சு. வெங்கடேசன். சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர், த.மு.எ.க.ச.வின் பொதுச் செயலாளர், கவிஞர், செயற்பாட்டாளர், பேச்சாளர். அவரது முதல் நாவலான காவல் கோட்டம் சாகித்ய அகாதெமியின் முயற்சியில் ஆங்கில வடிவம் பெறுகிறது. பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. காவல் கோட்டம் பிரதியின் அடிப்படையில் ஒரு நூலை எழுதும் முயற்சியில் இருக்கும் வெங்கடேசனுடன் ஒரு நேர்காணல்.
காவல் கோட்டம் எழுதும் முன்பும் பின்பும் ஏன் இவ்வளவு இடைவெளி?
காவல் கோட்டம் எழுதும் முன் கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்பு எனச் சுமார் எட்டு நூல்கள் வந்திருந்தன. காவல் கோட்டத்திற்காகச் சுமார் பத்தாண்டுக் காலம் உழைத்திருந்தேன். இவ்வளவு ஆண்டுக் கால உழைப்பை இது கோரும் எனத் தெரிந்திருந்தால் பேனாவைத் திறக்கும் தைரியம்கூட அந்தக் கட்டத்தில் எனக்கு வந்திருக்காது. நாவலின் தேவை என்னை இழுத்துக்கொண்டு போனது. மீண்டு வெளியேறத் தெரியாதவன் முயன்று கடப்பதைப் போலத்தான் அது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட வரலாறு, வாய்மொழி வரலாறு இரண்டுக்குமிடையில் நான் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டியிருந்தது. அந்தப் பயணத்திற்கு அதைவிடக் குறைந்த உழைப்பைச் செலுத்தியிருக்க முடியாது. தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் மெய்யியல் தொடர்பான நாவலும் கடும் உழைப்பைக் கோரக்கூடியது. தமிழர் தத்துவ மரபு சார்ந்த வரலாறாகவும் மற்றும் கதைவழியாகவும் உரையாடலாகவும் அந்நாவல் விரியும். நாவல் பணி தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்திருக்கின்றனு. எப்போது நிறைவடையும் என்று தெரியவில்லை. தவிர, காவல் கோட்டத்திற்காகச் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் ஒரு அபுனைவை (புனைவற்ற எழுத்து) எழுதிக்கொண்டிருக்கிறேன்.
குற்றவியல் பரம்பரைச் சட்டத்தின் வரலாற்றைப் பேசுவதன் மூலம் சுமார் 600 ஆண்டுக் கால மதுரை வரலாற்றையும் காவல் கோட்டத்தில் பதிவு செய்திருந்தீர்கள். அபுனைவில் சொல்ல என்ன இருக்கிறது?
காவல் கோட்டத்தின் கதைக்களம் 1910ஆம் வருடத்தோடு நிறைவடைகிறது. அபுனைவு அதன் பிறகு தொடங்கி 1948வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில் இருக்கும். குற்றவியல் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான அம்மக்களின் போராட்டத்தை ஆவணப்படுத்தும். குற்றவியல் பரம்பரைச் சட்டம் குறித்த ஒரு முழுமையான வரலாறாக இந்நூல் இருக்கும். தவிர, காவல் கோட்டத்தில் எல்லோரும் கற்பனைக் கதாபாத்திரங்களே. இந்த நூலில் ஜார்ஜ் ஜோசப், முத்துராமலிங்கத் தேவர், ராஜாஜி, பி.ராமமூர்த்தி என அந்தக் காலகட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் எழுதுகிறேன். சுமார் ஐம்பது சதவிகிதப் பணி முடிந்திருக்கிறது. இது தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது.
குறிப்பிடத்தக்க மாற்றுக் கலாச்சார இயக்கமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகள் பற்றி சொல்லுங்கள்.
த.மு.எ.க.ச.வின் முக்கியப் பண்பாட்டு பங்களிப்பாகக் கலை இரவுகளைச் சொல்வேன். வருடத்திற்குச் சுமார் 100 கலை இரவுகளை நடத்துகிறோம். இந்தக் கலையிரவு மேடையின் மூலம் சுமார் பத்து லட்சம் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தவிர மாவட்டத் தலைநகரங்களில் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவண, குறும்படங்களை எங்களது திரை இயக்கம் மூலம் திரையிடுகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடியில் த.மு.எ.க.ச சார்பில் நடந்த தமிழகப் பண்பாட்டுச் சூழல் குறித்த மாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, தாய்மொழிக் கல்வி, சாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமை களும், ஊடகங்களின் அரசியல் உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் விரிவாக விவாதங்களை நெறிப்படுத்தினோம். குறிப்பாகச் சொன்னால் பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பேசும்போது அதன் புறக்காரணிகள் பற்றி மட்டும் பேசாமல் அகநிலை கட்டமைப்பில் ஊடகங்களுக்கு, திரைப்படங்களுக்கு, பண்பாட்டு அமைப்புகளுக்கு, இலக்கியங்களுக்கு உள்ள பங்கு குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. அகமண முறைக்கு எதிராக ஒரு வலிமையான கருத்துப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அகமண முறை என்பது விஞ்ஞானப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளைச் சாதியற்றவர்களாக அடையாளப்படுத்தி அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு தர வேண்டும் எனவும் த.மு.எ.க.ச ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கவிருக்கிறது. அதுதான் சாதியற்ற சமூக உருவாக்கத்திற்கான துவக்கப் புள்ளியாக இருக்கும். தவிரக் குடும்பத்தை ஜனநாயகப்படுத்துதல் பற்றியும் விவாதங்களை எழுப்ப வேண்டும் என்று மாநாட்டில் கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த உடைப்பைக்கூட நிகழ்த்தாமல் வேறு எந்த உடைப்பை நிகழ்த்தப்போகிறோம் என்று தெரியவில்லை.
முற்போக்கு பேசும் பண்பாட்டு, அரசியல் இயக்கங்களுக்குத் தமிழகத்தில் பாரம்பரியமான வரலாறு இருந்தபோதிலும் இன்றைய தமிழகத்தில் அவற்றின் தாக்கம் பெரிதாக இருப்பதுபோலத் தெரியவில்லை.
உண்மைதான். திருமணத்திற்கு எதிராகப் பேசினார் பெரியார். ஆண்மை அழியாமல் பெண்மைக்கு விடுதலையில்லை என்றார். ஆனால் இன்று நாம் அகமண முறைக்கு எதிராகப் பேசத் துவங்கும் சூழலில்தான் இருக்கிறோம். உலகமயமாதல், அடிப்படைவாத சக்திகள், ஆணாதிக்கம் போன்றவை பெருகும் இன்றைய பின்புலத்தில் முற்போக்கு பேசும் குரல்கள் பலவீனமடைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
பெரியார் போன்றவர்களின் தீவிரமான உழைப்பையும் மீறி ஏன் இப்படி நடந்தது?
நவீன தமிழகத்தைப் பொறுத்தவரையில் நமது சமூக முற்போக்குப் பாரம்பரியத்திற்கு 200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. வைகுண்ட சாமிகள் தொடங்கி, வள்ளலார், அயோதிதாசர், பெரியார், சிங்காரவேலர் என்று நமது தலைவர்கள் ஒருவர் கொடுத்து ஒருவர் வாங்கி இங்குப் பகுத்தறிவை வளர்த்தார்கள். ஒருவர் தோற்ற இடத்தில் தொடங்கி மற்றொருவர் ஜெயித்தார். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளலார். கடைவிரித்துத் தமிழகத்தையே கொள்ள வைத்தவர் பெரியார். பெரியார், சிங்காரவேலர், ஜீவா இணைந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிவிட்டுப் பின்னர் பிரிந்தார்கள். அப்போதே சரிவு தொடங்கிவிட்டது என்று சொல்ல வேண்டும். பெரியாரின் அடிப்படை அரசியலிலிருந்து திராவிடக் கட்சிகள் விலகியது முக்கியமான காரணம். முற்போக்கு சக்திகள் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான விஷயங்களை வலிமையோடு முன்னெடுக்கவில்லை.
மார்க்ஸியப் பின்புலத்திலித்திலிருந்து வரும் இலக்கியவாதிகள் குறித்து இங்குப் பொதுவாகச் சில விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.
மார்க்சியத் தத்துவம் தரும் ஞானத்தையும் தமிழக வரலாற்றில் இருக்கும் முற்போக்குப் பாரம்பரியத்தையும் பின்னணியாகக் கொண்டுவருவதே ஒரு எழுத்தாளனுக்கு பெரிய பலம். தமிழ், பல்லாயிரம் வருடங்களாகவே ஜனநாயகத்தன்மையும், சமயச்சார்பற்ற தன்மையும் கொண்ட ஒரு மொழி. சங்கப் பாடல்கள் போல ஒரு சமயச்சார்பற்ற இலக்கியப் பிரதியை வேறு எங்கும் காண முடியாது. சரஸ்வதியைக் கல்வியின் கடவுளாகக் கொண்டாடும் சமஸ்கிருதத்தின் ஆதி பாரம்பரியத்தில் ஒரு பெண் எழுத்தாளர்கூட இல்லை. கிறிஸ்துவிற்கு முன்னர் கிரேக்க மொழியில் வெறும் ஆறு பெண் எழுத்தாளர்களே இருந்தார்கள். தமிழில் அந்தக் காலகட்டத்தில் 43 பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள். குண்டலகேசி, மணிமேகலை போன்ற முற்போக்குப் பெண் கதாபாத்திரங்களைத் தமிழ் மொழியில்தான் பார்க்க முடியும். அந்தக் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை இடதுசாரிப் பின்புலத்திலிருந்து வரும் இலக்கியவாதிகளுக்கு இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago