டிருந்தது ஜோதிடரைக் கூட்டிக் கொண்டு போக.
வண்டியிலிருந்து தரையில் கால் வைத்ததும் ஜோதிடரின் தலையில் நாலு தூற்றல் விழுந்தது.
“ராத்திரிக்குள் வீடு போய் சேர்ந்து விடுவமா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டார்.
- கதைகள் பேசும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago