பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் சொல்லப்பட்ட கதை இது.
ஒரு மழைக் காலத்தில் பாம்பு ஒதுங்குவதற்கு இடமில்லாமல் அலைந்து ஒரு எலி வளையின் முன்பு வந்து நின்று, ``நண்பா என்னால் இந்த அடைமழையைத் தாங்க முடியவில்லை. உன் வீட்டில் இடம் கொடுப்பாயா?” என்று எலியிடம் கேட்டது.
அதற்கு எலி ``நீ என் எதிரி. உன்னை எப்படி என் வீட்டுக்குள் தங்கவிடுவது?” என்றது.
அதைக் கேட்ட பாம்பு சொன்னது: ``நான் இப்போது திருந்திவிட்டேன். உன்னையோ, உன் பிள்ளைகளையோ தொந்தரவு செய்ய மாட்டேன். என்னை நம்பு” என்று கெஞ்சியது.
அதை நம்பிய எலி, பாம்பை தனது வளைக்குள் தங்க அனுமதித்தது. பாம்பும் அமைதியாக எலி வளைக்குள் சுருண்டு கிடந்தது. எலிகளோடு ஒன்றாக உணவைச் சாப்பிட்டது. ஆனால், அதன் கண்கள் எபோதும் எலிக் குஞ்சுகள் மீதே இருந்தன. ஆஹா. இந்த எலிக் குஞ்சுகளை எப்படியாவது சாப்பிட வேண்டுமே என அது சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கிடந்தது.
முடிவில் ஒருநாள் எலி பாம்பின் பொறுப்பில் எலிக் குஞ்சுகளை விட்டுவிட்டு உணவைத் தேடிப் புறப்பட்டுப் போனது. அந்த நேரம் பார்த்து பாம்பு எலிக் குஞ்சுகளைக் கொன்று விழுங்கிவிட்டது. வீடு திரும்பிய எலி தனது பிள்ளைகளைக் காணவில்லையே என தேடியது.
அப்போது பாம்பு வருத்தமாக சொன்னது: ``நான் அசதியில் தூங்கிவிட்டேன். அந்நேரம் பார்த்து உன் பிள்ளைகள் வெளியே போய் விட்டார்கள். பருந்து அவற்றைத் தின்றுவிட்டது.”
அதைக் கேட்டு எலி கண்ணீர்விட்டு அழுதது. ஆனாலும் அதற்கு பாம்பின் மீது சந்தேகம் வரவில்லை. மழைக் காலம் முடியப்போகிற நேரம். பாம்பு மீதமிருந்த எலியை கொல்வதற் காக ஒரு நாடகம் ஆடத் தொடங்கியது.
அதன்படி தனக்கு கண்வலி வந்துவிட்ட தாகச் சொல்லி தன் கண்ணுக்கு ஒத்தடம் தர முடியுமா என எலியிடம் கேட்டது.
எலியும் கிழிந்த துணியை எடுத்து பாம்பின் கண்ணுக்கு ஒத்தடம் தர முயன்றது. அப்போது பாம்பின் நாக்கு தன்னை அறியாமல் சீறிக் கொண்டு எலியின் மீது தடவியது. எலி பயந்து போய் விலகியதும் பாம்பு சொன்னது: ``பயப்படாதே. நான் உன்னை ஒன்றும் செய்துவிட மாட்டேன். நீ என் நண்பன்.”
உடனே எலி மறுபடியும் கண்ணுக்கு ஒத்தடம் கொடுக்க முயன்றது. இப்போது அந்த கண்ணில் எலியைக் கொன்று சாப்பிட வேண்டும் என்ற பாம் பின் ஆசை ஒளிர்வதைக் கண்டுகொண்டது எலி.
மறு நிமிஷம் எலி சொன்னது: ``பச்சிலை பறித்துக் கொண்டு வந்து ஒத்தடம் தந்தால் இதமாக இருக்கும். இப்போ வந்துவிடுகிறேன்” என்று சொல்லி எலி வெளியே சென்றது.
எலியைக் கொல்வதற்காக பாம்பு காத்துக் கொண்டிருந்தபோது, காய்ந்த சுள்ளிகள், சருகு களை அள்ளி வந்து எலி வளையை அடைத்து வெளியே நெருப்பை வைத்துவிட்டது எலி.
தீயில் மாட்டிக்கொண்ட பாம்பு: ``நண்பா காப்பாற்று காப்பாற்று…” என கத்தியது.
அப்போது எலி சொன்னது: ``நான் உன்னை நண்பனாக நினைத்தேன். நீயோ உன் கெட்ட புத்தியை மாற்றிக்கொள்ளவே இல்லை. அடைக் கலம் கொடுத்த வீட்டில் என் பிள்ளைகளைக் கொன்று விழுங்கியிருக்கிறாய். இன்றைக்கு என்னையும் கொல்லப் பார்த்தாய். நன்றி மறந்தவனுக்கு இதுதான் தண்டனை!”
திகுதிகுவென எரியும் நெருப்பில் பாம்பு கருகி இறந்து போனது.
சிறார்களுக்குச் சொல்லப்பட்ட கதையாக இருந்தபோதும் இது பெரியவர்களுக்கானதே. கதையில் வரும் பாம்பு போன்ற மனிதர்கள் நம்மை சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் எதையும் செய்யும் இவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டாம் என்பதையே இக்கதை எடுத்துச் சொல்கிறது.
இக்கதையில் என்னை கவர்ந்த இடம் பாம்புக்கு எலி ஒத்தடம் தருவது. அந்தப் பரிவு முக்கியமானது. தாயைப் போலத்தான் பாம்பை எலி கவனித்துக் கொள்கிறது. ஆனால், பாம்பு அதை உணரவேயில்லை. உணவும், இடமும் தந்து தன்னைக் காப்பாற்றியது எலிதானே என பாம்பு யோசிக்கவே இல்லை. இதுவும் மனிதனின் குணம்தான். அதை பாம்பு வடிவில் ஏற்றி கதை சொல்கிறது.
வியட்நாம் மக்கள் உறுதியானவர்கள். போரில் அமெரிக்க ராணுவத்தைத் தோற் கடித்த போராளிகள். தங்களின் வாய்மொழிக் கதைகள், பாடல் கள், இசை நுண்கலைகள் போன்ற வற்றை தேசிய அடையாளமாக கருதும் வியட்நாம் அரசு, அவற்றை சேகரிக்கவும் ஆவணப் படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இதற்காக தேசமெங்கும் நாட்டுப் புற ஆய்வு மையங்களை உருவாக்கியுள்ளது.
தமிழகத்திலும் மாவட்டந்தோறும் நாட்டுபுற மையங்கள் உருவாக்கபட வேண்டும். அங்கே கிராமியக் கலைகள் மற்றும் கதைகளை ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். அத்துடன் அரசு விழாக்களில் கட்டாயம் கிராமியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓர் அரசாணை வெளியிடப்பட வேண்டும். அதுதான் கிராமியக் கலைகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி.
வைக்கம் முகமது பஷீர் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர். அவரைப் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. எழுத்தாளர்கள் கதைகள் எழுதுவது இயல்பு. ஆனால், ஒரு எழுத்தாளனின் விசித்திர இயல்புகளைப் பற்றி கதைகள் உரு வாவது அபூர்வம். பஷீர் நடமாடும் கதாரூபம்.
ஒருநாள் பஷீர் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். புட்டும், பழமும், டீயும் சாப்பிட்டுவிட்டு பில் கொடுப்பதற்கு காசை தேடினால் பர்ஸை காணவில்லையாம். பஸ்ஸில் வரும்போது யாரோ பிக்பாக்கெட் அடித்துவிட்டிருந்தார்கள்.
என்ன செய்வது எனப் புரியாமல் ஹோட்டல் உரிமையாளரிடம் நடந்ததை சொன்னார். ``அவரோ இரக்கமில்லாமல் சாப்பிட்ட பில்லுக்கு பதிலாக உன் ஜிப்பா, வேஷ்டியைக் கழட்டி கொடுத்துட்டுப் போ’’ என்றார்.
பஷீருக்கு வேறு வழி தெரியவில்லை. தனது ஜிப்பாவைக் கழட்ட முயற்சிக்கும்போது ‘‘யாராடா இப்படி ஒரு மனிதனை பொது இடத்தில் அவமானப்படுத்துகிறவன்…’’ என்று ஒரு குரல் கேட்டது.
ஹோட்டல் முதலாளி பயத்துடன் திரும்பி பார்த்தபோது ஓர் ஆள் கடுமையான குரலில் ‘‘எதற்காக இப்படி ஜிப்பாவை கழட்ட சொல்கிறாய்?’’ எனக் கேட்டார்.
நடந்த விஷயத்தை ஹோட்டல் முதலாளி சொன்னதும், அந்த பில் பணத்தை தானே கொடுத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொள்ளும் படி பஷீரிடம் சொன்னார் அந்த மனிதர்.
பிறகு, இருவரும் ஹோட்டலைவிட்டு வெளியே வந்தார்கள். பஷீர் அந்த மனிதருக்கு நன்றி சொன்ன போது, அவர் உன் பர்ஸை பிக்பாக்கெட் அடித்ததே நான்தான். எது உன் பர்ஸ் என பார்த்து எடுத்துக் கொள்’’ என நாலைந்து பர்ஸைக் காட்டியுள்ளார்.
பஷீர் தனது பர்ஸை எடுத்துக் கொண்டார். பிறகு வியப்புடன் ‘‘நீயே ஒரு திருடன்; நீ ஏன் என்னைக் காப்பாற்றினாய்?’’ எனக் கேட்டார்.
அதற்கு அவன் ‘‘நான் திருடன்தான். ஆனால் ஒரு மனிதனை சட்டை, வேஷ்டியைக் கழட்ட சொல்லி ஒருவன் அவமானப்படுத்தும்போது பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். எனக்கும் மனசாட்சி இருக்கிறது’’ என்றார்.
பஷீர் அவருக்கு நன்றி சொன்னதாகவும், விடைபெற்று போனபிறகு அவரது பெயரை கேட்கவில்லை. ஒருவேளை அப்பெயர் ‘கருணை’ என தான் நினைத்துக் கொண்டதாகவும் கதை முடிகிறது.
நடந்த விஷயம் உண்மை சம்பவமா, கதையா என்பது தெரியாது. ஆனால், கதையின் வழியே பிக்பாக்கெட்காரனுக்குள்ளும் அன்பிருக்கிறது; மனிதனை மனிதன் அவமதிக்கும் போது ஆவேசம் பொங்கி எழவே செய்யும் என்பது வெளிப்படுத்தப் படுகிறது. இதுதான் மனிதனின் உண்மையான இயல்பு. வியட்நாம் கதை சொல்வதும் இதுபோன்ற அன்பின் அடையாளத்தையே!
- கதைகள் பேசும்…
இணையவாசல்: போதிசத்துவரின் பிறப்பைக் கூறும் புத்த ஜாதகப் கதைகளை அறிந்துகொள்ள >http://tales.siththan.com/
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago