கனவுகளைப் பற்றி யோசிக்காத, அவைகளைப் பதிவு பண்ணாத கலாச்சாரமே கிடையாது என்று சொல்லலாம். கனவானது ஏதோ சொல்ல வருகிறது என அதற்கு வரலாறு நெடுக்க ஒரு ஸ்தானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கனவைக் கண்டவர்கள் அதைத் தங்களுக்குள் மட்டும் பூட்டிக்கொள்வதில்லை.
நாட்டார் மரபிலும், அனைத்து மதங்களின் மரபிலும் கனவானது பல தளங்களில் செயல்பட்டமைக்கு உதாரணங்கள் உண்டு. உலகத்தை வழி நடத்த ஒரு மகான் உங்களுக்கு மகனாகப் பிறப்பான் என்று பகவான் புத்தரின் அன்னை மாயாதேவி கண்ட கனவின் பலனை மன்னர் சுத்தோதனருக்கு மூன்று நிமித்தர்களை விளக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த நாகார்ஜன மலைச் சிற்பம் கனவு விளக்கத்துக்குச் சான்றாக இருக்கிறது. சாகித்திய அக்காதெமி வெளியிட்டுள்ள புத்தகங்களின் உள்ளட்டையில் அச்சிற்பத்தின் புகைப்படைத்தை நாம் பார்க்கலாம்.
பக்தி இலக்கியக் காலகட்டத்தில் சந்தேகத்தில் உருவாகும் மனக் கிலேசத்தைப் போக்குவதற்குக் கனவு நிறைய பயன்பட்டிருக்கிறது. கண்ணபிரானின் பூஜைக்கான மலர் மாலைகளை முதலில் தனக்குச் சூடிக்கொள்ளும் ஆண்டாளின் செயலைக் கண்டு பெரியாழ்வாருக்கு மனதில் நெருக்கடி வரும்போது கண்ணன் கனவில் தோன்றி அவள் நம்மவள் என்று அவரின் சந்தேகத்தைப் போக்குகிறார். நந்தனின் புனிதத்தைப் பற்றி தில்லைவாழ் அந்தணர்களுக்குச் சந்தேகம் எழுந்த போது சிவன் கனவில் தோன்றி அவர்களின் சந்தேகத்தைப் போக்குகிறார். சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவர் தொடக்கத்தில் சாற்றுக்கவிக்காக மகான் சதக்கத்துல்லா அப்பாவை அணுகியபோது முறுக்கு மீசை, கையில் காப்பு, காதில் வளையம் என்று முஸ்லிம்களுக்குப் பொருத்தமில்லாத தோற்றத்துடன் உமறு தென்பட்டதைக் கண்டு சாற்றுக் கவி தரத் தயங்குகிறார் மகான். அன்றிரவு மகான் கனவில் நபிகள் நாயகம் தோன்றி உமறின் தகுதி பற்றி விளக்கி ஐயம் நீக்குகிறார்.
தமிழ் மரபில் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் பொன்னவன் என்பவர் இயற்றிய கனா நூல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. தனது சாவைத் தானே கனவில் காண்பது, அல்லது மலத்தை மேனியில் பூசுவது போல் கனவு காண்பது போன்ற விபரீதமான ‘காட்சிகளை’அந்நூல் குறிப்பிட்டிருக்கிறது. உள்ளத்திற்குப் பீதியைத் தரும் அக்காட்சிகள் ஒருவருக்கு வந்தால் அவரை மிரளைச் செய்யாமல், பாதுகாப்புணர்வைத் தரும் வகையில் செல்வம் வந்து சேரும் என்று சாதகமான பலனையே அந்த நூல் சொல்லியிருக்கிறது. கிட்டத்தட்ட 78 கனவு பலாபலன்களை அந்நூல் சொல்கிறது.
நவீன கால வரலாற்றிலும் உதாரணம் இருக்கிறது. போர்ச் சூழலிலே வளர்ந்த திப்பு சுல்தானுக்குத் தன்னுடைய கனவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எழுதி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மே 1799இல் ரங்கப்பட்டணம் வீழ்ந்தபோது கர்னல் கிர்க்பேட்ரிக் என்பவர் திப்புவின் படுக்கையறையைச் சோதித்தபோது திப்பு 13 வருடங்களில் 37 கனவுகளைப் பாரசீக மொழியில் எழுதிவைத்திருந்த நூலைக் கண்டிருக்கிறார். கனவுகளுக்குத் தன் வாழ்க்கைச் சூழலையொட்டி விளக்கம் கண்டிருக்கிறார் திப்பு.
ஆனால் கனவுகள் பற்றிய உளவியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 1900ஆம் ஆண்டு நடந்தது. தனி மனிதனை உருவாக்கும் சமூகக் கலாச்சாரக் காரணிகளின் பின்னணியில் கனவுகள் பற்றிய கோட்பாடுகளை விவரித்து ஃப்ராய்ட் எழுதிய த இண்டர்ப்ரடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற நூல் அந்த ஆண்டு வெளியானது. மனித சிந்தனை வரலாற்றில் முக்கியமான வரவு அப்புத்தகம்.
ஃப்ராய்டின் நூல் வருவதற்கு முன் இரு விதமான கண்ணோட்டங்கள் நிலவிவந்தன. நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்ற வெளிப்புற அமானுஷ்ய சக்திகள் கனவை உருவாக்குகின்றன; கனவுகளுக்குப் பலாபலன்கள் உண்டு என்பது கனவு பற்றிய மரபான கண்ணோட்டம். நவீன மனநல மருத்துவமோ கனவுகள் உடலியல் ரசாயனங்களால் உருவாக்கப்படும் ஒன்று; அதற்கு வேறு முக்கியத்துவம் இல்லை என்கிறது.
இந்த இரண்டு பார்வைகளிடமிருந்தும் தனது உளப் பகுப்பாய்வுச் சிந்தனைகள் விலகும் பாதையைத் தெளிவுபடுத்தியிருந்தார் ஃப்ராய்ட். ஓடும் நீரில் தெளிவற்றுத் தெரியும் காட்சிகள் போல, மனதில் தோன்றும் குழம்பிய கனவுக் காட்சிகளும் ஒருவித மொழியாகும். அவை புரியாவிட்டாலும் அவற்றிற்கு அர்த்தங்கள் உண்டு. அவை ஏதோ உண்மையைச் சுற்றிவளைத்துப் பேச வருகின்றன. ஒரு படைப்பாளி தனது கலைப்படைப்பை உருவாக்கிக்கொள்வதைப் போலக் கனவு காண்பவர் மனமும், அவருக்கே தெரியாத வகையில் நனவிலி மனதின் வேலைப்பாடுகளால் கனவுகளை உருவாக்கிக்கொள்கின்றன என்பது தனது ஆய்வனுபவத்தில் கண்ட உண்மை என்றார் ஃப்ராய்ட்.
மூன்று அம்சங்களில் ஃப்ராய்டின் பார்வை மாறுபட்டிருந்தது.
மரபான பார்வையின்படி கனவுக்கு விளக்கமளிப்பவர் என்ற ஸ்தானம் வகித்துக்கொண்டிருந்தவரின் திறமை, அனுபவம், கற்பனைக்குத் தகுந்தவாறு விளக்கம் அளிக்கப்பட்டது. ஃப்ராய்டின் அணுகுமுறையில் கனவுக்கு விளக்கமளிப்பவர் என்று தனியாக ஒருவர் அவசியமில்லை. கனவு காண்பவரே தனது மனத்தடைகளை நீக்கிக் கனவுகளை அலசிப் பார்க்கும்போது கனவுகளுக்கு அர்த்தம் கிடைக்கும் என்றார் ஃப்ராய்ட். கனவு கண்டவரே தனது நினைவோட்டங்களை சரி தவறு என்று தணிக்கை செய்துகொள்ளாமல் அலசினால் அதன் மூல வேர்களை ஒவ்வொருவரும் தனது கடந்த கால சுய வரலாற்றுக்குள் கண்டடையலாம்.
மரபான பார்வையில் கனவுகள் முழுமையாக அணுகப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. ஃப்ராய்ட், கனவுகளை முழுமையாகப் பார்க்காமல் அதனைத் தனித்தனி அடுக்குகளாகப் பிரித்து அதனைக் கனவு கண்டவரின் அந்தரங்க வாழ்வோடு தொடர்பு படுத்திவிட முடியும் என்றார்.
அறிவியல் அளவுகோல்களுக்கு உட்படாத, காசு சம்பாதிக்க வேண்டி எழுதப்பட்ட கற்பனை மிகுந்த புத்தகம் என்றெல்லாம், ஃப்ராய்டின் மேல் விமர்சனங்கள் வந்தன. பல பத்திரிக்கைகள் அப்படியொரு புத்தகம் வந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. தற்காலத்தில் வார்த்தைகள், அர்த்தங்கள் என்று மொழி வழியாக மனதை அணுகும் நவீன சிந்தனைகள் ஃப்ராய்டின் கனவு நூலை அவசியம் படிக்க வேண்டிய நூலாகச் சிபாரிசு செய்கின்றன.
கனவானது எழுத்துலகில் பதிவானது போலவே, தமிழ் சினிமாவும் அதன் தொடக்கத்திலிருந்து கனவு தொடர்புடைய ஏராளமான காட்சிகளைக் கையாண்டிருக்கிறது. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்ற பிரபலமான வசனமுடைய மகாதேவி (1957) படத்தில் வில்லன் வீரப்பா தனது மனைவி மங்கம்மாவை இரவு தூக்கத்தில் அணைத்துக்கொண்டிருக்கும்போது தனது அடிமனதில் மறையாமல் இருக்கும் தனது காதலி மகாதேவியின் பெயரை உளறிவிடுவார். கணவனையே கண் கண்ட தெய்வமாக வரித்திருந்த மங்கம்மா தனது கணவனின் கனவுப் பிதற்றலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுவாள். திரைக்கதையின் போக்கு அதிலிருந்து மாறிவிடும்.
இதெல்லாம் போக காதல் பாடல்களை ஒவ்வொரு படத்திலும் கண்களால் அள்ளிப் பருகிக்கொண்டிருக்கிறோம். விழித்த நிலையிலேயே கனவுக் காட்சிகளை ஏன் ஆர்வமாக அருந்துகிறோம், அதற்கான கலாச்சாரத் தேவை என்ன என்பதைத் தமிழ் சினிமா ஆர்வலர்கள்தான் கூடி ஆராய வேண்டும்.
தனி மனிதனை உருவாக்கும் சமூகக் கலாச்சாரக் காரணிகளின் பின்னணியில் கனவுகள் பற்றிய கோட்பாடுகளை விவரித்து ஃப்ராய்ட் எழுதிய நூல் மனித சிந்தனை வரலாற்றில் முக்கியமான வரவு.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago