ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில், 2013ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஓரு காலை நேரம் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். ‘நான் அலிஸ் மன்றோ பேசுகிறேன்’ என்றார். அவர் வெளிநாடு போவதால் திரும்பி வந்ததும் எனக்கு ஒரு செவ்வி தருவதாக ஒப்புக்கொண்டார். அவருடைய தொலைபேசி எண்ணைத் தந்தபோது கிட்டத்தட்ட நேர்காணல் முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.
அது எத்தனை தவறு. அவர் கொடுத்த கெடு தாண்டியதும் அவருடைய தொலைபேசி எண்ணை அழைத்துத் தகவல் விட்டேன். பதில் இல்லை. மறுபடியும் தகவல் விட்டேன் பதில் இல்லை. நேர்காணல் தள்ளிப்போனது. அந்தச் சமயம் அவர் கலந்துகொள்ளும் ஒரு கூட்டம் பற்றி பேப்பரில் விளம்பரம் வந்தது. 35 டொலர் நுழைவுக் கட்டணம் கொடுத்து அந்தக் கூட்டத்துக்கு போனேன். எப்படியும் அவரைச் சந்தித்து நேர்காணல் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். ’ஒருநாளைக்கு ஒரு நன்மையாவது செய்யவேண்டும்.’ இது அவருடைய மந்திரம் என்பதைப் படித்திருந்தேன். கூட்டம் முடிந்ததும் அவருடைய மந்திரத்தை ஞாபகப்படுத்தியதும் உடனேயே சம்மதித்தார்.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது அலிஸ் மன்றோ சொன்ன ஒரு விஷயம் ஆச்சரியமூட்டியது. ‘‘எழுத்து எழுத்து என்று இவ்வளவு காலமும் ஓட்டிவிட்டேன். இனிமேல் எழுதுவதை நிறுத்தப்போகிறேன்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. எழுத்தாளரால் எப்படி எழுதுவதை நிறுத்த முடியும். எழுதுவதுதானே அவர் மூச்சு. நான் நினைத்தது சரிதான். எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்ற உரைக்குப் பின்னர் அவர் எழுதி மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன.
‘Dear Life’ என்ற தொகுப்புதான் தன்னுடைய கடைசி நூல் என்று அலிஸ் மன்றோ சொல்லியிருக்கிறார். அதை அவசரப்பட்டு நம்பக் கூடாது.
அவருக்கு கிடைத்த பரிசுகளைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு பக்கத்துக்கு மேலே வரும். இப்பொழுது இலக்கியத்தின் அதி உச்சமான நோபல் பரிசும் கிடைத்துவிட்டது. கடந்த பத்து வருடங்களாக எதிர்பார்த்த விருது இது. இலக்கியத்துக்காக கனடிய எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு. ( ஸோல் பெல்லோவுக்கும் இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அவர் கனடாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர்.) இலக்கியத்துக்காக நோபல் பரிசுபெற்ற 13வதுபெண் எழுத்தாளர். இவர் புதுமைப்பித்தனைப்போல, Jorge Luis Borges போல சிறுகதைகள் மட்டுமே முக்கியமாக எழுதியவர். நோபல் பரிசு அங்கீகாரம் சிறுகதை இலக்கியத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்.
அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ‘உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத் திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையைச் சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தைக் கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும்.’ அப்பொழுது நான் ‘நீங்கள் வெட்டியெறிந்த வசனங்களையெல்லாம் எனக்குத் தர முடியுமா?’ என்று கேட்டேன். அவர் பெரிதாக சத்தம்போட்டுச் சிரித்தார்.
அலிஸ் மன்றோவின் சிறுகதைகள் மிக நீண்டவை. ஆகவே தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் சிறுகதைகள் அதிகம் படிக்கக் கிடைப்பதில்லை. அவர் என்னிடம் கேட்டார். ‘என்னுடைய சிறுகதைகளை உங்கள் மொழியில் மொழிபெயர்ப்பது சுலபமா?’ நான் சொன்னேன். ‘மிக எளிது. உங்கள் வசன அமைப்பு தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இலகுவானது. ஆனால் உங்கள் கதைகள் நீண்டுபோய் இருப்பதால் அவற்றைப் பிரசுரிப்பது கடினம். உங்கள் கதைகளின் நீளம் 70 பக்கம், எங்கள் சிறுபத்திரிகைகளின் முழு நீளம் 60 பக்கம்தான்’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார்.
நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட செய்தியை அவரிடம் தெரிவிப்பதற்கு நோபல் கமிட்டியின் செயலாளர் ஸ்வீடனில் இருந்து தொலைபேசியில் அவரை அழைத்தார். வழக்கம்போல அலிஸ் மன்றோ எடுக்கவில்லை. நடு இரவு அவருடைய மகள் டெலிபோனில் அழைத்து. ‘அம்மா, நீ வென்றுவிட்டாய்’ என்று கத்தியபோதுதான் அவருக்கு விஷயம் தெரிந்தது.
நானும் செய்தி கிடைத்தபோது அலிஸ் மன்றோவை அழைத்துத் தகவல் பெட்டியில் என் வாழ்த்தைத் தெரிவித்தேன். நோபல் கமிட்டி செயலாளர் விட்ட தகவலுக்கு மேல் என் தகவலும் காத்திருக்கும். எப்போதாவது ஒருநாள் அலிஸ் மன்றோ அதைக் கேட்பார்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago