சட்டென்று வசீகரித்துவிடுகின்றன ஜீ.முருகனின் சிறுகதைகள். முதலில் அவற்றின் மொழிநடை. முரண்டுபண்ணாமல் உடன் நடக்கும் செல்லக் குழந்தைபோல் அவருக்கு ஒத்துழைக்கிறது மொழி. அடுத்தது, சிறுகதையின் நீளம். அநேகமாக எல்லாக் கதைகளுமே சிக்கனமாகவும் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுடனும் எழுதப்பட்டுள்ளன. ஆழமான சிறுகதைகளுக்கும் நீளமான சிறுகதைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்த்திவிடுகின்றன இந்தக் கதைகள்.
தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும்போது, பிரியத்துடன் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கதை சொல்லும் மூதாட்டியின் நினைவு வந்து செல்கிறது. சக மனிதருடன் உரையாட முருகன் தேர்ந் தெடுத்திருக்கும் வழிமுறையே கதை என்பதாகவே படுகிறது. அவர் பரிமாறுவதற்கு விழையும் அனைத்துக் காரியங்களையும் கதையைச் சாக்காக வைத்துச் சொல்கிறார். கதையையும் சொல்கிறார்; அதன் வழியே உரை யாடலையும் நிகழ்த்துகிறார். முன்னது மேலடுக்கில் இருக்க, பின்னது உள்ளடுக்கில் உள்ளது.
மனிதரைக் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்த்தும் வாழ்வின் துயரம், எல்லாருக்குமானது இயற்கை என்ற எண்ணமின்றித் தமக்கானது உலகம் என வாழும் மனிதரின் அத்து மீறல், ஆண் பெண் உறவில் ஏற்படும் பொருளற்ற சிக்கல், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமைத் தத்துவம் எனப் பல விஷயங்கள் குறுக்கீடு நிகழ்த்தும் வாழ்வைப் பொட்டலம் போல் பொதிந்து தந்திருக்கிறார். மானுடத் துயரத்தைத் துயரம் என்ற நிலை யிலேயே வைத்துப் பார்க்கிறார்; எழுதுகிறார். அதற்கு அதிகப்படியான சோகச் சாயையைப் பூசவில்லை. ‘வழித்துணை’கதையில் வெளிப்படும் தனிமையுணர்வு மனத்தில் பரவும்போது கதையில் மறைந்த நாயாக மனம் மாறிவிடுகிறது.
தொகுப்பின் கதைகளில் புழுவும் எலியும் நாயும் பூனையும் கழுதையும் யானையும் குரங்கும் குருவியும் பாம்பும் கிளியும் புறாவும் வருகின்றன. தமக்கான வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களும் வருகிறார்கள். ஒவ்வொரு பானையையும் வெவ்வேறு வடிவத்தில் செய்து பார்க்கும் குயவர் போல் வெவ்வேறு வடிவங்களில் கதைகளைச் செய்துபார்த்திருக்கிறார். கற்பனை யான சம்பவங்களும் நிகழ்ந்ததாக நம்பக்கூடிய சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மாய யதார்த்தக் கதைகளாக மாறியிருக் கின்றன.
மூடாக்கை விலக்கும் கதைகள்
துடுப்பற்ற படகு கடலின் மேலே சதா அலைவுறுவதுபோல் காமம், மரணம் இரண்டுக்குமிடையே அலைக் கழிக்கப்படும் மனித மனம் அதிலிருந்து வெளியேற ஏதோவொரு வழி தேடி அலைகிறது. அந்த மனத்தின் அலைச் சலை, உளைச்சலை உள்வாங்கி அவற்றைக் கதைகளாக்கி ஆறுதலடை கிறார் முருகன். புணர்ச்சியும் சாவும் இணைந்த புள்ளிகளால் கோலம் போட்டது போல் தொகுப்பு அமைந்தி ருக்கிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்களாலும் ஆண்களின் வாழ்க் கையில் பெண்களாலும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. மனச்சிதைவென்னும் அபாய விளிம்பில் நிற்கும்படியான ஆண்களைப் பல கதைகளில் காண முடிகிறது. தலையணை கட்டிலில் கிடக்கும் கோலமே ஓர் ஆணுக்குப் பெண்ணின் துரோகம் பற்றிய குரோத நினைவைத் தூண்டிவிடும் அளவுக்கு ஆணின் மனத்தில் பெண்ணின் உடம்பு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
தனிமையில் அழுதபடியிருக்கிறார் ஒரு தாய். விலக்க முடியாத துயரமாகத் தன் மீது கவிந்து கிடக்கும் நோயுற்ற மகனைத் தூக்கித் திரியும் தாயொருத்தி அவனைப் பிணமாகப் பார்க்கிறாள். குழந்தை சீரழிக்கப்படுவதன் வேதனை தாளாமல் தவிக்கிறான் ஓர் ஓவியன். இப்படிப் பல கதாபாத்திரங்களை வாசகருக்கு நெருக்கமாக்கியிருக்கிறது கதைகளின் கூறுமுறை.
ஒரு வகையில், சமூகத்தின் மூடாக்கை விலக்கிப் பார்க்கின்றன சில கதைகள்; சில கதைகளோ மூடாக்கை விலக்கப் பார்க்கின்றன. பாலியல் உணர்வு ‘காண்டாமிருகம்’ போன்ற கதைகளில் உள்ளாடைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; ‘இடம்’, ‘கிழத்தி’ போன்ற கதைகளில் துண்டிக்கப் பட்ட சிற்பத்தின் திமிர்ந்த மார்புபோல் வெளியே விழுந்து கிடக்கிறது. ‘பூனைகள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?’ காமம் தொடர்பான நல்ல கதை.
ஜீ.முருகன்
இரட்டை வாழ்வு நடத்தும் தோழர் களை முருகனின் எழுத்து புழுப் புழுவாய் உதிர்த்துவிடுகிறது. ‘புழு’ கதையில் சவக் கிடங்கில் கிடக்கும் பிணங்களை விழித்தெழச் சொல்லும் தோழர் ஒருவரைச் சந்திக்கும்போது, ‘விருந்தோம்ப’லில் தோழர்களைப் பெரிதாகப் பகடி செய்யவில்லை என்றாகிவிடுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் ஆறுதலாகச் சாய்ந்துகொள்ள எந்தத் தோளுமில்லை என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இந்தக் கதைகள் அதனாலேயே ஆசுவாசமே தருகின்றன. வாழ்வு குறித்த பொய்யான நம்பிக்கைகளில் வாசகரை அமிழ்த்தும் கதைகள் அல்ல இவை. அசலான வாழ்வில் நகல்கள் பெருத்துவிட்டதைச் சொல்லும் கதைகள்.
சொல்லாமல் சொல்லும் உத்தி
‘பாரிச வாயு’ என்னும் கதையில் புறாவைத் தேடி அலைகிறான் கிருஷ்ணன். புறாக்களை எங்கும் காணவில்லையே என்ற பரிதவிப்புடன் தொடங்கும் கதையின் இறுதியில் புறாவை அவன் தேடுவது - தன் நாயின் நோய் தீர்க்க - புறாவின் ரத்தத்துக்காகத்தான் என்பது தெரிகிறது. தாயின் நோய் குறித்த நிலை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் இரண்டு புறா வேண்டுமா எனக் கேட்கும்போது, சற்று யோசனை செய்துவிட்டு இப்போதைக்கு ஒன்று போதும் என்று முடிவெடுக்கும்போது அந்தத் தாயின் நிலை வாசகருக்குப் புரிகிறது. இப்படித்தான் பல கதைகளில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் சொல்லப் படாத சேதிகளை உணர்த்துகின்றன.
‘கவுண்டர் கே’ என்னும் கதை கிட்டத்தட்ட சுய விமர்சனக் கதையைப் போலவே எழுதப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள ஐம்பது கதைகளும் பெரும்பாலும் வெவ்வேறானவை. ‘இடம்’ ‘கிழத்தி’, ‘பாரிச வாயு’ ‘வேட்டை’, ‘மஹா விஜயம்’ ‘சத்திரம்’ போல சில கதைகளில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது.
வாழ்வென்னும் புதிரை அவிழ்க்க அவிழ்க்க அது முடிச்சுகளை உரு வாக்கிக்கொண்டே போகிறது. அடுப்பங் கரைச் சுவரில் படியும் கரிக் கறைபோல் மனத்தில் படியும் அறிவுக் கறையை இலக்கியம் கொண்டு போக்கும் முயற்சிகளாகவே கதைகளை எழுது கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டபோதும், அதன் முரணானது மனத்தை அரிக்கிறது. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அப்படிக் கேள்விகள் எழுப்பிக் கொள்ளாதவர்கள் பாக்கியவான் கள். இந்தத் தொகுப்பு அவர்களுக் கானதல்ல. கேள்விகளில் முட்டி மோதிக் குருதி வழிய நிற்கும் மாந்தர்களுக்கான கதைகள் இவை. அந்தக் கேள்விகளை உருவாக்குவதற்கான மேடையாக அல்லது அந்த மேடையில் உரு வான கேள்விகளாக இந்தக் கதைகள் கருக்கொள்கின்றன. ஒரு பெருங் கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் இந்தக் கதைகள் தனித்தும் தெரி கின்றன.
கதைகளுக்கேற்ற பொருத்தமான அட்டைப்படத்துடன், நல்ல முறையில் நூலை உருவாக்கியிருக்கிறது ஆதி பதிப்பகம். வரிகளின் தொடக்கத்தில் ஒற்றெழுத்து வருவதைத் தவிர்த்திருக் கலாம்.
தொடர்புக்கு:chellappa.n@thehindutamil.co.in
பக்கங்கள் : 400 விலை : ரூ.320
வெளியீடு:
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை 606806
தொடர்புக்கு: 9994880005
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago