பொருத்தமான அங்கீகாரம் - ஜோ டி குரூஸு க்கு சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும்போது உண்டாகும் பரபரப்பும் கவனக் குவிப்பும் கூடுதலானவை என்பதில் சந்தேகமில்லை. இது ஜனநாயக இந்தியக் குடியரசு அரசு தரும் விருது என்பதுதான் காரணமாக இருக்க முடியும். அரசு தரும் விருது மக்கள் தரும் விருதாக அர்த்தப்படும்போது கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கவே செய்யும். கொற்கை என்ற நாவலை இந்த ஆண்டின் விருதுக்கான படைப்பாக அறிவித்ததன் மூலம் இந்திய அரசின் கலை பண்பாட்டின் துறையின் கவனத்தைத் தன் மீது குவித்துக் கொண்டவராக ஆகி இருக்கிறார் ஜோ டி குருஸ்.

இலக்கியப் பரப்பின் கருத்தியல் மோதல்களின் களமாக இருக்கும் சிறுபத்திரிகை/ இடைநிலை பத்திரிகைகளின் பின்புலம் எதுவும் இல்லாமல் நேரடியாகத் தனது நாவல்களின் வழி தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் ஜோ டி குருஸ். அப்படியொரு நிலைநிறுத்தலுக்கு வாய்ப்பாக இருப்பது அவரது படைப்புலகம் மட்டுமே . கொற்கை குருஸின் இரண்டாவது நாவல். அவரது முதல் நாவல் ஆழிசூழ் உலகு. தமிழக அரசின் விருதைப் பெற்ற நாவல் அது.

ஆதித் தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் தனித்துவமான அடையாளம் அதற்குள் செயல்படும் ஐந்திணைப் பாகுபாடு. திணை என்பது ஒரு விதத்தில் கருத்தியல் குறியீடாக இருந்தாலும் பருண்மையான வெளிப்பாடாக இருப்பவை அவற்றின் நிலவியல் பின்னணிகள். மலை, காடு, வயல், கடல், மணல் என ஒவ்வொரு திணையும் அவற்றிற்குரிய நிலவியல் பின்னணியால் தான் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தொடர்ச்சி தமிழில் அவ்வப்போது விட்டுவிட்டுத் தலைகாட்டுவதுண்டு. தலைகாட்டும் அந்த அடையாளம் எப்போதும் கொண்டாடப்படும் ஒன்றாகவும் கவனிக்கப்படும் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. அந்தத் தொடர்ச்சியின் காத்திரமான அண்மை வெளிப்பாடுகள் தமிழ் நாவல் பரப்பில் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன

ஐவகைத் திணைசார் வாழ்க்கையில் அதிகம் எழுதப்படாத பரப்பாக இருப்பது நெய்தல். கடல் என்னும் நீர்ப்பரப்பும் கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலும் தமிழ் எழுத்திற்குள் அதன் சரியான அர்த்தத்தில் எழுதப்படாமலேயே இருந்தன. கடல் சார்ந்த வாழ்க்கையைக் களனாகக் கொண்டு அலைவாய்க்கரை, கடல்புரத்தில், ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, உப்பு வயல் எனச் சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை உருவாக்க நினைத்த படைப்பனுவங்கள் வேறானவை. முன்னிறுத்தப்பெற்ற முறைகளும் வேறானவை. அந்த நாவல்களின் ஆசிரியர்கள் கடல் வாழ்க்கையை அந்நியர்களின் பார்வையில் அந்தச் சமூகத்திற்கு வெளியே இருந்து பார்த்துச் சொல்வதன் மூலம், கடல் வாழ்க்கையில் இருக்கும் துயாத்தையும் வலியையும் சிக்கல்களையும் கவனிக்கும்படி தூண்டியவர்கள்.

ஜோ டி குருஸ் தனது நாவல்களில் அந்நியராக இல்லாமல் உள்ளிருப்பவராக இருக்கிறார் . தனது சமூகத்தின் உள்ளுக்குள் இருந்து பேசுபவனின் எழுத்து அந்த சமூகத்தின் நம்பத் தக்க குரலாக இருக்க முடியும். அவன் பயன்படுத்தும் மொழி அதனை உறுதியாக்கும் வேலையைச் செய்யும். அவன் சொல்லும் வரலாறும், வரலாற்றை இயக்கிய காரணிகளும் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தும்.

குருஸின் ஆழிசூழ் உலகும் கொற்கையும் அளவில் பெரிய நாவல்கள். 1174 பக்கத்தில் காலச்சுவடு பதிப்பகம் 2009 இல் வெளியிட்ட கொற்கை, தமிழினி பதிப்பகம் வெளியிட்ட ஆழிசூழ் உலகைவிட இரண்டு மடங்கு பெரியது. 1914 தொடங்கி 2000 வரையிலான 86 ஆண்டுக்கால கதை என்ற குறிப்பை கொற்கை நாவலில் வலிந்தே தருகிற குருஸ் ஆழிசூழ் உலகும் நாற்பதாண்டுக் கால வரலாறு (1945-1985) என்பதைச் சொல்ல விரும்பியிருக்கிறார். ஆண்டுக் கணக்குகள் மட்டுமல்லாமல், பரம்பரைக் கணக்குகள், படங்கள் போன்ற குறிப்புகளையெல்லாம் கூடக் கொற்கை நூலில் இடம் பெறச் செய்துள்ளார். இந்தக் குறிப்புகள் எல்லாம் வாசகனை நாவல் வாசகனாக நினைக்கத் தூண்டாமல் வரலாற்று நூலின் வாசகன் என்ற எண்ணத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும். இந்தக் குறிப்புகள் தவிர்க்கப்பட்டிருந்தால் வரலாற்றை நாவலாக வாசிக்கும் அனுபவத்தைக் கூடுதலாக ஆக்கியிருக்க முடியும்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பரதவர்களின் -குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்ட மீனவக் கிராமங்களின்- தொலைந்துபோன பொருளாதார, சமூக வாழ்க்கையின் பின்னணியில் எவையெல்லாம் இருந்தன என்பதைப் பற்றிப் பேசுவதற்காக ஐரோப்பியக் காலனி ஆட்சியாளர்களின் வருகையைப் பற்றிய விவாதங்களைப் பல தளங்களில் இரண்டு நாவல்களிலும் எழுப்பியுள்ளார் குருஸ். இந்த விவாதங்களை கிராமம் சார்ந்த - நிறுவனத் தன்மை இல்லாத- உள்ளூர் மரபைச் சிதைத்த கத்தோலிக்க நிறுவனச் சமயத்தின் செயல்பாடுகள் என்பதாக வாசிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்குப் பதிலாக நிகழ்காலத்தில் இருக்கும் கிறித்தவ சமயம் x இந்து சமயம் என்பதாக வாசித்தால் இரண்டு நாவல்களின் நோக்கத்தின் மீதும் வேறுவிதமான கேள்விகள் எழுபுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. இந்த இரண்டு நாவல்களையும் வாசித்த விமரிசகர்கள் அப்படியொரு திசையை - அடையாளத்தை இந்த இரண்டு நாவல்களின் மீதும் பூசியிருக்கிறார்கள் என்பதால் இந்தக் குறிப்பை இங்கே சொல்ல நேர்ந்தது.

ஜோ.டி.குருஸின் இரண்டு நாவல்களையும் வாசித்த நான் உலகமெங்கும் உருவாகி இலக்கியப் பரப்பில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருக்கும் அடையாள அரசியலின் தமிழ் வெளிப்பாடுகளாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக இந்தியச் சூழலில் காலனியாதிக்கம் முடிந்த பின்பும் அதன் நீட்சிகளும் அழுத்தங்களும் வேறு வகையில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தாங்க முடியாத துயரத்தோடு தனது குரலை உயர்த்தும் கடல்சார் மனிதர்களின் ஓலமாகவே குருஸின் நாவல்களில் வரும் மனிதர்களின் குரலை அடையாளப்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புகிறேன். இதன் காரணமாகவே இவ்விரண்டு நாவல்களும் உலக இலக்கியப் பரப்பிற்குள் இடம் பிடிக்கக் கூடியன எனக் கருதுகிறேன்.

அங்கீகரித்த சாகித்ய அகாடெமிக்கும் அங்கீகாரம் பெற்ற ஜோ டி குருஸிற்கும் வாழ்த்துகள்.

அ.ராமசாமி, திறனாய்வாளர் / பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் -ramasamytamil@gamil.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

25 days ago

இலக்கியம்

25 days ago

மேலும்