இந்திய மொழி இலக்கியங்களுக்கு மரியாதை இல்லை: இந்திரா பார்த்தசாரதி வருத்தம்

ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியங்கள்தான் உலக அரங்கில் மதிக்கப்படுகிறது. இந்திய மொழி இலக்கியங்களுக்கு மரியாதை இல்லை, அதற்கு தமிழும் விதிவிலக்கல்ல. இதை தலைக்குனிவாகவே கருதுகிறேன் என்றார் முதுபெரும் இலக்கியவாதியும், தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவருமான இந்திரா பார்த்தசாரதி.

கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது:

இப்போது வாசிப்புத் தன்மை குறைந்துவிட்டது. இலக்கியத்துக்கு கடைக்கோடி மரியாதைதான் இருக்கிறது. உலகிலேயே இந்திய மொழிகளுக்கு இலக்கியத்தில் மரியாதையே இல்லை. இந்திய மொழிகளில் ஒரு நூல் அங்கீகாரம் பெறுவதென்றால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது. இந்திய மொழிகளிலும் தமிழ் எழுத்துக்கு உரிய மரியாதை இல்லை. எனக்கு இது ஒரு தலைகுனிவு.

இலக்கியத்துக்கு கோபம் கூடாது, இயல்பு மனிதர்களின் சித்திரமாக இருக்க வேண்டும். அது தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளில் காணப்படுகிறது. கூனன் என்று ஒரு சிறுகதை. உலகப் பெருமை மிக்க சிறுகதையாகவே அதை உணர்ந்தேன். ஏழையைக் கண்டு வருந்துவதைவிட ஏழ்மை குறித்து வருந்துவது கூடுதல் சுமை ஏற்றக்கூடியது. அதுபோன்ற சிறுகதைகளை, நாவல்களை கவனிக்காமல் விட்டது நம் பிழையா?

விரும்பியோ, விரும்பாமலோ சிலரது படைப்புகள் அறியப்படாமலும், அறிமுகப்படுத்தப்படாமலேயும் போய்விடுகிறது. அப்படி கவனிக்கப்படாது நிற்கும் படைப்புகளையும், படைப்பாளிகளையும் இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள்

கவனித்து விஷ்ணுபுரம் விருதை அளிப்பது எனக்கு மட்டுமல்ல; தமிழ் படைப்புலகுக்கே பெருமை தரக்கூடியது.

இந்த விருது, தனிநபர் எழுதிய நாவலின் பெயரில் இருப்பது சிறப்பு. இந்த விருது இயக்கத்தையும், இந்த இலக்கிய வட்டத்தினர் செயல்படுத்தி வரும் வாசிப்பு இயக்கத்தையும் பார்க்கும்போது என் முடிவுக்கு முன்பே வாசிப்புப் பழக்கம் வந்துவிடும் என்று நம்புகிறேன் என்றார் பார்த்தசாரதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE