கடவுளின் நாக்கு 28: ஈக்களும் சிலந்தியும்!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட நாவல்களில் ‘ஆலீஸின் அற்புத உலகம்’ மிக முக்கியமானது. 155 ஆண்டுகளுக்கு முன்பு லூயி கரோல் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று வரை 10 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன. இதனை தமிழில் நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்நூலின் 2-வது அத்தியாயத்தில் ‘டோடோ’ என்ற அழிந்துபோன பறவை ஒன்று இடம் பெற்றுள்ளது. உலகில் இருந்து மறைந்துபோன இந்தப் பறவை கதையின் வழியே இன்றும் நினைவுகொள்ளப்பட்டு வருகிறது. அதுதான் எழுத்தின் சிறப்பு! கதையில் இடம்பெற்றுவிட்ட விலங்குகளும், பறவைகளும் காலங்களைத் தாண்டியும் வாழக்கூடியவை. கதையில்லாத விலங்குகளும், பறவைகளும் வேகமாக மனிதர்களின் நினைவில் இருந்து மறைந்துவிடுகின்றன.

மொரீசியஸ் தீவில் வாழ்ந்த அழிந்துபோன பறவையினங்களில் ஒன்று ‘டோடோ’. போர்த்துகீசிய மொழியில் ‘டோடோ’ என்ற சொல்லுக்கு ‘முட்டாள்!’ என்பது பொருள். ‘டோடோ’வின் உருவம் வான்கோழியை விட சற்றுப் பெரியது. வளைந்த பெரிய அலகு கொண்டது. கால்கள் குட்டையானவை. ‘டோடோ’வால் பறக்கவோ, ஓடவோ இயலாது. ஆகவே, மொரீசியஸ் தீவுக்கு கடலோடியாக வந்த போர்த்துகீசியர்கள் எளிதாக வேட்டையாடி அவற்றை கொன்றொழித்தார்கள். ஒரு ‘டோடோ’ கூட மிஞ்சவில்லை.

‘டோடோ’ பறவையின் அழிவால் மொரீசியஸ் தீவில் அங்கங்கும் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்த ‘கல்வாரியா' (Calvaria) என்னும் மர இனம் வேக வேகமாக அழியத் தொடங்கியது. ‘பறவைக்கும் இந்த மரத்துக்கும் என்ன தொடர்பு’ என்பதுதான் இயற்கையின் விசித்திரம்!

கல்வாரியா மரத்தின் பழங்களை ‘டோடோ’ பறவை விரும்பி உண்ணும். ‘டோடோ’க்களின் வயிற்றுக்குள் புகுந்து வெளியேறும் கல்வாரியா விதைகள் மட்டுமே முளைக்கும் திறனைப் பெற்றிருந்தன என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. ஆகவே, ‘டோடோ’ பறவைகள் அழிந்தவுடன் கல்வாரியா மரங்களும் அழியத் தொடங்கிவிட்டன. இயற்கை ஒவ்வோர் உயிரையும் இன்னொரு உயிருடன் இணைத்து ஒரு சமநிலையை ஏற்படுத்தக்கூடியது. எந்த உயிரினமும் இயற்கையால் வீணாக உருவாக்கப்பட்டதே இல்லை.

நாம்தான் சில பறவைகளை, விலங்குகளைப் புனிதமாகவும் சிலவற்றை அசிங்கமாகவும், அருவருப்பாகவும், தேவையற்றதாகவும் கருதுகிறோம். இயற்கையிடத்தில் அப்படி எந்த ஒரு பேதமும் துளியும் இல்லை.

ஜியாங் ரோங் எழுதிய ‘ஓநாய் குலச் சின்னம்’ (Wolf Totem)’ என்ற சீன நாவலில் ‘மான்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால் புல்வெளி முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். அந்த அபாயத்தில் இருந்து காப்பதற்காகவே ஓநாய்கள் மான்களை வேட்டையாடுகின்றன. ஓநாய்களை நாம் ஒட்டுமொத்தமாகச் கொன்று தீர்த்துவிட்டால் மான்களால் வேகமாக மங்கோலிய புல்வெளி அழிக்கப்பட்டுவிடும்!’ என்ற உண்மை சுட்டிக் காட்டப்படுகிறது.

நாம் கொடிய விலங்காக கருதும் ஓநாய்க்குக் கூட இயற்கையில் ஒரு தேவையும் ஒரு அவசியமும் இருக்கிறது. இதை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே கதைகளில் விலங்குகளைக் கதாபாத்திரங்களாக்கி அவர்களின் இயல்பையும், அவசியத்தையும் வலியுறுத்தினார்கள் கதை சொல்லிகள்.

விலங்குகள், பறவைகள் பற்றிய கதைகள் இல்லாத மொழிகளே இல்லை. அரிய வகை விலங்குகளை, பறவைகளைக் கதை வழியாக மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். அந்த வகையில் கதைகள் பெரும் காப்பகம் போலவே செயல்படுகின்றன.

‘பிரளயத்தின்போது நோவாவின் கப்பலில் உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் இருந்தும் ஒரு ஜோடியை தனது கப்பலில் ஏற்றிக்கொண்டு நோவா சென்றார்’ என்று பைபிள் கூறுகிறது. எழுத்தாளர்கள் செய்வதும் அதே வேலையைத்தான். ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு நோவாதான். அழியும் உலகில் இருந்து மீட்க வேண்டிய உயிரினங்களை தனது எழுத்து எனும் கப்பலில் ஏற்றிக் கொண்டுபோய் காப்பாற்றி தருகிறான் எழுத்தாளன்.

மனிதர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் அடிமைப்படுத்தப்பட்டுவிடுகின்றன. பிடிக்காத விலங்குகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. இதுதான் மனிதகுல வரலாற்றில் தொடர்ந்து நாம் காணும் உண்மை.

ஒரு சூடான் நாட்டுக் கதை. அந்தக் கதையில் ஒரு மன்னனுக்கு ஈக்களையும் சிலந்தியையும் பிடிக்கவே பிடிக்காது. அவற்றை மொத்தமாக அழித்து ஒழிக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். அதை அறிந்த மன்னனின் தாய், ‘‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது. ஒவ்வோர் உயிரும் முக்கியமானதே. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்!’’ என்று அறிவுரை கூறினாள்.

மன்னன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், அந்த மன்னனின் அரண்மனை மீது எதிரிகள் படைஎடுத்து வந்து தாக்கினார்கள். எதிரிகளோடு மன்னனும் சண்டையிட்டான். ஆனால், எதிரிகள் சதிசெய்து அரண்மனையை எப்படியோ கைப்பற்றிவிட்டார்கள்.

தப்பியோடிய மன்னன் மலைக் குகை ஒன்றில்போய் ஒளிந்துகொண்டான். அவனைத் தேடி எதிரி நாட்டு படை வீரர்கள் மலையைச் சுற்றிலும் அலைந்தார்கள். ஒவ்வொரு குகையாகத் தேடினார்கள். மன்னர் ஒளிந்துகொண்டுள்ள குகைக்கு உள்ளே தேட வரும்போது, அங்கே சுவரில் படிந்திருந்த சிலந்தி வலையைக் காட்டி ஒரு சிப்பாய் சொன்னான்:

‘‘சிலந்தி வலை பின்னியிருக்கிறது. இதற்குள் நிச்சயம் மன்னன் இருக்க மாட்டான். வா, வேறு குகையில் போய்த் தேடுவோம்!’’

மன்னன் தன் உயிரை இந்தச் சிலந்தி காப்பாற்றிவிட்டதே என நன்றியுணர்ச்சியோடு அதை நோக்கினான். அப்போது அவனது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

குகையில் இருந்து வெளியேறிய மன்னன், தனது நண்பனின் நாட்டை நோக்கி சென்றான். பகல் முழுவதும் குதிரைப் பயணம் செய்த களைப்பில் ஒரு மரத்தடியில் உறங்கிப்போனான். திடீரென அவன் மூக்கில் ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. சட்டென விழித்துக்கொண்ட அவன், மூக்கில் வந்து உட்கார்ந்த அந்த ஈயை அடித்து கொல்ல முயன்றான். அப்போது அவனை தேடிக் கொண்டு எதிரிகள் நெருங்கி வந்துகொண்டிருப்பதை அறிந்துகொண்டான்.

‘நல்லவேளை! இந்த ஈ என் மூக்கில் அமராவிட்டால் ஆழ்ந்து உறங்கிக்கொண்டே இருந்திருப்பேன். எதிரிகள் என்னைச் சுற்றி வளைத்துக் கொன்றிருப்பார்கள்…’ என அந்த ஈயை நன்றியோடு நினைத்துக்கொண்டு அங்கிருந்தும் தப்பிச் சென்றான்.

அம்மா சொன்னதன் பொருள் அப்போது அவனுக்கு முழுமையாகப் புரிந்தது. ‘நான் தேவையற்றதாக கருதிய ஈயும், சிலந்தியும்தான் என் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றன. எதையும் அற்பமாக நாம் நினைக்கக்கூடாது. சகல உயிர் களும் சமமானதே!’ என மன்னன் உணர்ந்து கொண்டான். அதன் பிறகு தனது படைகளைத் திரட்டிச் சென்று சண்டையிட்டு அரியணையை மீட்டான் என அந்தக் கதை முடிகிறது.

‘சில சந்தர்ப்பங்களில் நமக்கு உதவி செய்யக்கூடியவர்கள் நம்மால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கக்கூடும்’ என்ற உண்மையைச் சொல்கிறது என்பதே இக்கதையின் சிறப்பு! உலகெங்கும் கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக்கொண்டே இருப்பதற்கு காரணம், மனிதர்கள் நல்ல விஷயங்களைக் கூட எளிதில் மறந்துவிடுவார்கள் என்பதனால்தான்.

கதைகளும் பாடல்களும்தான் மனிதனை எளிதாக விழிப்புணர்வு கொள்ளச் செய்யக் கூடியவை. ‘கதை சொல்லியின் உதடு தேய்ந்து போய்விடாது!’ என்றொரு ஆப்பிரிக்க பழமொழி இருக்கிறது. அது என்றைக்கும் பொருந்தக் கூடியதே.

கதைகள் பேசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்