வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண்

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல்.

புயலின் கண்

எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்.

பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்துவிடும். ‘‘ரொம்ப ரேர் புக் சார். 500 ரூபா குடுங்க’’ என்று ஆரம்பிப்பார்.

‘‘சும்மா படிக்கலாம் என நினைத்து எடுத்தேன். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’’ எனத் தவிர்த்துவிட்டு நடந்தால், சற்று பேரம் இறங்கிவரும். பழைய புத்தக வியாபாரிகள் தனி ரகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் பேரம் பேசுவதை விரும்பவே மாட்டார்கள். அவர்கள் சொல்கிற விலைதான். அதேநேரம் நாம் தொடர்ந்து அவரிடம் புத்தகம் வாங்கினால் அரிய புத்தகங்களைக் கூட இலவசமாகத் தந்துவிடுவார்கள்.

சென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைகளின் சங்கமம். எரிந்து போவதற்கு முந்தைய மூர் மார்க்கெட்டில் நிறையப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அது போலவே ஓல்டு டெல்லியில் தரியாகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் கிதாப் பஜாரை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் போதாது. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும்.

புதுவையில் ஞாயிறு மாலை நடைபாதை புத்தகக் கடைகள் அதிகம் உண்டு. சென்னையில் திருவல்லிக்கேணி, மாம்பலம், அசோக்பில்லர், அண்ணா சாலை, சென்ட்ரல், அடையாறு, எக்மோர், மயிலாப்பூர் எனப் பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. திருச்சியில் மலைக்கோட்டை அருகில், மதுரையில் ரீகல் தியேட்டர் முன்பு, நேதாஜி சாலையில் நியூ சினிமா தியேட்டர் பக்கம் உள்ள சந்தில் பழைய புத்தகக் கடைகள் உண்டு.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், பழநி பேருந்து நிலைய வாசலில், கோவை ராஜவீதியில், சேலம் ரயில் நிலையம் எதிரில், பெங்களுர் எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு, மற்றும் மைசூர் பேங்க் சர்க்கிள், காரைக்குடி மலர் லாட்ஜ் எதிரில் என ஒவ்வோர் ஊரிலும் சிறந்த நடைபாதை புத்தகக் கடைகள் இருக்கவே செய்கின்றன. .

ஒருமுறை அண்ணா சாலையில் உள்ள பழைய புத்தகக் கடையில் பிரெஞ்சு எழுத்தாளரான ழான் ஜெனேயின் தீப்ஸ் ஜெர்னல் என்ற அரிய புத்தகம் தற்செயலாகக் கிடைத்தது. கடைக்காரர் அதற்கு 400 ரூபாய் கேட்டார். அது சந்தையில் விற்பனையில் இல்லாத புத்தகம். பேரம் பேசி படியவில்லை. பரவாயில்லை விட்டுவிடு வோம் என மனமில்லாமல் அதை புத்தகக் குவியலிலேயே போட்டுவிட்டுத் திரும்பினேன்

நல்ல புத்தகத்தைப் பாக்கெட்டில் பணம் இல்லாத காரணத்தால் இழந்துவிட்டேனே என மனம் அடித்துக்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே புத்தகக் கடைக்குப் போனபோது அதே புத்தகம் கிடந்தது. கடையில் இப்போது புத்தகக் கடைக்காரரின் மகன் இருந்தார். அவரிடம் ஜெனேயை கையில் எடுத்து எவ்வளவு என்று கேட்டேன். ‘‘20 ரூபாய் கொடுங்கள்’’ என்று சொன்னார். ஆஹா அதிர்ஷ்டம் என உடனே பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். அறைக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவரின் பெயர் கையெழுத்து இடப்பட்டிருந்தது. அவர் ஜெனே எல்லாம் படிப்பவர் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அதை லண்டனில் வாங்கியிருக்கிறார் என்ற குறிப்பும் இருந்தது.

கையில் கிடைத்த ஜெனேயின் புத்தகத்தை ஊருக்குக் கொண்டுபோய் ஒரு மாதகாலம் சுற்றுக்கு விட்டுப் படித்தோம், இப்படி பழைய புத்தகக் கடைகளின் வழியேதான் உலகின் மிகச் சிறந்த நாவல்கள், கட்டுரைகள், ஓவிய நூல்கள் எனக்குக் கிடைத்தன சமீபமாக திண்டுக்கல்லில் பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்தபோது நீலவண்ணன் எழுதிய ‘12 மணி நேரம்’ என்ற புத்தகம் கிடைத்தது. 1978-ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இலங்கையைத் தாக்கிய பெரும் சூறாவளியைப் பற்றி முழுமையான நேரடி அனுபவத்தை விவரிக்கிறது இந்தப் புத்தகம். நீலவண்ணன் ஈழத்து எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுபோன்ற சிறப்பு நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், நீலவண்ணனின் புத்தகம் அந்த எண்ணத்தைக் கைவிடச்செய்தது.சென்னையைச் சுனாமி தாக்கியபோது நான் ஐஸ்ஹவுஸ் பகுதியில் மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தேன். என் கண்முன்னேதான் பேரலையில் தப்பி மனிதர்கள் கூக்குரலோடு ஓடினார்கள். நானும் நண்பர்களும் உடனடியாக அங்கிருந்து இடம் பெயர்ந்தோம். அதனை அடுத்த சில நாட்களில் சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டபோது அடைந்த மனத்துயரை இப்போது நினைத்தாலும் வலிக்கவே செய்கிறது.

இந்தப் புத்தகத்தை வாசித்தபோது சுனாமியின் நினைவுகள் கொப்பளிக்கத் தொடங்கின. தமிழ்நாட்டை ஆண்டுக்கு ஒருமுறை புயல், சூறாவளி தாக்குகிறது. ஆனால், புயல் என்பது என்ன, அது எப்படி உருவாகிறது, அதன் வேகம், திசை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, சூறாவளி தாக்குதலில் என்ன நடக்கிறது, இதைத் தடுக்க நாம் செய்ய வேண் டியது என்ன, என்பது குறித்து விரிவான தகவல்கள் கொண்டபுத்தகங்கள் தமிழில் இல்லை.

இயற்கை பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும், அதற்காக எழுதப்படும் புத்தகங்கள் தமிழில் குறைவு. வரதர் வெளியீடாக 1979-ல் வெளியாகியுள்ள ‘12 மணி நேரம்’ என்ற புத்தகம், ஓர் ஆவணப்படத்தைக் காண்பதைப் போல சூறாவளியின் தாக்குதலை நுட்பமாக விவரிக்கிறது.

உலகில் எங்கெங்கே, எப்போது, எப்படி, சூறாவளிகள் உருவாகின? அதன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் எப்படியிருந்தன என்பதை விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களுடன் எளிமையாக விவரிக்கிறது. மேற்கிந்திய தீவுகளில் சூறாவளியை ஹரிக்கேன் என்பார்கள். கிழக்காசிய நாடுகளில் தைபூன் என அழைக்கிறார்கள். சூறாவளி நாட்களில் ஏற்றப்படும் விளக்கின் பெயரே ஹரிக்கேன் விளக்கு. அதை மக்கள் அரிக்கேன் விளக் காக மாற்றிவிட்டார்கள் என்கிறார் நீலவண்ணன்.

சூறாவளிக்கும் கண் இருக்கிறது. அதை உட்கருப் பகுதி என்பார்கள். சூறாவளி பெரும்பாலும் ஒற்றைக்கண் அரக்கனே. இந்தக் கண்ணின் விட்டம் 10 மைலில் இருந்து 20 மைல் வரை இருக்கும். கடல் அலைகள்தான் சூறாவளியின் தூதுவர்கள். அதன் வருகையை முன்கூட்டி அறிவிப்பதே கடலின் வேலை. மட்டகிளப்புப் பகுதியை சூறாவளி கடுமையாகத் தாக்கியது. ஊழிக் கூத்துவைப் போல அது நடந்தேறியது. கரைபுரண்டு ஓடிய வெள்ளம், அதில் சிக்கி தவித்த உயிர்கள், இடிந்து போன வீடுகள், முறிந்த மரங்கள், அடித்துக்கொண்டு போன பொருட்கள், ஐந்தாயிரம் பேர்களுக்கும் மேல் காயம் அடைந்த துயரம் எனச் சூறாவளியின் அகோரப் பசியை விரிவாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் நீலவண்ணன்.

இயற்கை பேரிடர் குறித்த முதன்மையான ஆவணங்களில் ஒன்றாகவே இதைக் கருதுகிறேன். பழைய புத்தகங்கள் நடைபாதை கடைகள் மட்டுமின்றி, இன்று இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 100 வருஷங்களுக்கு முன்பு வெளியான ஒரு நூலை வாசிப்பதற்கு, முன்பு ஆவணக் காப்பகங்களைத் தேடிச் செல்ல வேண்டும். இன்று, அவை இணையத்தில் எளிதாக வாசிக்கக் கிடைக்கின்றன. இப்படி கையருகே அரிய புத்தகங்கள் கிடைத்தாலும் அதைத் தேடி வாசிப்பவர்கள் குறைந்து கொண்டேதான் வருகிறார்கள், கடந்த 30 ஆண்டுகளாக பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைந்து எனக்கு சுவாச ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது, ஆனாலும், அந்தப் பழக்கத்தை நிறுத்தவே முடியவில்லை.

காரணம், பழைய புத்தகக் கடை என்பது ஒரு புதையல் சுரங்கம். எப்போது என்ன கிடைக்கும் எனச் சொல்லவே முடியாது. புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையாக எனக்கு வேறு எதுவுமில்லை. ராமபாணம் என்றொரு பூச்சி புத்தகத்துக்குள் உயிர் வாழும் என்பார்கள், ஒருவேளை நானும் ஒரு ராமபாணம்தானோ என்னவோ!

- இன்னும் வாசிப்போம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்