பெண் கதை எனும் பெருங்கதை- 6

By கி.ராஜநாராயணன்

ப்போது பாட்டி இருக்கிற இந்த ஓட்டை வீட்டின் எதிரே ஒரே சகதிக்காடு. மூணு வீடுகளின் கழிவுத் தண்ணீரும் வந்து கூடும் பொது இடம். ஆத்திர அவசரத்துக்கு இங்கேதான் ஓடி வருவார்கள். ஒதுங்குவார்கள். புழுத்து நாறும் பொது இடம்.

யாரோ வீசிப் போட்ட புளியம் பழக் கசடு. அதில் இருந்த ஒரு புளியங்கொட்டைக்கு முளைக்கும் திறன் இருந்திருக்கும் போல. ஈர மண்ணில் விழுந்த அந்தப் புளியங்கொட்டை தனது கருஞ்சிவப்புத் தோலை விட்டுவிட்டு, பசுமை நிறமாகி, உப்பி கனமாகி, இலைகளை விரித்துச் சூரிய ஒளிக்கு இடம் தந்து கும்பிட்டது போல் அகலித்து அதன் இடையில் குருத்திலைகளைக் காட்டியது.

அந்த இரு பருப்பு இலைகளும் தந்த பாலைப் பருகி இந்த இலைகள் பசுமையாகி, பார்த்துக் கொண்டிருக்கும்போதே நுள்ளி (தளிர்) இலைகள் பெரியதாகி குட்டிச் செடியாகத் தெரிந்தது.

ஒரே ஒரு ஆட்டுக் குட்டியின் கண்ணில் பட்டிருந்தாலும் போச்சு. அந்த நுனிச் செடி இந்தப் பாட்டியின் கண் பட்டதால் பிழைத்தது. அந்தச் செடிக்கும் ஒரு துணை, இந்தப் பாட்டிக்கும் ஒரு துணை.

அந்தச் செடிக்கு யாரும் நீர் வார்க்கவில்லை. உரம் வைக்கவில்லை. வேக வேகமாக வளர்ந்தது!

அந்த இளம் மரம் ஒருநாள் பருவம் அடைந்திருக்கும் போல. ஏற்கெனவே இருந்த பச்சை இலைகள் போக, புதுசாக மஞ்ச மஞ்சேரென்று கணக்கில்லாத தளிர் இலைகள் விட்டு நின்றது. அவ்வளவுதான்; மக்கள் அதன் மேல் பாய்ந்தார்கள். அந்தப் புது இலைகளைப் பறித்தார்கள். பருப்புக்கறி கடைவதற்கு முன்னால் அதில் போட்டு சேர்த்துக் கடைந்தார்கள்.

“இந்தா நீயும் சாப்பிடு. நானும் சாப்பிடுகிறேன்” என்று தின்றுவிட்டு, “அடடெ என்ன ருசி என்ன ருசி” என்று மாய்ந்து மாய்ந்து புகழ்ந்தார்கள்.

இது என்றைக்காவதுதான் கிடைக்குமாம்.

அந்த இளம் மரமும் பாட்டியும் சிரித்துக் கொண்டார்கள்!

பேருக்குத் தக்கபடி, இலைகளும் கூட புளிப்புதான். பெண்கள் பித்தளைக் குடத்தை விளக்குவதற்கு மரத்தில் இருந்து ஒரு கை புளி இலைகளை உருவிக் கொண்டு போவதைப் பார்க்கலாம். ‘பித்தளைக்குப் புளி’என்றே சொல்லப்பட்டிருக்கெ. எல்லா வகையிலும் புளி கைகொடுக்கும். ஆனால் ‘சூடு’என்று ஒரு அவப்பெயர் உண்டு அதற்கு.

விதவிதமான புளிப்புச் சுவைகள் இருக்கு. மண்ணுக்குத் தக்கன; தண்ணிக்குத் தக்கன; உரங்களுக்குத் தக்கன. இப்படியெல்லாம் உண்டு.

அந்த மரத்தின் கீழ் மனுஷ அழுக்குகள் கொண்ட சகதிதான் எப்பவும். இந்த மரத்தின் கீழ் புதைக்கப்பட்ட இறந்து போன முட்டு வீட்டுக் குழந்தைகளின் சடலங்கள் எண்ணற்றவை. மாட்டுக் கன்றுக் குட்டிகள் நல்ல நாள் பொழுதில் இறந்துபோனால் அவைகளை இந்தப் புளிய மரத்தின் கீழ்தான் புதைப்பார்கள்.

இந்த மரத்தின் புளியங்காய்களையும் பழங்களையும் ருசி பார்க்கக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காய்களெல்லாம் ‘சதக்காய்’ என்ற நோய் விழுந்து, அழுகி அழுகி உதிர்ந்தன. காய்களெல்லாம் பார்க்க பெரிசாக கொரடாக்காய்களாகத் தெரியும். ஒடித்துப் பார்த்தால் விதைகளெல்லாம் சூம்பிப் போய் அருவருப்பாகத் தோணும். வாயில் வைக்க விளங்காது.

இளம் பூம்பிஞ்சுகளை மட்டும் குழந்தைகள் பறித்துத் தின்றன.

ஒருநாள் ராத்திரி, அடையாளம் காண முடியாத வேற்றூர் பெண் ஒருத்தி எங்கிருந்தோ வந்து இந்த மரத்தின் ஒரு கிளையில் கயிறு மாட்டித் தொங்கி செத்துப் போனாள்.

அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் சாவது வழக்கம்தான். அடையாளம் தெரியாமல் போக வேண்டுமென்றே இப்படி செய்து கொள்வார்கள்.

ஊர்க்காரர்கள் கூடி, இனி அந்த மரம் ஊருக்குள் இருப்பது ஆகாது வெட்டி எரித்துவிட வேண்டும். மரம் இருந்தால் அந்தப் பெண் பேயாக வாசம் பண்ணுகிறாள் என்றார்கள். சின்னஞ் சிறுசுகள் நடமாடுகிற இடம் என்றார்கள்.

ஏதொன்றுக்கும் கூனிப் பாட்டியிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வோம் என்று கேட்டதுக்கு, “என்ன வேணாலும் செய்து கொள்ளுங்க; மரம் இருக்கிறதாலே எனக்கு பேய் பற்றிய பயம் ஒண்ணும் கிடையாது. நானே ஒரு பேய். என்னைக் கண்டுதான் ஊர்ப் பேய்கள் பயப்படணும்” என்று சொல்லிவிட்டாள் சிரித்துக் கொண்டே.

வீடு தேடி வந்த குழந்தைப் பாப்பாவை கூனிப் பாட்டிக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.

இப்படி இவர்கள் சீராடிக் கொண்டிருந்தபோது, பாப்பாவின் வீட்டு வேலைக்காரி இவளைத் தேடி வந்தாள்.

வந்தவள் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள். கூனிப்பாட்டி என்றால் எல்லோரையும் போல இவளுக்கும் ஒரு பயம்தான்!

நல்லவேளை பாப்பாக் குட்டி இருக்கிறாள். அவள் போட்டுக் கொண்டிருக்கிற வெள்ளி அறணாக் கயிறு இருக்கணுமே!

பாப்பாக் குட்டி தன்னைப் பார்க்கிற வரை தூரத்தில் நின்றுகொண்டே இருந்தாள் வேலைக்காரி. அப்படியும் இப்படியுமாக நடந்து பார்த்தாள். குட்டி இவளைப் பார்க்கிற மாதிரியே தெரியவில்லை.

தற்செயலாகப் பாப்பா இவளைப் பார்த்தாள். சிரித்தாள். ‘‘இங்கே வா...’’ என்று தலையால் கூப்பிட்டாள்.

“அம்மா ஒன்னெத் தேடுறாங்க…” அமைந்த குரலில் சொன்னாள் வேலைக்காரி.

பாப்பா பதில் தரவில்லை. ஆனால், போய்விட்டாள்.

இந்த ஓட்டை வீட்டில் இருந்து கொள்வது என்று தீர்மானித்து வந்தவளே கூனிப் பாட்டிதான்.

ரொம்ப வருசங்களாகவே இங்கேதான் இருக்கிறாள். பாட்டிக்குத் துணை அந்த சங்கு பாஸ் பூனை மட்டுமே.

எப்பவாவது பாப்பா போல குழந்தைகளும் வருவது உண்டு.

குழந்தைகளிடமும் பெரியவர்கள் சொல்லி பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.

சங்குபாஸ் கூட மத்தியில் வந்ததுதான். அதுக்கும் ஒரு துணை தேவைப்பட்டதுபோல.

எப்பேர்ப்பட்ட கீர்த்தி வாய்ந்த மனிதரும் கூட கடைசிக் காலத்தில் அநாதரவு ஆகிவிடுவார்கள்போல.

- கதை வரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்