புத்தம் வீடு 52 : ஒரு பனங்காட்டு கிராமத்தின் கதை

ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதி, 1964 ஜூன் மாதத்தில் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட ‘புத்தம் வீடு’ நாவலை, அரை நூற்றாண்டு கடந்த பின்பு இப்போது வாசிக்கும்போதும் அது புத்துணர்வைத் தருகிறது. பெண்கள் எழுதுவது மிக அபூர்வமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில், இதை 15 நாட்களில் எழுதி முடித்திருக்கிறார் அவர்.

ஹெப்ஸிபா சித்தரிக்கும் பனைவிளை கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகே உள்ளது. அங்கு கண்ணப்பச்சி என்னும் மூப்பர் தலைமையிலான ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை புத்தம் வீடு. வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் கதையென்றும் சொல்லலாம்.

புத்தம் வீடு கதை நிகழும் காலம், 19-ம் நூற்றாண்டு எச்சங்கள் முழுவதும் காய்ந்திராத தருணம். 9-வது அத்தியாயத்தில் நாவலின் காலம் சூசகமாக உணர்த்தப்படுகிறது. இக்காலத்தில்தான் தமிழகக் கிராமங்களுக்குள் கிறிஸ்தவம் வேகமாக ஊடுருவுகிறது. அப்படிக் கிறிஸ்தவர்களானவர்கள் கண்ணப்பச்சி குடும்பத்தினர். ‘கிறிஸ்தவ ஆலயத்துக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, கிறிஸ்துமஸ் கர்த்தர் பிறப்புப் பண்டிகை என்றும், துக்க வெள்ளியன்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள் என்றும் தெரியுமே தவிர ஏசுநாதரைப் பற்றிய மற்ற விவரங்கள் ஒன்றும் தெரியாது’ என்று புதிதாக மதம் மாறியவர்களின் அறியாமையை ஓரிடத்தில் ஹெப்ஸிபா சுட்டிக்காட்டுகிறார்.

பனையேறிகளின் வாழ்வு

பனைவிளை கிராமவாசிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கின்றனர். முதல் பிரிவினர் பனைமரங்களைச் சொந்தமாக்கித் தங்களுக்கென்று பனையேறிகளைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டு கள்ளும் பதநீரும் இறக்கி விற்று அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ளும் மேட்டுக்குடியினர். இரண்டாது பிரிவினர் பனையேறும் சிரமமான தொழிலை மேற்கொள்ளும் பனையேறிகள். சமூக அடுக்கில் இந்தப் பனையேறிகள் கீழ்த்தட்டைச் சார்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த வர்க்க பேதம் கண்ணப்பச்சி முதல் நாவலின் மையக் கதாபாத்திரமான லிஸி வரைக்கும் உள்ளோடி உறைந்து கிடக்கிறது.

பனையேறிகளின் வாழ்க்கை, நாவலில் மிகுந்த அழுத்தத்துடனும் அழகுணர்ச்சியுடனும் சித்தரிப்புப் பெறுகிறது. பனைவிளை கிராமத்தில் மார்கழி மாதம் பனையேற்றுக் காலம். கிராமவாசிகளின் வாழ்வில் ஒருவித புத்துணர்வு தட்டுப்படும் காலமும் அதுதான். சேலை கட்டத் தெரியாத பனையேறிகளின் வாழ்க்கைத் துணைவியர் புதுச்சேலை கட்டுவதும், சந்தையிலிருந்து திரும்பும் பனையோலைத் தோண்டிகளில் உற்சாகம் விளைவிக்கத்தக்க ‘கிளாத்தி’ என்னும் மீன்வகை தட்டுப்படுவதும், கள் மலிவாகக் கிடைப்பதும் அக்காலத்தில்தான். சண்டை, குத்துக்கொலைகளுக்கும் அப்போது பஞ்சமிருந்ததில்லை.

இந்தப் பனையேறிகள் சிறு பிராயத்திலேயே பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து நிறுத்திக்கொள்கிறார்கள். வசதியின்மையும், பரம்பரைத் தொழிலும் அதற்குக் காரணமாகச் சுட்டப்படுகிறது. உழைத்துச் சம்பாதித்து ஓரளவு செல்வம் சேர்த்துக்கொண்ட பிறகும்கூடப் பனையேறிகளிடமுள்ள அடிமை உணர்வு அகலுவதில்லை. புத்தம் வீட்டு கண்ணப்பச்சி போன்ற ஆதிக்க சக்திகளும் அவர்களிடம் அதைத்தான் எதிர்பார்க்கின்றனர். “ஆரு பிலே அங்கே நிக்யது?” “நாந்தா ஐயா” “நாந்தாண்ணா?” “நாந்தா பனையேறி”. அன்பையன் தனக்கென்று 50 செண்ட் நிலம் வாங்கி வீடு கட்டிக்கொண்ட பிறகான கண்ணப்பச்சியுடனான உரையாடல் தன்மை இத்தகையது.

அக்கானி எனப்படும் பதநீர்க் கலசங்கள், விறகு கிடைப்பதிலுள்ள கஷ்டம், தும்பெடுப்பதற்கு அறுக்கும் பற்றைகளின் தராதரம், அக்கானிக்கு அடுப்புக்கூட்டி நெருப்பில் காய்ச்சுவதிலுள்ள பாடுகள், காய்ச்சிக் கருப்பட்டிகளாக்கி சந்தையில் சென்று விற்பனை செய்வது முதலான தகவல்கள் நாவலில் கதையோட்டத்துடன் இணைத்துக் கூறப்படுவது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

பனையேறிகள், பனையேற்றம், அக்கானி காய்ச்சுதல் என்னும் தொழில் சார்ந்த விவரிப்புகளுக்கிடையில் புத்தம் வீட்டின் நிகழ்வுகள் நாவலில் அடுக்கடுக்காக விவரிப்புப் பெறுகின்றன. வீட்டின் முகப்பான ‘அடிச்சுக் கூட்டில்’ இரண்டு பெஞ்சுகளைச் சேர்த்துப் போட்டுக்கொண்டு நீண்ட பனைமரம் போலத் தூங்குகின்ற பெரியவர் கண்ணப்பச்சியை நாவலாசிரியர் பழைய நிலப்பிரபுத்துவத்தின் தூர்ந்துபோன குறியீடு போலக் காட்டுகிறார். ஆனால் பனைவிளையில் புஞ்சை நிலங்களே கிடையாது. அது ஒரு வறண்ட பனங்காடு.

லிஸி புத்தம் வீட்டின் குல விளக்காகக் கருதப்படுகிறாள். ஆனால் பதினான்கு வயதில் ‘பெரிய பிள்ளை’ ஆனதும் குல வழக்கப்படி ‘இற்செறிப்பு’ அவள்மேல் திணிக்கப்படுகிறது. அதுவரை மிஷன் வீட்டுக்கும் புத்தம் வீட்டுக்குமாகத் துள்ளித் திரிந்தவள் வீட்டுக்குள் முடக்கப்படுகிறாள். கல்வி மறுக்கப்படுகிறது. கோயிலுக்குச் செல்லவும் தடை. ‘இற்செறிப்பு’ சங்க காலத்திலிருந்தே தொடரும் ஒரு வழக்கம். தமிழ்நாட்டின் அனைத்துச் சமூகங்களிலும் இது பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. இன்றளவும் நடைமுறையிலுள்ளது. இஸ்லாமியப் பெண்களுக்கு விதிக்கப்படும் ‘கோஷா’ இவ்வகையைச் சார்ந்தது. இதனாலேயே சென்ற சில தலைமுறைகளைச் சார்ந்த இஸ்லாமியப் பெண்கள் கல்வியறிவற்றவர்களாயினர்.

மிஷன் வீட்டின் வருகை

புத்தம் வீட்டுக்குள் ஒரு மிஷன் வீடு வருகிறது. அந்தப் பழைய சின்னஞ்சிறு மிஷன் வீட்டின் சுத்தமும் அமைதியும் லிஸியைக் கவர்கின்றன. அங்கே மேரியக்கா இருக்கிறாள். அவள் அன்பானவள். லிஸிக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத, முன்பின் யாரும் தந்திராத ‘ப்ரசென்று’ அவள் தருகிறாள். அது கூண்டுக்குள் இருக்கும் ஒரு மைனா. மேரியின் சகவாசத்தில் அது ‘லிஸீ... லிஸீ...’ என்று கத்துகிறது. லிஸிக்கு அது தாங்கவொண்ணாத ஆச்சரியம். ‘இற்செரிப்பு’ திணிக்கப்பட்டதில் லிஸிக்கு இழப்பு இந்த மிஷன் வீடு.

தங்கராஜ் மீதான லிஸியின் காதலுக்கும் பெரிய அத்தியாயம் எதுவுமில்லை. சொற்ப அவகாசத்துக்குள் அது வாசகனுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறது. லிஸிக்கும் அவளுடைய சித்தப்பன் மகள் லில்லிக்குமான உறவு வலுவாகச் சொல்லப்படுகிறது. லிஸி தூக்கி வளர்த்த பெண் லில்லி. தனக்கு வாய்த்த மணமகன் லில்லியை விரும்புவதாகக் கூறும்போது லிஸி அடையும் துயரமும், தங்கராஜ் - லிஸி இருவரின் காதலை அறிந்துகொண்ட லில்லி, லிஸியைக் கடிந்துகொள்வதுமான பாசப் போராட்டத்தையும் நாவலில் எதிர்கொள்கிறோம்.

புத்தம் வீடு சுமார் 200 பக்கங்கள் மட்டுமே கொண்ட நாவல். இதில் சொல்லப்படாத விஷயம் என்று எதுவுமில்லை. இந்தக் கச்சிதமான வடிவம்தான் இந்நாவல் மீதான வாசகக் கவனத்துக்குக் காரணம். ஹெப்ஸிபா எழுதிய பனைவிளை கிராமம், இந்த இடைவெளியில் பெரும் வளர்ச்சியையும், மாற்றங்களையும் கண்டிருக்கக்கூடும். ஆனால் புத்தம் வீடுகளுக்கும் பனையேறிகளுக்கும் இடையிலான முரண்கள் மாறிவிட்டனவா? ஏனெனில் கண்ணப்பச்சிகள் காலம்தோறும் வெவ்வேறு ரூபங்களில் வந்து கொண்டேயிருப்பார்கள். ஒரு குக்கிராமத்தையும் கூட்டுக் குடும்பத்தையும் முன்வைத்துப் பெரிதும் இந்நாவலாசிரியர் பேச விழைவது அவ்வகை முரண்களையே. பனையேறியுடன் சமரசமாகிக்கொள்வதற்கும் அவர்களுடனான உறவுக் கலப்புக்கும் புத்தம் வீட்டார் சம்மதிப்பது, பெரிய நெருக்கடிகளை முன்வைத்தே. இந்த நெருக்கடிகளை உருவாக்குபவர்களாக அன்பையனும், தங்கராஜும் இருக்கிறார்கள்.

உடமையாளனைவிட அவனிடத்தில் உழைப்பவன் எந்த விதத்தில் குறைந்தவன் என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பி, அதற்குத் தீர்வு காண்கிறது இந்நாவல். எனவேதான் எழுதப்பட்ட காலத்திலும் அதன் பிறகும் இந்நாவல் முக்கியமானதாகிறது. இதுபோன்ற படைப்புகளின் தேவை எப்போதைக்குமானது.

பனைகள் மண்டிய ஒரு குக்கிராமத்தை அதன் அசலான நெடியுடன் வாசகனுக்கு அறிமுகம் செய்வதில் ஹெப்ஸிபா வெற்றிபெறுகிறார். அரை நூற்றாண்டுக்கும் முன்னர் ஒரு பெண் இச்சாதனையை நிகழ்த்தியிருப்பது விசேஷமானது. விவரணைகளை முறைசார் உரைநடையிலும், உரையாடல்களைக் குமரி மாவட்டத்தின் கொச்சை வழக்கிலும் அமைத்துள்ளார். தலைப்பிடப்பட்ட தெளிவான அத்தியாயப் பிரிப்புகளுடன் நாவல் வடிவம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. காற்றில் சரசரக்கின்ற பனைமரங்களின் ஓசைகளுடன் ஆகாயத்தில் நடைபெறும் பனையேறிகளின் உரையாடல்களும் காலம் முழுவதும் நம் செவிகளில் விழுந்தவாறிருக்கும் விதத்தில் நாவல் படைக்கப்பட்டுள்ளது. புத்தம் வீடு இன்னும் வெகுகாலத்துக்குப் புத்தம் புதிய படைப்பாகவே இருக்கும்.

கட்டுரையாளர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர் தொடர்புக்கு: keeranur1@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்