தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர், சிறுகதையாளர் மற்றும் தலித் அரசியல் செயல்பாட்டாளரான அழகிய பெரியவனின் தகப்பன் கொடி , கலையமைதியுடன் எழுதப்பட்ட முக்கியமான தமிழ் நாவல்களில் ஒன்று. கிழக்குத் தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கும் இவரது வீட்டில் அவரது குழந்தைப் பருவம், வாசிப்பு, இலக்கியம், தற்கால அரசியல் குறித்து பேசியதிலிருந்து...
நீங்கள் பிறந்த ஊரான பேர்ணாம்பேட் பற்றி சொல்லுங்கள்?
நவாபுகளின் காலத்தில், அவர்களின் ஆளுகைப் பகுதிகளை பிர்க்காக்களாக பிரித்திருந்தார்கள். அப்படிப் பிரிக்கப்பட்ட பிர்க்கா ஒன்றின் தலைநகராக இருந்தது தான் சாத்கர். பழைய மைல்கற்களில் சாத்கர் என்றுதான் இந்த இடத்தையும் குறித்துள்ளனர். பேர்ணாம்பேட் என்னும் பெயர் பிறகுதான் இந்த ஊருக்கு வந்துள்ளது. அதுவரை சாத்கரின் ஒருபகுதியாகத் தான் இது இருந்துள்ளது. இங்கே முஸ்லிம்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் பண்டிகைகளை நாங்களும் கொண்டாடுவோம். ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற கறிப்பண்டிகைகள் வரும்போது எங்கள் வீட்டிலும் கறி இருக்கும்.
இது மாநில எல்லையோரத்தில் உள்ள சிறுநகரம். மலைத்தொடரால் சூழப்பட்ட ஊர். எந்த திசையி லிருந்தும் மலையைப் பாக்க முடியும். வேலை என்று பார்த்தால் விவசாயத்தையும், பீடி சுற்றும் வேலை மற்றும் தோல்பதனிடும் தொழிலையும் சொல்லலாம்.
தகப்பன் கொடி நாவலில் கதையின் ஒரு அங்கமாக மகாபாரதக் கூத்து முக்கிய இடம்வகிக்கிறது இல்லையா...
மகாபாரதம் எனது அம்மாவழிப் பாட்டி மூலமாகத்தான் அறிமுகமானது. அவர் பெயர் குழந்தையம்மாள். பாட்டி சொல்லும் கதையை எங்கள் ஊர் நிலப்பரப்போடு தொடர்புபடுத்திதான் உள்வாங்கினேன். அந்தக் கதையில் ஒரு ஆறு வந்தால் பாலாறுதான் நினைவுக்கு வரும். சண்டை நடக்குதுன்னா, கரம்பாக இருக்கும் பெரிய பகுதியை நினைத்துக்கொள்வேன். மகாபாரதக் கதையில்தான் மனிதனின் அதிகப்படியான குணங்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன. கர்ணன், துரியோதனன், அர்ஜுனன், துரியோதனன் என எண்ணற்ற குணாம்சங்கள் அதில் உண்டு. நான் அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகளை விட்டுப் பிரிந்து பாட்டிவீட்டில் இருந்ததால் கர்ணன் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. உறவுகள் இல்லாத கர்ணனின் கையறு நிலையுடன் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன்.
பதினெட்டாம் போர், கர்ணமோட்சம் எல்லாம் நடத்துவார்கள். எங்கள் அப்பா தாத்தா அர்ஜுனன் தபசில் மரமேறுபவர். அவர் கூத்துவாத்தியாராகவும், கலைஞராகவும் இருந்துள்ளார். அவர்தான் தகப்பன் கொடியில் அம்மாசி. எங்கள் பகுதியில் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்கள் இரு சமூகத்தினரும் மகாபாரதக் கூத்தைச் செய்வார்கள். ஆனால் இரண்டு பேருமே தனித்தனியாகவே அதை நடத்திவந்தார்கள்.
எங்கள் தாத்தா, நாவிதம்பட்டியில் இருந்து சொந்த நிலங்களை இழந்து மனைவியின் ஊரான இந்த ஊருக்கு இடம்பெயர்கிறார். அதுதான் பேர்ணாம்பட்டில் உள்ள கள்ளிப்பேட்டை. இங்கே வந்த பிறகும் கூத்துகளைக் கற்றுக்கொடுத்து, தபசு மரமும் ஆண்டுதோறும் ஏறியிருக்கிறார். தகப்பன் கொடி நாவலில் அம்மாசி அர்ஜுனனாகத் தன்னை உருவகிக்கிற இடம் இருக்கிறது.
வழிபாடு, சடங்குகள், மற்றும் சமய நம்பிக்கையிலிருந்து எப்போது விடுபடுகிறீர்கள்...
எங்கள் அப்பா குடும்பத்தில் குலதெய்வ வழிபாடு இருந்திருக்கிறது. எனது அம்மா மற்றும் பாட்டி கிறிஸ்துவப் பின்னணியிலிருந்து வந்தவர். பாட்டிக்கு பைபிளை முழுவதும் வாசித்துக் காண்பித்திருக்கிறேன். கல்லூரி காலத்தில் பெரியார் எழுத்துகளைப் படிக்கும்போது கடவுள் சார்பு முழுமையாகப் போய்விட்டது. கேள்விகளும் எழுந்தன. சாதி என்றால் என்ன? நாம் மட்டும் ஏழையாகவே இருக்கிறோம்? கடவுளைத் தீவிரமாக வணங்கினாலும் ஏன் எதுவும் எனக்கு மட்டும் கிடைக்காமல் உள்ளது என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்தன. எதுவுமே நடக்காமல் வெறுமனே நம்புவதில் என்ன பிரயோஜனம் என்றெல்லாம் நினைத்தேன். ஒரு கட்டத்தில் இறைச்சி உணவு சாப்பிடாமல் இருந்தேன். என் உள்மனதுக்கு தொடர்ந்து பதில் சொல்லக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன்.
தகப்பன் கொடி நாவலில் அம்மாசிக்கு சொந்தமான நிலம் பறிபோவதுதான் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது...தலித்களுக்கு நில உடைமை இல்லாததுதான் இந்த ஒடுக்குமுறை தீவிரமாக இருப்பதற்கு காரணமா....?
தலித்களுக்கு நிறைய நிலங்கள் இருந்ததாக வாய்மொழிப் பாடல்கள் கூறுகின்றன. ஆனால் அது குறித்து எனக்கு ஐயப்பாடு உள்ளது. எங்கேயாவது சில இடங்களில் அரிதாக அவர்கள் பெரும் நில உடைமையாளர்களாக இருந்திருக்க மட்டுமே வாய்ப்புள்ளது. தலித்கள் நில உடைமையாளர்களாக இருந்திருந்தால் அவர்கள் யாருக்கும் போய் சேவை செய்திருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்த ரெட்டைமலை சீனிவாசனும், அயோத்தி தாசரும், எம்.சி. ராஜாவும் நினைத்தபோதுதான் அவர்கள் வெள்ளையரிடம் கோரிக்கை வைத்தார்கள். தலித்களுக்கு நிலங்கள் பெருவாரியாக சொந்தமான நிலைமை, ஆங்கிலேய அரசு பஞ்சமி நிலங்களாக கொடுத்ததில் இருந்துதான் வந்துள்ளது. ஆக நிலம் என்பதும், தொழில் என்பதும் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்ட ஒன்று. அதை தலித்களிடம் இருந்து பறித்தபிறகு அவன் நிரந்தரமாக அடிமையாக இருக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. இந்த நிலை செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இப்போதும் தமிழகத்தில் ஆதிக்க சாதியினரிடமே அதிகமான நிலங்கள் உள்ளன. இது திடீர் என ஏற்பட்ட மாற்றம் அல்ல. பஞ்சமி நிலங்களாக ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட நிலங்களில் பெரும்பகுதியும் தலித் மக்களிடம் இருந்து பறிபோயுள்ளது.
சென்ற நூற்றாண்டில் தலித் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்ற பஞ்சங்களும்கூட வெள்ளையர்க ளாலேயே உருவாக்கப்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறாரே?
ஆங்கிலேயர்களுக்கு முன்பே சோழர்கள், நாயக்கர்கள், நவாப்புகள் வரை விவசாயம் செய்பவர்களிடம் அதிகப்படியான பணத்தை வசூல் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இந்த வரி வசூலை அந்தந்த பகுதியில் உள்ள ஜமீன்தார்கள் செய்துள்ளனர். வெள்ளையர்கள் காலத்திலும் இந்த ஜாகீர்தாரி, ராயத்வாரி முறைகள் இருந்தன. அவர்கள் காலத்தில் புதிய நிலச்சுவான்தார்களும் உருவாகியிருப்பதாக ஆதாரப்பூர்வமாக தகவல்கள் உள்ளன. ஜமீன்தாரிகள் தங்களுக்குக் கீழ் இருந்த குறுநில, சிறுநில விவசாயிகளை ஒடுக்கியதாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. அதன் காரணமாக விவசாயிகள் மத்தியிலேயே கிளர்ச்சி ஏற்பட்டதாகவும் செய்திகள் உள்ளன. முக்கால்வாசி விளைச்சலை வரியாக கொடுத்தது, மழையின்மை போன்ற இயற்கைக் காரணிகள், விளைச்சல் இன்மை, பாசன வசதிகளின் போதாமை, விளைபொருட்களை இங்குள்ள வியாபாரிகள் பதுக்கியது போன்றவை எல்லாம் தான் பஞ்சத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. இதில் வெள்ளையர்களுக்கான பங்கு என்பது குறைவுதான் என்று சொல்வேன்.
ஜெயமோகன் பார்வை என்பது இந்திய மரபு சார்ந்த ஒரு பார்வை என்று நாகரிகமாகச் சொல்லலாம். நம் மரபில் இருக்கும் பிரச்னையைத் தவிர்த்துவிட்டு, முழுமையாக குற்றத்தை வெள்ளையர்கள் மீது சாட்டுவது எப்படி நியாயமாக இருக்கும்.
பஞ்ச காலங்களில் தலித் மக்கள் அதிகமாக இறந்துபோனதற்கு இங்குள்ள சாதிய ஒடுக்குமுறைதான் காரணமாக இருந்திருக்கிறது. இங்கே இருந்த சாதி இந்து, ஒரு தலித்தை தொடவில்லை. ஆனால் வெள்ளைக்கார பாதிரிகள் அவனைத் தொட்டு நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். சாப்பிடுவதற்கு உணவு கொடுத்தார்கள். கல்வி கொடுத்தார்கள். எத்தனை திண்ணைப் பள்ளிகளில் தலித்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தீர்கள்? செங்கல்பட்டில் ஒரு பள்ளியில் வெள்ளையர் அரசு தொடங்கிய பள்ளியில் தலித் மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்ததற்காக, மற்ற சாதி இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குப் படிக்கவே அனுப்ப மாட்டோம் என்று சொல்லும் நிலை இருந்திருக்கிறது. தலித் மாணவர்களுக்குத் தனிப் பள்ளிகள் தொடங்கியதற்கு வெள்ளையர்கள்தான் காரணம். அக்காலத்தில் கொடூரமான நோய் என்று தொழுநோய்,மலேரியா, காசநோய் போன்றவை இருந்துள்ளன. எங்கள் ஊரில் காசநோய் வந்த ஒரு பெரியவரை வண்டியில் தூக்கிச் சென்று காப்பாற்றி, அவரை 90 வயதுக்கு மேல் வாழ வைத்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்தான். அதனால் வெள்ளையர்களைக் குற்றம்சாட்ட இடமில்லை என்று நினைக்கிறேன்.
தீவிர அரசியல் இயக்கங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சகிப்பற்ற தன்மை இருப்பது ஏன்?
அடிப்படையில் எந்த அமைப்புமே தொடக்கத்தில் தங்களை வேகமாக சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் நிர்மாணம் செய்துகொள்வதில் முனைப்புக் காட்டுவதாக உள்ளது. ஆனால் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு கருத்தியல் தளத்தில் பயிற்சி கொடுப்பதில் கவனம் செலுத்துவதே இல்லை. இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி உருவாகும் அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள் அனைத்துமே, பல்வேறு இழப்புகளை, போராட்டங்களைச் சந்தித்துதான் ஒரு அரசியலை முன்னெடுக்கின்றனர். அவர்கள் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து அணிதிரள்கிற போது, எதிர்கருத்துகள் தங்களது செயல்பாடுகளை சிதைத்து விடுமோ என்ற பதற்றத்திலேயே எதிர்வினையாற்றுகிறார்கள். அந்த நியாயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இளவரசன்-திவ்யா பிரச்சி னையும் இளவரசனின் மரணமும் சாதி என்பது தமிழகத்தில் இன்னும் இறுக்கமாக இருப்பதைக் காட்டுவதாகவே உள்ளன அல்லவா?
அரசியல் இயக்கங்களைத் தலைமையேற்று நடத்துபவர்களின் சுயநல நடவடிக்கைகளாகவே இதைப் பார்க்கிறேன். கலப்புத் திருமணங்கள் நடக்காமலேயே இருந்த சமூகம் அல்ல இது. மிக நீண்ட காலமாகச் சாதி மறுப்பு என்ற அரசியல் கருத்தியல் இல்லாமலேயே சாதி தாண்டிய, சமயம் தாண்டிய காதல் திருமணங்கள் நீண்ட காலமாகவே இங்கு உள்ளன.
இதையெல்லாம் தாண்டி இன்றும் சாதி ஒழியவில்லை என்பதுதான் இங்குள்ள நிலை. தமிழகத்தின் தலைநகரில் உள்ள முக்கியக் கல்வி நிலையத்தில் சாதி பார்த்துதான் வேலை அளிக்கப்படுகிறது. ஆனால் நவீன வாழ்க்கை சில சௌகரியங்களை வழங்கியிருக்கிறது. சேர்ந்து சாப்பிடுவது, குடிப்பது, வீட்டுக்குப் போவது போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் திருமண பந்தம் வைத்துக்கொள்ள முடியாது.
தொழில்மயமான ஊர்களில் சாதிக்கலப்பு இயல்பாகவே திருமணம், காதல் உறவுகள் வழியாக இருக்கிறது. அத்துடன் செல்போன், சமூக ஊடகங்கள் மேலும் சாதிய இறுக்கத்தைத் தளர்த்தியுள்ளன. இன்றைக்குள்ள எந்த நவீன இளைஞனுக்கும் தனது சாதியின் பூர்வ கதை தெரியாது. மெதுவாக மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தை இவர்கள் மீண்டும் பழமையை நோக்கி இழுக்கிறார்கள். தலித் எழுத்தாளராக உங்களுக்கு இன்றைய சவால்கள் என்ன?
தலித் எழுத்தாளன் என்று அடையாளப்படுத்திக ்கொள்ளக்கூடிய ஒருவன் ஒரு கருத்தியலுக்குக் கட்டுப்பட்டவனாக மாறிவிடுகிறான். தலித் இலக்கியம் இங்கு எழுதப்பட்டு 20 வருடங்களாகிவிட்டன. நான் அடிப்படையில் தமிழ் எழுத்தாளன். அதற்குப் பிறகே எனது அடையாளங்கள் உருவாகின்றன. தலித்களுக்கான வேதனைகளை மட்டும் அல்ல, அவர்களுக்கான களிப்பு, அவர்களின் மரபு, காதல், அன்பு, வரலாற்றில் அவர்கள் வகித்த பங்கு எல்லாவற்றையும் நான் எழுத வேண்டும். சாதி இல்லாத இடமாக நட்பு விஷயங்கள், சமூக வெளிகள் உள்ளன. அவற்றையும் தேர்ந்த பார்வையுடன் எழுதவேண்டும். அவற்றை எழுதும் வாய்ப்பு இங்கே இல்லாமலேயே போய்விட்டது. அதைத்தான் நான் எழுதவேண்டும். மற்ற தலித் எழுத்தாளர்களுக்கும் இதேதான் சவால். ஏனெனில் 20 வருடமாக அழுது தீர்த்தாகிவிட்டது. போதும் என்று தோன்றுகிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
2 months ago