உரையாடல் இல்லாமல் மொழிபெயர்ப்புகள் சந்தைப் பொருள்களே: மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண்ராமன் நேர்காணல்

By மண்குதிரை

என். கல்யாண்ராமன், ஆங்கில இலக்கிய உலகில் அடையாளம்பெற்ற மொழிபெயர்ப்பாளர். அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா, தேவிபாரதி, பெருமாள் முருகன், வாஸந்தி உள்ளிட்ட பலரின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். என்.டி.ராஜ்குமார், சல்மா, குட்டிரேவதி, சுகிர்தராணி, ராணிதிலக் ஆகியோரின் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பை ஆங்கில எழுத்தாளர் அரவிந்த் அடிகா, ‘வியக்கதக்க மொழிபெயர்ப்பு’ என்கிறார். அசோகமித்திரனின் ‘மோல் (Mole)’ தேவிபாரதியின் ஃபேர்வல் மகாத்மா (farewell Mahatma)’ ஆகிய நூல்களுக்காக இருமுறை இந்திய ஆங்கில இலக்கியத்துக்கான முக்கியமான விருதுகளில் ஒன்றான கிராஸ் வேர்டு விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும் ஏசியன் இதழியல் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பூமணியின் வெக்கை, பிறகு ஆகிய நாவல்களைத் தற்போது மொழிபெயர்த்து முடித்திருக்கிறார். அவருக்கு இந்தாண்டுக்கான அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பு வழங்கும் ‘விளக்கு விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய ஆர்வம் எப்படி உண்டானது?

எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் திருவல்லிக்கேணி இந்துப் பள்ளியில் படித்தேன். அங்கிருந்த தமிழாசிரியர்கள் ஆழமாகவும் ஆர்வத்துடனும் தமிழ் கற்றுத் தந்தார்கள். அங்கு பள்ளி அளவில் தமிழ் இலக்கியம் எனக்கு நன்றாகவே புகட்டப்பட்டது. மேலும் திருவல்லிக்கேணி காற்றிலேயே திருப்பாவை, திருவெம்பாவை கலந்திருந்தன. அதே மாதிரி பாரதியார். அந்தக் காலகட்டத்தில் எங்கும் பாரதியார் வாசிக்கப்பட்டார். பாரதியைப் படித்த பிறகு தமிழ் ஆர்வம் வராமல் போய்விடுமா?

எழுத வேண்டும் என ஏன் தோன்றியது?

பள்ளிப் பருவத்திலேயே சிலர் விளையாட்டு வீரராக அடையாளப்படுத்தப்படுவார்கள். சிலர் நடிகராக அடையாளப்படுத்தப்படுவார்கள். நான் எழுதக்கூடியவனாக அடையாளப்படுத்தப்பட்டேன். அது ஒரு காரணம். பள்ளிப் பருவத்திலேயே ஜெயகாந்தனைப் படித்தேன். அவர் எனக்குப் பெரிய ஆசானாக இருந்தார். குடும்பத்தைத் தாண்டிய சமூக யதார்த்தம் என்பதை அவரது கதைகள் மூலம்தான் அறிந்துகொண்டேன். அதே சமயம் ஆங்கிலத்தில் சார்ல்ஸ் டிக்கன்ஸில் தொடங்கி வாசித்துக்கொண்டிருந்தேன். சிறுகதை எழுத எனக்கு முன்னோடியாக இருந்தது, ஜேம்ஸ் ஜாய்ஸாக இருக்கும் என இப்போது தோன்றுகிறது. தமிழில் ஜெயகாந்தன், அசோகமித்திரன் மாதிரி சிறுகதைகள் எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

சிவசங்கரா என்ற பெயரில் எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?

1970-களில் எழுதத் தொடங்கினேன். கணையாழி, பிரக்ஞையில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், எனது முதல் கதையை ஆங்கிலத்தில்தான் எழுதினேன். The Illustrated Weekly ஆங்கில இதழில் வெளிவந்தது.

ஏன் கதைகள் எழுதுவதை விட்டுவிட்டீர்கள்?

கதை எழுதுவதற்கு முன்புவரை அதைப் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கம், நடுப்பகுதி, முடிவு எனக் கட்டுக்கோப்பாக எழுது எப்படி எனத் தெரியாது. அதற்குப் பிறகுதான் சிறுகதையின் இலக்கணமே பிடிபட்டது. ஒரு கட்டத்தில் அது வேண்டாம் எனத் தோன்றியது. ஏனெனில், புனைவு எழுதுவதற்குப் பரந்துபட்ட வாழ்க்கை அனுபவம் வேண்டும் என நினைத்தேன். எனக்கு அது இல்லை. மேலும் எழுதினால் தாஸ்தயேவ்ஸ்கி மாதிரி எழுத வேண்டும். இல்லையெனில் எதற்கு எழுத வேண்டும்?

இப்போது கட்டுரைகள் மட்டும் எழுதுகிறீர்கள்...

ஆம், எனக்குக் கட்டுரைகள் மேல் ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தில் கட்டுரைகள் அதிகமாக வாசித்திருக்கிறேன். அங்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களே பலவீனமான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் தமிழில் கட்டுரை வடிவமே மிகப் பலவீனமாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பில் எப்படி ஆர்வம் வந்தது?

டெல்லியைச் சேர்ந்த என்னுடைய நண்பரான கீதா ஹரிகரன் தொகுத்த தென்னிந்தியச் சிறுகதைகள் தொகுப்புக்காக எழுத்தாளர் திலீப் குமாரின் கதையை மொழிபெயர்த்துத் தரச் சொன்னார். எனக்கு எப்போதும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி ஆர்வம் உண்டு. அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். அந்த மொழிபெயர்ப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. பிறகு அசோகமித்திரன் கதைகளை மொழிபெயர்க்கக் கேட்டார்கள்.

மொழிபெயர்ப்பதற்கு ஒரு கதையை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

சில கதைகள் நமக்கு மிக நெருக்கமாக இருக்கும். அந்தக் கதையைப் பற்றி நினைத்தாலே குதூகலமாக இருக்கும். திரும்பத் திரும்ப வாசிக்கும் அனுபவத்தைத் தூண்டும்; பிரமிப்பில் ஆழ்த்தும். அந்த மாதிரி என்னை விடவே விடாத கதைகளை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கிறேன். தேர்வில் ரசனைக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் இடமுண்டு; சூழல் அரசியலை முன்வைத்துத் தேர்ந்தெடுப்பதுமுண்டு.

தமிழ் இலக்கியத்துக்கு ஆங்கில உலகில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

உரையாடலைப் பொறுத்து இருக்கிறது. இலக்கியத்தையும் இலக்கியம் பற்றிய உரையாடல்களையும் பிரிக்க முடியாது. உரையாடல்கள் இல்லாத இலக்கியம் பலவீனமாகத்தான் இருக்கும். இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், அசோகமித்திரன் போன்றோரைத் தனிப்பட்ட முறையில் மதிக்கிறார்கள். நான் சமீபத்தில் மொழிபெயர்த்த தேவிபாரதியின் கதைகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நவீனத்துவம், வன்முறை, ஆண்-பெண் உறவுச் சிக்கல் ஆகியவற்றைத் தனித்த நடையில் எழுதும் தேவிபாரதியைப் போன்ற எழுத்தாளர்கள் இந்திய ஆங்கிலச் சூழலில் இல்லை.

இந்த உரையாடலை யார் முன்னெடுக்க வேண்டும்?

தமிழில் வரக்கூடிய நூல்களை அறிமுகப்படுத்தி உரையாடலை உருவாக்கக்கூடிய சூழல் இன்று இல்லை. முன்பு க.நா.சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்றோர் டெல்லியில் இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய ஆங்கில இலக்கியவாதிகளுடன் தொடர்பு இருந்தது. மேலும் தமிழ்ப் படைப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. உரையாடலை உருவாக்குவதற்கான ஆளுமைகள் இல்லை என்றால் அதற்கான வழிவகையும் இல்லாமல் போய்விடுகிறது. இலக்கியத் திருவிழாக்கள் அதைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்வதாகத் தெரியவில்லை. உரையாடல் இல்லாமல் இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாம் வெறும் சந்தைப் பொருள்கள்தாம்.

இந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் இந்திய ஆங்கில வாசகர்களுக்கானதா?

ஆமாம். உலக அரங்கில் இந்திய ஆங்கில இலக்கிய முகம் என்பது ஆங்கிலத்தில் நேரடியாக எழுதுபவர்கள்தாம். மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு இந்த இடம் தரப்படுவதில்லை. ஆனால் முன்பு கமலாதாஸ், சுனில் கங்கோ பாத்யாய, யு.ஆர். அனந்தமூர்த்தி போன்ற பிராந்திய எழுத்தாளர்கள் இந்திய இலக்கிய முகமாகவே அறியப்பட்டார்கள். ஆனால் இன்று அந்தச் சூழல் இல்லை. பொதுவாகவே மொழிபெயர்ப்புக்கு ஒரு கெட்ட பெயர் இருக்கிறது, சரியாக மொழிபெயர்க்கப்படுவதில்லை என்று. ஆங்கிலம் படித்தவர்களின் மேட்டிமைத்தனம் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த மனத் தடை விலக வேண்டும். மேலும் மொழிபெயர்ப்பை எழுத்தாளரோ மொழிபெயர்ப்பாளரோ எடுத்துச் சொல்ல முடியாது. அதற்கு ஒரு குழுவோ மேடையோ இல்லை. தமிழ்ச் சூழலும் ரொம்பவும் பிளவுபட்டிருக்கிறது.

மொழிபெயர்ப்புத் துறைக்கென அங்கீகாரம் இருக்கிறதா?

அங்கீகாரமெல்லாம் பெரிதாக இல்லை. ஆனால் இது என்னைக் குறிவைத்து நடப்பதாகச் சொல்லவில்லை. பொதுவாக மொழிபெயர்ப்புக்குப் பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்பைக் குறித்து கட்டுரையோ அங்கீகாரமோ இந்திய ஆங்கிலச் சூழலில் குறைவுதான். ஆனால் தமிழில் கனடிய இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தரும் பரிசு கிடைத்துள்ளது. இப்போது விளக்கு விருது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

இலக்கியம்

5 hours ago

இலக்கியம்

5 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

மேலும்