தமிழ் மரபிலக்கண, இலக்கியப் பரப்பில் புலமையும், ஆய்வு ஒழுங்கும் கொண்ட ஆய்வாளர்கள் அருகிவருகின்றனர். அந்த வகையில் அருட்பா - மருட்பா என்ற நூலின் மூலம் நிகழ்ந்த ஆய்வாளர் ப. சரவணனின் வரவு முக்கியமானது. ஆவண ஆக்கம் என்ற துறையில் புதிய ஆற்றலுடன் இவர் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். அருட்பா - மருட்பா கண்டனத் திரட்டு, சிலப்பதிகாரம், நாலடியார், கலிங்கத்துப் பரணி, நவீன நோக்கில் வள்ளலார் போன்ற நூல்கள் முக்கியமானவை. தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
உங்கள் பின்னணி குறித்துச் சொல்லுங்கள்.
செஞ்சி அருகில் மேல்மலையனூர்தான் எங்கள் ஊர். மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை அங்கேதான் படித்தேன். எனது தந்தையார் தமிழாசிரியராக இருந்தவர். அந்தக் காலத்தில் புலவர் படிப்பு முடித்து வேலைக்கு வந்தவர். அதனால் தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் வீட்டிலேயே அறிமுகமாகிவிட்டன. அப்பா வைத்திருந்த மர்ரே ராஜம் பதிப்புகளை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். எங்களுடைய குடும்பம் சைவக் குடும்பம் என்பதால் வீட்டில் தேவாரமும், திருவாசகமும் சகஜமாகப் படிக்கப்படும் சூழல் இருந்தது.
வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தமிழ் சமணக் குடும்பம் இருந்தது. விருக்ஷபதாச ஜெயின் என்பவர் எங்கள் கிராமத்தில் மணியம் பார்த்தவர். சமணப் புத்தகங்கள் தொடங்கி, விகடன் தீபாவளி மலரிலிருந்து அண்ணாவின் திராவிட நாடு வரை அவரது சேகரிப்பிலிருந்துதான் நாங்கள் வாசித்தோம்.
சென்னைப் பல்கலைக்கழகம் உங்கள் மேல் செலுத்திய தாக்கம் பற்றிக் கூறுங்கள்?
ஆய்வு நூல்களைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகமே வழியமைத்துக் கொடுத்தது. மரபிலக்கியம் தவிர நவீன இலக்கியம், நாட்டுப்புறவியல், பண்பாட்டு ஆய்வு ஆகியவை குறித்த ஈடுபாட்டை என்னிடம் வளர்த்ததில் பேராசிரியர் வீ. அரசுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அங்கு மொழியியல் துறையில் நடத்தப்படும் பாடங்கள், நிகழ்ச்சிகள், புத்தாக்கப் பயிற்சிகள் ஆகியவை கிராமத்தில் இருந்து வந்த எனக்கு மிகவும் உற்சாகத்தை அளித்தன. காலையில் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தால் வீட்டுக்குத் திரும்புவதற்கு இரவு ஒன்பது மணி ஆகிவிடும். சென்னையில் எனது அக்கா வீட்டில்தான் இருந்தேன். மாமாதான் செலவுகளைக் கவனித்துக்கொண்டார்.
மரபிலக்கிய நூல்களுக்குப் புதிய உரைகளை எழுத வேண்டிய தேவை என்ன?
உ.வே.சா., வேங்கடசாமி நாட்டார் போன்றோரின் உரைகள் சாதாரணர்கள் படிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. புலியூர்க் கேசிகன் போன்றவர்களின் உரைகள் எளிமையாக இருக்கும். ஆனால் புலியூர்க் கேசிகனிடம் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்காது. அப்போது நடைமுறையில் அந்த வார்த்தைகளுக்குப் பொருள் சொல்ல வேண்டிய தேவையில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் தேவையாக உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவன்கூட உரையின் எந்த வரிக்கும் வார்த்தைக்கும் வெளியே போய்ப் பொருள் தேட வேண்டாத நிலை இருக்க வேண்டும் என்று கருதினேன். அதைத் தொடர்ந்த முயற்சிதான் இந்த உரைப் பணி.
பதிப்பில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
ஆ.இரா. வேங்கடாசலபதிக்குத்தான் இது தொடர்பாக நான் நன்றி சொல்ல வேண்டும். ஆவணப்படுத்தலில் எனக்கு உள்ள ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தது அவர்தான். புதுமைப்பித்தன் கட்டுரைகளை அவர் பதிப்பித்தபோது நான் உதவியாளனாகப் பணியாற்றினேன். பதிப்பு நுணுக்கங்கள் என்ன? என்னென்ன நடைமுறைகளைப் பேண வேண்டும்? தகவல்களை இருட்டடிப்பு செய்யாமல் நேர்மையாக எப்படித் தர வேண்டும் என்பதையெல்லாம் அவரிடம் இருந்தே அறிந்துகொண்டேன். மயிலை சீனி. வேங்கடசாமியின் கட்டுரைகளை பதிப்பிக்கும்போது, மே.து. ராசுகுமார் அவர்களும் எனக்குப் பதிப்பின் அடிப்படைகளைப் போதித்தார். மூல ஆசிரியனின் சொற்களை மாற்றாமல் பதிப்பிப்பது குறித்து அவர்தான் சொல்லிக் கொடுத்தார்.
அருட்பா - மருட்பா நூல்கள் வழியாகத்தான் நீங்கள் முதலில் தமிழறிஞர் வட்டாரத்தில் அறிமுகமானீர்கள். அது குறித்து?
எம்.ஃபில். படிக்கும்போது பேராசிரியர் வீ. அரசு எனக்கு ஆசிரியராக இருந்தார். மாணவர்களிடம் இருக்கும் தனி ஈடுபாடுகளை சரியாகக் கண்டுபிடித்துவிடுவார். அவர் ரத்தின நாயக்கர் சன்ஸ் புத்தகங்களைப் பற்றிய ஆய்வேடைத்தான் முதலில் எழுதச் சொன்னார். நாட்டார் வழக்காற்றியல், மருத்துவம் தொடர்பான நூல்களை அவர்கள்தான் பதிப்பித்தவர்கள். அந்த ஆய்வேட்டுக்குக் கால அவகாசம் அதிகம் ஆகும் என்று சொன்னேன். வீ. அரசு, ஆவணப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவரிடம் அருட்பா-. மருட்பா பற்றி ஆய்வு செய்கிறேனே என்று சொன்னேன். இதற்கு அடித்தளமாகப் பள்ளிக்காலத்தில் எனக்குத் தமிழாசிரியராக இருந்த சட்டையப்பன் இருந்திருக்க வேண்டும். அவர்தான் வள்ளலாரை எனக்கு அறிமுகப்படுத்தினார். சன்மார்க்கத்தில் அப்படி ஒரு அறிஞரை இனிப் பார்க்கவே முடியாது. வள்ளலாரின் நேரடி மாணவருடைய மாணவரது மாணவர் அவர்.
வள்ளலார் இன்று தமிழகத்தில் ஒரு புனித பிம்பமாக இருப்பவர். காரண, காரிய தர்க்கங்களுடன் அவரை ஆய்வு செய்வது சாத்தியமாக இருந்ததா?
வள்ளலார் நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதி எழுந்து நின்றார் என்று இன்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு நீதிபதி எப்படி எழுந்து நிற்க முடியும் என்ற கேள்வியை ஆசிரியர் சட்டையப்பனிடம் போய்க் கேட்டேன். அவர் பல்கலைக்கழகத்துக்குப் போய் கெட்டுப்போய்விட்டாய் என்று கண்டித்தார். வையாபுரிப் பிள்ளை முதற்கொண்டு பெரிய அறிஞர்கள் வரைக்கும் ‘அருட்பா’ என்று சொல்லக் கூடாது என்பதற்காகத்தான் ஆறுமுக நாவலர் வழக்குப் போட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது மானநஷ்ட வழக்கு என்று தக்க சான்றுகளோடு சொன்னது எனது ஆய்வுக் கட்டுரைதான்.
நவீன ஆய்வுச் சூழலில் புழங்குகிறீர்கள். உங்கள் நண்பர்கள் பெரியாரியர்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையுடன் கூடிய மனத்தையும் எப்படிப் பேண முடிகிறது?
நான் கடவுள் பற்றாளன். எந்த ஒரு செயலைத் தொடங்கும்போதும் திருப்பதி வெங்கடாசலபதியைத் துதித்துக்கொள்வேன். பல்கலைக்கழகத்துக்குள் நுழையும்போது ஒவ்வொரு நாளும் அதன் படிக்கட்டை தொட்டுக் கும்பிட்டுத்தான் வளாகத்துக்குள் நுழைவேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற நம்பிக்கை உண்டு.
வள்ளலார் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் குறித்து உங்கள் நோக்கு என்ன?
நான் பக்திபூர்வமாகவும் விமர்சனபூர்வமாகவும் சேர்ந்தே அணுகுகிறேன். வள்ளலாருடைய மறைவை சித்தியா, மரணமா என்று கேட்டுப் பார்த்தால் சித்தி என்றுதான் சொல்வேன். அதை நிரூபிக்க எனக்குத் தகுதி கிடையாது என்பதாலேயே அந்த விஷயம் பொய்யாகிவிடாது.
நவீன நோக்கில் உங்கள் அருட்பா - மருட்பா ஆய்வுத் திரட்டின் முக்கியத்துவம் என்ன?
19ஆம் நூற்றாண்டில் இருந்த பெரும் அறிஞர்களிடமும் எப்படி புலமைக் காய்ச்சல் செயல்பட்டது, அதை அவர்கள் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான ஆவணமாக இது திகழ்கிறது. ஆங்கிலக் கல்வி பயின்று நிறைய பேர் வேலைக்குப் போகத் தொடங்கும் காலத்தில் சமய தத்துவம் சார்ந்தும், புலமை அடிப்படையிலும் கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. பெரும் அறிஞர்கள் குழாயடிச் சண்டை போன்ற மொழியில் பேசியிருக்கின்றனர். உயிருடன் இருக்கும்போதே கதிரைவேல் பிள்ளை என்பவருக்கு காரியப் பத்திரிகையை அச்சடித்துள்ளனர். வழக்கை விசாரித்தது முத்துசாமி ஐயர் என்ற நீதிபதி என்று சொல்லிவந்திருக்கிறோம். ஆனால் வெள்ளைக்கார நீதிபதி ராபர்ட்தான் இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொன்னார். இப்படி வரலாறே மாறிப்போய்விட்டது. ஆய்வில் இறங்கும்போதுதான் இந்த உண்மை தெரிகிறது. 19ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்று ஆவணம், அருட்பா-மருட்பா. சமூக வரலாறு இதில் அடங்கி இருக்கிறது.
உரையாசிரியரின் பணி என்ன?
மூல ஆசிரியர் செய்தியைச் சொல்வார். உரையாசிரியர் விளக்கம் சொல்ல வேண்டும். மன்மதன் அம்புகள் ஐந்து என்று மூல ஆசிரியர் சொன்னால் ஐந்து அம்புகள் என்னென்னவென்று உரையாசிரியர் சொல்ல வேண்டும். ஏழு வகையான மேகங்களில் ஒன்றான புஷ்கலாவர்ஷினி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மற்ற மேகங்கள் என்ன என்று வாசகனுக்குத் தெரிவிக்க வேண்டியது உரையாசிரியரின் கடமை. மரபைத் தொடர்பு அறுபடாமல் இன்னொரு தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் உரையாசிரியர் தேவைப்படுகிறார்.
ஒவ்வொரு உரையாசிரியனின் காலகட்டத்திலும் கிடைக்காத விஷயங்கள் அடுத்த தலைமுறை உரையாசிரியருக்குக் கிடைத்திருக்கும். மாறுபட்டும் இருக்கும். அதையும் நான் பதிவு செய்திருக்கிறேன். முன்னோர் மொழி பொன்னே போல் போற்றுதல் என்ற அடிப்படையில்தான் உரையாசிரியர் பணியைச் செய்கிறேன். ஒரு பாட்டில் சிக்கல் வந்துவிட்டால், தெளிவு கிடைக்கும்வரை போராடிக்கொண்டே இருப்பேன். அடுத்த பாடலுக்குப் போகமாட்டேன்.
மரபிலக்கியக்கங்கள் உங்கள் மீது செலுத்திய தாக்கமும் ஆய்வுப் பணியும், தமிழ் மொழி மீதான ஈடுபாடும் உங்கள் உலக நோக்கை எப்படி உருவாக்கியுள்ளன?
ஆய்வுப் பணியை என்னுடைய பொழுதுபோக்கு என்று எண்ணவில்லை. என்னுடைய வாழ்நாள் வேலையாகவே கருதுகிறேன். அதற்கான இறையருள் எனக்கு வாய்த்திருக்கிறது என்றும் நம்புகி றேன். எனக்கு அதில் ஆத்ம திருப்தி இருக்கிறது. நான் எனது ஆய்வுப் பணிக்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறு வேறு ஆளுமை களைச் சந்திக்கிறேன். புத்தகங்களுடன் உறவாடும்போது, என்னை மீறிக் கண்ணீர் வரும். உ.வே.சா.வின் என் சரித்திரத்தை மீண்டும் படிக்கும்போது, மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கும் அவருக்கும் உள்ள ஆசிரிய-மாணவ உறவு எனக்கு நெகிழ்ச்சியை அளித்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறக்கும் தறுவாயில் உவேசாவின் மனம் பாடுபடுகிறது. இப்படியான ஆளுமைகள் எல்லாம் உலகில் இருந்திருக்கிறார்களா என்று தோன்றும். ஒரு ஆசிரியராக நமக்கு இப்படி ஒரு மாணவன் கிடைக்கமாட்டானா? என்று தோன்றும். நாம் நமது ஆசிரியருக்கு அப்படிப்பட்ட ஒரு மாணவராக இருந்திருக்கிறோமா என்று கேள்வி எழும்.
ஒரு விதமான ஏக்கத்தையும், மகிழ்ச்சியையும் பழைய வாழ்க்கையின் விழுமியங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
புராதனமான வார்த்தைகள் என்னை மயக்குபவை. முன்பே சொன்னதைப் போல என்று எழுதமாட்டேன். ஏலவே சொன்னதைப் போல என்றுதான் எழுதுவேன். இதைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவேன். என்னுடைய மொழியும், உரைநடையும் வேறொரு காலத்தில் இருப்பவை. சில வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.
நீங்கள் ஒரு பழைய மனமாக, 21 ஆம் நூற்றாண்டில் செயல்படும் உயிரா?
அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago