பாப்லோ நெருடா வாழ்ந்த வீடு

By மண்குதிரை

சிலியின் கடற்கரை ஓரத்தில் ஐலா நெக்ரா பகுதியில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீடு ஒரு சிறிய மிகச் குன்றின் மீது அமைந்துள்ளது. அது மாளிகை அல்ல. ஆனால் அசாதாரண அழகுடன் காண்பவரை வசீகரிக்கிறது. சுற்றியிருக்கும் பாறைகளில் ஓயாது அலைகள் மோதிக்கொண்டிருக்கும் வீடு அது. சிலியின் வசந்த காலம் அந்த வீட்டிற்கு முன்பு விரிந்து கிடக்கும் கடலை ஒரு பட்டுப் போல ஜொலிக்கச் செய்கிறது.

அது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான கவிஞரான பாப்லோ நெருடாவின் வீடு. ஒரு கவிதை ஆளுமையின் முழுமையான வெளிப்பாடு. சிலியிலேயே நெருடாவுக்குப் பல வீடுகள் இருந்தாலும் இதுதான் அவருக்கு மிகவும் பிடித்த வீடாக இருந்திருக்கிறது. அவர் இங்கு தன் பிரியத்திற்குரிய காதலி மடில்டாவுடன் தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்திருக்கிறார். இந்த வீட்டைச் சுற்றிக் கிடக்கும் பாறைகளின் ஈர மொழியைத் தன் கவிதைகளில் பகிர்ந்துள்ளார். அவரின் பெரும்பாலான கவிதைகளுக்கும் இந்த வீடு ஆதாரமாக இருந்துள்ளது.

கொண்டாட்டமான வாழ்வு

நெருடா கடலின் மீது பெரும் காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். கடல் சார்ந்த எல்லா விஷயங்களிலுமே அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக இந்த வீட்டை ஒரு கப்பல்போல வடிவமைத் துள்ளார். நெருடா அரும்பொருள் சேகரிப் பாளராகவும் இருந்திருக்கிறார். ஆயிரக் கணக்கான வித்தியாசமான, அழகான, வேடிக்கையான பொருட்களையும் இந்த வீட்டில் சேகரித்துவைத்திருக்கிறார். மரச்சிற்பங்கள், செராமிக் சிலைகள், பாட்டில்கள், சின்னச் சின்ன கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், சிப்பிகள், பெரிய நத்தைக் கூடுகள், இசைக் கருவிகள் தொடங்கி நடராஜர் சிலை வரைக்கும் எண்ணற்ற பொருட்களின் பிரமிக்கத்தக்க சேகரிப்பு அவரது வீட்டில் இருக்கிறது. இந்தச் சேமிப்பு நெருடா என்னும் கவிஞனுடைய வாழ்வின் வண்ணங்களைக் காட்டுகிறது. இந்தச் சேமிப்பின் மூலம் ஒரு கொண்டாட்டமான வாழ்வு விரிவு கொள்கிறது.

இந்த ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை பின்னியுள்ளது. அவை எல்லாவற்றிலும் உலகின் மகத்தான கவிஞரின் வாழ்க்கை இருக்கிறது.

மூன்று வாலுடைய குதிரை

ஐலா நேக்ரா வீட்டில் ஒரு மரக்குதிரை இருக்கிறது. அந்தக் குதிரையுடன் பாப்லோ வுக்கு பால்ய காலத்திலிருந்தே தொடர்பு இருந்தது. சிலியின் தென்பகுதியில் இருக் கும் பாப்லோவின் குழந்தைப் பருவ வீட்டின் அருகே ஒரு கடையில் இந்த மரக்குதிரை வசீகரமாக நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்து வியந்தபடி சிறுவன் பாப்லோ பள்ளிக்குச் சென்றிருக்கிறான். அந்தக் குதிரையை வாங்க அவனுக்குப் பெரும் ஆவல். ஒருநாள் தன் ஆசையை அதன் உரிமையாளனிடம் சொல்லியிருக்கிறான். அதற்கு அவன், “அது சரிதான்” என ஏளனமாகச் சிரித்திருக்கிறான்.

ஆனால் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஐலா நெக்ராவில் வசித்தவந்த கவிஞர் பாப்லோ நெருடாவுக்கு அவரது சொந்த ஊரில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாகத் தகவல் வருகிறது. அந்தக் குறிப்பிட்ட கடையும் சேதமடைந் திருந்தது. ஆனால் அந்தக் குதிரை விபத்திலிருந்து தப்பிவிட்டது. வால் மட்டும் தீயில் கருகிப் போய்விடுகிறது. வாலில்லாக் குதிரையை அந்தக் கடைக்காரன் ஏலத்திற்குக் கொடுத்துவிடுகிறான். தன் பெரும் ஆவல் நிறைவேறப்போகும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கி, ஐலா நெக்ராவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் நெருடா. அந்தக் குதிரையின் வருகையை ஒரு விழாவாகவும் கொண்டாடியிருக்கிறார். நெருடாவின் நண்பர்கள் பலரும் பரிசுப் பொருள்களுடன் வந்து குதிரைக்கு வாழ்த்தினார்கள். வாலில்லாத குதிரைக்கு நெருடாவின் நண்பர்கள் மூன்று பேர் வால் வாங்கிவந்துள்ளனர். ஜலா நெக்ராவில் உள்ள நெருடாவின் அந்தக் குதிரை, பின்புறத்தில் இரு வால்களும் பிடரியில் ஒன்றுமாக இன்று வினோத விலங்காகக் காட்சி தருகிறது.

தொலைந்துபோன மெடுசா

ஐலா நெக்ரா வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு தெய்வச் சிற்பம் ஓயாத கடலைப் பார்த்தபடி இருக்கிறது. இது கிரெக்க இதிகாசப் பாத்திரமான மெடுசா. இந்தச் சிற்பம் மூழ்கிய ஒரு கப்பலில் இருந்து கொண்டுவரப்பட்டது. 1948இல் கம்யூனிச இயக்கம் சிலியில் தடைசெய்யப்பட்ட போது நெருடா நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதும் மெடுசாவைக் கவனமாக அருகில் உள்ள கொட்டகையில் மறைத்துவைத்துச் சென் றுள்ளார். பல வருடங்கள் கழித்து அவர் திரும்பியபோது மெடுசா அங்கு இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். இறுதியாக யாரோ ஒருவரின் தோட்டத்தை அலங்கரித்து நின்றிருந்த மெடுசாவைக் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளார்.

கடல் தந்த பரிசு

நெருடாவின் மேஜைக்கு ஒரு சுவாரஸ்ய மான பின்னணிக் கதை இருக்கிறது. இதில் அவருடைய காதல் மனைவி மடில்டா வரு கிறார். ஒருநாள் நெருடா தன் படுக்கையறை யின் ஜன்னல் வழியாகக் கடல் அலைகள் எதையோ கொண்டுவருவதைப் பார்க்கிறார். அது ஒரு மரப்பலகை. “பார் மடில்டா, இந்தக் கடல், கவிஞனுக்காக ஒரு மேஜை யைக் கொண்டுவருகிறது”“ எனத் தன் மனைவியிடம் சொல்கிறார். இருவரும் கரைக்குச் சென்று அதற்காகக் காத்திருக் கிறார்கள். கடல் அலைகள் மெதுவாக அதைக் கொண்டுவருகின்றன. மடில்டா, நெருடாவுக்காக அதை அலைகளிடமிருந்து வாங்கி வருகிறார். நெருடா, அதைக் கடலின் பரிசு என அழைக்கிறார்.

நெருடாவின் நண்பர்கள்

நெருடா தன் வீட்டில் மது அருந்துவதற் காகத் தனியாக ஓர் அறையை ஏற்படுத்தி இருந்தார். அதுபோல ஐலா நெக்ராவிலும் ஓர் அறை உண்டு. வண்ண வண்ணக் கோப்பைகளால் ஆன அறை அது. விதவிதமான ஒழுங்கற்ற பொருட்களின் கலவையாக அந்த அறை நிறைந்திருந்தா லும் அவற்றுக்குள் ஒரு ஒழுங்கு உள்ளது. அதன் உத்தரங்களில் நெருடாவின் நண்பர் களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக நெருடா தன் நண்பர்களின் இருப்பை உணர்ந்திருக்கக்கூடும்.

இந்த வீட்டின் படுக்கையறை மூன்று பெரிய ஜன்னல்களால் ஆனது. தலைப்பகுதி யில் சூரியன் உதயமாகும்படியான கோணத் தில் படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. அந்திச் சூரியன் அறையின் இரு பக்கமும் ஒளியை வீசியபடி அஸ்தமனமாகும் காட்சியை பாப்லோ நெருடா 1973இல் மரணமடையும் காலம் வரை இந்த அறையில் இருந்து பார்த்திருக்கிறார். வசித்தலுக்கும் வாழ்தலுக்குமான வித்தியாசத்தை இந்த வீடு பல்வேறு வண்ணங்களின் வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அருங்காட்சியகமாக மாறிவிட்ட ஜலா நேக்ரா வீடு வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பார்வையாளர் களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

(November 15, 2013 ப்ரண்ட் லைனில் வெளிவந்த ஜெயதி கோஷின் A house about how to live என்னும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்