அண்மையில் முகநூலில் இலக்கியம் சார்ந்து நடந்துவரும் விவாதங்களில் ஒன்று கவனத்தை ஈர்த்தது. இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விவாதம் அது. எம்.டி.முத்துக்குமாரசாமி, ராஜன் குறை, போகன் சங்கர் முதலானவர்கள் இந்த விவாதத்தைத் தத்தமது பார்வைகளில் வெவ்வேறு தளங்களுக்கு எடுத்துச் சென்றார்கள். பல்வேறு கவிஞர்களும் எழுத்தாளர்களும் இவற்றுக்கு எதிர்வினை ஆற்றினார்கள். இந்த விவாதங்களைப் பின்தொடரும் ஒருவர் கலையின் நுட்பங்கள், வாசிப்பின் வகைமைகள், படைப்பாக்கச் செயல்பாட்டுக்கும் கோட்பாட்டுக்கும் இடையே உள்ள உறவு, கோட்பாட்டுகளின் அவசியம் அல்லது அவசியமின்மை என்பன பற்றியெல்லாம் பல விஷயங்களை வாசிக்கலாம். படைப்பைப் பார்க்கும் விதத்தின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய சொற்கள் இந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இலக்கியச் சூழலில் விவாதங்கள் தவிர்க்க முடியாதவை. படைப்பின் தரம், வீச்சு ஆகியவை பற்றிய மதிப்பீடுகள் சார்ந்த விவாதங்களுடன் இலக்கியக் கோட்பாடு சார்ந்த விவாதங்களும் ஆரோக்கியமான ஒரு சூழலில் இயல்பாக நடக்கும். தமிழ்ச் சூழலில் ‘மணிக்கொடி’ காலத்திலிருந்தே இதுபோன்ற விவாதங்களுக்கும் கருத்து மோதல்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. ‘பாரதி மகாகவியா?’ என்னும் விவாதம் சி.சு. செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ சிற்றிதழில் அறுபதுகளில் தீவிரமாக நடைபெற்றது. அதுபோலவே பல்வேறு படைப்புகள் சார்ந்த விரிவான விமர்சனங்களும் அவற்றின் அடிப்படையிலான விவாதங்களும் நடைபெற்றுவந்தன. அலசல் விமர்சனம், ரசனை விமர்சனம் என்றெல்லாம் வெவ்வேறு விதங்களில் படைப்புகள் குறித்த உரையாடல்கள் கருத்து மோதல்கள், பரிமாற்றங்கள் நிகழ்ந்தபடி இருந்தன.
கறார்த்தன்மை கொண்ட விமர்சனங்கள்
எழுத்தாளர்களுக்கிடையே பொதுவாக நட்பு நிலவிவந்தாலும் விமர்சனங்களில் கறார்த்தன்மைக்குப் பஞ்சமே இருந்ததில்லை. செல்லம் கொஞ்சுவது, சொறிந்துகொடுப்பது ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விமர்சனங்கள் பலவற்றைக் காண முடிந்தது. க.நா.சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, தமிழவன் முதலான பலர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் விமர்சனச் சூழலுக்குப் பங்களித்திருக்கிறார்கள். 1981-ல் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ வெளிவந்தபோது தமிழ்ச் சூழலில் நடந்த விவாதத்தைத் தமிழ் இலக்கிய விவாதச் சூழலின் உச்சம் எனலாம்.
படைப்புகள் மீதான விமர்சனங்கள், விவாதங்கள் ஒருபுறம் இருக்க, படைப்பு சார்ந்த கோட்பாடுகள் குறித்த விவாதங்களும் தமிழில் தீவிரமாக நடைபெற்றன. எண்பதுகளில் பிரக்ஞை, படிகள், மீட்சி, நிகழ் ஆகிய இதழ்களில் தொடங்கிய இந்தக் கோட்பாட்டு விவாத மரபு, தொண்ணூறுகளில் புதிய பரிமாணங்களை எடுத்தது. நிறப்பிரிகை இதழ் இதில் முக்கியப் பங்கைச் செலுத்தியது. தொண்ணூறுகளில் வந்த சுபமங்களா, காலச்சுவடு, பன்முகம் போன்ற பல இதழ்களும் இந்த விவாதங்களை முன்னெடுத்துச் சென்றன.
காழ்ப்புகளும் கசப்புகளும் தனிநபர் மோதல்களும் கலந்திருந்தாலும், படைப்பு, படைப் பாளி, படைப்புக் கோட்பாடு, படைப்புச் செயல்பாடு எனப் பல அம்சங்கள் மிகத் தீவிரமாக முன்வைக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக் கப்பட்டன. உலக அரங்கில் பேசப்பட்டுவந்த பல கோட்பாடுகள், தத்துவங்கள் தமிழில் விரிவாக அலசப்பட்டன. பின்நவீனத்துவம், அமைப்பியல், கட்டுடைப்பு, மையம் அழிந்த எழுத்து, விளிம்பு நிலைசார் எழுத்து முதலான பல விதமான கோட்பாடுகள் விரிவாக முன்வைக்கப்பட்டு அலசப்பட்டன. வாசிப்பு என்னும் செயல்பாடு பல தளங்களிலும் நுட்பமாக ஆராயப்பட்டுப் பல புதிய பார்வைகள் முன்வைக்கப்பட்டன. எழுத்தின் போக்கையே மாற்றும் அளவுக்கு இந்த விவாதங்கள் வலுவாக இருந்தன.
புத்தாயிரத்தில் விவாதம்
அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்து தமிழ்ப் பதிப்புலகமும் தமிழ் நூல்களின் பரவலாக்கமும் வளர்ந்த புத்தாயிரத்தில் இந்த விவாதங்கள் மட்டுப்பட்டது ஒரு முரண் தான். சில தரப்புகளிடையே மோதல்கள், தனிநபர் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையான வசைபாடல்கள் ஆகியவையே புத்தாயிரத்தின் தொடக்கத்தில் அதிகம் இருந்தன. போகப் போக அவையும் குறைந்து தமிழ்ச் சூழலில் விவாதம் என்னும் மரபு வலுவிழக்கத் தொடங்கியது. தீவிரமான விமர்சனங்கள் எழுதப் படுவதில்லை. அரிதாக எழுதப்பட்டாலும் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை. நூல்களைப் பற்றிய பாராட்டு மொழிகளே மிகுதியும் முன்வைக்கப்பட்டன. யாரும் யாரையும் பகைத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்னும் சூழல் உருவானது.
படைப்புகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும் அநேகமாக ரசனை வெளிப்பாடுகளாகவே, வாசிப்பு அனுபவப் பகிர்தலாகவே அமைந்தன. தீவிரமான விமர்சனங்களைச் சல்லடைபோட்டுத் தேட வேண்டியிருந்தது. புத்தாயிரத்தின் தொடக் கத்தில் பெண் எழுத்து குறித்து நடந்த விவாதங்கள், ‘பாரதி மகாகவியா’ என்பதை முன்னிட்டு ஜெயமோகனுக்கும் எம்.டி.முத்துக் குமாரசாமிக்கும் இடையே இணையத்தில் நடந்த விவாதம் ஆகியவை இதில் விதிவிலக்கு. பெண்களின் எழுத்து பற்றி ஜெயமோகன் தெரிவித்த கருத்தை முன்வைத்து நடந்த விவாதத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இந்த விவாதத்தில் எதிர்வினைகளின் தீவிரம், மிகுதியும் உணர்ச்சி மேலிட்டவையாகவே இருந்தன. பெண் எழுத்து குறித்த காத்திரமான வாதங்களோ ஆழமான அலசல்களோ முன்வைக்கப்படவில்லை.
சில நாவல்கள், சில நூல்கள் பற்றி அவ்வப் போது எழுந்த சலனங்கள், அவதூறு உரை யாடல்கள் தவிர, புத்தாயிரத்தின் தீவிர இலக்கிய விவாதச் சூழலைச் சற்றே மிகைப்படுத்தி, மவுனம் என்று சொல்லிவிடலாம். தொண்ணூறுகளில் கிளம்பிய சூறாவளிக்கு நேர்மாறான நிலை இது. அதே சமயம் எழுத்தாளர்கள் திரைப்படங்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரைகளை எழுதுகிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முகநூல் பக்கங்களில் படைப்பாளிகளின் திரைக் கரிசனம் பொங்கி வழிகிறது. இடைநிலை இதழ்களிலும் திரைப்படம் குறித்து வரும் அளவுக்குப் படைப்புகள் குறித்துக் கறாரான மதிப்பாய்வுகள் வருவதில்லை. எழுத்தாளர்கள் சிலர் எப்போதேனும் கறாரான விமர்சனக் கட்டுரைகளை எழுதுவதைத் தவிர இலக்கிய விவாத அரங்கில் பொருட்படுத்தத் தக்க செயல்பாடு எதுவும் நடப்பதில்லை.
முகநூலில் அண்மையில் ஏற்பட்டுவரும் சில சலனங்கள் இந்தச் சூழலில் உடைப்பை ஏற்படுத்திவருகின்றன. விவாதங்களில் முன் வைக்கப்படும் பல வாதங்களின் பெறுமானங்கள் கேள்விக்குரியவை என்றாலும் விமர்சனக் கண்ணோட்டம், கோட்பாடு சார்ந்த பேச்சு ஆகி யவை மேலெழும்பி வருகின்றன. ஆத்மாநாம் கவிதைகள் குறித்த சர்ச்சை, கோட்பாடுகள் குறித்த விவாதம் ஆகியவை தவிர, இசை எழுதிய ஒரு கவிதைக்கு எதிர்வினையாக மனுஷ்ய புத்திரன் எழுதிய பகடிக் கவிதை, அதற்கான எதிர்வினைகள் என முகநூல் இலக்கிய வட்டம் படைப்பைப் பற்றித் தீவிரமாகப் பேசிக்கொண் டிருக்கிறது.
இந்தச் சலனங்கள் இன்றைய படைப்புகள், படைப்புச் செயல்பாடு, வாசிப்பு ஆகியவை குறித்த காத்திரமான விவாதங்களுக்கு இட்டுச் சென்றால் அது ஆரோக்கியமான திருப்பமாக அமையலாம். அல்லாமல், முகநூல் குளத்தில் முகிழ்க்கும் குமிழிகளாக முடிந்துபோனால், தமிழ் இலக்கிய விமர்சனச் சூழல் மீண்டும் அறி வார்த்தமான தேக்கத்தை நோக்கிச் செல்லும். தற்போதைய சலனங்களைப் படைப்பாளிகளும் விமர்சகர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது.
தொடர்புக்கு : aravindan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago