நாடக விழா : பண்பாட்டை வளர்த்தெடுக்கும் நாடகங்கள்

கடந்த மே மாத இறுதியில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள தூய நெஞ்சக்கல்லூரி வளாகத்தில், ‘மாற்று நாடக இயக்கம்’ சார்பில் நான்கு நாட்கள் நாடக விழா நடத்தப்பட்டது. இதில் ஏழு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன, தமிழ்நாட்டு ஆட்டக் கலையான தப்பாட்டம், பஞ்சாபியர்களின் மரபான குர்பானி இசை நிகழ்வுகளும் நடந்தேறின.

பேராசிரியர் சே.ராமானுஜத்தால் உருவாக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்ட ‘பெத்தண்ணசாமி தாலாட்டு’ தஞ்சை அரங்கஸ்ரீ குழுவினரால் அவருடைய மகள் கிரிஜா ராமானுஜம் மேற்பார்வையில் மேடையேற்றப்பட்டது. இப்சனின் ‘பீர் ஜிண்ட்’ நாடகத்தில் வரும் பீர் ஜிண்ட் பாத்திரத்தையும் மகாபாரதத்தின் துரியோதனனையும் ஒப்பிட்டுக் கதையாடுகிற நாடகமிது. ஒயிலாக்கம் செய்யப்பட்ட ஒரு பாணியில் நிகழ்த்தப்பட்டதென இதைச் சொல்லலாம்.

அடுத்து அஸ்ஸாமைச் சேர்ந்த பாஸ்கர் பரூவாவின் ‘கர்ணா இத்யாதி’ நடந்தது. இது தனி நடிப்பு வகையைச் சேர்ந்தது. வஞ்சிக்கப்பட்ட கர்ணனின் மனவுலகில் பிரவேசிக்க முயன்ற நிகழ்விது.

இரண்டாம் நாள் பேராசிரியர் வ. ஆறுமுகத்தின் பிரதியாக்கம் மற்றும் நெறியாள்கையில் அவரது தலைக்கோல் குழு வழங்கிய ‘தூங்கிகள்’ நாடகம் மேடையேறியது.

வெவ்வேறு விபரீதச் சூழல்களிலிருந்து தப்பித்த இருவர் ஒரு ரயில் தண்டவாளத்தில் ரயில் வருமாவெனக் காத்திருக்கின்றனர். அவர்களது காத்திருத்தலும் ரயில்வே தண்டவாளமும்தான் கதையும் களமும். தமிழில் மிகவும் அரிதான உளவியல் யதார்த்த நடிப்பு முறையைக் கொண்டது இந்நாடகம். இச்சவாலை நடிகர்கள் சிறப்பாகக் கையாண்டனர்.

பின்னர் உகாண்டாவின் கவிஞர் ஓகோட் பிடெக் எழுதிய நீண்ட கவிதையான ‘லோவினோவின் பாடல்’ ஒரு தனி நடிப்பாகக் கலைராணியால் நிகழ்த்தப்பட்டது. வெள்ளைக் காலனியக் கலாச்சாரத்தில் மூழ்கித் தன்னை மறுதலித்த தனது கணவனைக் குறித்து லோவினோ எனும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரப் பெண், தனது பார்வையில் விரித்துரைக்கும், அவலமும் ஆங்காரமும் தெறிக்கும் கதையாடல் இது.

நடேஷால் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நீண்ட கவிதையின் மிக முக்கியமான நான்கு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டே கலைராணி மிகச் சிறப்பான நிகழ்வொன்றைத் தந்தார்.

மூன்றாம் நாள் சி.என்.அண்ணாதுரையின் ‘சிவாஜி கண்ட இந்துராஜ்யம் (அல்லது) சந்திரமோகன் ’எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகத்தை மூன்றாம் அரங்கு கருணா பிரசாத்தின் நெறியாள்கையில் ‘மாற்று நாடக இயக்க’த்தினர் மேடையேற்றினர். பிறப்பால் சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதால் பட்டம் சூடத் தடைவிதிக்கப்பட்ட மராட்டிய மன்னன் சிவாஜியின் வரலாற்றுத் தருணங்களை மீளாய்வு செய்கிற நாடகமிது.

அடுத்து பேராசிரியர், ராஜுவின் நெறியாள்கையில் அவரது பிரதியாக்கத்தில் உருவான பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிகழ் கலைத்துறை மாணவர்களால் மேடையேற்றப்பட்ட ‘ஒதுக்கப் பட்டவர்கள்’ எனும் நாடகம், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து திறன் மிக்க அமைச்சராகச் செயல்பட்ட கக்கனின் வாழ்வை நினைவுகூர்ந்தது.

நடிகர்களது அனாயாசமான யதார்த்த நடிப்பாலும் காட்சிப்படுத்துதலில் நெறியாளுநர் மேற்கொண்ட நேரிடையான உத்திகளாலும் வலுவான பின்னணி இசையாலும் பார்வையாளர்களிடம் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட நிகழ்வு இது.

இறுதி நாள் நிகழ்வாக ஞா.கோபியின் பிரதியாக்கம் மற்றும் நெறியாள்கையின் கீழ் ‘யாழ் கலை மையம்’ வழங்கிய ‘சிகப்புக் கண்ணாடி’ நாடகம் மேடையேறியது.

பெண்ணுடல் எதிர்கொள்ளும் வன்முறைகளை உள்ளீடான படிமங்களாகக் காட்சிப்படுத்திய நாடகமிது. சமகால நடனம் போன்ற இசையோடு ஒருங்கிணையும் வழக்கமற்ற அசைவுகள், படிமங்கள், காணொளித் திரைக்காட்சிகள் என நாடகம் நிகழ்வாக்கம் பெற்றிருந்தது.

‘சிகப்புக் கண்ணாடி’ நாடகம், கண்ணுக்குப் புலப்படாத கேன்டிட் கேமராக்கள், செயல்திறன் கைபேசிகள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் வாயிலாகப் பெண்ணுடல் மீது தொடுக்கப்படும் புதிய வன்முறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ்நாட்டின் நாடகச் செயல்பாடுகள் அடிக்கடி ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் போய்விடுகின்றன. ஒன்றின் செயல்பாட்டை, இருப்பை மற்றொன்று அறியாமலிருக்கிறது. இத்தகைய சூழலில் இது போன்ற நாடக விழாக்கள்தான் குழுக்களிடையே அர்த்தமுள்ள உறவையும் தொடர்பையும் உருவாக்குகிறது. நாடகக் கலையை கண்டு ரசிக்கக்கூடிய பார்வையாளர் வட்டத்தை, ஒரு பார்வையாளர் பண்பாட்டை வளர்த்தெடுக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்