ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் வீரசந்தானம். 1947-ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோவிலில் பிறந்தவர். அப்பா வீரமுத்து ஒரு விவசாயத் தொழிலாளி. அம்மா பொன்னம்மா. இளமைக் காலம் முழுவதும் திருநாகேஸ்வரம், தாராசுரம், பட்டீஸ்வரம், உப்பிலியப்பன் கோவில் என்று கோயில்களிலேயே கழிந்தது. அவரது ஓவியங்களில் கோயில் கலையின் தாக்கம் வெளிப்படுவதன் பின்னணி இதுதான்.
அவரது ஓவியத் திறமை, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சேர வைத்தது. உப்பிலியப்பன் கோயிலிலிருந்து கல்லூரிக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்தே செல்வார். பல்வேறு கோயில்களில் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்து வரைவதில் தேர்ச்சி பெற்றார். அவற்றை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தைத் தனது கல்விக்குப் பயன்படுத்திக்கொண்டார். ஓவியக் கலைப் பட்டயப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் (1971). 1972-ல் சென்னை ஓவியக் கல்லூரியில் தொழில்துறை ஆடை வடிவமைப்பில் பட்டய மேற்படிப்பை முடித்தார். சென்னையில் படித்தபோது வறுமை காரணமாகப் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டார். இரவில் தங்க இடம் இல்லாமல் கடற்கரையில் தூங்கியிருக்கிறார். சில சமயங்களில் ஓவியக் கல்லூரியிலேயே இரவில் தங்கிவிடுவாராம். அப்போது சிற்பக் கலைஞர் தனபால் அவரது சிரமங்களைப் பார்த்துவிட்டுத் தனது வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார். அதை வீரசந்தானமே பல முறை நினைவுகூர்ந்திருக்கிறார்.
சென்னை ஓவியக் கல்லூரியிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் வீரசந்தானம். பின்னர் ராஜஸ்தானில் பனஸ்தலி வித்யாபீட் என்ற பல்கலைக்கழகத்தில் ஃப்ரெஸ்கோ (சிறப்பு சுவரோவியக் கலை) பயிற்சி முடித்தவர். படிப்பை முடித்த பின் நெசவாளர் சேவை மையத்தில் பணியாற்றினார். சென்னை, மும்பை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்தியாவின் பல பகுதிகளில் பணிபுரிந்தவர்.
பாலுமகேந்திராவின் ‘சந்தியாராகம்’ (1989) படத்தில் ஓவியக் கலைஞராகவே பிரதானப் பாத்திரத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘மகிழ்ச்சி’, ‘அரவான்’, ‘‘கத்தி’, ‘அநேகன்’ போன்ற படங்களில் நடித்தார். கி.ராஜநாராயணனின் கதையின் அடிப்படையில் இயக்குநர் வ.கெளதமன் இயக்கிய ‘வேட்டி’ உட்பட பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது, வனவிலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்துக்கான விருது, சிறந்த ஓவியருக்கான குடியரசுத் தலைவர் விருது என்று பல்வேறு விருதுகளை வீரசந்தானம் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். டெல்லி லலித்கலா அகாடமி, பெங்களூருவில் உள்ள கர்நாடகா அருங்காட்சியகம் என்று பல்வேறு இடங்களில் அவரது ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது ஓவியங்களில் தோல்பாவைக் கூத்துக்குத் தனி இடம் இருப்பதைக் காணலாம். பெங்களூருவில் பணிபுரிந்தபோது அந்தக் கலையின் மீதான தாக்கத்தை ஆடை வடிவமைப்பிலும் வெளிப்படுத்தினார். மறைந்துகொண்டிருந்த தோல்பாவைக் கூத்துக்கு மீண்டும் ஒரு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்ததில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் தோல்பாவைக் கூத்துக் கலைஞராக அவர் நடித்தது மிகவும் பொருத்தமானது! ஓவியக் கலையின் மற்றொரு வெளிப்பாடாக, நண்பர்களின் இல்லங்களுக்குக் கட்டிட வடிவமைப்பையும் செய்துதந்திருக்கிறார்.
மொழி, இனம், பண்பாடு சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் வீரசந்தானம். இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை வடிவமைத்தவர்.
1984-லேயே ‘இலங்கைத் தமிழர்கள் இனப் படுகொலை’ எனும் தலைப்பில் சென்னையில் ஓவியக் கண்காட்சி நடத்தியவர் அவர். காவிரிப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கனிமவளச் சுரண்டல்கள் என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்தார். கலைஞன் எனும் முகத்துடன் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பதைவிடவும், சமூகத்துடன் இரண்டறக் கலப்பதுதான் முக்கியம் எனும் எண்ணம் கொண்டவர் அவர். அதுதான் அவரது இறுதி மூச்சுவரை தொடர்ந்தது!
படம்: ரேகா விஜயஷங்கர்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago