கதைகள் நம்மை யோசிக்க வைக் கின்றன. சில கதைகளைக் கேட்டோ, வாசித்தோ முடிக்கும் போது இப்படியும் சிந்திக்க முடியுமா? கற்பனை செய்ய முடியுமா என வியப்பாக இருக்கிறது.
பெரியவர்கள் சொல்லும் கதைகள் ஒருவிதம் என்றால், சிறுவர்கள் சொல்லும் கதைகள் வேறுவிதம். நாம் குழந்தைகளுக்கு கதை சொல்வது போலவே, குழந்தைகளிடம் கதை கேட்க வும் வேண்டும். முடிந்தால் மகனோ, மகளோ, பேரன், பேத்தியோ சொன்ன கதைகளை சிறுநூலாக அச்சிட்டு, அவர்களின் பிறந்தநாள் பரிசாக தரலாம். பள்ளிக்கூடமே தனது மாணவர்கள் சொன்னக் கதைகளை அச்சிட்டு, சிறு வெளியீடாக கொண்டுவரலாம்.
சிறுவர்களிடம் ‘எதைப் பற்றி கதை கேட்கப் பிடிக்கும்?’ என்று கேட்டால், உடனே அவர்கள் ‘சிங்கம், யானை, குரங்கு’ ஆகிய மூன்றைத்தான் விரும் பித் தேர்வு செய்கிறார்கள்.
‘சிங்கம்’ பற்றி ஆயிரமாயிரம் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. எழுதப் பட்டுள்ளன. ஆனாலும், சிங்கத்தின் வசீகரம் குறையவே இல்லை.
நான் கூட சிறார்கள் செய்தித்தாள் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லும் விதமாக, நியூஸ் பேப்பர் படிக்கிற சிங்கம் பற்றி ‘படிக்கத் தெரிந்த சிங்கம்’ என்ற சிறார் நாவலை எழுதியிருக்கிறேன். இதனை ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சஞ்சீவ் சன்யால் எழுதிய ‘ஏழு நதிகளின் நாடு’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் அவர் ‘சிங்கம் எப்படி இந்தியாவில் இவ்வளவு முக்கியத்துவம் அடைந்தது?’, ‘மவுரியர்கள் ஏன் சிங் கத்தைச் சிற்பமாக செதுக்குவதில் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள்?’, ‘சிந்து சமவெளி நாகரீகத்தில் சிங்கம் இருந்ததா, இல்லையா?’ என பல செய்திகளைச் சுவாரஸ்யமாக எழுதி யிருக்கிறார். தமிழகத்தில் சிங்கம் இருந் ததா? சங்க இலக்கியத்தில் சிங்கம் இடம்பெற்றிருக்கிறதா என்பது பற்றி ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
துருக்கி நாட்டுப்புறக் கதை ஒன்று ‘வெங்காயம் ஏன் சிறியதாக இருக் கிறது?’, ‘தர்பூசணி ஏன் பருமனாக இருக் கிறது?’ என்பதற்கு பதில் சொல்கிறது. ‘இதற்கெல்லாம் கூட கதைகள் இருக்குமா?’ என யோசிக்க வைக்கிறது இக்கதை.
முன்னொரு காலத்தில் வெங் காயம்தான் மிகப் பருமனாக இருந்தது. சோம்பேறியாகவும் தூங்குமூஞ்சியாக வும் இருந்த வெங்காயத்துக்கு, வம்பு பேசுவதைத் தவிர எதிலும் விருப்பம் இல்லை. இதற்கு மாறாக, தர்பூசணி சிறியதாக எலுமிச்சை அளவில் இருந்தது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகத் தாவிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தது. இந்த இரண்டும் ஒரே தோட்டத்தில் இருந்தன.
அங்கே ஒரு வாழை மரம் இருந்தது. அந்த மரத்தை வெங்காயத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது. வாழையும் அதன் பிள்ளைகளும் இருக்கிற தண்ணீரைக் குடித்துவிடுகிறார்கள் என்று ஆத்திரமே, அதற்கான காரணம். எப்போதும் வாழை மரத்தைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தது வெங்காயம். இதற்கு மாற்றாக தர்பூசணிப் பழம் வாழை மரத்தை பாராட்டிக்கொண்டே இருந்தது.
ஒரு நாள் வாழை மரம் வெங்காயத் திடம் கேட்டது: “நீ ஏன் இப்படி உடம்பை வளர்த்துக் கொண்டு வீணாக இருக்கிறாய்? உன்னால் யாருக்கு என்ன பிரயோஜனம்?”
அதைக்கேட்ட வெங்காயம் சொன்னது: “நீ மற்றவர்களுக்குப் பிரயோ ஜனமாக இருக்கிறாய். அதற்காக உன்னை வெட்டாமல் விடுகிறார்களா? மனிதர்கள் உன் காய்களைப் பறித்துக் கொள்கிறார்கள். இலையை அறுத்துக் கொண்டுப் போகிறார்கள். பழங்களைத் தின்கிறார்கள். முடிவில் ஒருநாள் உன்னையே வெட்டிவிடுகிறார்கள். நல்லது செய்தால் ஒரு பயனும் இல்லை என்பதை உன்னிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.”
அதைக் கேட்ட வாழைமரம் சொன்னது: “அப்படிச் சொல்லாதே. இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுப் பது சந்தோஷமானது. அதை அனுபவித் துப் பார் தெரியும்!”
“பொய். நீ ஒரு முட்டாள். ஏமாளி. வெட்ட வருபவனை உன்னால் எதிர்க் கவோ, தடுக்கவோ முடியாது. தைரிய மற்ற கோழை!” என்றது வெங்காயம்.
“அதெல்லாமில்லை. தைரியம் என்பது சண்டைபோடுவது இல்லை. வேதனையைத் தாங்கி நிற்பதே உண்மையான தைரியம்” என்று வாழை மரம் மறுபடியும் சொல்ல, அதைக் கேட்ட தர்பூசணி சொன்னது:
“வாழை மரம் சொல்வது உண்மை தான். தன்னைக் கஷ்டப்படுத்து கிறார்களே என்று வாழை ஒருபோதும் மனிதர்களுக்கு கசப்பான பழத்தைத் தருவதில்லை. சொல்லாலும் செய லாலும் அடுத்தவரை இம்சிக்காமல் வாழ்வது சிரமம். இந்த வாழை மரம் துறவியைப் போல வாழ்கிறது’’ என்றது.
இதை கேட்ட வெங்காயம் எரிச்சலான குரலில் சொன்னது: “இதெல்லாம் வெறும் நடிப்பு. சுயநலம். நான் நம்ப மாட்டேன்!”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கே தோட்டக்காரன் வேலைக்கு வந்தான். அவனிடம் சென்று வெங்காயம் கண்ணீர் சிந்தியபடியே சொன்னது: “இந்த வாழை மரம் சுத்த மோசம். அதுவே எல்லாத் தண்ணீரையும் குடித்துவிடுகிறது. முதலில் இங்கிருந்து அதை வெட்டி எறி”என்றது.
இதைக் கேட்ட தர்பூசணி: “அய்யோ! வெட்ட வேண்டாம்” என்றது.
தோட்டக்காரன் வெங்காயத்தின் பேச்சைக் கேட்டு, வாழைமரத்தை வெட் டிப்போட்டான். துண்டாகி விழுந்த வாழைமரம் வெங்காயத்தைப் பார்த்து சாபமிட்டது: “வாழ்க்கையின் அர்த் தத்தை நீ உணரவில்லை. அதனால் மெலிந்து சுருங்கிப் போவாய். உண்ணும் பொருளாகி, நீயும் என்னைப் போல துண்டு துண்டாக்கப்படுவாய். உன்னால் கண்ணீர் வடிப்பவர்கள் தினமும் உன்னைத் திட்டுவார்கள்!”
வாழை மரத்தின் நிலையைக் கண்டு தர்பூசணி வருந்தியது. அதைக் கண்ட வாழை மரம் சொன்னது: “மனதில் நல்லதை நினைத்து, நல்லதைப் பாராட்டும் தர்பூசணியே... நீ உடல் பெருத்து, எப்போதும் கருணை ஈரத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வாய்!”
அன்று முதலே வெங்காயம் சுருங்கி சிறியதாகிவிட்டது. தர்பூசணி பருமனாகி பலராலும் விரும்பப்படுகிறதாம்.
உடற்பருமன் என்பது கேலிக்குரிய விஷயமில்லை. ஒருபோதும் எவரையும் அவரது உடலமைப்பை வைத்து கேலி செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. உலகப் புகழ்பெற்ற ஓவியரான ஹென்றி டாலெஸ் லாட்ரெக் நாலரை அடி உயரமுள்ளவர். ஆனால், அதை ஒரு குறையாக ஒருபோதும் அவர் கருதவேயில்லை.
உணவுப் பொருட்கள் உண்டான விதம் பற்றியும் தாவரங்கள் உருவான விதம் பற்றியும் நிறைய வாய்மொழிக் கதைகள் உள்ளன. ‘பிரம்மாஸ் ஹேர்’ (Brahma's Hair) என்ற மேனகா காந்தி தொகுத்த நூலில் இதுபோன்ற சிறந்த கதைகள் உள்ளன.
உலகில் அதிகம் உண்ணப்படும் பொருட்களில் ஆறாவது இடத்தில் வெங்காயம் உள்ளது. எகிப்தில் கி.மு-3500-ல் வெங்காயம் பயிரிட்டிருக் கிறார்கள். அங்கே வெங்காயம் புனிதப் பொருளாகக் கருதப்பட்டது. எகிப்திய மன்னர்களைப் புதைக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்து வைத்து புதைத்திருக்கிறார்கள். மரணச் சடங்கு களில் வெங்காயம் முக்கிய பொருளாக இடம்பெற்றுள்ளது.
எகிப்திய மதகுருக்கள் வெங்காயத் தில் மந்திரத் தன்மை இருப்பதாகவும், இதன் மூலம் இறந்தவர்களை உயிர்ப் பிக்க முடியும் என நம்பினார்கள். கிரேக்க ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் உடல் உறுதிக் காக வெங்காயத்தை நிறையச் சாப் பிட்டுள்ளார்கள். அத்தோடு நோய்த் தொற்றைத் தடுக்க உடலில் வெங்காயச் சாற்றை தேய்த்துக் கொள்வார்களாம்.
வாழ்க்கைப் பாடங்களை எளிமை யாகக் கற்றுத் தருவதற்கு கதைகள் அதிகம் உதவி செய்கின்றன. கதை வழியாகத்தான் வெங்காயமும் தர்பூசணி யும் பேசிக்கொள்கின்றன. இக்கதையை ஒரு சிறுவனிடம் சொன்னபோது அவன் உடனே, “வெங்காயத்தின் குரல் எப்படியிருக்கும்?” என்று கேட்டான்.
“நீயே சொல்லு!” என்றேன். அவன் உடனே கீச்சுக் குரலில் பேசத் தொடங்கினான். வெங்காயத்தின் குரல் இப்படிதான் இருக்கும் என சிறுவன் கற்பனை செய்யத் தொடங்கும் போது, அவனுக்குள் இருந்து படைப்பாற்றல் முளைவிடத் தொடங்குகிறது. இதற் காகத்தான் கதைகள் கேட்கவும் சொல்லவும் வேண்டியிருக்கிறது.
இணையவாசல்: >கதை சொல்லிகளுக்கு உதவும் இணையதளம்
- கதை பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago