பெண் கதை எனும் பெருங்கதை 2: மனிதரை அண்டிப் பிழைக்கும் உயிர் ராசி

By கி.ராஜநாராயணன்

மனிதரை அண்டிப் பிழைக்கும் உயிர் ராசிகளில் கோழிக்குத்தான் முதல் இடம்.

பிரியமாக அவனால் வளர்க்கப்பட்டு அவனுக்கே தன்னை உணவுக்குத் தந்துகொள்கிறது, முட்டைகளுடன்.

ஆக்ரோஷமாக தங்களுக்குள் சண்டை போட்டு இவனை சந்தோஷப் படுத்துவதுடன், பிரியாணியாகவும் ஆகிறது.

‘கோழிநாள்’ என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிழமையாக இருக்கும். இந்த வீட்டில் சனிக்கிழமை என்று வைத்துக் கொண்டார்கள்.

“சனிக்கிழமை தலை முழுகி கோழி யடிச்சி” என்பது சொல்லாத ஒரு சொலவடை!

வாராத விருந்தாடிகள் மற்றக் கிழமை களில் வந்துவிட்டால் ‘கோழி’இல்லை என்று போகாது.

கடல் மீன்களைக் கருவாடாக்கி வைத் துக்கொள்வது போல ஆடுகளின் சதை களைப் பாடம் பண்ணி, காய வைத்து உப்புக் கண்டம் போட்டு வைத்துக் கொள்வார்கள். கருவாட்டுக் கறி என்பது போல் உப்புக் கண்டங்கறி வைத்து விருந்தினர்களை அசத்துவார்கள். அடைமழைக் காலத்தில் கீரை, காய் கறிகள், அருந்தலான காலங்களில் - உப்புக் கண்டம்தான் கை கொடுக்கும்.

‘கோழிக்கறி நாள்’களில் சின்ன வளுக்கு வேலைகள் பிட்டி நகண்டு விடும்.

முன் காலத்தில் மனுசன் வேட்டைக் காலங்களில் - கோழிகளை அடித் துத்தான் கொன்றிருப்பான் போலிருக்கு. “இன்னைக்கு கோழியடிக்கணும்” என்று தான் சொல்லுகிறார்கள்; ‘‘ஆட்டடித்துச் சோறு போடுகிறது’’ என்று சொல்வ தில்லையே!

கோழிக் கறியைப் பிரியமாகச் சாப்பிடு கிறவர்கள் கோழியைக் கொல்லுவதுக்கு மட்டும் ரொம்பப் பயப்படுகிறார்கள். “கொன்னாப் பாவம்; தின்னாத் தீரும்” என்கிற சொலவடை வேற சொல்லிக் கொள்கிறது.

இப்படிப் பெரிய்ய வீடுகளில் திங்கத் தான் ஆளுகள் உண்டு; கோழிகளைக் கொல்ல, ‘‘அய்யோ நா மாட்டேம்பா’’ என்று விலகிப் போய்விடுவார்கள் பெண்களும் ஆண்களும்.

ஆடுகள் என்றால் அதுக்கென்றே வெளி ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கென்று தனியாக, சம்பளம் கிடையாது. ஆட்டின் தலையும் உரித்த தோலும் அவர்களுக்கு.

வேடிக்கை பார்க்கக் கூடியிருக்கும் குழந்தைப் பிள்ளைகளை முதலில் பார்க்கவிட மாட்டார்கள்.

ஆட்டின் குரவளையை சூரிக் கத்தி யினால் அறுப்பதையும் பீச்சி வடியும் ரத்தத்தை சட்டியில் பிடிப்பதையும் பெரிய ஆட்களே பார்க்க சங்கடப்படுவார்கள். அந்த ரத்தத்தைப் பொரித்த ரத்தப் பொரி யலை மட்டும் தின்க பிரியப்படுவார்கள்.

குழந்தைகளைச் சந்தோஷப்படுத்த மட்டும் ‘சுவரொட்டி’யை எடுத்து சுவரில் வீசி எறிந்தால் அது பறந்து போய் சுவரில் ஒட்டிக்கொள்வது அனைவருக்கும் ஓர் அரிய காட்சிதான். அதற்கு மட்டும் தனி விலை; சூப் வைத்து சாப்பிட என்று.

ஆட்டின் குடலை எடுத்து அலசு அலசு என்று அலசி, அதைத் திருப்பிப் போட்டு அலசி என்று ஏகப்பட்ட வேலை வைக்கும்.

நாக்குகளும் வயிறுகளும் அப்படி விரும்பிக் கேட்கின்றன!

கோழிக் கறியில் இந்தச் சள்ளைகள் கிடையாது.

மறுநாளைக்கு அடிக்க வேண்டிய கோழிகளை முதல் நாள் ராத்திரியிலேயே பிடித்து, ஓடி விடாமல் இருக்க கால் களை தளைத்து - கட்டிப் போட்டு வைத்து விடுவார்கள். மறுநாள் ஒன்றைப் பிடித்து முதல் வேலையாக றெக்கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து விட்டால் பறந்து தப்பிக்க முடியாது.

கோழியின் தலையைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டால் சத்தம் எழுப்ப முடியாது. அதன் கால்களை மிதித்துக் கொண்டு கைப்பிடித் தலையை ஒண்ணு, ரெண்டு, மூணு என்று திருக வேண்டும். காலால் மிதித்துக் கொண்டு தலையை மேல் நோக்கி இழுத்தால், எமன் (சத்தங் காட்டாமல்) வந்ததும் தெரியாது போனதும் தெரியாது.

பக்கத்தில் சைவர்கள் இருந்தால் ‘சுச் சுச் சுச், பாவம்’ என்று சொல்லிக் கொள்வார்கள், பாவம்!

அந்தக் காலத்தில் வீடுகள்தோறும் ‘பிள்ளைக் கட்டில்கள்’என்று நிறையவே உண்டு. அதைப் பார்த்தால் ஒரு ‘கட்டில் போட்ட பிள்ளை’என்று தெரிந்துவிடும்.

அந்த வீட்டிலுள்ள பாட்டிமார்கள், ஆளுக்கொரு பிள்ளைக் கட்டிலைப் போட்டு உட்கார்ந்துக் கொண்டு கோழி களைப் பாடம் பண்ணும் வயனங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

முதலில் கோழிகளின் ரோமங்களை நீக்குதல், இதில் பாட்டிமார்களும் பங்கு கொள்வார்கள். பாட்டிமாரின் கண்களுக்குத் தெரியாத ரோமங்களை சுத்தமாக அப்புறப்படுத்த அக்கினி தேவனின் உதவி இல்லாமல் முடியாது. அவர்களுடைய செயல்களையும் மீறி ரோமங்களின் வேர்கள் சில இடங்களில் இருப்பது தெரியும். நகங்களால் நோண்டி எடுப்பார்கள்.

சிலபேர் தோலையே உரித்து எடுத்துவிடுவார்கள். கோழிக் கறியில் தோலை மிகவும் விரும்புபவர்கள் உண்டு. சிலர் வாழைப்பழத் தோல்களில் ருசி கண்டவர் போல.

இது முடிந்ததும் அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளிப்பாட்டி ஒரு சுத்தம் நடக்கும்.

கோழியின் மூக்கையும் கால் பகுதிகளையும் வெட்டி எறிந்துவிட்டதும், ‘விடுவிப்பது’ என்பது ஆரம்பமாகும்.

அறுத்து விடுவிப்பது, பிய்த்து விடுவிப்பது என்று ரெண்டு விதம். பிய்த்து விடுவிப்பது பலசாலிகளாலேதான் முடியும். தொடைப் பகுதிகள், றெக்கைப் பகுதிகள் என்று.

குடல் பகுதிகளில் வேண்டாத பகுதிகள் வேண்டிய பகுதிகள் என்று உண்டு. வேண்டாத - முக்கியமாக ‘பித்து’ என்கிற கசப்பு. இதை நீக்க மறந்துபோனால், கோழிக் கறியையே வாயில் வைக்க முடியாது. அப்படி ஒரு கசப்பு ஆகிவிடும்.

பிரித்த பாகங்களை நறுக்கத் தொடங்குவார்கள். எலும்புக் குழம்பு, கறிக் குழம்பு என்று ரெண்டு வகையும் உண்டு. இதிலும் ரெண்டு பிரியங்களும் ருசியும் உண்டு.

அடுப்பில் குழம்பு கொதிக்கும்போதே மனம் கிளர்ந்து பரவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

இப்படியான ஒரு ராத்திரி நேரத் தில்தான் மன்னர் கிருஷ்ணதேவராயரும் மகா மந்திரி அப்பாஜி இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார்களாம். எங்கிருந்தோ கோழிக் கறி கொதிக்கும் மணம் வந்தது.

ராயர் “அப்பாஜீ…” என்று அழைத்து முடிக்கவில்லை. “உப்பில்லை மகாராஜா” என்றாராம் அப்பாஜி!

“ஒரு மந்திரின்னா அம்புட்டு சூட்டிக்கையா இருக்கணும்” என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

கிராமத்தில் கோழிக்கறி மணக்கும் போதெல்லாம் இந்தக் கதைத் துண்டும் வெளிப்படும்.

-கதை வரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்