சந்தோஷத்தை ஏற்படுத்தித் தருவது எளிதானது இல்லை. சிலரே, தன்னைச் சுற்றிலும் வெளிச்சத்தைப் போல சந்தோஷத்தைப் பரவவிடுகிறார்கள். ஒரு சிலரோ, அடுத்தவர் சந்தோஷப்படுகிறார்களே என நினைத்து நினைத்து, பொறாமையும் வயிற்றெரிச்சலும் அடைகிறார்கள்.
அன்றாடம் இரவானதும் விளக்குகளை எரியவிடுகிறோம். காரணம், இருட்டோடு வாழ்வது நமக்குப் பிடிப்பது இல்லை. ஆனால், அன்றாடம் வீட்டில் சந்தோஷத்தை ஒளிரவிடுகிறோமா என்றால், இல்லை என்றே பதில் கிடைக்கிறது.
ஒருவரை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பணம் தருவது, உணவு தருவது, உடை தருவது, பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது… இவைதான் சந்தோஷத்தின் அடையாளமாக உள்ளன. ஆனால், இவற்றைவிடவும் மேலான சந்தோஷங்கள் உலகில் நிறையவே இருக்கின்றன. அந்த சந்தோஷங்களை உருவாக்கிக்கொள்ள பணமோ, பரிசோ தேவையில்லை. சொற்களே போதுமானது!
உலகில் அதிகமானோர் சந்தோஷப்படுவது பாராட்டு சொற்களால்தான். அதுவும் மனம் நிறைய யாராவது பாராட்டும்போது ஒருவர் அடையும் சந்தோஷத்துக்கு நிகரே இல்லை. ஆனால், ஆயிரம் முறை கோபம் கொள்ளும் ஒருவர் பத்து முறைப் பாராட்டுவதற்கு யோசிப்பவராக இருக்கிறார்.
பாராட்டுவது, உற்சாகப்படுத்துவது, உத்வேகம் அளிப்பது, நம்பிக்கையை உருவாக்குவது, ஆறுதல் படுத்துவது… என சொற்களைக் கொண்டு, பலவிதமாக நாம் சந்தோஷங்களை உருவாக்கவும் பகிர்ந்து தரவும் முடியும்.
சந்தோஷம் நம் மனதில் இருந்தால் நிச்சயம் அதன் வெளிச்சம் வெளியே பரவவே செய்யும். நமக்குள் வெறுப்பும், கசப்பும், குரோதமும், கருமைப் புகை எனப் படிந்திருந்தால் எப்படி சந்தோஷத்தை உருவாக்க முடியும்?
குழந்தைப் பருவத்தை நினைத்து நினைத்து பலரும் மகிழ்வதற்கு முக்கிய காரணம், நிறைய சந்தோஷங்களை எதிர்கொண்டதும் அனுபவித்ததுமே ஆகும்.
குழந்தைகள் சந்தோஷத்துக்காக ஏங்குகிறார்கள். சந்தோஷத்தைப் பற்றி கனவு காணுகிறார்கள். சந்தோஷம் கிடைக்காதபோது வேதனை அடைகிறார்கள்.
குழந்தைகளை சந்தோஷப்படுத்துவது எளிதானது. ஒரு காகிதக் கப்பல், ஒரு காகிதப் பறவை, ஒரு சாக்லேட் போதுமானது. ஆனால், வளர்ந்த மனிதர்கள் சந்தோஷத்தை தான் விரும்பிய வடிவத்தில் எதிர்பார்க்கிறார்கள். சந்தோஷம் அவர்களிடத்தில் பொருள்வடிவம் கொண்டுவிடுகிறது. வெறும் வார்த்தைகளால் பரிமாறப்படும் சந்தோஷம் வளர்ந்த மனிதர்களுக்கு போதுமானதாக இல்லை.
எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா என்ன?
சீனாவின் பழங்கதை ஒன்று இதைப் பற்றிப் பேசுகிறது. அந்தக் காலங்களில் உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள் வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் குறிப்பாக புத்தாண்டு தொடங்கும்போது 10 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அப்போது சிறப்பு சம்பளமும் பெறுவார்கள்.
வாங் என்ற ஆசிரியர் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்குப் புறப்பட்டார். தனக்காக மனைவி காத்திருப்பாளே என நினைத்து வேகவேகமாக தன் கிராமத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அவரது நண்பரான ஷாங் உடன் பயணம் செய்தார். மூன்று நாட்கள் பயணம் செய்தால்தான் வாங் தன்னுடைய கிராமத்தை அடைய முடியும்.
பயண வழியில் ஷாங் தன் கையில் இருந்த பணத்தில் குடித்தார். சூதாடினார். கடனாளியாகியாகவே வீட்டுக்குத் திரும்பி போனால் மனைவியும் பிள்ளைகளும் திட்டுவார்களே என நினைத்து பள்ளிக்கே திரும்பி போய்விட்டார்.
ஆனால், வாங் மனைவிக்கான புத்தாடை மற்றும் இனிப்புகளுடன் வீடு நோக்கிப் பயணித்தார். வாங் தனது கிராமத்துக்குப் போகிற வழியில்தான் ஷாங்கின் ஊர் இருந்தது. அதைக் கடக்கும்போது ஷாங்கின் மனைவியும் பிள்ளைகளும் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார். ஷாங்கின் மனைவி வாங்கிடம் தன் கணவரைப் பற்றி விசாரித்தாள். ‘‘புத்தாண்டு கொண்டாட எங்களிடம் பணமில்லை. அவர் வந்தால்தான் பிள்ளைகளின் பசி தீரும். அவர் எப்போது வருவார்?’’ எனக் கேட்டாள். அதைக் கேட்ட வாங்கிற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை.
தன் கையில் இருந்த புத்தாடை, இனிப்பு மற்றும் தனது சம்பளப் பணம் அத்தனையையும் அவர்களிடம் கொடுத்து ‘‘ஷாங்கிற்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் இவற்றைக் கொடுத்து அனுப்பினார். அவர் வசந்த காலத்தில் ஊருக்கு வருவதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்’’ என்றார்.
புத்தாடை, இனிப்பு, பணம் இவற்றை கண்ட ஷாங்கின் குடும்பம் சந்தோஷத்தில் மூழ்கியது. வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் வாங்கிற்கு நன்றி சொன்னார்கள்.
வெறும்கையோடு வாங் வீடு திரும்பினார். நடந்த விஷயத்தை அவர் மனைவியிடம் சொன்னதும் அவள் கோபித்துக் கொண்டாள். ‘‘வெறும்கையை வைத்துக் கொண்டு எப்படி புத்தாண்டு கொண்டாடுவது? யாரோ ஒருவருக்கு பணத்தைத் தூக்கி கொடுத்தது உங்கள் தவறு!’’ என்று சண்டையிட்டாள்.
வாங் அவளை சமாதானம் செய்ய முயற்சித்துத் தோற்றுப் போனார்.
விடிந்தால் புத்தாண்டு. வாங்கின் வீடு இருண்டு கிடந்தது.
இரவில் மனைவி ஓர் ஆலோசனை சொன்னாள்: ‘‘இந்த ஊரில் உங்களிடம் படித்த மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களிடம் போய் கடன் கேளுங்கள். கடனாக பணம் வாங்கி வந்தால் மட்டுமே நாளை நம் வீட்டில் உணவு. இல்லாவிட்டால் புத்தாண்டில் நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான்!’’
‘‘மாணவர்களிடம் கடன் கேட்பது தவறானது. அதுவும் புத்தாண்டு அன்று ஒருவன் கடன் கேட்கக் கூடாது’’ என வாங் மறுத்துவிட்டார். வாங்கின் மனைவி அவரை மோசமாகத் திட்டினாள்.
புத்தாண்டு பிறந்தது. வாங் வீட்டில் எந்த விசேஷமும் இல்லை. கதவைக்கூட அவர்கள் திறக்கவில்லை.
திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, வாங்கின் மனைவி கதவைத் திறந்தாள்.
வாசலில் பத்து மாணவர்கள், ஆளுக்கு ஒரு தட்டில் பரிசு, புத்தாடை, உணவு, இனிப்புகளுடன் நின்றிருந்தார்கள். தங்கள் ஆசிரியருக்கு புத்தாண்டுப் பரிசாக இவற்றை அளிக்க விரும்புவதாகச் சொன்னார்கள்.
வாங்கின் மனைவியால் நம்பவேமுடியவில்லை. உள்ளே அழைத்தாள். வாங் தனது மாணவர்களின் அன்பை கண்டு சந்தோஷம் அடைந்தார்.
மீண்டும் வாசல் கதவு தட்டப்பட்டது.
வாசலில் ஷாங்கின் மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள். அவர்கள் கையிலும் பரிசுப் பொருட்கள் இருந்தன.
ஷாங்கின் மனைவி சொன்னாள்: ‘‘நேற்றிரவு எனது கணவர் வீடு திரும்பிவிட்டார். அவர் குடித்தும் சூதாடியும் சம்பளப் பணத்தை இழந்த கதையைச் சொன்னார். உங்கள் பணத்தை எங்கள் சந்தோஷத்துக்காக நீங்கள் தந்தது உங்களின் பெருந்தன்மை. இந்த மனசு யாருக்குமே வராது. பெரிய மனசோடு நீங்கள் கொடுத்தப் பணத்தை செலவு செய்ய மனமில்லை. ஆகவே, திரும்பி தந்துவிட்டுப் போக வந்திருக்கிறோம்!’’
‘‘ஏழு குழந்தைகள், வயதான தந்தை- தாய்… என உங்கள் குடும்பம் பெரிசு. நீங்கள் புத்தாண்டு கொண்டாடுவதுதான் பொருத்தமானது. இங்கே நான் என் மனைவி இருவர்தானே. ஆகவேதான் எனது சம்பளப் பணத்தை உங்களுக்காகக் கொடுத்தேன். உங்கள் சகோதரன் கொடுத்த பணமாக நினைத்து புத்தாண்டு கொண்டாடுங்கள்!’’ என்றார்.
‘‘வாங் உங்களின் அன்பு மகத்தானது. ‘ஆசிரியரே அதிகமானவர்களை சந்தோஷப்படுத்துகிறவர்’ என்பதற்கு அடையாளமாக இருக்கிறீர்கள், நன்றி நன்றி!’’ என அந்தக் குடும்பமே நன்றி சொல்லிப் போனது;
இந்த விஷயம் ஊருக்குள் பரவியது. உடனே ஊரில் இருந்த அத்தனை பேரும் தனது மனைவி பிள்ளைகளுடன் புத்தாண்டில் வாங்கிடம் ஆசி பெற வேண்டும் என விரும்பி பரிசுப் பொருட்கள், இனிப்புகளுடன் திரண்டு வந்தார்கள். வாங்கின் வீடு நிறைய பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் நிரம்பின என முடிகிறது அந்தக் கதை.
எளிய மனிதர்கள் தங்களால் முடிந்த அளவு சந்தோஷத்தை உருவாக்கவே முனைகிறார்கள். பணம் படைத்தவர்களோ, சந்தோஷத்தை இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். சந்தோஷப்படுத்துவதில்தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது என்பதை அறியாமல்.
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
இணைய வாசல்: >சீன மரபுக் கதையை வாசிக்க
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago