நினைவஞ்சலி | எஸ்.பொ: வரலாற்றில் வாழ்பவர்

By தமிழச்சி தங்கபாண்டியன்

ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

எழுத்துப் பணி ஒரு போர்

ஈழத்தின் ‘இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பொ.வின் மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது. தன்னை மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ., ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு முக்கியமான பங்களிப்பை நல்கியவர். இன விடுதலைப் போரில் மரணமடைந்த தன் மகன் மித்ரவின் நினைவாகவே சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் முக்கியக் களப்பணி - புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் படைப்புகளை வெளியிடுவது. அதன் மூலம் தமிழகத்தில் அதுகாறும் அவ்வளவாக அறியப்படாத ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பை ஆவணப்படுத்துதலுமாகும்.

உலக இலக்கியம் பற்றிய அறிவும், ஆங்கில மொழித் தேர்ச்சியும், மொழியாக்கத் திறமையும் பெற்ற அவர், ‘என் எழுத்துப் பணி போரே' என அறிவித்து அதன்படியே வாழ்ந்தும் படைத்தும் காட்டியவர். அனைத்து உலக இலக்கியங்களையும் அங்கீகரித்து, நயந்து போற்றுகின்ற சார்பற்ற விமர்சகர், ரசனையாளர்!

போர்க் குணமிக்க படைப்பாளி

1961-ல் அவரது ‘தீ’, ‘சடங்கு’ ஆகிய புதினங்கள் வெளிவந்தபோது அவர் பிரச்சினைக்குரிய படைப்பாளியாக ஈழ, தமிழ்நாட்டு இலக்கிய உலகில் விமர்சிக்கப்பட்டார். அவ்விமர்சனங்களை எஸ்.பொ. எதிர்கொண்ட விதம் அபாரமானது - “மொராலிட்டி என்பதைத் தமிழர்கள் ஏன் எப்போதும் பாலுணர்வு சார்ந்து மட்டுமே பொருள் கொள்கின்றனர், எனது பலவீனங்களைச் சொல்லவும், ஒப்புக் கொள்ளவும் நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?” என 55 ஆண்டுகளுக்கு முன்பே துணிச்சலுடன் கேட்டவர்.

1932-ல் ஈழத்தின் நல்லூரில் பிறந்த எஸ்.பொ, தமிழ்த்துவம், தமிழ்த் தேசியம், இன விடுதலை, புலம்பெயர் தமிழர் தம் கெளரவ முகம் மீட்டெடுத்தல் - இவற்றைத் தன் எழுத்து ஊழியத்தின் அச்செனக் கொண்டவர். சிறுகதை, புதினம், நாடகம், காப்பியம், கட்டுரை, தன் வரலாற்று நூல், மொழிபெயர்ப்பு எனத் தான் இயங்கிய அத்தனை தளங்களிலும் சாதீயத்தை, அரசியல் ஊழல்களை, இலக்கியக் கோஷ்டிகளின் வெற்றுக் கோஷத்தைத் தொடர்ந்து எதிர்த்தவர். மரபுகளை, வைதீகச் சடங்குகளை, இசங்களைக் கேள்விக்குட் படுத்தி அவற்றைத் தூக்கி எறிந்த போர்க் குணமிக்க, நவீனப் படைப்பாளியென்பதே அவரது அடையாளம்.

ஈழ அரசியலின் குரல்

இலக்கியத்தில் மட்டுமல்ல; கல்வித் துறையிலும் ஈடுபாட்டோடுப் பங்களித்தவர். இலங்கையில் தமிழ்ப் பாடத்திட்ட ஆசிரியராகப் பணியாற்றிப் பின் நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அச்சமயம் ஆப்பிரிக்க இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்த்தவர். தனது இளமை காலத்தைக் கம்யூனிஸ இயக்கத்தில் கழித்தவர். கட்சி சார்ந்தவராக இருக்க இயலாததால், அவர் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராகச் சித்தரிக்கப்பட்டாலும், அவரது எழுத்துகளை ஆழ்ந்து பயில்கின்ற மார்க்சியத் திறனாய்வாளர்கள் இக்கருத்திலிருந்து நிச்சயமாக மாறுபடுவார்கள்.

எஸ்.பொ-வின் படைப்புகளை ஒருசேரப் படித்தால் ஈழத்தின் அரசியல், சமூகப், பண்பாட்டு வரலாற்றை ஒரு கழுகுப் பார்வை பார்த்த அனுபவம் வசப்படும். அவ்வகையில் இந்த ‘யாழ் நிலத்துப் பாணன்’ (ஜெயமோகன் காலம் இதழில் எஸ்.பொ. குறித்து எழுதிய கட்டுரையின் தலைப்பு இது) ஈழ மண்ணின் தமிழ் வரலாற்றைத் தனது ‘மகாவம்ச’வின் மொழிபெயர்ப்பு மூலம் மீட்டெடுத்த பாணனும்கூட.

அவரது மரணம் தமிழ் உலகுக்கு மட்டும் அல்லாமல்; தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு. தமிழச்சி எனும் புனைபெயரில் எனது ‘எஞ்சோட்டுப் பெண்’ தொகுப்பை மித்ர மூலம் வெளியிட்டு இலக்கிய அரங்கில் என்னை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அறிவுமதி, யுகபாரதி, ரவிக்குமார், பச்சியப்பன் என்று என் நண்பர்கள் பலரையும் நான் பெற்ற இடமாகவும், மாலை வேளைகளில் ‘முன்னத்தி ஏர்’ ஒன்று பிஞ்சுகளைச் செதுக்கிய பயிற்சிப் பாசறையாகவும் அவரது பதிப்பகம் இருந்தது.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ- வின் நெருங்கிய நண்பர். அவரைச் சந்தித்துத் துக்கம் பகிரச் சென்றபோது, எஸ்.பொ.வின் முகமூடியற்ற எழுத்து, வாழ்வு குறித்து உரையாடினோம். “ஆல்பர்ட் மொராவியா எனும் புகழ் பெற்ற எழுத்தாளரிடம், ‘நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய கதைகளுக்காக இன்று வருத்தப்படுவதுண்டா?’ எனக் கேட்கப்பட்ட போது, ‘ அப்படி வருந்தினால் நான் மொராவியோவாக இருக்க முடியாது. என்னால் இன்றும் அக்கதைகளை அப்படித்தான் எழுதியிருக்க முடியும்’ எனச் சொன்னார். எஸ்.பொ.வும் ஆல்பர்ட் மொராவியா போலத்தான்” என்றார் இந்திரா பார்த்தசாரதி.

எஸ்.பொ-வின் ‘மாயினி’, சமகால ஈழத்தின் அரசியல் சூழலைப் பகடிசெய்து எழுதப்பட்ட அற்புதமானதொரு புதினம். அவர் மறைந்த இக்கணத்தில் அவர் படைப்புகளை நினைவுகூர்தலே அவருக்கான சரியான அஞ்சலியாக இருக்க முடியும்.

- தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், கட்டுரையாளர்.​​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்