மவுனத்தின் புன்னகை 28: புனைபெயர்கள்!

By அசோகமித்திரன்

ஆர்.கே.நாராயணின் சகோதரர் ராமச் சந்திரன் என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார். “என்ன புனைப் பெயர் இது? ஏதோ பத்திரிகையின் பெயர் போல” என்று. உண்மை. நான் எழுத ஆரம்பித்த நாட்களில் தமிழில் மிகுந்த செல்வாக்குடைய பத்திரிகை ‘சுதேசமித்திரன்’. என் வியப்பு: ஆங்கிலத் தில் ஒரு வெளியீடு தொடங்கிச் சில நாட் களிலேயே விற்றுவிட்ட ஜி.சுப்பிரமணிய ஐயர் ‘சுதேசமித்திரன்’ தமிழ்ப் பத்திரி கையை மட்டும் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருந்தார். ‘சுதேசமித்திரன்’ தினசரியின் கடைசி காலத்தில் நான் ‘வாரம் ஒரு கட்டுரை’ என ஒரு வருடம் எழுதினேன். காங்கிரஸில் காமராஜர் குழுவுக்கு எதிராக இயங்கிய இந்திரா காங்கிரஸ், கையில் ஒரு பத்திரிகை இருந்துவிட்டுப் போகட்டும் என்று ‘சுதேசமித்திரன்’பத்திரிகையைத் தேர்ந்தெடுத்தது. ராசியில் நம் பிக்கை இருப்பவர்கள் அதைப் பழிக்கலாம். நூறாண்டுப் பத்திரிகை நின்றுவிட்டது.

எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மொழிகளில் அனைத் திலுமே இந்தப் புனைபெயர் இருந்திருக்கிறது. முதல் இந்திய நாவலை எழுதியவர் என்று புகழப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி, அவர் எழுதிய கிண்டல் கட்டுரைகளுக்கு ஒரு புனைபெய ரைத்தான் பயன்படுத்தினார். அன்று 99 சதவீதம் படிக்க மாட்டார்கள். படிப்பவர் கள் அவர்களாக ஓர் அர்த்தம் கண்டு பிடிப்பார்கள். பிராண்டி சசோதரிகள் என்று சுமார் 200 ஆண்டுகள் முன்பு இருந் தார்கள். மூவரும் நாவலாசிரியர்கள். அவர்கள் வாழ்ந்தவரை பிரசுரகர்த்தர் உட்பட அவர்களை அடையாளம் தெரி யாது. ஆன், எமிலி, ஷார்லட் ஆகிய சகோதரிகள் புனைபெயர் கொண்டே அவர்களின் எளிய, துக்கம் நிறைந்த அற்பாயுள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள்.

‘வுதரிங் ஹைட்ஸ்’ என்ற நாவல் பலமுறை உலக மொழிகளெல்லாம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. மூவரில் ஒருத்தி மட்டும்தான் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழ்ந்தாள். மற்றவர்கள் இளம் வயதிலேயே இறந் தவர்கள். சரியான குடும்பத் துணை கிடையாது. எப்படி இயற்பெயரில் எழுதுவார்கள்?

அன்று அரசு உத்தியோகத்தில் இருந்துகொண்டு எழுதுபவர்கள் மனைவி பெயரில் எழுதுவார்கள்.போஸ் டல் ஆடிட், ஏ.ஜி.எஸ் காரியாலயம் ஆகி யவை தேசியக் கணக்கைச் சரிவர தயார் செய்தபடி துணுக்கு எழுதுபவர்களை யும் தொடர்கதை எழுதுபவர்களையும் ஒரு சேரப் பராமரித்தன. அதில் ஒருவர் ஒரு கிராமத்துத் தபால்காரர் பற்றி எழுதினார். அக்கதைக்கு நிறையப் பாராட்டு. தபால்காரருக்கு கிராமத்தார் எல்லோரும் தெரிந்தவர்களானாலும் ஒரு குடும்பத்தின் மீது அவருக்கு மிகுந்த அக்கறை. அந்தக் குடும்பத்தில் மூத்த பெண்ணுக்குத் திருமணம்.

தபால்காரர் அப்பெண்ணை தன் மகளாகக் கருதினார். திருமணத்தன்று அக்குடும்பத்துக்கு ஒரு சாவோலை. தபால்காரர் இரு நாட்கள் பொறுத்துத் தருகிறார். வந்த அன்றே கொடுத்திருந்தால் திருமணம் நின்று போயிருக்கும். தபால்காரர் கூறுவார்: “நீங்கள் வேண்டுமானால் புகார் கொடுக் கலாம். என் வேலை போய் விடும். ஆனால், எனக்கு உங்கள் மகள் திருமணம் நிற்பதில் சம்மதமில்லை.” அந்த வீட்டுக்காரர் அப்படியேதும் செய்யவில்லை.

தமிழில் இக்கதை வெளிவந்து ஒரு மாதம் கடந்த பிறகு, தமிழ்க் கதை எழுதியவருக்கு வக்கீல் நோட்டீஸ்! அனுப்பியவர் ஆர்.கே.நாராயண். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கதையை அந்த அரசு ஊழியர் தமிழ்ப்படுத்தி தன் மனைவி பெயரில் அனுப்பியிருக்கிறார். மூல ஆசிரியர் மன்னிப்பில் விஷயம் முடிந் தாலும், அந்த அம்மாள் கணவனை மன்னித்திருக்க மாட்டாள். வழக்கு என்று வந்தால் அவளல்லவா கூண்டில் நிற்க வேண்டும்?

நாராயண் என்ற பெயரே ஒரு விதத்தில் புனைபெயர்தான். அவருடைய இயற் பெயர் நாராயணசுவாமி. ஆங்கிலப் பதிப்பாளர்கள்தான் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். “ஆசிரியர் பெயர் நினைவில் நிற்கும்படி எளிதாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று.

மகரம், விந்தன், கல்கி, தேவன், சி.ஐ.டி., மாயாவி, அகிலன் எனப் பண் டைய தலைமுறையில் நிறையப் புனைப் பெயர்கள். சிலருக்குப் பல புனைப் பெயர்கள். கல்கியின் தொடர்கதைகளில் இருந்து பல எழுத்தாளர்களுக்குப் புனைபெயர்கள் கிடைத்தன. திருநாவுக்கரசரின் பதிப்பகத்தின் பெயர் ‘வானதி’. ‘நாகநந்தி’ என்ற புனைப் பெயர் உடைய எழுத்தாளர் ஜெயகாந்த னின் ‘அக்னிப் பிரவேசம்’ கதைக்குப் பதில் போல அவர் ஒரு சிறுகதை எழுதியிருந்தார்.

என்னிடம் 1966-ல் வெளியான ‘தமிழ் எழுத்தாளர் யார் - எவர்’ இருக்கிறது. அதில் 36 பக்கங்கள் புனைபெயர் கொண்டவர்கள் பட்டி யல் இருக்கிறது. அது முழுப் பட்டியல் அல்ல.

இன்றைக்குப் புனைபெயர்களுக்கு அவசியம் அதிகம் இல்லை. அரசு அதிகாரிகள் அவர்கள் பேரிலேயே நிறைய எழுதுகிறார்கள். நன்றாகவே எழுதுகிறார்கள். வங்கி ஊழியர்கள் கவிஞர்களாக விளங்குகிறார்கள். பல எழுத்தாளர்கள் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார்கள்.

அமெரிக்க எழுத்தாளர்கள் புனைப் பெயரை அதிகம் நாடியதாகத் தெரிய வில்லை. ஆனால், இங்கிலாந்து எழுத் தாளர்கள் 20-ம் நூற்றாண்டில் புனைப் பெயரை நிறைய நாடியிருக்கிறார்கள். ‘ஆல்ஃபா ஆஃப் தி பிளவ்’. நிலத்தை உழும் ஏரின் அகர வரிசையில் முதல் எழுத்து. இது ஓர் எழுத்தாளரின் புனைபெயர். அவர் மிகவும் கண்ணியமாகவும் நன்றாகவும் எழுது வார். பின் ஏன் இந்த வினோதமான புனைபெயர்?

எழுத்தாளரின் அடையாளம்

புனைபெயரின் முக்கிய பணி எழுத்தாளரின் அடையாளத்தை ஒளித்து வைப்பது. ஒருமுறை, இருமுறை எழுதுபவர்களுக்கு இது சரி. ஆனால், தொடர்ந்து எழுதுபவர்களை அவர்கள் படைப்புகளின் உள்ளடக்கம் காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் பணிபுரியும் அலுவலகம், பணியின் தன்மை ஆகிய வற்றைப் பற்றி விரிவாக எழுதுவார்கள். அதேபோல, அவர்கள் ஊர்.

புனைபெயர்கள் எழுத்துத் துறைக்கு மட்டும் பொருந்தும் என்றில்லை. எனக் குத் தெரிந்த மின்சார டெக்னீஷியனின் அடையாளம் இந்திரா காந்தி. மின் சாதனக் கடைகளில் அவருடைய உண்மைப் பெயரைச் சொன்னால் விழிப் பார்கள். இந்திரா காந்தி என்றால் மிகுந்த உற்சாகத்தோடு அவரின் வீட்டையோ, பணிபுரியும் இடத்தையோ அடையாளம் சொல்வார்கள். நான் அவரையே கேட்டேன். அவர் பதில் சொல்ல விரும்பவில்லை.

நான் படித்த பள்ளியில் அவ்வளவு ஆசிரியர்களுக்கும் மாணவர்களாக வைத்த புனைபெயர் இருக்கும். ஒருவருக்கு ‘ஜிலேபி’ என்று பெயர். அவர் ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்கள் எடுப்பார். நானும் யார், யாரையோ விசாரித்துவிட்டேன். பொருத்தமான விளக்கம் கிடைக்கவில்லை.

அதே போலக் கல்லூரியில். ‘மஸூத் அலிகான்’ என்றொரு ஆறடி மாணவன். வகுப்பில் மிக வினோதமாக எதையாவது செய்துவிட்டு ஒன்றும் அறியா தவன் போல உட்கார்ந்திருப்பான். கல்லூரியில் சற்றுத் தாமதாகச் சேர்ந்த மாணவன் ஒருவன், அதற்கு முன்தினம் திருப்பதி சென்று வந்திருக்கிறான். ஆதலால் ஒரு தொப்பி. மஸூத் அவனுக்கு ‘எம்.எல்.ஏ’ என்று பெயர் வைத்தான்.

பாண்டுரங்கம் என்ற பெயர் கொண்ட அந்த மாணவன் சண்டை போட்டான், திட்டினான், பிரின்ஸ்பாலிடம் புகார் செய்தான். பிரின்ஸ்பால் கேட்டார், “யார், யார் எல்லாம் உன்னை எம்.எல்.ஏ என்று கேலி செய்கிறார்கள்?”

“கல்லூரி முழுதும், சார்.”

அவரே சிரித்துவிட்டார். சற்றுச் சமா ளித்துக்கொண்டு, “இதை ஒரு வாழ்த் தாகவே எடுத்துக்கொள்” என்றார்.

- நிறைவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்