ஒரு நாவலும் சிறுபத்திரிகையும் வரலாறான கதை

அந்த எழுத்தாளருக்கு நாட்டின் தலைநகரில் சிலை. அந்த நாட்டு பத்து பவுண்டு தாள் நாணயத்தில் அவருடைய புகைப்படம். அவர் எழுதிய நாவலின் கதை நிகழும் நாளிலிருந்து(16/06/1904) ஐம்பதாவது ஆண்டில் இந்த நிகழ்வுகள் ஆரம்பித்தன.

ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாளில் முக்கியக் கதாபாத்திரங்களின் வேடமணிந்து நாவலின் கதை நிகழும் இடங்களில் நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஊர்வலமாகப் போகிறார்கள். பொதுஇடங்களில் நின்று அந்நாவலை வாசித்து மகிழ்கிறார்கள். வானொலியில் முப்பத்தாறு மணி நேரம் தொடர்ந்து நாடகபாணியில் அந்த நாவல் வாசிக்கப்படுகிறது.

16/06/1956 அன்று அமெரிக்கக் கவிஞர் சில்வியா ப்ளாத்தும் பிரிட்டிஷ் கவிஞர் டெட் ஹ்யூஸும் திட்டமிட்டுத் தங்களுடைய திருமணத்தை நடத்திக்கொண்டார்கள். நூற்றாண்டு விழாவில் பத்தாயிரம் பேருக்கு ஐரிஷ் இசைப் பின்னணியில் அயர்லாந்தின் முக்கியமான உணவு வகைகள் விருந்தாகப் படைக்கப்பட்டு நாவலின் சம்பவங்கள் நடித்துக் காட்டப்பட்டன.

இந்தக் கொண்டாட்டங்கள் அந்த எழுத்தாளரின் சொந்த நாடான அயர்லாந்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஹங்கேரியிலும், இத்தாலியிலும்கூட ஆண்டுதோறும் நடக்கின்றன. அந்த நாள் ‘ப்ளூம்ஸ்டே’ என்று அழைக்கப்படுகிறது. நாவலின் பிரதான கதாபாத்திரமான லெபோல்ட் ப்ளூமின் பெயரால் இந்தக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பான முறையில் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஒரு முக்கியத் தேசியக் கலாச்சார நிகழ்வாக நடத்தப்படுகின்றன.

இந்த இடத்தில் எழுத்தாளரின் பெயரும் நாவலின் தலைப்பும் சிலருடைய நினைவுக்கு வந்திருக்கலாம். அந்த ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் (1882-1941). நாவலின் பெயர் யுலிஸ்ஸஸ் (1922). ஜாய்ஸ் தன்னுடைய எதிர்கால மனைவியாகப்போகும் காதல் தோழியான நோராவைச் சந்தித்த நாளே 16/06/1904.

இலியத்தும் ஒடிசியும் கிரேக்கக் கவிஞர் ஹோமரின் இரட்டைக் காப்பியங்கள். முதல் காப்பியம், கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க இளவரசி ஒருத்தியை மீட்க கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் இடையே நடக்கும் பத்தாண்டுப் போரைச் சித்திரிக்கிறது. இரண்டாவது, போர் முடிந்து ட்ராய் என்ற ஊரிலிருந்து சொந்த நாடு திரும்பும் பத்தாண்டுப் பயணத்தில் கிரேக்க வீரன் யுலிஸ்ஸஸ் ஈடுபடும் சாகசங்களை விவரிக்கிறது.

ஒடிஸ்ஸியஸ் என்ற கிரேக்க வார்த்தையின் லத்தீன் வடிவம் யுலிஸ்ஸஸ். ‘நீண்ட, கடுமையான பயணம்’ என்று பொருள். இந்தக் காப்பியத்தின் பாத்திரங்களின், சம்பவங்களின் ஒப்புமைகளோடும் முரண்களோடும் நவீன கால சாதாரண மனிதர்களின் வாழ்வை ஜாய்ஸின் நாவல் சொல்கிறது.

நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான தனிமை விளைவிக்கும் துயரத்தைத் தன்னுடைய பாணியில் ஜாய்ஸ் வெளிப்படுத்துகிறார். நாவலின் பதினெட்டு உட்கதைகள் நவீனகால வாழ்வின் சிக்கல்களைச் சொல்கின்றன. லெபோல்ட் ப்ளூமின் கதாபாத்திரம் யுலிஸ்ஸ்ஸை ஒத்திருக்கிறது.

விளம்பரங்கள் சேகரிக்கும் பணியில் இருக்கும் அவன் டப்ளின் நகரில் ஒரு நாள் முழுதும் சுற்றித் திரிவது யுலிஸ்சஸின் பயண அனுபவங்களுக்கு இணையானது. ஒரு குறிப்பிட்ட ஊர் முழு உலகையே தன்னுள் கொண்டிருப்பதாக ஜாய்ஸ் நம்பினார்.

ஒட்டுமொத்த நவீனத்துவ இயக்கத்தின் பொழிப்புரை என்றும் யாராலும் பின்பற்றமுடியாத சொல்முறை கொண்ட படைப்பென்றும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் ஒருசேரப் பாராட்டுகிறார்கள். இப்பெரும்படைப்பில் ‘பாத்திரங்களின் பேசப்படாத, செயல்வடிவம் பெறாத எண்ணங்களை அவை தோன்றும் அதே போக்கில் தர’ தான் முயன்றுள்ளதாக ஜாய்ஸ் சொன்னார்.

நாவலின் பெரும்பாலான பகுதிகளில் கையாளப்பட்டுள்ள இந்த நனவோடை உத்தியும், குறிப்பிட்ட இரண்டு சொற்களின் ஒலிகளும் அர்த்தங்களும் கலந்து உருவான கற்பனைச் சொற்களும், நிறுத்தற்குறிகளே இல்லாமல் எழுதப்பட்டுள்ள பக்கங்களும், அந்நிய மொழிப் பிரயோகங்களும், சிலேடைகளும் இந்த நாவலை வாசிக்கும் செயல்பாட்டை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்குகின்றன.

“இந்நாவலில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற சர்ச்சையில் பேராசிரியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு மும்முரமாக ஈடுபடும் வகையில் நிறைய புதிர்களையும் மறைபொருள்களையும் பொதித்துவைத்துள்ளேன்’’ என்று ஜாய்ஸ் சொன்னார். ஜாய்ஸின் படைப்புகளுக்கென்றே, குறிப்பாக யுலிஸ்சஸுக்காக, ஒரு காலாண்டு ஆய்விதழ் 1963 தொடங்கி அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள டுல்சா பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகிறது.

ஜாய்ஸின் பாதிப்புக்கு உள்ளான முக்கிய எழுத்தாளர்கள் பலரில் சாமுவேல் பெக்கட், போர்ஹெஸ், ருஷ்டி, டேவிட் லாட்ஜ் போன்றவர்கள் அடக்கம். இந்நாவலின் மொழி பற்றி தெரிதா ஒரு நூல் எழுதியுள்ளார். ஆங்கில நாவல் உலகின் உச்சத்தில் வைத்துப் பின்னாளிலும் இன்றும் கொண்டாடப்படும் இந்த நாவல் வெளியான காலத்தில் சந்தித்த சர்ச்சைகளும் நெருக்கடிகளும் புனைவுக்கு இணையானவை. இந்த நாவலை வெளியிட்ட சிறுபத்திரிகை சந்தித்த நெருக்கடிகள் இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாத பக்கங்கள்.

(அடுத்த வாரம்...)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்