வீ
ரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற 'செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்... மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது…
பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடு மைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள்.
தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆற அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் ஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.
பிள்ளையவர்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். 'பீச் ஸ்டேஷன்' கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.
ஆனால் இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலையத்தில் தங்கும்.
'எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்துவிட வேணும்' என்பது அவரது தினசரி உத்தேசம் - பிரார்த்தனை. எப்பவாவது... மீனம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளதுதேதி வரை, அந்த 'எப்பவாவது' என்ற எல்லைக்கு முடிவு காணவில்லை…
வண்டி, 'ஸ்டேஷன் பிளாட்பார'த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின்தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலையக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் ரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது பெண்ணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது - இவ்விதமாக 'பீச் ஸ்டேஷனை' நெருங்கிக்கொண்டிருக்கும்.
வண்டி மாம்பலம் வந்து நின்றது. 'பிளாட்பார'த்தில் ஜனக்கூட்டம்; ஏக இரைச்சல். கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக்கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தடியுமாக ஏறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி 'விசுக்' என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள்…
வந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் 'லாங் செயி'னுடன் ஒரு 'ஸ்டெதாஸ்கோப்'பும் அலங்காரத்துக்காக (?) தொங்கிக்கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான 'ஜாக்கெட்'…
கோடம்பாக்கத்தின் 'செமன்ட்' சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. 'பெத்துப் போட்டா போதுமா...' என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ள அவர் மனம் மறுத்தது…
சடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடுகிடாய்த்த சப்தம்; எதிரே ஓடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் - அப்பாடா! வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.
பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். 'எழும்பூர் தாண்டிவிட்டதா' என்று ஆச்சரியப்படுகிறார்.
பார்க் ஸ்டேஷன்!
கூட்டம் ஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் 'ஸீட்' காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள்? வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும்... வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.
மின்சார விசில்...
வண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா! ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக்கொண்டு கண்களை அரைவாட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு 'சிவா' என்றபடி கொட்டாவி விட்டார்.
கோட்டை தாண்டி ரெயில் 'தகதக'வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. 'வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்...
அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடும்... திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும்...'
வண்டி ஊதியது...
'அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா? போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன்... பயலெக் கண்டிக்கணும்.'
வண்டி வந்து நின்றது.
கீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கால் எட்டி வைத்தார்.
டிக்கட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.
-(1939-ல் எழுதப்பட்ட சிறுகதை)
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago