நடன மேடையில் இருக்கும்போது நான் ஒரு பெண் என்பதை மறக்கிறேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கடவுளுக்குப் படைக்கிறேன். அதனால்தான் என்னால் சுலபமாக நிர்வாணமாக முடிகிறது.
‘அவள் செய்த ஒரே குற்றம், சுதந்திரமான பெண்ணாக இருந்ததுதான்!’ என்று புத்தகத்தின் உள் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் வரிகளை வாசித்தவுடன், உங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும்?
உங்களுக்கு அறிமுகமான, ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லாத ஒரு பெண் முகம். அவரின் அழகு. பேச்சு. உடல்மொழி. நடவடிக்கைகள். அவரின் பொருளாதார நிலை. அந்தப் பெண்ணை உங்களால் நெருங்க முடியாமல் போனால், அவரின் வாழ்க்கை உங்களுக்கு ஒரு மர்மம். காரணம், அவள் சுதந்தரமானவளாக இருப்பது! இப்படியான உங்களின் அனுமானத்துக்கு நீங்கள் என்ன பெயர் வைப்பீர்களோ தெரியாது, ஆனால் இப்படி மர்மமாக இருந்த ‘மாத்தா ஹரி’க்கு உலகம் வைத்த பெயர்... உளவாளி!
இலக்கியத்தையும் கலையையும் என்றும் உயர்த்திப் பிடிக்கும் நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. அதனால்தான் அங்கு காதல் சார்ந்தும், காமம் சார்ந்தும், புத்தகங்களும் ஓவியங் களும் சிற்பங்களும் படைக்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. வெளியிலிருந்து புதிதாக எந்த ஒரு கலை அம்சம் நாட்டுக்குள் வந்தாலும், அதைப் பரந்த மனத்து டன் ஏற்றுக்கொள்ளும் பண்பு பிரெஞ்சுக்காரர்களிடம் உண்டு.
அதனால்தான், கீழை நாட்டு வழிபாட்டுக் கூறுகளிலிருந்து தனக்கான நடன முறைகளை எடுத்துக் கொண்டு, அவர் பாரிஸ் நகரத்தில் அறிமுகப்படுத்திய நடன அமைப்பை பிரெஞ்சுக்காரர்கள் (பெண்களும் தான்!) வாய் பிளந்து ரசித்துப் பார்த்தார்கள். இந்த இடத்தில் ‘பெண்களும்தான்’ என்ற சொல்லை அடைப்புக் குறிக்குள் எழுதுவது அத்தியாவசியமாகிறது. ஏனென்றால், தனக்கு அருகிலேயே தன் கணவன் வேறு ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ரசித்துப் பார்ப்பதைப் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக அந்தப் பெண்கள் இருந்தார்கள். ஆம், மாத்தா ஹரியின் அந்த நடன முறை நிர்வாண உடல் அசைவுகளைக் கொண்டது. அப்படிப் பார்த்தால் ‘ஸ்ட்ரிப் டீஸ் டான்ஸ்’ என்ற நடன வகையைத் தொடங்கிவைத்த முன்னோடி அவர் என்று சொல்லலாம். இந்த நடன வகைக்கு அவர் வைத்த பெயர்தான் இதுவரை உலகில் தோன்றிய வேறு எந்த நடனக்காரியிடமிருந்தும் அவரை தனித்துவப்படுத்துகிறது. ‘கோயில் நடனம்’ (டெம்பிள் டான்ஸ்) என்பதுதான் அந்த நடனத்தின் பெயர்!
மார்கரிதாவின் வாழ்வு
1876-ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹாலந்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் மார்கரிதா கீர்த்ரூதா செல். எண்ணெய்ப் பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட அவருடைய தந்தைக்கு ஒரு கட்டத்தில் நஷ்டம் ஏற்பட, எல்லாச் செல்வத்தையும் இழக்கிறார். அதனால் பிழைப்புத் தேடி தன் குடும்பத்தை விட்டு வேறு பகுதிக்குச் செல்கிறார்.
மார்கரிதாவின் 15-வது வயதில் அவரின் தாயும் இறந்துவிடுகிறார். கூடப் பிறந்த இரண்டு சகோதரர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அவர், தூரத்து உறவினர் வீட்டில் வளர்கிறார். தன் 18-வது வயதில் நாளிதழ் ஒன்றில் ‘மனைவி தேவை’ எனும் விளம்பரம் ஒன்றைக் கண்டு, அதற்கு விண்ணப்பித்தார். பலன், தன்னைவிட சுமார் 20 வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருமணமும் அவருக்குச் சுமையானது. தம்பதியர் இருவருக்குள் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கை நகர்ந்தது. ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, தாதி ஒருவரால் மார்கரிதாவின் பிள்ளைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டனர். இன்று வரை அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. என்றாலும், மார்கரிதா தன் மகளைக் காப்பாற்றினார். ஆனால் அந்தக் குழந்தை நடைப்பிணமாகவே இருந்தது.
இப்படியான சூழலில் விவாகரத்து பெற்று, பிழைப்புத் தேடி பாரிஸுக்கு வந்து, அங்கு ‘மாத்தா ஹரி’ என்று பெயரை மாற்றிக்கொண்டு புகழ்பெற்ற நடனக்காரியாக விளங்கினார். அவரின் அழகை அடைவதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்களால் ‘நாஜிக்களுக்கு உளவு பார்த்தவர்’ என்று உளவாளிப் பட்டம் கட்டப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, இறுதியில் 1917-ம் ஆண்டு அக்டோபரில் பிரெஞ்சு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புனைவுச் சரிதம்
இந்த ஆண்டு மாத்தா ஹரியின் நினைவு நூற்றாண்டு. அதையொட்டி, அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் சிலர் புத்தகம் எழுதிவருகிறார்கள். அந்த வரிசையில் அமைந்ததுதான் பிரபல எழுத்தாளர் பெளலோ கெய்லோ எழுதிய ‘தி ஸ்பை’ எனும் நாவல். வரலாற்றில் வாழ்ந்த ஒருவரை மையமாக வைத்து அவர் நாவல் புனைந்திருப்பது இதுவே முதன்முறை என்பதுதான் இதில் சிறப்பு.
ஒரு புனைவுச் சரிதம் (பயோகிராஃபிக்கல் ஃபிக்ஷன்) எழுதும்போது, பெளலோ கெய்லோ தன் கவித்துமான வரிகளை எழுத முடியாமல் போயிருக்குமோ என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ‘நினைவு, துக்கம் எனும் பேயைத் தன்னுடனே அழைத்து வருகிறது’, ‘எந்தப் போரிலும் முதல் பலி, மனித கண்ணியம்தான்’, ‘எல்லைகளற்றுத் தன் சாதனைப் பயணத்தைத் தொடர்பவனே உண்மையான கலைஞன்’, ‘காதல் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு செயல். ஆனால் அதன் முகம் எப்போதுமே மர்மத்தால் மூடப்பட்டிருக்கும்’ என்பன போன்ற வரிகள் நம்மை ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குச் செல்லும் அவசரத்தைக் குறைக்கின்றன.
‘நடன மேடையில் இருக்கும்போது நான் ஒரு பெண் என்பதை மறக்கிறேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கடவுளுக்குப் படைக்கிறேன். அதனால்தான் என்னால் சுலபமாக நிர்வாணமாக முடிகிறது. நடன அசைவுகள் மூலம் இந்தப் பிரபஞ்சத்துடன் நான் தொடர்புகொள்வதாக உணர்கிறேன்’ என்று வாழ்ந்த மாத்தா ஹரி உளவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாகச் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சமீபத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் என்ன, வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட தவறை அழிக்க முடியாதே? தனியாக வாழ்ந்ததும், அழகாக இருந்ததுமே அவர் செய்த மாபெரும் ‘தவறு’.
‘மாத்தா ஹரி’ என்ற மலாய் சொல்லுக்கு ‘பகலின் கண்’ என்ற அர்த்தம் வரும். நாம் அறிந்த ‘மர்மப் பெண்கள்’ ஒவ்வொருவரிடமும் ‘பகலின் கண்’ இருப்பதை நீங்கள் காணலாம். அந்தக் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீர்தான் நாம் அறியாத ஒன்று!
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago