அரிதான, வித்தியாசமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜோ டி குரூஸ். தன்னுடைய முதல் நாவலாக ‘ஆழி சூழ் உலகு’ மூலமாகத் திடீரென ஒருநாள் இலக்கிய உலகில் இவர் நுழைந்தபோது, கூடவே பல நூற்றாண்டுகளாகப் பொதுச் சமூகம் புறந்தள்ளி வைத்திருந்த அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலிருந்த கடலோடிகள் சமூகத்தின் வாழ்வும் எழுத்தும் ஒரு ஆழிப் பேரலைபோலப் பீறிட்டுக்கொண்டு நுழைந்தன. அடுத்த நாவலான ‘கொற்கை’ சாகித்ய அகாடமியின் விருதை வென்றது. மூன்றாவது நாவலான ‘அஸ்தினாபுரம்’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இரட்டை வாழ்க்கை வாழ்பவர் ஜோ டி குரூஸ். சென்னையின் பிரபலமான ஏற்றுமதி நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக உலகமெங்கும் சுற்றுவது ஒரு முகம். விடுமுறை நாள் கிடைத்தால் பாரம்பரிய மீனவராகப் படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுவிடுவது இன்னொரு முகம். எந்த இலக்கிய வட்டத்திலும் தன்னை அடைத்துக்கொள்ளாத ஜோ டி குரூஸின் அரசியலும் அப்படியே அமைந்துவிட்டது. பிரதமர் வேட்பாளராக தமிழகம் வந்த மோடியுடன் ஒரே மேடையில் ஏறி அவருக்காகப் பேசிய ஜோ டி குரூஸ் வெகுவிரைவில் மோடியின் விமர்சகராகவும் மாறிவிட்டார். மாதம் ஒரு ஆளுமையுடன் கலந்துரையாட முடிவெடுத்திருக்கும் ‘தி இந்து’ நூல்வெளிக் குழு முதல் கலந்துரையாடலுக்காக யாரை அழைப்பது என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தவர் ஜோ டி குரூஸ். நூல்வெளி குழுவினரோடு உற்சாகமாக உரையாடியவர் எல்லாக் கேள்விகளுக்கும் வெளிப்படையாகப் பதில் அளித்தார்.
ஏனைய படைப்பாளிகளைப் போல அல்லாமல், புத்தக வாசிப்பில் பெரிய ஆர்வம் இல்லாதவர் நீங்கள். இப்போது எப்படி?
இப்பம் வாசிக்கிறேன். எவ்ளோ நாள் வாசிக்காமாலே இருக்க முடியும்? அதுவும் இப்ப உங்க பத்திரிகை விட மாட்டேங்குதேய்யா? ‘தி இந்து’ வாங்க ஆரம்பிச்சதுக்கப்புறம் வீட்டுல பசங்களே கட்டுரைகளை எல்லாம் கத்திரிச்சு வெச்சிப் படிக்குறாங்க. நாம எப்படி வாசிக்காம இருக்க முடியும்? ஆனா, எழுத்தாளருங்க படிக்கிற அளவுக்கெல்லாம் வாசிக்கலைங்கிறதை ஒப்புக்கணும்.
இலக்கியக் கூட்டங்களில் உங்களைப் பார்க்கவே முடியவில்லையே?
மொத நாவல் ‘ஆழி சூழ் உலகு’ வந்தப்போ, நிறையக் கூட்டங்களுக்குக் கூப்பிட்டாங்க. போனேன். அப்படிப் போனோப்போதான் தெரிஞ்சுது, இந்த மாதிரி கூட்டங்கள்ல இலக்கிய விவாதம் நடக்கிறதைக் காட்டிலும், இலக்கிய அரசியலும் தனிநபர் துதி, வசை பாடலும்தான் அதிகம் நடக்குதுன்னு. ரொம்ப சீக்கிரம் என்னையும் ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுடுவாங்கன்னு தெரிஞ்சப்போ ஓடியாந்துட்டேன். எனக்கு ‘தமிழினி பதிப்பகம்’ வசந்தகுமார் அண்ணாச்சி மேல பெரிய மரியாதை உண்டு. பிரமாதமான எடிட்டர் அவர். என்கிட்ட இருந்த எழுத்தாளனை வெளிக்கொண்டாந்ததே அவருதான். ஆனா, ஓடியாந்துட்டேன். ரெண்டாவது நாவலான ‘கொற்கை’யைக் ‘காலச்சுவடு பதிப்பகம்’ போட்டாங்க. பெரிய விற்பனை. நல்ல ராயல்டி. ஆனா, அடுத்த நாவலை அவங்களுக்குக் கொடுக்கலையே! ஓடியாந்துட்டேன். இந்தக் குழு அரசியல் நமக்குச் சரிப்படாது. நான் முழுநேர எழுத்தாளன் இல்லை. எழுதவே நேரம் கிடைக்காதப்போ எதுக்கு இதெல்லாம்னு தோணுது.
இலக்கியக் கூட்டம் என்பது வெறும் நிகழ்ச்சி அல்ல; அது அறிவுத் துறைச் செயல்பாடுகளின் ஒன்று. பொதுச் சமூகத்திலிருந்து எப்போதும் விலகியே இருக்கும் கடலோடிச் சமூகத்திலிருந்து எழுத வந்த நீங்கள், இதன் மூலமாகப் பொதுச் சமூகத்துடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிடுகிறீர்கள் என்று சொல்லலாமா?
அப்படிச் சொல்ல முடியாதேய்யா! சமவெளி சமூகத்தோடு உரையாடணும்கிறது எனக்கு ரொம்ப ஆசை. அதை நான் விட்டுடலை. ஆனா, அறிவாளிங்க கூட்டத்தோட பேசுறதைக் காட்டிலும் அடித்தட்டு மக்களோடு பேசுறது எனக்கு முக்கியமா படுது. பள்ளிக்கூடம், கல்லூரி இங்கெல்லாம் பேசக் கூப்பிட்டா போய்க்கிட்டுதானே இருக்கேன்? அது ராமேஸ்வரமோ, இணையமோ கடல் மக்கள் பிரச்சினைன்னு வர்றப்போலாம் பொதுச்சமூகம் மத்தியில அதை எடுத்துப் போய்க்கிட்டுதானே இருக்கேன்!
முதன்முதலில் ஒரு எழுத்தாளராக உங்களை எப்போது உணர்ந்தீர்கள்?
தயவுசெஞ்சு என்னை ஒரு எழுத்தாளன்னு சொல்லாதீங்க… (பயங்கரமாகச் சிரிக்கிறார்). நான் எழுதிப் பேர் வாங்க இங்கே வந்தவனில்ல. என் சமூகத்தோட வாழ்க்கை, கஷ்டம், துயரம் பல நூற்றாண்டுகளாப் பேசப்படாம கெடக்கு. அது எனக்குள்ளேயும் கெடக்கு. அதை இந்தப் பொதுச் சமூகத்துக்கிட்ட கொண்டுசேர்க்க இது ஒரு வழி. நாளைக்கே வேற வழி ஒண்ணு கெடைச்சா இதைத் தூக்கிப் போட்டுட்டு அதுல போய்க்கிட்டே இருப்பேன்.
சரி, எழுத வேண்டும் என்கிற நெருக்கடி அல்லது தேவையை எப்போது உள்ளுக்குள் உணர்ந்தீர்கள்?
பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட சொந்த வாழ்க்கையில ஒரு பெரிய சோதனை ஏற்பட்டுச்சு. பெரிய அடி அது எனக்கு. துடிச்சேன். அழுதேன். கூட இருந்த நண்பர்கள் அதிலிருந்து வெளியே வர, பல பாதைகளைச் சொன்னாங்க. ஒருத்தரு, குடின்னாரு. ஒருத்தரு படின்னாரு. ஒருத்தரு எழுதுன்னாரு. அப்படி எழுத ஆரம்பிச்சப்போ கவிதையா எழுதிக் குவிச்சேன். ‘புலம்பல்கள்’னு அதுக்குப் பேர் வைச்சு, புத்தகமா போட ஒவ்வொரு பதிப்பகமா ஏறி வந்தேன். அப்படித் தடுக்கி விழுந்த இடம்தான் ‘தமிழினி பதிப்பகம்’. அங்கெ போய் என் கவிதைகளைப் படிக்கக் கொடுத்தப்போ அவருகூட உட்கார்ந்திருந்த ஒரு கூட்டம் என்னைப் பார்த்து சிரிச்சுச்சு. ‘இவனெல்லாம் ஒரு மூஞ்சு, இதெல்லாம் கவிதை!’னு சொல்லி ஏகடியம் பேசுச்சு. ஓங்கி அடிச்சுடலாமான்னு வந்துச்சு கோபம். வசந்தகுமார் புரிஞ்சுக்கிட்டார். வெளியே அழைச்சுக்கிட்டு வந்தார். “உனக்கு அவங்களை அடிக்கணும்னு கோபம் வந்துச்சில்லே. அதைப் பேப்பர்ல அடி…”னு சொன்னார். “கவிதையைக் காட்டிலும் நீ வெச்சுக்கிட்டிருக்குற உன் சமூகத்துக் கதை எனக்கு முக்கியமா தெரியுது”ன்னார். ப.சிங்காரம் எழுதின ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைப் படிக்கச் சொல்லித் தந்தார். ரெண்டே நாள்ல அதை மடமடன்னு படிச்சேன். என்னோட ஆதர்சம் ஆயிட்டார் ப. சிங்காரம். என் சமூகத்துக் கதையை எழுத உட்கார்ந்தேன். ரெண்டு நாள்ல உட்கார்ந்து 25 பக்கங்கள் கடகடன்னு எழுதினேன். கொண்டுபோனேன். நல்லா வந்திருக்கு, தொடர்ந்து எழுதுங்கன்னாரு வசந்தகுமார். அந்த வேகத்தில எழுதினதுதான் ‘ஆழி சூழ் உலகு’. பேய் புடிச்ச மாதிரிதான் அதை எழுதி முடிச்சேன். இன்னைக்கும் எழுத்து எனக்கு வேலை, ஒரு திட்டமால்லாம் இல்லை. எழுத உட்கார்ந்திட்டா ராப்பகல், தூக்கம், பசி பார்க்காம விடிய விடிய உட்கார்ந்து எழுதுவேன். என் பொண்டாட்டி, புள்ளைங்ககூட என்கிட்ட நெருங்க முடியாது. எழுதும்போது வாய்விட்டு அழுதுருக்கேன், அடிச்சுக்கிட்டுருக்கேன். அது ஒரு பேய் உலகம்தான்.
ஆனால், பெரிய வாசிப்புப் பின்னணியும் இல்லாத நீங்கள் பல நாவல்களை எழுதிய தேர்ந்த எழுத்தாளர்போல், முதல் நாவலிலேயே ஒரு அபாரமான கட்டமைப்பை எப்படி உருவாக்கினீர்கள்?
அதுக்கு வசந்தகுமாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். தமிழ்ல தேர்ந்த வாசகர்கள்னா, அதாவது நுட்பமான படிப்பாளின்னா இருபது இருபத்தியஞ்சு பேர்தான் இருப்பாங்க. அவங்கள்ல ஒருத்தர் வசந்தகுமார்ங்கிறது என்னோட அபிப்பிராயம். நல்ல எடிட்டர் அவர். ஒரு எழுத்தாளனா ஒரு நல்ல எடிட்டர்கிட்ட ஒப்புக்கொடுத்தேன்.
உங்கள் எழுத்துகள் கடலோடிகள் சமூகத்தைப் பொதுச் சமூகத்திடம் கொண்டுசேர்ப்பதில் பெரிய பங்காற்றுகின்றன என்றாலும், கடலோடிகள் சமூகத்தின் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கின அல்லவா?
ஆமா, இன்னிக்கும்கூட தனியா போனா வெட்டுறதுக்கு ஆள் உண்டு. நான் பயப்படலை. அது புரிஞ்சுக்க முடியாததால வர்ற குழப்பம்தான். ஒருநாள் புரிஞ்சுக்குவாங்க.
தொடர்ந்து நாவல் வடிவத்திலேயே கவனம் செலுத்துகிறீர்கள். சிறுகதை எழுதுவதில் ஆர்வம் இல்லையா?
ஆன்டன் செகாவ், புதுமைப்பித்தன் மாதிரியெல்லாம் எழுத முடியுமா ஒவ்வொரு கதைக்கும் ஒரு தொடுப்பு, ஒரு முடிப்பு அப்படினெல்லாம் மலைக்குது. எனக்கு சரிபடாதுன்னு நெனைக்கிறேன். அப்புறம் என்னோட கதைப்பரப்பு எல்லாமே பரந்து விரிஞ்சுடுது. அதுக்குப் பெரிய வெளி தேவைப்படுது.
உங்களுக்குப் பிறகு, கடலோடி சமூகத்தைச் சேர்ந்த பலர் புதிதாக எழுத வந்திருக்கிறார்கள். படிக்கிறீர்களா, யாரை முக்கியமானவராகக் கருதுகிறீர்கள்?
கடற்கரையிலேர்ந்து வந்து ஒரு மனுஷன் இங்கெ எல்லோரையும் எழுதி கவனிக்க வெச்சார்னா, அந்தப் பெயர் வலம்புரி ஜானுக்குத்தான் போகும். இப்போ நெறையப் பேர் எழுத வந்திருக்காங்ககிறது உண்மைதான். வறீதையா கான்ஸ்தந்தீன், குரும்பாறை சி.பெர்லின், ஜஸ்டின் திவாகர், அனிதன், அண்டோ, சிறில் அலெக்ஸ், ஜான் பிரபு, தோ.மா. ஜான்சன், கிறிஸ்டோபர் ஆனி, சிஸ்டர் டெனியா இவங்க எழுதறது கவனிக்க வைக்குது. நல்லா வருவாங்க.
அரசியலுக்கு வருவோம், மக்களைவைத் தேர்தலின்போது மோடியைத் தீவிரமாக ஆதரித்தவர் நீங்கள். மூன்றாண்டு மோடியின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உண்மையைச் சொல்லணும்னா மோடி மேல எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஒரு சாதாரண அடித்தட்டு குடும்பத்திலிருந்து மேல வந்திருக்கிற அரசியல் தலைவர். அதுவும் மாநில முதல்வரா இருந்து எத்தனையோ போட்டிகளுக்கு மத்தியில தேசிய அரசியல் நோக்கி, அதுவும் பிரதமர் பதவி நோக்கி வர்றார். மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையிலே இருந்த சிக்கல், பிரச்சினை எல்லாம் தெரிஞ்சு வர்ற மனுஷன் பெரிய மாற்றங்களை உண்டு பண்ணுவார்னு மனபூர்வமா நெனைச்சேன். இந்த மூணு வருஷத்துல என்னோட எதிர்ப்பார்ப்புகள் படுகுழியில போயிடுச்சுங்கிறதை மனபூர்வமா ஒப்புக்கிறேன். அதுவும் நாடு போய்க்கிட்டிருக்குற சகிப்பின்மைப் பாதையைப் பார்க்குறப்ப மோடிக்கு ஓட்டு கேட்டதுக்காக ரொம்ப வருத்தப்படுறேன். அப்புறம், நானும் ஏமாந்துட்டேன்.
என் வேலை சார்ந்து, குஜராத்துக்குப் பல முறை போயிருக்கேன். அப்போலாம் துறைமுக நகரங்களை நோக்கிப் போகையில, அங்கே இருந்த சாலைகளைப் பார்த்து பிரமிச்சுருக்கேன். இந்த வளர்ச்சி ஊர்லேயும் இல்லைனு நெனைச்சுருக்கேன். இதுதான் உண்மையான குஜராத்துன்னு நெனைச்சுருக்கேன். ஆனா, அது உண்மையான குஜராத் இல்லைங்கிறதைப் பின்னாடி, ஒரு வருஷம் முந்தி குஜராத் முழுக்க ஒரு பயணம் போனப்போ உணர்ந்துக்கிட்டேன். அடித்தள மக்களோட வாழ்க்கை ரொம்ப மோசமா இருக்கு, குறிப்பா மீனவ மக்கள் வாழ்க்கை. அதையெல்லாம் பார்த்துட்டு இங்கே திரும்புனா நம்மூர் எவ்வளவோ மேல நிக்குது. எனக்கொண்ணும் இதைச் சொல்றதுல வெட்கம் இல்ல. மக்களுக்கு நல்லது நடக்கும், நாட்டுக்கு நல்லது செய்வார்னு நெனைச்சு மோடியை ஆதரிச்சேன், நான் மட்டும் இல்ல; பல கோடி பேர் அப்படி நெனைச்சாங்க. அது நடக்கலைங்கிறப்போ, உண்மையை ஒப்புக்குறதுல ஒண்ணும் தப்பில்லையே!
- மு. முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago