இதுதான் முதல் சுதந்திரப் போர் என்ற சர்ச்சையில் ஈடுபடாமல், பெரிய அளவில் கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்த சுதந்திரப் போர் தொடங்கிய மீரட்டில், என் சகோதரியின் கடைசி மகனுக்குத் திருமணம். நான், என் மனைவி, என் தங்கை, அவளுடைய இரண்டாம் மகன் ஆகிய நால்வரும் முதல் கட்டமாக டெல்லி போய்ச் சேர்ந்தோம். என் நண்பனின் சகோதரி வீட்டில் இரு நாட்கள் தங்கி டெல்லி, ஆக்ரா பார்த்த பின்பு, மீரட்டுக்குக் கிளம்பினோம். நேரடியாகக் கல்யாண மண்டபத்துக்கே போய்ச் சேர்ந்தோம். அடுத்த நாள் கல்யாணம்.
மற்ற நேரங்களில் கண்ணில் படாமல் இருந்துவிட்டுக் கல்யாண தினத்தன்று ஏதாவது வம்புக்கிழுத்துச் சண்டை வளர்க்கும் குணம் சிலருக்கு உண்டு. இதில் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் பெயர் போனவர்கள் என்பார்கள். நானும் என் தகப்பனாரும் தஞ்சாவூர் ஜில்லா தான். நாங்கள் எல்லா நேரங்களிலும் மூலையில் ஒதுங்கி நின்று இருப்போம். மீரட் திருமணத்துக்குப் பிறகும் இன்னும் பல திருமணங்களில் பங்கேற்ற பிறகு தான் இந்தக் கல்யாணச் சண்டைக்கு ஜில்லா, மாநிலம் என்ற பேதம் எல்லாம் கிடையாது என்று நான் அறிந்துகொண் டேன்.மீரட் திருமணத்தில் விஷயமே இல் லாமல் சண்டை போட்டதின் விளைவு, எங்களுக்குத் தூங்கச் சரியான இடம் கிடைக்கவில்லை. சாப்பாடும் கிடைக்க வில்லை. நாங்கள் நான்கு பேர் தவித்ததைச் சண்டை போட்டவர்கள் லட்சியமே செய்யவில்லை. நாங்கள் மறுநாளே டெல்லி திரும்பிவிட்டோம். அதற்கு அடுத்த நாள் இரவு சென்னைக்கு ரயில் ஏறவேண்டும்.
அன்று பத்திரிகையைத் திறந்தவுடன் எப்படி ஊர் திரும்பப் போகிறோம் என்ற கவலை வந்துவிட்டது. காரணம் இந்தியத் துருப்புகள் அமிர்தசரஸ் பொற் கோயிலைத் தாக்கத் தொடங்கிவிட்டன. பின்னர் தெரிந்தது, தாக்குதல் வெறும் துருப்புகள் மட்டும் அல்ல. டாங்கிகளும் கொண்டு…
என் அனுபவத்தில் சீக்கியர்கள் சாது வான இயல்பு கொண்டவர்கள். என் பள்ளியில் ஐந்தாவது தொடங்கிப் பத்தாம் வகுப்பு வரை என் பக்கத்தில் உட்கார்ந்தவன் பல்விந்தர் சிங். அவ னிடம் கோபித்துக் கொண்டாலே அழுது விடுவான். நான் அவன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆனால், பொற்கோயி லில் பல்விந்தர் மாதிரி ஆட்கள் துருப்பு களில் நூற்றுக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இன்று அந்தத் தாக்குதல் பற்றி நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு காலத்தில் காஷ்மீர் பிரச்சினையை விடத் தீவிரமானதாகக் கருதப்பட்டது. அந்த 1984 முடிவுக்குள் பிரதமர் கொலை. ஆயிரம் டெல்லிச் சீக்கியர்கள் உயிரோடு கொளுத்திக் கொலை.... அப்போது ஜனாதிபதி ஒரு சீக்கியர்!
இந்த மாதிரி தருணங்களில் மக் களின் எதிர்ப்பு விமானங்கள், ரயில்கள் மீதும் காட்டப்படுகிறது. நாங்கள் ஏறிய ரயில் நாங்கள் போக வேண்டிய இடத்துக்குப் போகுமா என்று பலமுறை கலவரப்பட்டிருக்கிறோம். ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ மாதிரியே காரணங்கள்..
செப்டம்பர் 6, 1948. என் அப்பாவின் உத்தியோகத்துக்கே ஆபத்து. நிஜாம் ரயில் அதிகாரிகள் அவரை ‘டெஸர்ட்டர்’ என்று அறிவித்திருந்தார்கள். என் அப்பா 40 நாட்கள் முறையான லீவ் வாங்கித்தான் நாங்கள் ஏப்ரலில் சென்னைக்கு ரயிலேறினோம். அது ரஜாக்கார் கெடுபிடிகள் உச்சகட்டம் அடைந்திருந்த நேரம். கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டன. ஒரு கடிதம் பட்டுவாடா ஆகவில்லை. விளைவு, நாங்கள் என் சகோதரிக்குப் பார்த்திருந்த இளைஞனுக்கு வேறிடத்தில் திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்கள். நாங்கள் மலைத்து நின்றோம். ஒரு மாதம் கழித்து ஒரு வரன் கிடைத்தது. ஆனால் அவர் ‘‘எனக்கு ஏகப்பட்ட உறவினர்கள் இருக் கிறார்கள். இரண்டு மாதம் கழித்துத் தான் கல்யாணம்’’ என்றார்.
நாங்கள் செகந்திராபாத் போய்விட்டால் மறுபடி யும் தெற்கே வரமுடியுமா என்று தெரி யாது. ஆதலால் பலரின் ஏச்சுப் பேச்சுகள், நிந்தனைகளைச் சகித்துக்கொண்டு சென்னையிலேயே தங்கியிருந்தோம். அரிசி, சர்க்கரைக்காக ரேஷன் கார்டு வாங்கினோம். நான்கு வெவ்வேறு இடங்களில் எங்கள் சாமான் களை வைத்திருந்தோம். விஷயம் வெளியில் தெரியாதபடி கையில் கொண்டுவந்திருந்த ரொக்கத்தை சேவிங்ஸ் கணக்கில் போட்டுவிட்டோம். அந்த நாளில் வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்து மாதம் 250 ரூபாய்தான் எடுக்கமுடியும். கல்யாணச் செலவுக்காக நல்லி அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, 6 ஆயிரம் கைமாற்றாக வாங்கினோம். அப்படியொன்றும் பெரிய கூட்டமில்லை. ஆனால் நிகழ்ச்சியை வேதனை நிரம்பியதாகச் செய்வதற்கு இருவர் போதும்.
செப்டம்பர் 1-ம் தேதி திருச் சானூரில் திருமணத்தை முடித்துவிட்டுக் கொடுக்க வேண்டியவர்களுக்குப் பணம், வாங்கிய கடன் ஆகியவற்றை தீர்த்துவிட்டு 6-ம் தேதி காலை சென்னையில் ரயிலேறினோம். அது பெஜவாடா (விஜயவாடா) மாலை 6 மணிக்கு அடைந்தது.
இரவில் ரயில் இல்லை என்றார்கள். பிளாட்ஃபாரத்தில் படுத்திருந்தோம். காலையில் ரயில் ஏறினால் 10 நிமிடத்துக்கு ஒருமுறை நின்றுவிடும். யார் யாரோ வந்து தேடுவார்கள். என்ன தேடுகிறார்கள் என்று தெரியாது. நிஜாம் சமஸ்தான எல்லையில் இந்திய போலீஸ்காரர்கள், நிஜாம் போலீஸ்காரர்கள் இருவரும் பெட்டி படுக்கை எல்லாம் சோதனை செய்தார் கள். மீண்டும் நிஜாம் எல்லைக்குள் இன்னொரு முறை சோதனை. கல்யாணச் சத்திரத்தில் இருந்து நாங்கள் எதையுமே எடுத்து வரவில்லை. அவ்வளவு மனக் கசப்பு. கல்யாண முறுக்கு என்று ஐந்தாறு எடுத்து வந்திருந்தோம். அதை உடைக்கக் கூட முடியவில்லை. “எது எதற்கோ குற்றம் கண்டுபிடித்தார்கள், இந்தப் பல்லொடக்கி முறுக்கு பற்றி ஒரு சொல் பேசவில்லையே?” என்று அப்பா சிரித்தார். அந்த முறுக்கை நிஜாம் போலீஸ் எடுத்துப்போனது. முறுக்கு அவர்களுக்குக் கிடைத்த தண்டனை!
பெஜவாடாவில் இருந்து சுமார் 7 மணி நேரத்தில் செகந்திராபாத் போய்விடலாம். அன்று செகந்திராபாத் போய்ச் சேரும்போது நள்ளிரவு. ஊரில் இருட்டு. நிஜாம் வரை அது யுத்தகாலம். பல இடங்களில் பதுங்கு குழிகள். பெட்டியைப் போட்டுக் கொண்டு ஒரு குழியில் விழுந்தேன். வீடு திருட்டுப் போயிருந்தது. மின்விளக்கு இல்லை. மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றிருந்தது. அடுத்த நாள் ஒரு வார தாடி மீசையுடன் அப்பா ஆபீஸ் போய் வேலையைக் காப்பாற்றிக்கொண்டார்.
இது நடந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புளூஸ்டார்! நிஜாம் எல்லைக் குள் ஒரு வாரம் ரயில்கள் ஓடவில்லை. கத்தியும் ஈட்டியும் கொண்டு சாதாரண மக்களைப் பயமுறுத்தலாம். ஆனால், ராணுவம் முன்பு? விஷயம் தெரிந்தவர் களே உண்மை நிலை தெரியாமல் அலைந்தார்கள், செத்தார்கள்.
நிஜாம் விஷயம் சில வாரங்களில் முடிந்துவிட்டது. ஆனால், புளூஸ்டார் பல வருடங்கள் நீடித்தது. தரையில்... வானில்.... இந்திரா காந்தி குண்டடிபட்டு இறந்தார். அவர் மகன் குண்டு வெடித்து இறந்தார். யார் சாபம்? பல்விந்தர் சாபமிட்டானோ?
- புன்னகைப் படரும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago