அரபு இலக்கியத்தில் நவீன மரபு என்பது மேற்கின் தாக்கத்தோடு உருவானது. அரபு இலக்கியத்தில் புனைவைவிடக் கவிதைதான் அதிக தூரத்தைக் கடந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது அரபுக் கவிதை. அதன் செவ்வியல் மரபு பல்வேறு பரிணாமங்களைக் கடந்து, மத்தியக் கிழக்கின் இலக்கிய உலகில் பயணம் செய்து வந்திருக்கிறது. அது பல்வேறு தொடர்ச்சிகளையும், நெளிவு, சுளிவுகளையும் உட்கொண்டிருந்தது.
நவீன அரபு இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் தொடக்கம் யார் என்று சரியாகக் கணிக்க முடியாத நிலைமை இருக்கிறது. காரணம் ஒரே நேரத்தில் பல படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. சில விமர்சகர்கள் இதன் தொடக்கம் ஈராக் கவிஞர் நாசிக் அல் மலாய்க்காதான் என்கின்றனர். அவரின் ‘காலரா’ கவிதைதான் இதன் தொடக்கம் என்கின்றனர். இதில் கவிதையின் தெளிவான நடையும், அரபுக் கவிதையின் உட்கூறுகளும் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர். வேறு சில விமர்சகர்கள் பத்ர் சஹிர் அல் ஷய்யிபின் 'இது காதலா'? என்ற கவிதைதான் நவீனத்தின் தொடக்கம் என்கின்றனர். மேற்கண்டவற்றை மனம் நகர்த்திக்கொண்டு வரும் வேளையில் இதே காலகட்டத்தில் உருவான பல கவிஞர்களும் நவீன அரபு இலக்கியத்தின் ஸ்தாபகர்கள் எனலாம். அல் பய்த்தி (ஈராக்), புலண்ட அல் ஹய்தரி (ஈராக்) ஸலாஹ் அப்துல் ஸபூர் (எகிப்து), யூசுப் அல் காலில் (லெபனான்), பத்வா தவ்ஹான் (பாலஸ்தீன்) ஸல்மா ஜுவைஸி (பாலஸ்தீன்) போன்றவர்களை இந்த வரிசையில் குறிப்பிட முடியும்.
கவிதை அரபியில் ஷிர் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் உணர்வு வெளிப்படுத்தல் அல்லது வெளிப்பாடு. அரபு இலக்கிய உலகில் நவீன கவிதையின் தேவை என்பது அகவயக் காரணிகளைத் தாண்டி, புறவயக் காரணிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. கவிதையின் அகவாசிப்பைப் பிரதிபலிக்கக்கூடிய பன்முகத்தன்மையையும் இவை உள்ளடக்கியிருந்தன. மரபான அரபுக் கவிதைகளுக்கு வெறுமனே சட்டகங்களோடு கூடிய அகவய நிலைப்பாடுகள் இருந்தன. ஆனால் நவீன அரபுக் கவிதை அதைத் தாண்டிய எழுச்சியான கவி மனநிலையைச் சார்ந்த அரசியல், சமூக மற்றும் கலாச்சார விஷயங்களைப் பிரதிபலித்தது.
20ஆம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் அரபுலகில் மேற்கண்ட தளங்களில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கியதாக நவீன கவிதை இருந்தது. பின்தங்கிய நிலைமை, எழுத்தறிவின்மை, வறுமை, அறியாமை போன்றவை இதன் கருவாக இருந்தன. இவை அரபுக் கவிஞர்கள் மத்தியில் கவிதையின் உருவகமாக விலக்கப்பட்டிருந்த வடிவத்தைத் தாண்டி நவீன மொழியாகப் பிரதிபலித்தன. வாசகர்கள் இந்த நவீனத்தின் மூலம் தங்களின் பெருங்கனவு ஒன்று நிறைவேறிய மனத் திருப்தியில் இருந்தனர். மேலும் இந்தக் கவிஞர்களிடத்தில் அமெரிக்க, ஆங்கில, பிரெஞ்சுக் கவிஞர்களின் தாக்கம் அதிகம் இருந்தது. குறியீட்டுவாதியான போதெலேர், லப்ரோஜ், ரிம்பா, வேலரி, மல்லார்மே, எடித் சிற்வல், எமிலோவல், டெட் ஹக்ஸ் போன்றோரின் கவிதைகளின் தாக்கம் இருந்தது. நவீன அரபுக் கவிதை அரபு அல்லது ஆங்கிலம் என்ற இருமொழிக் கூறுகளை உள்ளடக்கி இருந்தது. இந்தக் கவிஞர்களில் சிலர் பல்கலைக்கழகப் படிப்பை ஐரோப்பாவில் முடித்தனர். பழைய கவிதைகளின் யாப்பை உடைத்து வித்தியாசமான ஓசைநயத்தையும், வரிகளையும், உள்வரிகளையும் கொண்டு நவீன அரபுக் கவிதைகள் இயங்கின. இவை மனித மனங்களின் வலிகளைப் பிரதிபலித்தன. கிழக்கின் தத்துவார்த்தத் தொன்மங்களையும் சிலரின் கவிதைகள் உட்கொண்டிருந்தன.
இதன் தொடர்ச்சியில் நவீன அரபுக் கவிதைகள் குறியியலையும், பிரதேசப் பின்புலத்தையும் ஒருங்கிணைத்தன. அதில் மௌனங்கள், வெற்றிடங்கள், நிலையாமை போன்றவற்றின் உருவகங்கள் இருந்தன. மேலும் மரபான கவிஞர்களிடத்தில் இருந்த பிரதேச, இனக்குழு, மத, சமூக, மனோபாவம் போன்ற அம்சங்கள் இவர்களிடத்தில் இல்லை. அவற்றை மீறிய செயல்பாடே நவீன அரபுக் கவிதையின் சிறப்பம்சம். மேலும் இரண்டாம் உலகப்போர், அரபு இலக்கிய உலகில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மத்தியக் கிழக்கின் அரசியல், சமூக தளங்களில் மிகப்பெரும் தாக்கத்தை இந்தப் போர் ஏற்படுத்தியது. ரொமாண்டிக் கவிதை முறையியலில் இருந்து குறியீட்டுக் கவிதைகளை நோக்கி நகர்வதற்கு இது முக்கியக் காரணமாக இருந்தது. நடப்பு அரபுக் கவிதைகள் நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் ஆகியவற்றின் தொடர்ச்சியோடு நகர்ந்துகொண்டிருக்கின்றன.
புனைவு இலக்கியத்திற்கு அரபு எழுத்தாளர்கள் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அரபு புனைவு இலக்கிய மரபு 12ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இப்னு துபைல் எழுதிய Hayy ibn Yaqdhan அல்லது The Self-Taught Philosopher என்பதுதான் முதல் அரபு நாவல் என்றழைக்கப்படுகிறது. இது அடிப்படையில் தர்க்க ரீதியான தத்துவார்த்த நாவல். இப்னு நபிஸ் என்பவர் இந்த மரபை முன்னோக்கி நகர்த்தினார். அரபு நாட்டார் கதைகள், வாய்மொழி மரபுகள் அதற்கு முன்னர் புகழ்பெற்றிருந்தன. அதுவே பிற்காலத்தில் ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் என்பதாகத் தொகுக்கப்பட்டது.
அரபு உள்நாட்டுப் போர், மதம், மொழிச் சூழல், கலாச்சார மோதல்கள், புலம் பெயர்வு, அந்நிய ஆக்கிரமிப்பு, தனிமனித வாழ்வின் துயரங்கள், நெருக்கடிகள் போன்றவற்றை இவர்களின் கதைகளும், நாவல்களும் பிரதிபலித்தன. இன்றைய அரபுலகப் புரட்சியின் தொடர்ச்சியில் அதன் உள்ளிருந்து, புரட்சியின் குரூரத்தைப் புனைவாக்கும் முயற்சிகள் தற்போதைய அரபு புனைகதை மரபில் அதிகம் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. எல்லா விதமான ஸ்திரமற்றதன்மைக்கும், சர்வாதிகார அரசுகளுக்கு எதிரான மக்களின் கலகங்களுக்கும் மத்தியில் அற்புதமான படைப்புகள் அரபுலகிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
சிறந்த வரலாற்றுச் சமூகப் பின்புலத்தையும், அறிவு வளத்தையும் கொண்ட மத்தியக் கிழக்கு அரபுலகம் உலக இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை அளித்ததோடு, அதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago