நினைவாற்றல் என்பது மனிதனுக்குக் கிடைத்த மகத்தான பரிசு! மனிதர்களைப் போல வேறு எந்த உயிரினமும் இவ்வளவு நினைவாற்றல் கொண்டதாக இல்லை. அதிலும் குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் அதிகம் நினைவாற்றல் கொண்டவர்கள்.
முதுமை நினைவாற்றலை இழக்கச் செய்கிறது. முதுமையில் சிலருக்கு தன் சொந்தப் பிள்ளைகளை, மனைவியை அடையாளம் தெரியாத அளவுக்கு நினைவாற்றல் பறிபோய்விடுவது உண்டு. உடலாக அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், நினைவுச் சங்கிலி அறுபட்டுப் போய்விடுகிறது.
நினைவைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமெனில், கூடிப் கூடிப் பேசுங்கள்; மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். குறிப்பாக, முதியவர்கள் பேச்சுத் துணையின்றிப் போனால் நினைவாற்றலை இழந்துவிடுவார்கள் என்கிறார்கள்.
மறதிதான் மனிதனைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. கடந்த காலத் துயரங்களை, வேதனைகளை மறந்து எதிர்காலம் பற்றிக் கனவு காண வைக்கிறது. ஆனால், அதே மறதி சாபமாகவும் மாறிவிடுவதும் உண்டு.
அன்றாட வாழ்க்கையில் மறதி பலருக்கும் பெரும்பிரச் சினை. செல்போனில் தொடங்கி வீட்டு சாவி வரை எத்தனையோ பொருட்களை எங்கே வைத்தோம் எனத் தேடுவது நமது வழக்கம். பேசிக் கொண்டிருக்கும்போதே என்ன பேசினோம் என மறந்துவிடுவதும் உண்டு. எதிரில் இருப்பவரிடம் ‘நான் இப்போ என்ன பேசிக்கிட்டு இருந்தேன்’ எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
மறதி சிலந்திவலையைப் போல படரத் தொடங்கி மெல்ல மனித மூளையின் நினைவாற்றலை அழிக்கத் தொடங்கிவிடுகிறது. எதை மறக்க வேண்டும்? எதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை. பலரும் மறக்க வேண்டிய சண்டை சச்சரவுகளை நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். நினைத்து நினைத்து சந்தோஷம் கொள்ள வேண்டிய நினைவுகளை உடனே மறந்துவிடுகிறார்கள்.
உதவி செய்த மனிதர்களை, தியாகம் செய்த தலைவர்களை சமூகம் மறந்துவிட்டது என்பதுதானே இன்றைய அவலம். மறதிக்கு எதிராகவே எப்போதும் கலையும் இலக்கியமும் இயங்கி வருகின்றன.
மறந்து போன விஷயங்களை மீள்உருவாக்கம் செய்வது கலையின் செயல்பாடுகளில் முக்கியமானது. வரலாறு என்பதே நினைவுப்படுத்துதல்தானே! மறதி ஏன் வருகிறது என்பதைப் பற்றி அறிவியல்பூர்வமாக நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மன அழுத்தம், கவனமின்மை, அதிக உணர்ச்சிவசப்படல், அதிக தனிமை, கவலை, துயரம், இவையெல்லாம்கூட மறதியை உருவாக்கிவிடும் என்கிறார்கள். ‘ஆட்டை தோள்ல போட்டுக் கொண்டே ஆட்டை தேடுனானாம் ஒருத்தன்’ என்கிற சொலவடையே நம்மிடம் உண்டு.
சென்ற தலைமுறையில் கம்ப ராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற புத்தகங்களை முழுமையாக மனதில் பதியவைத்து நினைவில் இருந்து எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்ற அறிஞர்கள் இருந்தார்கள். இன்றைய செல்போன் யுகத்தில் எட்டு இலக்க தொலைபேசி எண் கூட நினைவில் இருப்பதில்லை. கவிதை வாசித்தல் என்பது நினைவாற்றலை வளர்க்கும் பயிற்சி. ஆழ்ந்து கவிதையை ஊன்றி படித்து வரும் சிறார்களுக்கு நினைவாற்றல் அதிகமிருக்கும்.
யூதர்கள் மறதிக்கு என்று ஒரு தேவதை இருப்பதாக நம்புகிறார்கள். அந்த தேவதை ஒருவனின் மூக்கில்தான் முத்தமிடுமாம். அப்படி முத்தமிட்டுவிட்டால் அவனுக்கு நினைவாற்றல் போய்விடும் என்கிறார்கள். இந்த தேவதை, மறதியை உருவாக்கி நல்லதே செய்யும் எனவும் நம்புகிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
கொலை குற்றத்துக்காக யூத வணிகன் ஒருவனை அரசாங்கம் கைது செய்தது. அவன் அப்பாவி. நிரபராதி. யாரோ செய்த கொலைக்கு அவனைக் கைது செய்து தூக்கு தண்டனை விதித்துவிட்டது அரசு.
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான நாளுக்கு முதல் நாள் யூத வணிகனின் குடும்பம் அவனைக் காண வந்திருந்தது. யூத வணிகன் கண்ணீர்விட்டு அழுது தன் உயிரைக் காப்பாற்றும்படி வேண்டினான். குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் மண்டியிட்டு மறதியின் தேவதையை வணங்கி, உன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று பிரார்த்தித்தார்கள்.
மறுநாள் காலை, வணிகனை தூக்கிலிடுவதற்காக அழைத்துக் கொண்டுப் போனார்கள். ஒருவனை தூக்கிலிடுவதற்கு முன்பு அவன் எதற்காக கொல்லப்படுகிறான் என்ற விவரம் அடங்கிய அரசு உத்தரவை வாசிப்பது வழக்கம்.
அன்றைக்கு அந்த உத்தரவுள்ள காகிதத்தைக் காணவில்லை. சிறை அதிகாரி அதை மறதியில் எங்கோ வைத்துவிட்டார். உடனே தேடும்படி அவர் சிறைக் காவலர்களிடம் உத்தரவிட்டார். அவர்கள் எங்கு தேடியும் அதனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உடனே, நீதிபதியிடம் போய் அந்த வழக்கைப் பற்றி சொல்லி புதிய உத்தரவு பெற்றுவரும்படி சிறை அதிகாரி உத்தரவிட்டார்.
இரண்டு காவலர்கள் உடனடியாக நீதிபதி வீட்டுக்குச் சென்றார்கள். அவருக்கு அந்த வழக்கை பற்றி எதுவும் நினைவில் இருக்கவில்லை. எல்லாமும் மறந்து போயிருந்தது. அவர் நீதிமன்றத்தில் போய் பதிவாளரிடம் விவரங்களைக் கேட்டுவரும்படி சொன்னார்.
உடனே பதிவாளரைத் தேடிச் சென்றார்கள். அவருக்கும் அது என்ன வழக்கு? என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என ஒரு விவரமும் நினைவில் இல்லை. இப்படி வழக்குத் தொடர்பான எல்லா விவரங்களும் மறந்து போயிருந்தன.
முடிவில் அரசாங்க உத்தரவில்லாமல் தண்டிக்க முடியாது எனக் கூறி யூத வணிகன் விடுதலை செய்யப்பட்டான்.
அவன் வீடு திரும்பி மனைவி பிள்ளைகளிடம் இந்த அதிசயம் எப்படி நடந்தது எனக் கேட்டான். அப்போது மறதியின் தேவதை அவர்கள் முன் தோன்றி, நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக நான்தான் அவர்களின் மூக்கில் முத்தமிட்டேன் என்றது. அந்தக் குடும்பமே மறதியின் தேவதையை வணங்கி, நன்றி சொன்னார்கள் என அந்தக் கதை முடிகிறது.
இப்படி மறதியால் உருவாகும் நன்மைகள் ஒருபக்கம் இருந்தாலும் மறதியால் ஏற்படும் நெருக்கடிகளே அதிகம் என்று தோன்றுகிறது. தானே ஏற்படும் மறதியைப் புரிந்து கொள்ள முடிகிறது. மறதியை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. மறதி இன்று தேசிய வியாதியாக மாறியிருக்கிறது. மறதியை ஒப்புக்கொள்ள பலரும் விரும்புவதே இல்லை. மறதி இயல்பானதுதானே; அதை மறைக்க ஏன் இத்தனை பொய்கள்!
‘ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?’
எனப் பாடுகிறார் பாரதி. இது முற்றிலும் உண்மை. நமக்கு மிகவும் விருப்பமானவர்களின் முகம் திடீரென நினைவுக்கு வரவே வராது. ஆசை முகமும் கூட மறந்து போகவே செய்யும்.
கடந்த காலத்தின் வலியும் வேதனையும் மறந்து போக வேண்டியவை. அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்தான் முக்கியமானவை. மற்றபடி நேற்றைய துயரைச் சொல்லிகொண்டே இருந்தால் அதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
நம்மை நேசிப்பவர்களை, நன்றிக்குரியவர்களை, வழிகாட்டிகளை, ஆசான்களை, நமக்காக வாழ்பவர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. நம் நினைவுகளை மட்டுமின்றி, தேசத்தின் நினைவுகளையும், அதற்கு உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவுகளையும் காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பே.
இணைய வாசல்: >யூதர்களின் மரபுக் கதைகளை அறிந்துகொள்ள
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago