ஹபீப் தன்வீரின் புகழ்பெற்ற நாடகம் 'சரண்தாஸ் சோர்'. ராஜஸ்தானி நாட்டுப்புறக் கதை ஒன்றை எடுத்து அதைச் சமகால அரசியல், சமூக விமர்சனமாக தன்வீர் மாற்றியிருப்பார். இயக்குநர் ஷ்யாம் பெனகலால் இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
சமீபத்தில் இந்த நாடகத்தை பேராசிரியர் பார்த்திபராஜா இயக்கத்தில் சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நடிப்பில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அரசாட்சி, இளவரசி, சாமியார் போன்ற பாத்திரங்கள் கதையை எங்கோ ஒரு பழங்காலத்தில் நடப்பதாகக் காட்டினாலும், பார்ப்பதற்கு எளிமையானதொரு நீதிக்கதைபோலத் தோன்றினாலும், சிக்கலான அடுக்குகள் பல நிரம்பிய கதை இது.
நாயகன் சரண்தாஸ் ஒரு வழிப்பறித் திருடன். காவலரால் துரத்தப்படும்போது பேராசைக்கார சாமியார் ஒருவரின் ஆசிரமத்துக்குள் சென்று பதுங்கிக்கொள்கிறான். சரண்தாஸை நல்வழிப்படுத்த முனையும் சாமியார் அவனிடம் நான்கு சபதங்களை ஏற்கச் சொல்கிறார். நடக்கவா போகிறது என்று நினைத்துக்கொண்டு சபதங்களை சரண்தாஸ் முன்வைத்துவிடுகிறான்.
தங்கத் தட்டில் சாப்பிடமாட்டேன்; தன்னைக் கொண்டாடும் ஊர்வலத்தில் போக மாட்டேன்; நாட்டை ஆளச் சொல்லி வற்புறுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; இளவரசி தன்னை மணந்துகொள்ளக் கெஞ்சினாலும் மணந்துகொள்ள மாட்டேன் ஆகியவையே இந்த நான்கு சபதங்கள். பிரச்சினை இந்தச் சபதங்கள் அல்ல. அடுத்து அந்தச் சாமியார் அவனிடம் எதிர்பார்ப்பதுதான். ஒரு போதும் பொய்யே பேசக் கூடாது என்று சாமியார் வற்புறுத்த, அதனை சரண்தாஸ் ஏற்றுக் கொள்கிறான்.
ஒருமுறை சரண்தாஸ், அரண்மனையிலேயே தன்னால் திருட முடியும் என்று காண்பிப்பதற்காக அந்தப் பகுதி ராஜாவின் அரண்மனையில் திருடிவிடுகிறான். அவன் எடுப்பதோ ஒரே ஒரு தங்கக் காசு. கஜானா பொறுப்பாளரும் தன் பங்குக்குக் கொஞ்சம் எடுத்துக்கொள்கிறார். பிடிபடும் சரண்தாஸ் உண்மையைச் சொல்கிறான். இளவரசி அவன்மீது மையல் கொள்கிறாள். அவனை விடுதலை செய்கிறாள். இளவரசி சரண்தாஸை யானைமீது அமர்த்தி அரண்மனைக்கு அழைத்துவர விரும்புகிறாள். ஆனால், சபதத்தின்படி சரண்தாஸால் அவ்வாறு செய்ய முடியாது. இளவரசியை அவமதித்த காரணத்தால் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறான். இரவில் அவனைத் தனியாகத் தன் அறைக்கு அழைத்துவரச் செய்யும் இளவரசி, அவனை அமர்த்தி தங்கத் தட்டில் உணவு பரிமாற விரும்புகிறாள்; அவனுக்கு நாட்டையே தர விரும்புகிறாள்; அவனை மணம் செய்துகொள்ள விரும்புகிறாள். சபதங்களின்படி இவை அனைத்தையும் அவன் மறுத்துவிடுகிறான்.
மனம் உடைந்துபோன இளவரசி, அவர் களுக்கு இடையிலான உரையாடலை வெளியில் சொல்லாதிருக்குமாறு அவனிடம் கேட்டுக் கொள்கிறாள். யாரேனும் கேட்டால் நடந்த உண்மைகளை அவன் சொல்லியே ஆக வேண்டும் என்பதால் இளவரசியின் இந்தக் கோரிக்கையையும் மறுக்கிறான். சிறையிலிருந்து தப்பி, தன்னைத் தாக்க அவன் வந்திருப்பதாக இளவரசி கூச்சலிடுகிறாள். காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்கிறார்கள். தன் மானத்தைக் காத்துக்கொள்ள சரண்தாஸுக்கு மரண தண்டனை விதிக்கிறாள் இளவரசி.
கதையில் வரும் யாருமே புனிதர்கள் அல்லர். திருடன் என்ற வார்த்தை சொல்லப்படும்போ தெல்லாம் தன்னைத்தான் யாரோ குறிப்பிடுவதாக சாமியார் திடுக்கிடுகிறார். இளவரசி, தன் அவமானத்தை மறைக்க அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்து ஓர் அப்பாவியைக் கொன்றுவிடுகிறாள். சரண்தாஸோ திருடன். தன்னந்தனியாகச் செல்லும் பெண்களிடமிருந்தும் ஈவிரக்கம் பாராமல் களவாடுகிறான். கோயில் நகை களையும், சாமி சிலையையுமே திருடிவிடுகிறான்.
அரிச்சந்திரன் கதையில் அவரின் உண்மையையே பேசுவதால் துன்பங்களுக்கு ஆட்பட்டாலும் இறுதியில் கடவுள் அவனைக் காப்பாற்றிவிடுகிறார். ஏனெனில், சோதனைகளை அவனுக்குத் தருவதே கடவுள்தான். ஆனால், சரண்தாஸின் சோதனைகளுக்கு அவன் மட்டும்தான் காரணம். உண்மையையே சொல்ல வேண்டும் என்ற ஒரு சாமியாரின் (அதுவும் ஒரு போலிச் சாமியாராகக்கூட இருக்கக்கூடும்) வற்புறுத்தல் அவனுடைய உயிரையே குடித்துவிடுகிறது.
இந்த நாடகத்தைத் தூக்கி நிறுத்தியதில் முக்கியமான பங்கு சரண்தாஸாக நடித்த ஜீவின் ரஞ்சித் சிங் என்ற மாணவர். பள்ளி மாணவியாக இருந்தாலும், பார்வையாளர்களின் கிண்டலைத் தாண்டித் தன் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, காதல் வசனங்ளை வெட்கப்படாமல் பேசி அருமையாக நடித்தார், இளவரசி பாத்திரத்தை ஏற்றிருந்த நிதீஸ்ரீ. நாடகத்தில் பூசாரிப் பாத்திரத்தை பார்த்திபராஜாவே ஏற்றுச் சிறப்பாக நடித்திருந்தார்.
என்னை வெகுவாகக் கவர்ந்தது, பள்ளிக்கூட மாணவர்களை வைத்துக்கொண்டே தொழில்முறை நாடக நடிகர்களின் தரத்தை நெருங்கும்விதத்தில் மேடை நாடகங்களை நடத்திவிட முடியும் என்பதுதான். நம் பள்ளிகள் படிப்பைத் தாண்டிப் பலதரப்பட்ட கலைகளைக் கற்றுத்தர வேண்டும், மாணவர்களை பல கலைகளிலும் வல்லுநர்களாக ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையைக் கல்வியாளர்கள் எழுப்பியபடி இருக்கிறார்கள். கலைகளைக் கற்றுத் தருவது மட்டுமல்ல, அந்தக் கலைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களாகவும் மாணவப் பருவத்திலேயே அவர்களை ஆக்க முடியும் என்பதை இம்மாதிரியான பரிசோதனை முயற்சிகள் நமக்குக் காட்டுகின்றன.
-பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், தொடர்புக்கு: badri@nhm.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago