ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் வீட்டின் அருகில் உள்ள சாலையில் பெரிய கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வரிசை வரிசையாக பைக்குகள். கார்கள். நீண்ட வரிசை. தள்ளுமுள்ளு. எதற்காக இவ்வளவு பேர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்தால், அது டாஸ்மாக் மதுக்கடை.
உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஆகவே, இங்கே கூட்டம் மொய்க்கிறது என்றார் பெட்டிக் கடைக்காரர். மதுக்கடையில் வரிசையில் நின்று அடித்து சண்டையிட்டு மதுவை வாங்க போட்டிப் போடுவதை காணும் போது, அதிர்ச்சியாகவே இருந்தது. வாழ்வில் ஒருமுறைகூட இவர்களில் எவரும் ரேஷன் கடை வரிசையில் நின்றிருக்கவே மாட்டார்கள்.
நல்லதொரு இசை நிகழ்ச்சிக்கோ, இலக்கிய நிகழ்ச்சிக்கோ இப்படி ஒரு கூட்டம் அலைமோதியதாக வரலாறே கிடையாது. இவ்வளவு ஏன், உடல் நலமற்று மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை வந்தால்கூட, 10 நிமிஷம் காத்திருக்க முடியாமல் சலித்துக் கொள்பவர்களாகத்தானே இருக்கிறார்கள். ஆனால், இப்படி வெயிலில் காத்துக் கிடந்து, முட்டி மோதி மது பாட்டில்களை வாங்க போட்டியிடுகிறார்கள் என்றால், இதை காலக்கொடுமை என்றுதானே சொல்லவேண்டும்.
இதில் கூட்டத்தை முறைப்படுத்த இரண்டு காவலர்கள் நின்றிருந்தார்கள். சாலையை அடைத்து பைக், கார்களை நிறுத்திவிட்டதால் போக்குவரத்து இடையூறு வேறு. உலகில் வேறு எங்காவது இப்படி மதுக்கடைகளின் முன்பாக இவ் வளவு கூட்டம் நிரம்பி வழிந்து, தள்ளுமுள்ளுகள் நடக்குமா எனத் தெரியவில்லை.
குடி, தமிழகத்தை சீரழிக்கும் மிக மோசமான நோய். மதுவுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள், பாத யாத்திரைகள் ஒரு பக்கம் நடைபெறுகின்றன. மறுபக்கம் பெண்கள் மதுக்கடைகளின் முன்பு திரண்டு போராடுகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால், யார் என்னவிதமான எதிர்ப்பைக் காட்டியும் ஒரு பலனும் இல்லை என்பதுதான் நிஜம்!
மதுவுக்கு எதிராக போராடுகிறவர்களைப் பொதுமக்களே கேலி செய்கிறார்கள். முட்டாள்களாக கருதுகிறார்கள். பள்ளி மாணவன் தொடங்கி 80 வயது கிழவர் வரை போதை அடிமைகளாக மாறிய நிலையில், குற்றமும் வன்முறையும் மோசடிகளும்தான் பெருகி வருகின்றன.
புகழ்பெற்ற அமெரிக்க விண்வெளி வீரரும் நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதருமான ஆல்ட்ரின் மிக மோசமான குடிகாரர். நிலாவுக்குச் சென்று திரும்பிய பின்பு, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் குடியிலேயே கழித்தார். குடி அவரை மிக மோசமான மனச் சோர்வுக்கு உள்ளாக்கியது. தனது வாழ்வை குடித்தே அழித்துக்கொண்டவர் ஆல்ட்ரின்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், காலை கண் விழித்தவுடன் குடிக்க ஆரம்பித்துவிடுவாராம். மிதமிஞ்சி குடிக்கக் கூடியவர் அவர். எழுத்தாளர் ஹெமிங்வே விடிய விடிய குடித்து மகிழ்பவர். இப்படி குடியால் அழிந்த தலைவர்கள், கலைஞர்கள் ஏராளம்.
உலகெங்கும் குடிக்கு எதிராக நிறையக் கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒரு கதை குடிகாரக் கழுதையைப் பற்றியது. உக்ரேனில் சொல்லப்படும் கதை இது.
வான்கோழி ஒன்றும் கழுதையும் நண்பர்களாக இருந்தன. கழுதை எப்போதுமே தன்னை ஒருவரும் மதிப்பதில்லை; ஒயாமல் வேலை செய்யச் சொல்கிறார்கள்; வாழ்க்கையில் எந்த இன்பத்தையும் அனுபவித்ததே இல்லை என புலம்பிக்கொண்டே இருந்தது. ஆனால், வான்கோழியோ எப்போதும் சந்தோஷத்துடன் ஆடிப் பாடியபடி உற்சாகமாக இருந்தது.
கழுதைக்கு நீண்டநாட்களாக விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஓர் ஆசை இருந்துகொண்டே இருந்தது. ஒருமுறை ஒரு பண்ணை வீட்டில் பெரிய விருந்து. கழுதையின் ஆசையை நிறைவேற்றிவைக்க நினைத்த வான்கோழி, கழுதையை அந்த விருந்துக்கு அழைத்துச் சென்றது.
விதவிதமான உணவு வகைகளைக் கண்ட கழுதை, ஆசை ஆசையாக சாப்பிடத் தொடங்கியது. அப்போது பண்ணை முதலாளி ஒரு கோப்பையில் மது அருந்திக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும் கழுதைக்கும் மது அருந்தும் ஆசை உண்டானது. உடனே, மதுப் போத்தல் ஒன்றை எடுத்து முழுவதையும் குடித்து முடித்தது. போதை தலைக்கேறிய கழுதை, தன்னுடைய உடலை சிலிர்த்துக்கொண்டு பாடத் தொடங்கிவிட்டது. பயந்துபோன வான்கோழியோ, ‘‘ஏய் கழுதை! வாயை மூடு’’ என சத்தமிட்டது.
ஆனாலும் கழுதை அடங்க மறுத்தது. அது இன்னும் கூடுதல் உற்சாகத்தில் தனது கால்களை உதைத்துக்கொண்டு, வாலை ஆட்டியபடி ஆடத் தொடங்கியது. கழுதையின் ஆட்டம்பாட்டத்தில் விருந்துக்கான உணவுப் பாத்திரங்கள் எல்லாம் கவிழ்ந்தன.
போதையில் ஆர்ப்பாட்டம் செய்கிற கழுதையைக் கட்டுப்படுத்த வான்கோழி முயன்றபோது, கழுதை அதை ஓங்கி உதைத்து தள்ளிவிட்டது. அதுமட்டுமல்ல; விருந்துக்கு வந்திருந்த இளம்பெண் ஒருத்தியைக் கட்டிக்கொண்டு ஆடுவதற்கும் கழுதை முயற்சித்தது.
அந்தப் பெண் வீறிட்டு அலறினாள். இதைப் பார்த்த பண்ணை ஆட்கள் கழுதையை அடித்து உதைத்து வெளியே துரத்திவிட்டார்கள். அப்படியும் கழுதைக்கு போதை தெளியவே இல்லை. அது இரவெல்லாம் கத்திக் கொண்டேயிருந்தது. மறுநாள் கழுதையை விருந்துக்கு அழைத்துவந்த காரணத்துக்காக வான்கோழியைப் பண்ணை யில் இருந்தே துரத்திவிட்டார்கள்.
போக்கிடம் இல்லாத வான்கோழி காட்டை நோக்கிச் சென்றது. வழியில் அடிபட்டு கிடந்த கழுதையைக் கண்டது. காயத்துடன் இருந்த கழுதை, ‘‘நேற்றிரவு எனக்கு என்ன நடந்தது? எதற்காக என்னை இப்படி அடித்திருக்கிறார்கள்?’’ எனக் கேட்டது.
‘‘நடந்த எதுவுமே உனக்கு நினைவில்லையா..?’’ என வான்கோழி கேட்டது.
‘‘என்ன செய்தேன் என்று எனக்கு துளியும் ஞாபகமில்லை!’’ என்றது கழுதை.
அதைக் கேட்ட வான்கோழி, ‘‘குடியால் நீ கெட்டதோடு, உன்னை பண்ணை வீட்டு விருந்துக்கு அழைத்துப்போன என்னையும் வெளியே துரத்தும்படி செய்துவிட்டாய். உன்னோடு நட்பு கொண்டதற்காக உதை வாங்கியதுதான் மிச்சம்.
இனி, நமக்குள் நட்பு வேண்டாம்!’’ என விலகிப்போனது வான்கோழி.
உக்ரேனியக் கதையில் ‘குடிப்பவனுடன் நட்பே வேண்டாம்’ என விலகிப் போகிறது வான்கோழி. ஆனால், நடப்பு உலகில் நட்பு உருவாவதற்கு குடியே மையப் புள்ளியாக உள்ளது. நட்பை கொண்டாடக் குடிக்கிறார்கள். மது விடுதிகளில் அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. பரஸ்பரம் ஊட்டிவிடுகிறார்கள். தமிழ் சமூகத்தின் இன்றைய முகம் போதையேறிய குடிகாரனின் தோற்றமே.
பேருந்தில், ரயிலில், திருமண வீடுகளில், விருந்துகளில், விழாக்களில், நிகழ்ச்சிகளில், பொது இடங்களில் குடிப்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பொதுமக்கள் அன்றாடம் சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது. நகரத்தில் கூடிக் கூடி குடித்தது போதாதென்று, இன்றைய நாளில் காட்டையும் தேடிப் போய் குடிக்கிறார்கள். காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் போத்தல்களைக் குப்பையாக வனங்களில் வீசி எறிந்துவிட்டு வந்துவிடுகிறார்கள். சுற்றுலாத் தலங்கள் எங்கே சென்றாலும் குடி பெருகியோடுகிறது. கோயில் பிரகாரங்களில் கூட குடிக்கிறார்கள். குடி அனுமதிக்கபடாத தங்கும்விடுதிகளே கிடையாது. குடியை ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
தன்னைச் சுற்றி நடக்கும் இந்தக் காட்சிகளை குழந்தைகள் மவுனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகள் மனதில் இவை அழுத்தமாக ஊன்றப்படுகின்றன. இதன் விளைவு என்னவாகும் என்பது மிகுந்த கவலையளிக்கவே செய்கிறது.
- கதைகள் பேசும்…| எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago