சென்னையில் புத்தகக் கொண்டாட்டம்!

By கிருத்திக்

சென்னை எப்போதுமே மற்ற மாவட்டத்தினரைப் பொறாமை கொள்ள வைக்கிற நகரம். புத்தக வாசகர்களையும்தான். இன்னும் தமிழகத்தின் பல மாவட்டத் தலைநகரங்களை எட்டிக்கூடப் பார்க்காத புத்தகக் காட்சிகள், சென்னையில் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடக்கின்றன என்றால் சும்மாவா! அதுவும் பிரம்மாண்டமாக!

பபாசியால் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான புத்தகக் காட்சி பெரும் வெற்றியை அடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும’த்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இப்போது புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கிறது. நேற்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2015-ல் தொடங்கிய இந்த கண்காட்சி தற்போது மூன்றாம் ஆண்டை எட்டியிருக்கிறது. முதல் இரண்டு ஆண்டுகளும் 230 அரங்கங்களுடன் நடைபெற்ற இந்தப் புத்தகக் காட்சி, இந்த ஆண்டில் 254 அரங்குகள் எனும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில், கோடிக் கணக்கான புத்தகங்கள், வாசகர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

அடிக்கடி புத்தகக் காட்சி நடக்கிறது, இங்கே என்ன வித்தியாசம் என்ற கேள்வியுடன் நுழைபவர்களுக்கும் ஆச்சரியம் காத்திருக்கிறது. புத்தகக் காட்சி அரங்குகள் அமைப்பு, கருத்தரங்குகளில் எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவம், ராமானுஜர் 1000, மார்க்ஸ் 200, தமிழ் சினிமா 100 போன்றவற்றுக்குத் தலா ஒரு நாள் ஒதுக்கியது போன்றவையும் பாராட்டப்பட வேண்டியது.

இந்தப் புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களை தனி இணையதளம் மூலமும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாசகர்களைச் சென்றடைய வைத்திருக்கின்றனர் ஏற்பாட்டார்கள். தவிர, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களைத் திரட்டி ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சியை கடந்த 18-ம் தேதி, இதே ராயப்பேட்டை ஒய்.எம்சிஏ மைதானத்தில் நடத்தினார்கள். அதில் கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவிலிருந்து குழந்தை எழுத்தாளர் டிம்முரேயும் கலந்துகொண்டனர் என்பது சிறப்பு.

அதேபோல புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முந்தைய தினம் (20-ம் தேதி) “ஆணியாய் அறையப்படும் கல்வியை விதைகளாய்த் தூவுவது எப்படி?” என்ற தலைப்பில் ஓவியும் வரையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முக்கியமான ஓவியர்கள் பலர் கலந்துகொண்டு வரைந்த ஓவியங்கள், புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காற்றோட்டமான இடவசதி, பார்க்கிங் வசதி, பணமில்லா பரிவர்த்தனைகளுக்கான ஏற்பாடுகள் என்று களை கட்டுகிறது புத்தகத் திருவிழா.

“கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்காத நிலையில் தமிழ்ப் பதிப்புலகம் மிகவும் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி இப்போது வாசகர்களை மட்டுமே நம்பி உள்ளது. இதனை மேம்படுத்த, பள்ளி, கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து இந்தப் புத்தகத் திருவிழா நடத்துகிறோம்.

ஜனவரியில் பபாசி நடத்துவதால், ஜூலைதோறும் இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துகிறோம். எந்தப் பதிப்பகம் வெளியிட்ட நூலாக இருந்தாலும், விற்பனைக்குக் கிடைக்கிற அத்தனை நூல்களையும் இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறோம். இந்த ஆண்டு குறைந்தது 5 கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனையாகும் என்று நம்புகிறோம்” என்கிறார் புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பாரதி புத்தகாலயம் நாகராஜன்.

சென்னையில் புத்தகக் காட்சி களைகட்டும் அதே நேரத்தில் கோவை, கரூர், சேலம் போன்ற இடங்களிலும் புத்தகக் காட்சி தொடங்கி, நடந்துகொண்டிருப்பது புத்தகக் காதலர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

11 hours ago

இலக்கியம்

11 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

மேலும்