திருச்சி மலைக்கோட்டை போகிற வழியிலுள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ பழைய இதழ்களின் பைண்ட் வால்யூம் ஒன்று கிடைத்தது. பைண்டிங் வால்யூமை இரவெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். மனம் காலத்தின் பின்னோடி, பழைய நினைவுகளைக் கிளர்ச்சியுறச் செய்தது. அப்போது இரண்டு பேர் என் நினைவில் வந்து போனார்கள். ஒருவர் எனது தாத்தா. இன்னொருவர் என் கணித ஆசிரியர் ஞானசுந்தரம். இருவரும் இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் தீவிர வாசகர்கள்,
எனது தாத்தா இல்லஸ்ட்ரேடட் வீக்லி சந்தாதாரர் என்பதால் வீட்டுக்கே இதழ்கள் வந்துவிடும். பள்ளி நாட்களில் அதைப் புரட்டிப் பார்ப்பேன். அற்புதமான வடிவமைப்பு கொண்ட அந்த இதழை ரவிசேகர் அழகாக வடிவமைப்பு செய்திருப்பார்.
எனது தாத்தா கையில் பென்சில் வைத்துக்கொண்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லியைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பார். புதிதாக ஏதாவது ஆங்கிலச் சொல் இடம்பெற்றால் அடிக்கோடிட்டு அகராதியைப் புரட்டிப் பார்த்து, அதை தனி நோட்டில் எழுதிக் கொள்வார். இதழைப் படித்து முடித்தவுடன் ஆசிரியருக்கு அந்த இதழைப் பற்றி ஒரு போஸ்ட் கார்டு எழுதி அனுப்பி வைப்பார். அப்படியெல்லாம் இதழ்களைப் படிப்பவர்கள் இன்று இருக்கிறார்களா எனத் தெரியவில்லை, ஒருமுறை கூட அவரது கடிதம் வீக்லியில் வெளியானதில்லை. ஆனால், சளைக்காமல் எழுதிக் கொண்டிருப்பார்.
கணித ஆசிரியர் ஞானசுந்தரம், வீக்லியைப் பற்றி கூறும்போது, ‘அது காலேஜ் படிக்கும் பெண்ணைப் போல கவர்ச்சியானது; பார்க்கவும் படிக்கவும் சுவையூட்டுவது’ எனச் சொன்னது நினைவில் இருக்கிறது. ஞானசுந்தரம் சாரிடமிருந்து யாரும் ஒரு புத்தகத்தைக் கூட இரவல் வாங்கிவிட முடியாது. தனது புத்தகங்களைப் பிள்ளைகளை விடவும் நேசித்தவர். ஒருமுறை அவரது மைத்துனர் அவரைக் கேட்காமல் ‘வுதரிங் ஹைட்ஸ்’ என்ற நாவலை எடுத்துக் கொண்டு போய்விட்டார் என அறிந்து, இரவோடு இரவாகப் புத்தகத்தைத் திரும்பக் கொண்டுவந்து தந்துவிட வேண்டும் என போனில் சண்டை போட்டு விட்டார்.
விடிகாலையில் புதுக்கோட்டையில் இருந்து மைத்துனர் பஸ் ஏறிவந்து புத்தகத் தைக் கொடுத்துவிட்டு, ‘மாப்பிள்ளை… சின்ன விஷயத்துக்காக இப்படியா கோபப்படுவது’ எனக் கேட்டதற்கு, ‘எதுய்யா சின்ன விஷயம்? புஸ்தகத்தோட மதிப்பு உனக்கு என்னத் தெரியும்? என்னைக் கேட்காமல் புத்தகம் எடுத்துட்டுப் போனது திருட்டுத்தனம். அப்படி ஒரு ஆளோட உறவே எனக்கு வேணாம்யா’ என பொங்கி எழுந்துவிட்டார்.
அவ்வளவு ஆசையாகச் சேர்த்தப் புத்தகங்களை முதுமையில் அவரால் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒருமுறை மதுரை நியூசினிமா அருகில் உள்ள பிளாட்பாரக் கடையில் ஞானசுந்தரம் கையெழுத்திட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன,
எப்படி கிடைத்தது எனக் கேட்டேன். ‘சிம்மக்கல்ல ஒரு பெரியவர் செத்துப் போயிட்டார். அவரு வீட்டுல இருந்த புத்தகங்களை எடைக்குப் போட்டார்கள். அதுதான்’ என்றார் புத்தக வியாபாரி.
ஞானசுந்தரம் இறந்த பிறகு, இந்தப் புத்தகங்களை வைத்துக் காப்பாற்ற வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை. முதுமையில் மனிதர்கள் வாழ்வதற்கே வீட்டில் இடம் தர மறுக்கும்போது, புத்தகங்களுக்கு யார் இடம் தரப் போகிறார்கள்? அவரது மரணத்தோடு அவரது புத்தகங்கள் வீதிக்கு வந்து விட்டன. கொட்டிக்கிடந்த அந்தப் புத்தகக் குவியலில் இருந்து ‘வுதரிங் ஹைட்ஸ்’ நாவலை மட்டும் எடுத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்துக்காகத்தானே அவர் தனது மைத்துனரின் உறவையே முறித்துக்கொண்டார்!
மனிதர்கள் புத்தகங்களுடன் கொள்ளும் உறவு விளக்க முடியாதது. சிலருக்கு அது தோழமை. சிலருக்கு வழிகாட்டி. சிலருக்கு அது ஒரு சிகிச்சை. இன்னும் சிலருக்கு புத்தகங்கள் மட்டும்தான் உலகம். புறஉலகை விட புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறவர்கள்.
ஒருவேளை இந்த உலகில் புத்தகம் படிப்பது தடை செய்யப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதை ரே பிராட்பரி ‘பாரன்ஹீட் 451’ என்ற நாவலாக எழுதியிருப்பார். அதில் ஒவ்வொரு மனிதனும் தனக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொண்டு, தானே நடமாடும் புத்தகமாக மாறிவிடுவான். புத்தகங்களின் சிறப்பைச் சொல்வதற்கு இதற்கு நிகரான நாவலை நான் வாசித்ததே இல்லை.
அந்தக் காலத்தில் பலரிடமும் கையில் பணமில்லை. ஆனால், புத்தகம் படிக்க நேரமும் விருப்பமும் இருந்தது. தேடிப் போய் படித்தார்கள். இரவல் வாங்கிப் படித்தார்கள். நூலகத்தில் மாலை நேரங்களில் விலக இடமிருக்காது. இன்று பலருக்கும் விலையைப் பற்றி கவலையின்றி புத்தகம் வாங்குவதற்கு வசதி வந்துவிட்டது. ஆனால், படிக்க விருப்பமில்லை அல்லது நேரமில்லை. ஏன் படிக்க வேண்டும் என்ற மனப்போக்கு வந்துவிட்டது.
மனிதகுல வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு மகத்தானது. வேறு எந்தக் கருவியை விடவும் புத்தகம் வழியேதான் மனிதன் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறான். வளர்ச்சி அடைந்திருக்கிறான். உலகை மாற்றியிருக்கிறான்.
ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவனை உருமாற்றுகிறது. சிறகு முளைக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு காலங்களில் பிரவேசிக்கவும் வாழவும் கற்றுத் தருகிறது. வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது. ஜப்பானின் பிரபல எழுத்தாளர் ஹரூகி முரகாமி, கார்டியன் இதழில் ‘எவ்வளவு காலத்துக்கு இலக்கியம் வாசிக்கப்படும்’ என்ற கேள்விக்கு பதில் தந்திருக்கிறார்.
‘உலகம் முழுவதும் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள். அவர்கள் டி.வி-யில் உலகப் கோப்பைப் போட்டிகளோ, பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ எது நடந்தாலும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்பார்கள். புத்தகம் படிப்பதே தடைசெய்யப் பட்டால் கூட அவர்கள் காட்டுக்குள் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை நினைவுகொண்டபடியே இருப்பார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே நான் எழுதுகிறேன்’ என்று கூறுகிறார். தமிழ்ச் சூழலில் தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள் 5 சதவீதம் கூட இருப்பார்களா?
பைண்டிங் வால்யூமின் ஒரு இதழில் வெளியாகியிருந்த அம்ரிதா ப்ரீதம் கவிதையின் அடியில், கறுப்பு மை பேனாவால் யாரோ ‘இதை அகிலாவை வாசிக்கச் சொல்ல வேண்டும்’ என்று எழுதியிருந்தார்கள், யார் அந்த அகிலா எனத் தெரியவில்லை. ஒருவேளை இல்லஸ்ட்ரேடட் வீக்லி வாங்கியவரின் மகளா? மனைவியா? அவர் இக்கவிதையைப் படித்தாரா என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை வெறும் புத்தகங்கள் இல்லை; யாரோ சிலரின் நினைவு கள்; அவை நமக்கு ஒன்றை உணர்த்து கின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு, விருப்பமான மனிதர்கள் என்றோ… விருப்பமான புத்தகங்கள் என்றோ… பேதமில்லை. இரண்டும் பயனற்றவற்றை யாகத் தூக்கி எறியப்படவே செய்யும்,
ஆனால், எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. யாரோ ஒருவருக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம். இன்னொருவருக்கு அது இப்போதுதான் வாங்கியுள்ள படிக்காத புதியப் புத்தகம். உறவுகளும் அப்படித்தான் தொடர்கின்றன!
- வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிரிந்துகொள்ள
writerramki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago