கடவுளின் நாக்கு 45: சந்தேகத்தின் நிழல்!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

‘ஒருவரது வீட்டுக்குள் சந்தேகம் நுழையும் போது சந்தோஷம் வெளியேறிப் போய் விடும்’ என்பார்கள். சந்தேகம் என்பது தீர்க்க முடியாத மன வியாதி; சமூகத்தில் வேகமாக பரவி வரும் விஷக் கிருமி!

உண்மையை மறைப்பதே சந்தேகத்தின் தோற்றுவாய். உண்மையை அறிந்துகொள்ள சந்தேகம் தேவைப்படுகிறது. அரசும் அதிகாரமும் தங்களை ஏமாற்றுகிறது என மக்கள் சந்தேகம் கொள்வது தவறில்லை. சுயலாபங்களுக்காக வணிக நிறுவனங்கள் மோசடி செய்கின்றன என்று சாமானியன் சந்தேகப்படுவது தவறில்லை. நீதி மறுக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அதிகாரத்தை சந்தேகம் கொள்ளவேண்டியது இயற் கையே. ஆனால், குடும்ப உறவுகளை சந்தேகப்படுவதும், வீண்சந்தேகத்தின்பேரில் தன்னை வதைத்துக்கொள்வ தும், கண்டிக்கவும் களையவும் வேண்டிய விஷயம்!

கவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் ஒரு பாடலில் ‘தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்; அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்’ என்கிறார். மிகச் சரியான விளக்கம் அது.

இந்திய வரலாற்றில் சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டவர்கள் ஏராளம். அதில், சிலரே வஞ்சகர்கள். பெரும்பாலும் அப்பாவிகளே சந்தேகத்தின்பேரில் துரோகிகளாக சித்தரிக் கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் கடந்து உண்மை வெளிப்பட்டபோதும் அவர்கள் மீது படிந்த கறை நீங்குவதில்லை.

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவை சந்தேகத்தின் உருவமாகச் சொல்வார்கள். அவன் மனைவி டெஸ்டிமோனாவைச் சந்தேகம்கொண்டு கொன்றுவிடுகிறான். முடிவில், அவள் அப்பாவி எனத் தெரியவருகிறது. ஒத்தல்லோவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, ஊருக்கு ஒரு ஒத்தல்லோ உருவாகி வருகிறார்கள்.

இன்று, எத்தனையோ குடும்பங்கள் சந்தேகத்தால் பிரிந்து, நீதிமன்ற வாசல்களில் நிற்கின்றன. சமூக ஊடகங்கள் அதுவும் ஃபேஸ்புக் போன்றவற்றின் வளர்ச்சி சந்தேகத்தின் வேகத்தை அதிகமாக்கிவிட்டது. ஃபேஸ்புக்கில் தனது மனைவி அல்லது காதலி தனக்குத் தெரியாமல் யாருடனோ பேசிப் பழகிவருகிறாள் என்ற சந்தேகம் ஆண்கள் பலருக்கு இருக்கிறது. இதுபோலவே கணவன் அல்லது காதலன் யாருடனோ ரகசியமாகப் பழகுவதாக நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இரண்டிலும் சந்தேகப்பட வேண்டிய காரியங்கள் நடக்கவும் செய்கின்றன. ஆனால் எது நிஜம் என்று அறியாமல், சந்தேகத்தின் விஷம் ஒருவருக்குள் ஆழமாக இறங்கி வன்கொலையில் போய் முடிகிறது என்பதே துயரம்.

ஸ்பை கேமரா, ஸ்பை ரெக்கார்டர் போன்றவை இன்று அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறவர்கள் துப்பறியும் நிபுணர்கள் இல்லை; சந்தேகவாதிகளே. பரஸ்பர நம்பிக்கைகள் தகர்ந்துவருவதும்; வீட்டுக்குள்ளாக ஒருவரையொருவர் ஏமாற்றி வாழமுடியும் என்ற கள்ளத்தனம் உருவானதும், அறம் அழிந்துபோன சமூகச் செயல்களுமே சந்தேகத்துக்கான முக்கிய காரணங்கள்!

‘ஒரு சொட்டு சந்தேகம் போதும் ஒருவரின் வாழ்க்கை நரகமாக!’ என்கிறது துருக்கி கதை. பாக்தாத் நகரில் மாறாத அன்பு கொண்ட இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் ஒன்றாகவே கடை நடத்தினார்கள். சகோதரிகளை திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் அன்பைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது. சந்தையில் அவர்கள் நடந்து போகும்போது ’அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும்!’ என்று அடையாளம் காட்டுவார்கள். அவ்வளவு சிறப்பான மனிதர்களாக வாழ்ந்தார்கள்.

ஒருநாள் அண்ணன் கடையை மூடும்போது தங்கக் காதணி ஒன்றைப் பார்த்தான். அது தன் மனைவியின் காதணி. இது எப்படி கடைக்குள் வந்தது என்று யோசித்தான். தம்பியிடம் இதைப் பற்றி கேட்கலாம் என நினைத்தான். ஆனால், கேட்கவில்லை.

மாறாக தம்பி மீது சந்தேகம் கொள்ளத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் தம்பி உச்சிவேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியே போவதும், சற்று நேரத்தில் அமைதியாக வந்து வேலையைத் தொடர்வதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் அதிகமானது.

அது போலவே ஓர் இரவு தன் மனைவியிடம் தம்பி ஏதோ பேசிக் கொண்டிருப்பதும், அவள் ரகசியமாக எதையோ தருவதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் உறுதியானது, அன்று முதல் அவன் தம்பியைக் கண்டாலே எரிந்துவிழத் தொடங்கினான். மனைவியைக் காரணம் இல்லாமல் அடித்தான். தம்பியோ அண்ணனின் கோபத்தை தாங்கிக் கொண்டான். அண்ணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் எனப் புரியாமல் தவித்தான் தம்பி.

அண்ணன் தானாக கற்பனை செய்ய ஆரம்பித்தான். தம்பி தன்னை ஏமாற்றி பணம் சேர்க்கிறான். தன் மனைவியோடு கள்ளத்தனமாகப் பழகுகிறான். தனது பிள்ளைகள் அவனுக்கு பிறந்தவையாக இருக்கக்கூடும். முடிவில் ஒருநாள் தன்னை கொன்றுவிட்டு சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்பி திட்டம் போடுகிறான் என அண்ணன் நினைத்தான். இந்தக் கவலை அவனை வாட்டியது. உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தது.

முடிவில் ஒருநாள் தான் வணிகத்தின் பொருட்டு வெளியூர் போய்வருவதாகக் கூறிவிட்டு உள்ளுரிலே ரகசியமாக தங்கிக் கொண்டான் அண்ணன். தான் இல்லாத நேரத்தில் தம்பி ரகசியமாக ஒரு வீட்டுக்குப் போய் பணம் தருவதையும், தன் மனைவி யாருக்கும் தெரியாமல் உணவு கொண்டுவந்து தருவதையும் கண்டு கொதித்துப் போனான். கடையை மூடிவிட்டு தம்பி திரும்பி வரும்போது, அவனை மறைந்திருந்து கொலை செய்துவிட்டு, தன் மனைவியைக் கொல்ல வீட்டுக்குப் போனான்.

மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை வாளால் வெட்டி துண்டிக்கப்போகும்போது அவள் ‘‘ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? அந்தக் காரணத்தை மட்டும் சொல்லுங்கள்’’ எனக் கதறினாள். அண்ணன் நடந்த விஷயங்களைக் கூறினான். அதற்கு மனைவி ‘‘என் காதணியை உங்கள் சிறிய மகன்தான் எடுத்து உங்கள் சட்டைப் பையில் போட்டிருக்கிறான். அதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வீர்களோ எனச் சொல்லவில்லை’’ என்றாள்.

‘‘பொய் சொல்லாதே. என் தம்பி ரகசியமாக வெளியே போவதும். நீ அவனுடன் இரவில் பேசுவதும், அவனுக்கு சாப்பாடு தருவதும் சல்லாபம் இல்லையா?’ எனக் கத்தினான். அதற்கு அவள் சொன்னாள்: ‘‘உங்கள் தம்பி குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். அவர் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள் சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்… என் தலையைத் துண்டியுங்கள்!’’ என அழுதாள்.

‘உண்மையை உணர்ந்த வணிகன் தன் சந்தேகம் எவ்வளவு முட்டாள்தனமானது என உணர்ந்து அதே வாளால் தன்னை வெட்டி சாய்த்துக்கொண்டான்’ என கதை முடிகிறது.

சந்தேகத்தின் விளைவுகளைப் பற்றி இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், இன்றும் படித்தவர் பாமரர் எனப் பேதமின்றி மனிதர்கள் சந்தேகத்துக்கு பலியாகி வருகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே உள்ளது!

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

இணைய வாசல்: துருக்கிப் பழங்கதைகளை வாசிக்க - >http://elfinspell.com/TurkishFables1.html

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்