இரவு. இருளின் நிறத்தில் ஒரு இடைவெளி. மனித இயக்கத்தின் ஒரு பெருமூச்சு. இரவுகள் குறித்த வன்முறையின் நிழலாடும் விவாதங்களின் நடுவே இலக்கியத்தில் இயங்கிய பெண்கள் இரவைக் கையாண்ட படைப்புகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வரலாறிலிருந்தும், அதிகாரபூர்வ வரலாற்றின் மிகப் பெரிய கருந்துளையைச் சிறிதேனும் அடைக்க முயலும் பெண் படைப்புலகில் இருந்தும் இதை அறியலாம். இரவின் மீது பெண்கள் கொண்ட சிநேகமும் அதை அவர்கள் பெண் வாழ்வின் தனிமைக்கும் அது கிளர்த்தும் தேடல் குறித்த வெளிக்குமான உவமையாகவும் உருவகமாகவும் கையாண்டுள்ளமையும் இப்படைப்புகளிலிருந்து அறிய முடிகிறது.
இரவு என்ற தலைப்பிட்டு எழுத்தாளர் மதுமிதா தொகுத்த தொகுப்பு இதில் ஒரு முன்மாதிரி. காலம் தோறும் பெண்கள் என்ற ராஜம் கிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பில் வேதங்களில் பெண்கள் குறித்த பதிவு இது.
ராத்ரி – இரவுத் தேவதையாகத் துதிக்கப்படுகிறாள். ஒரே ஒரு பாடல்தான் இவளுக்கு உரியது. உஷையின் இளைய சோதரியாக இவளும் வானவனின் புதல்வியாக வருணிக்கப்படுகிறாள். இவள் இரவுக்குரியவளாக இருந்தபோதிலும் நட்சத்திரங்களாகிய ஆயிரம் கண்களுடன் ஒளிர்ந்து மலை முகடுகளையும் இருண்ட பள்ளத்தாகுகளையும் அவ்வொளியால் இருளகற்றுபவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். மக்களெல்லாரும் இவள் வரவை உணர்ந்ததும் தத்தம் இல்லங்களுக்கு விரைகின்றனர். உழைப்பின் களைப்பை நீக்கிப் புத்துயிரளிக்க இவள் மாந்தரை மட்டுமின்றி நாற்காலிகளாகிய விலங்கினங்கள், பறவையினங்களையும் ஓய்வு கொள்ளச் செய்து அவர்கள் மீது தீமையின் நிழலும் படியாமல் பாதுகாக்கிறாள்.
வேதங்கள் மீதான கடும் தாக்குதலைத் தொடுக்கும் இந்நூலில் இந்தப் பத்தி வந்தாலும் இரவு ஒரு மிருகமாக மிரட்டும் இக்காலத்திலிருந்து மிகவும் வேறுபட்டதான ஒரு கற்பனை முகத்தை இரவு கொண்டிருந்ததை இது காட்டுகிறது.
இன்னுமொரு படைப்பு இரவுச் சுடர். எழுதியவர் சூடாமணி. தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரான சூடாமணியின் நுட்பமான உணர்விழைகளால் கட்டப்பட்ட படைப்புலகம், பெண்களின் காத்திரமான வெளியும் அதே சமயம் நம் அனைவருக்குமான பொதுவெளியும் ஆகும்.
இரவுச் சுடர் அதன் நேரடித்தன்மையில் ஒரு வித்தியாசமான பெண்ணின் வாழ்க்கையை அவளது அம்மா மற்றும் மகளின் வாழ்விலிருந்து காட்டும் ஒரு விறுவிறுப்பான நாவலாக இருந்தபோதும் அது தன் ஆழத்தில் பெண்ணுக்கு வாய்க்காத தேர்வுகளை, வெளிகளை, பொழுதுகளை மிக சிக்கனமான கனமான உணர்வுகளைப் பேசும் படைப்பாகவே இருக்கிறது. இரவுச் சுடரின் நாயகி யாமினி. இன்னொரு வகையில் இரவுச் சுடரின் நாயகி இரவுதான். விரும்பிய வாழ்வை அணிய முடியாத அடைபட்ட பறவைகளுக்கெல்லாம் லட்சிய வெளியாக மிதக்கும் இரவுதான் அந்தப் படைப்பின் அச்சுறுத்தும் அழகில் கிளர்ச்சியூட்டும் நாயகி.
சுடர்வான அரங்கின்
சோதிமய இருளில்
படர்வாளும் நகைப்பாளும் யாரோ?
– நடை
பயில்வாளும் மறைவாளும் யாரோ?
சோதிமய இருள். அப்படித்தான் அவளை நினைக்க முடிந்தது. அவள் மனம், உணர்ச்சி எதுவும் அவர்கள் அறிந்துகொண்டிராத இருளாகத்தானே இருந்தது? ஆனால் இருளை சோதிமயமாக்கினாற்போல், அந்த இருளில் மறைந்திருந்த உள்ளத்தில் மிகத் தீவிரமான ஓர் உணர்வின் குமுறல் பொலிந்திருந்தது.
இரவு. அது அவள் நேரம். பூப்போல இரவு மலர்ந்த வேளையிலதான் அவள் பிறந்தாள். குழந்தையும் கறுப்பு நிறம். நட்சத்திரங்களோடு பிறந்தவளானாலும் அவைகளைத் தோற்றுவிக்கும் இரவின் வண்ணத்தில் தான் அவள் வந்தாள். பின்னர் யாமினி வளர்கிறாள். தனிமையையும் இரவையும் பெரிதும் நேசிக்கும் குழந்தையாக.
இரவு, அதன் நீலக் கருமை, அந்தக் கருமையை அசைக்கும் நட்சத்திர ஒளித் துடிப்பு. காற்றில் ஒரு மென்மனம். இரவுப் பூக்கள் இருளுக்கு மணமூட்டிக் கொண்டிருந்தன. அல்லது இருளே ஒரு பூவாக மலர்ந்துவிட்டதா?
தான் படித்திருந்த ஏதேதோ கவிதைகளை அவள் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தாள். தனிமை என்ற சொல்லுக்கே ஒரு நடமாடும் அர்த்தம் போல் அவள் இருக்கும் தன்மையை என்னென்பது?
தன்னை எவர் தொடுவதையும் விரும்பாதவளாக, கரிய வானத்தைக் கனவுகள் கனலும் விழிகளில் பருகி உலகெங்கும் பயணிக்க விரும்பிய யாமினி அவள் காலத்தில் பெண்களுக்கு விதிக்கப் பட்ட கனவுகளுக்கு வெளியே கிடந்தாள். ஆனாலும் எவ்வளவு அழகு அவள் கனவு?
திருமணம் வேண்டாம் என தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன் பெற்ற அவளுக்கு அதை நடைமுறைப்படுத்த வீட்டை விட்டு வெளியேறவும் தயங்காத துணிச்சல் இருந்த அவளுக்கு, அதை நிஜமாக்கிடும் வெளியில்லாமல் போனது. மிகவும் நேசித்த பெற்றோரே அவளின் தீவிர எதிர்ப்பையும் மீறி அவளைத் திருமணத்தில் தள்ளுகின்றனர்.
உடல், இச்சை, பாலியல் சுதந்திரம் என பல தளங்களில் இன்றைய விவாதம் நிகழ்ந்து வருகிறது. ஆனால் பாலியல் உறவில் விருப்பமற்றவளாக யாமினியை 70களில் படைத்திருக்கிறார் சூடாமணி. “நான் கன்னி” எனப் பல முறை வீறிடுகிறாள் யாமினி. ஆனால், பலவந்தமாக மீண்டும் மீண்டும் தாம்பத்ய உறவுக்குள் செலுத்தப்படுகிறாள்.
இரவு நேரம் வந்தால் மட்டும் அவளிடம் சிறிது அமைதி தோன்றும், விண்மீன்களோடும் அல்லி மலர்களோடும் அவளும் வெளியே வருவாள். கொல்லைப்புறத் தோட்டத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்ப்பாள். மகிழ மரத்தடியில் பூக்கள் பூமியில் கொட்டிய நட்சத்திரங்களைப் போல் பொலியும். வேலியோரம் படர்ந்த செடி கொடிகளின் வாசனையினால் சூழ்ந்திருக்கும் பூச்சிகளின் நெரிசல் இப்போது அடங்கி, ஒவ்வொரு நறுமணமும் களிப்பூட்டும். பல்வேறு மணங்களினால் இரவு கதம்பச் சரமாகிவிடும். மரங்களும் வீடுகளும் வானத்துக்கு இடர் செய்வதால் சிறிது நேரத்தில் அவள் மேல் மாடித் தளத்திற்கு ஏறிச் செல்வாள். அங்கு நாற்புறமும் வானம் கரையுடைந்து பெருகியிருக்கும். அந்தக் கருமைக்கு முடிவில்லை. மற்ற வர்ணங்களுக்கு எல்லை உண்டு. கறுப்புக்கு ஏது எல்லை? மர உச்சிகள், வீட்டு முகடுகள், யாவையும் தாண்டிய உயரத்தில் நெடிய நீள் விசும்பு இரவின் இன்சுவையில் தோய்ந்து அவளுக்காக விரிந்திருக்கும். அதன் கரிய சுடர் முகத்தை அவளுடைய கரிய சுடர் முகம் அண்ணாந்து பார்க்கும். அவள் கன்னம் குழிய முறுவலிப்பாள். அரிதாகிவிட்ட அந்தப் புன்னகை இப்போதெல்லாம் நிலாப்பூவாக இரவில்தான் மலர்ந்தது. மறுபடியும் கணவன் வீட்டுக்கு அவளை அழைத்துப்போக முயன்றபோதெல்லாம் சூறாவளி வீசியது.
நிறைவுறாமல் போன தன் கனவுகளின் பொருட்டும் மீறப்பட்ட தன் சுய விருப்பங்களின் பொருட்டும் யாமினி ஒரு புறம் பிறழ்வடைகிறாள். திருமணம், பாலியல் உறவு, தாய்மை என இவ்வுலகம் கட்டிவைத்த பெறும்பேறுகளை விருப்பமின்மையால் விலக்க நினைக்கும் யாமினிக்கு இரவுதான் சிநேகிதி. பின்னர் அதே இரவுதான் அடைக்கலம்.
எல்லையற்ற இரவின் குறுந்தோற்றம் பூமியில் படிந்து கிடப்பதுபோல யாமினி கிடந்தாள். வடிவமெங்கும் ஒட்டியிருந்த நீர் இழைகளில் நிலவொளியும் தாரை ஒலியும் பிம்பமெழுப்பின.
இரவு மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
இன்னமும் உழைக்கும் வர்க்கப் பெண்களின் இரவுகள் இருக்கின்றன. சமூகத்தின் குடும்ப நெறியைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட பாலியல் தொழிலின் பிரதிநிதிகளான பாலியல் தொழிலாளப் பெண்ணின் இரவுகள் இருக்கின்றன, கருக்கலின் முன்னே கடலோரமெங்கும் காத்திருக்கும் மீனவப் பெண்களின் இரவுகள் இருக்கின்றன. கண்ணீரும் கவிதையும் படிந்த யாமினியின் இரவுகளைப் போல் வியர்வையும் மண்ணும் கடலும் மணக்கும் அவர்களின் இரவுகளையும் நாம் அறியத்தான் வேண்டும்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago