கண்களைத் திருப்புங்கள்!
மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென குரலை உயர்த்தி, சத்தம் போடத் தொடங்கினார்.
‘‘என்ன பிரச்சினை?” என மேலாளர் வந்து கேட்கவே, ‘‘அந்த ஆள் ரொம்ப நேரமா நான் சாப்பிடுறதைப் பாத்துட்டே இருக்கான். என் இலையில் என்ன இருக்கோ, அதையே வாங்கித் திங்குறான். அடுத்த ஆள் பாத்துகிட்டே இருந்தா எப்படி சாப்பிடுறது” என ஒரு ஆளைச் சுட்டிக்காட்டி கத்தினார்.
‘‘சார் இது வீடு இல்லை. ஹோட்டல். நாலு பேரு பாக்கத்தான் செய்வாங்க. நீங்க சாப்பிடுங்க…’’ என மேலாளர் சமாதானம் சொன்னபோதும் அவர் அடங்கவில்லை.
‘‘அடுத்தவன் என்ன சாப்பிடுறான்னு பாக்கறதுக்கு அலையுறாங்க சார். அது ஒரு வியாதி, இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது’’ என்றார்.
இவ்வளவு சண்டைக்கும் காரணமாக இருந்தவர் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சத்தம் போட்டவருக்கு வேறு இடம் கொடுத்து வேறு இலை போடச்சொல்லி, புதிதாக அசைவ வகைகளைக் கொண்டுவந்து தரச் சொன்னார் மேலாளர்.
சத்தம் போட்டவர் உள்ளே எழுந்து போன பிறகு, அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் மேலாளர் , ‘‘அடுத்தவர் சாப்பிடுறதை எதுக்கு முறைச்சுப் பாக்கறீங்க… தப்பில்லையா?” எனக் கேட்டார்.
‘‘அந்த ஆள் எட்டு கோலா உருண்டை சாப்பிட்டான் சார். பிரியாணி, கோழி, கறி, மீனு, ஆம்லேட்.. எவ்வளவு திங்குறான்! அதான்.. ஆச்சரியமா பாத்துட்டு இருந்தேன்..’’ என வெளிப்படையாகக் கூறினார்.
பக்கத்து மேஜைகளில் இருந்தவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். மேலாளரும் சிரித்துவிட்டார்.
ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பது அவரவர் உடல்வாகையும், உழைப்பின் தேவையையும் பொருத்தது. சில நேரம் சிலர் ருசிக்காக அதிகம் சாப்பிடுவதும் உண்டு. ஆனால், அதை மற்றவர் கண்காணிப்பது என்ன பழக்கம்?
அந்த மனிதர் கோபித்துக்கொண்டது போல, அடுத்தவர் சாப்பிடுவதை வெறித்துப் பார்த்தது ஒரு நோய்தானா? ஹோட்டல்களில் என்றில்லை; ரயிலில், டீக்கடையில், திருமண விருந்தில் இப்படியான ஆட்களை நான் பார்த்திருக்கிறேன்.
அவர்களுக்கு தனது சாப்பாட்டைவிடவும் அடுத்தவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்ப்பதில்தான் கூடுதல் கவனம் இருக்கும். சில நேரம் அவர் என்ன ஆர்டர் செய்கிறாரோ, அதையே இவர்களும் ஆர்டர் செய்வார்கள். ஹோட்டலில் என்ன சாப்பிடுவது என்றுகூடவா சுயமாக முடிவு எடுக்க முடியாது!
ரயில் பயணங்களில் அடுத்தவர் பார்த்துவிடக்கூடாது என்று திரும்பி உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களையும் கண்டிருக்கிறேன். வட இந்திய ரயில்களில் இந்தப் பழக்கத்தைக் காண முடியாது. ரொட்டியோ, சப்பாத்தியோ எதுவாக இருந்தாலும் நமக்கும் ஒரு துண்டு கொடுத்துதான் சாப்பிடுவார்கள்.
பசிக்குத்தான் உணவு என்றாலும், அது எப்படி? யாரால்? எவ்வளவு? தரப்பட வேண்டும் என்பதில் ஆளுக்கு ஆள் ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். பருமனாக உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்பதும், ஒல்லியாக இருப்பவர்கள் குறைவாகச் சாப்பிடுவார்கள் என்பதும் வெறும் பொய். சிலர் சாப்பிடுவதற்காகவே பிறந்திருக்கிறார்கள். சிலர் பசித்த வேளையில் மட்டுமே சாப்பிடுகிறார்கள். சிலரோ சாப்பாட்டைக் கண்டுகொள்வதே இல்லை.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கதை இருக்கிறது. பூதம் ஒன்று மலையில் உள்ள குகையில் வசித்து வந்தது. என்ன கிடைத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுத் தீர்த்துவிடும். அந்த பூதம் தங்களை சாப்பிட்டுவிடக் கூடாது என பயந்து மக்கள் அதற்கு வண்டி வண்டியாகச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்தார்கள்.
அந்த ஊரில் ஒரு விறகுவெட்டி இருந்தான். அவனுக்கு ஏழு பிள்ளைகள். அவனது வருமானத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் போதுமான உணவு தர முடியவில்லை. ஒருநாள் அந்தப் பிள்ளைகள் பூதத்துக்குச் சாப்பாடு கொண்டுபோகிற வண்டியைத் துரத்திக்கொண்டு அதன் குகைக்குப் போனார்கள்.
பூதம் அவர்களைப் பார்த்து, ‘‘இங்கே எதற்காக வந்தீர்கள்?’’ என்று கோபமாகக் கேட்டது.
‘‘பசிக்கிறது. நீ சாப்பிட்டது போக மிச்சம் இருந்தால் எங்களுக்குக் கொடு..’’ என்று கேட்டார்கள்.
பூதம் கண்களை உருட்டியபடியே, ‘‘மிச்சமா.. அப்படி ஒரு விஷயமே என்னிடம் கிடையாது’’ என, கொண்டுவந்த மொத்த ரொட்டிகளையும் சாப்பிட்டு முடித்தது. பசியோடு ஏமாந்துபோய் ஏழு பிள்ளைகளும் வீடு திரும்பினார்கள்.
அடுத்த நாளும் இதுபோல அந்தப் பிள்ளைகள், பூதம் சாப்பிடும்போது மிச்சம் கிடைக்குமா என்று பார்க்கப் போனார்கள். பூதம் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
நான்காம் நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பூதம் அந்தப் பிள்ளைகளை ஏறிட்டுப் பார்த்தது. பூதம் சாப்பிடுவதை அவர்கள் நாக்கில் எச்சில் ஒழுக வெறித்துப் பார்த்த படியே இருந்தார்கள். அதைப் பார்த்தபிறகு பூதத்தால் சாப்பிட முடியவில்லை. தொண்டையை எதுவோ அடைப்பது போல இருந்தது.
அன்று பூதம் ஒரு துண்டு ரொட்டியை மிச்சம் வைத்தது. அதை ஏழு பிள்ளைகளும் ஆசை ஆசையாகச் சாப்பிட்டார்கள். அடுத்த நாள் அந்த பூதம் சாப்பிட உட்கார்ந்தபோது அந்தக் குழந்தைகள் வெறித்துப் பார்க்கவே, அது கோபம்கொண்டு அவர்களை விரட்டி அடித்தது.
அவர்கள் குகை வாசலில் நின்றபடியே பூதம் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்து வாயில் திணித்த பூதம், அப்படியே சாப்பாட்டை நிறுத்திவிட்டு அவர்களை வெறித்துப் பார்த்தது. ‘பாவம் இந்தக் குழந்தைகள். எலும்பும் தோலுமான உடல். எண்ணெய் இல்லாத தலை. கண்ணில் ஆசை. இவர்களைப் பார்க்கவைத்து எப்படிப் சாப்பிடுவது?’ என்று குழம்பியது.
பின்பு பூதம் ரொட்டிகளை அப்படியே வைத்துவிட்டு, அந்தப் பிள்ளைகளை அழைத்து சாப்பிடச் சொன்னது. அவர்கள் பசிதீர சாப்பிட்டார்கள். மறுநாளில் இருந்து அந்த பூதம், ‘‘இனி எனக்கு யாரும் சாப்பாடு கொண்டுவர வேண்டாம். பசியில் வாடும் குழந்தைகளுக்கு அந்த உணவைக் கொடுங்கள்…’’ என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டு, அந்த குகையைவிட்டுப் போய்விட்டது.
குழந்தைகளைப் பார்க்கவைத்துக்கொண்டு, கொடூரமான பூதம்கூட சாப்பிட முடியாது என அந்த பஞ்சாபிக் கதை கூறுகிறது. ஆனால், இந்த நவீன வாழ்க்கையில் பூதத்தை விடவும் கொடூரமான மனது கொண்டவர்கள் அதிகம் உலவுகிறார்கள். அவர்கள் தனக்கு போக மீதமான உணவைக்கூட யாருக்கும் தரமாட்டார்கள். ரயிலில், பேருந்தில், பொதுவெளியில் குழந்தைகளுக்கு ஒரு பிஸ்கட்கூட தரமாட்டார்கள்.
அடுத்தவர் வீட்டு உணவுக்கு தனி ருசி இருக்கிறது. அதைக் குழந்தைகள் அறிவார்கள். ஆனால், எப்படிக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது என்ற கூச்சம் அவர்களைத் தடுத்துவிடும். நாமாக கொடுத்தால், அவர்கள் சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடித்தபிறகு ரகசியமான குரலில் ‘நான் சாப்பிட்டதை எங்க வீட்ல சொல்லிராதீங்க…’ என எச்சரிக்கை தருவார்கள்.
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் இப்படி சிறுவர்களைச் சாப்பிடவைத்துப் பார்ப்பதுதான். இன்று பலருக்கும் அதுகூட புரியவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
கதை பேசும்… எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago