இழிவின் நிறமா மஞ்சள்?

By ந.வினோத் குமார்

தினம் தினம் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் செப்டிக் டாங்குகளிலும், பொதுக் கழிவறைகளிலும், பாதாள சாக்கடைகளிலும் இறங்கிக் கைகளால் மலத்தை அள்ளும் மக்களுக்கு எப்படியான உடல் உபாதைகள் நேர்கின்றன என்பதை நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? மலக்குழியில் மனிதர்கள் இறப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு எதிராக அவ்வப்போது பொதுநல வழக்குகளும், விவாதங்களும், கலைச் செயல்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. அப்படி ஒரு முயற்சிதான் ‘மஞ்சள்’. திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘நீலம்’ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த மேடை நாடகம் ‘கட்டியக்காரி’ நாடகக் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 30-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பாஷா சிங் எனும் பெண் பத்திரிகையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் ‘அன்ஸீன்’. இது தமிழில் ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பயணித்து, மலம் அள்ளும் பல்வேறு தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் நேர்காணல்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் கையால் மலம் அள்ளும் இழிவை இந்தப் புத்தகத்தில் பாஷா சிங் ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து பத்திரிகையாளர் ஜெயராணி கதை எழுதியுள்ளார். அதற்கு, ‘கட்டியக்காரி’ குழுவைச் சேர்ந்த ஸ்ரீஜித் சுந்தரம் நாடக வடிவம் கொடுத்துள்ளார்.

மலம் அள்ளுபவர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதுடன் தொடங்குகிறது நாடகம். மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகள், சமூகத்திடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் அவமதிப்பு, பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் கிண்டல் என்றெல்லாம் அவர்களின் பிரச்சினைகள், பிரச்சார நெடியில்லாமல் நாடகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கதையின் முக்கிய அம்சமாக, மலம் அள்ளும் கொடுமைக்குப் பின்னுள்ள சாதியக் காரணங்கள் அலசப்படுகின்றன. அதில் காந்தி, அம்பேத்கரின் கருத்துகள் பேசப்படுகின்றன. மலம் அள்ளுவது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பதையும், மலம் அள்ளும் தொழிலை விட்டு வேறு வேலைக்குச் சென்றாலும், அவர்களின் கடந்த காலம் அவர்களை எப்படி நெருக்குகிறது என்பதையும் சொல்லும் காட்சிகள் மிகவும் நீளம். கதையை இன்னும் கொஞ்சம் ‘எடிட்’ செய்திருக்கலாம்.

ஆந்திரத்தில் உலர் கழிவறைகளை எதிர்த்துப் போராடிய துப்புரவுத் தொழிலாளி நாராயணம்மாவின் வாழ்க்கை பற்றித் தந்திருக்கும் சில நிமிட அறிமுகம், மனிதக் கழிவுகளை அகற்ற இன்னமும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்காமல் இருப்பது அல்லது கண்டுபிடிக்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பற்றிய அரசியல், ‘துப்புரவுப் பொறியியல்’ தொடர்பான அறிவியல் போன்ற விஷயங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டமும் இந்த நாடகத்தில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

மலம் அள்ளும் ஒருவர் எதிர்கொள்ளும் கொடுமையான தருணம் எது? மலத்தைக் கையால் அள்ளுவதா? பாதாளச் சாக்கடையில் முங்கி எழுவதா? மலச்சட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு போகும்போது மழை பெய்வதா? இதனை விளக்கும் காட்சியில் ‘ரேடியோ சிட்டி’ பண்பலையின் ‘லவ் குரு’ நிகழ்ச்சியைப் பயன்படுத்திப் புதுமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.

“சாவுல என்ன இழிவு… ஆனா எங்களோடது இழிவான சாவு”, “எங்களைப் பார்த்து அருவருக்கும் மனிதர்களின் குமட்டலைவிட, இந்த நாத்தமே தேவலை”, “‘மலம் அள்ள வா’ன்னு சில பேரு எங்களை வற்புறுத்துவாங்க. அந்த வற்புறுத்தல் சில சமயம் மிரட்டலாகவும் இருக்கும்”, “மலம் அள்ளுறது தொழில் இல்ல… சாதிக் கொடுமை” என்பது போன்ற வசனங்களும், நாடகத்தின் இடையே வரும் பாடல்களும், பார்வையாளர்களிடம் கைதட்டல்களைப் பெறுகின்றன.

மலத்தின் நிறம் மஞ்சள். அந்த மஞ்சள், நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு மங்களம். ‘ஆனால், அது எங்களுக்கு நாத்தம். அவமானம். அடிமைத்தனம்’ என்று மலம் அள்ளுபவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலாக இந்த நாடகம் அமைகிறது. ‘உங்களின் சாதி எனும் சாட்டைதான் எங்களை மீண்டும் மீண்டும் மலக்குழியில் இறங்க வைக்கிறது. உங்களால் அந்த சாதிச் சாட்டையைத் தூக்கிப் போட முடியுமா?” என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த ‘மஞ்சள்!’ அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதில் இருக்கிறது, மனிதநேயத்துக்கான விடியல்!

- ந. வினோத்குமார், தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

படங்கள் உதவி: ஆனந்த் சம்பத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

22 days ago

இலக்கியம்

22 days ago

மேலும்