அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன; ஒரு பொருள் இன்னொரு பொருளாகிறது; ஒரு உயிர் இன்னொரு உயிராக மயங்குகிறது; உயிர் உயிரற்றது என்று சொல்லப்படும் எல்லைகள் குழம்புகின்றன; பொழுதுகளும் பருவங்களும் மயங்குகின்றன; உரையாடலின்போது தனித்தனிச் சுயங்கள் கரைகின்றன. தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் இந்த உருமாற்றங்களையும் மயக்கத்தையும் ஒரு ‘சொரூப’ நிலையாகத் தன் கவிதைகளிலும் உரைநடையிலும் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறார்.
இயற்கையும் மனிதனும் வேறு வேறு என்று நவீன மனிதன் பாவிக்கிறான். ‘சுயம்’ என்றும் ‘தான்’ என்றும் தனித்து அவன் கொள்ளும் லட்சியங்களும் கனவுகளும் கனத்துச் சலிக்கின்றன. இதைத் தன் படைப்புகளில் தொடர்ந்து தெரியப்படுத்தியவர் நகுலன். தந்தை, அதிகாரி, கணவன், வியாபாரி, நிர்வாகி, ஆட்சியாளன் என லௌகீக வாழ்வில் தான் வகிக்கும் பாத்திரங்களையே திடமான சுயங்களாக வரித்துக்கொள்ளும் மனிதன், அவற்றாலேயே விழுங்கப்படுகிறான். இதை மனித உயிரின் தோல்வியாகப் பார்க்கிறார் நகுலன். இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது எல்லாம் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. முந்தைய உருவை இல்லாமலாக்கிக்கொண்டு போய்க்கொண்டிருக் கின்றன. இப்பின்னணியில், நிகழ்கணத்தின் மீதான விழிப்பையும் முழு பிரக்ஞை நிலையையும் மொழியில் நிகழ்த்தியவர்களில் ஒருவர் நகுலன்.
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.
நகுலனின் ‘கோட்ஸ்டாண்ட் கவிதைகள்’ தொகுதி யில் இடம்பெற்ற இக்கவிதையைப் பெரும்பாலான வாசகர்கள் நிலையாமையின் துக்கமாகவே வாசித் திருக்கிறார்கள். சில மரணங்களுக்கு உதாரண மாகவும் இந்தக் கவிதை காட்டப்பட்டுள்ளது.
இருப்பு மாறிக்கொண்டே இருப்பதை, ‘தான்’ என்ற ஒன்று தொடர்ந்து கரைந்து இல்லாமல் போய் உருமாறுவதைச் சொல்லும் அனுபவமாக இக்கவிதையைக் காணும்போது அது இனிமை யானதொரு உணர்வைத் தருகிறது.
ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் நாவலில் சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனிடம் சொல்லும் வாசகம் இது: இது ஒரு கல். ஏதோ ஒரு கால அளவில் இது ஒரு வேளை மண்ணாகலாம். பின், அம்மண்ணிலிருந்து அது ஒரு தாவரமாகி, விலங்கு அல்லது மனிதன் ஆகும்.
அறிவியல் எழுத்தாளர் பில் பிரைசன், தனது ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ (தமிழில்: ப்ரவாஹன்) நூலில், “உங்களின் பகுதியாக இருக்கிற ஒவ்வொரு அணுவும் ஏறத்தாழ நிச்சயமாகப் பல விண்மீன்களைக் கடந்து வந்துள்ளன; மேலும் அவை, நீங்களாக ஆவதற்கு முன்னர் பத்து இலட்சக்கணக்கான உயிரிகளின் பகுதியாக இருந்துள்ளன… நாம் இறந்ததும் அவை தீவிரமான மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன. நம்முடைய அணுக்களில் கணிசமான எண்ணிக்கை ஒரு நேரத்தில் அநேகமாக ஷேக்ஸ்பியருக்கு உரியதாயிருந்தன” என்கிறார்.
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகி மாறிக் கொண்டிருப்பதெல்லாம் தற்கணத்தில் குவிகின்றன. நிகழ்ச்சிப் பெருக்கின் வேகத்தில் திடநிலை உருகித் திரவமாக மயக்கம்கொள்வதை அனுபவமாக்கும் நகுலனின் கவிதைகளில் ஒன்று ‘ஸ்டேஷன்’.
ஸ்டேஷன்
ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை.
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை விடுவித்துக் கொள்ள
முடியவில்லை.
ரயில் வரும்போது அது ஸ்டேஷன். ரயில் வராதபோது ரயிலிலும் யாரும் இல்லாதபோது அது என்னவாக இருக்கிறது.
நகுலனின் இந்த ‘ஸ்டேஷன்’ கவிதை, மொழி வெளிப்பாட்டில் மிகவும் எளிய கவிதைதான். ஆனால், எத்தனை முறை படித்தாலும் தெளிந்த குழப்ப விசித்திர உணர்வு மூட்டத்தை ஏற்படுத்தும் கவிதை இது. அந்தி மயங்கும்போது ஏற்படும் உணர்வைப் போன்றது அது.
இல்லாமல் இருப்பதன் இனிமை, இருந்து பார்த்தவர்கள் மட்டுமே உணரக்கூடியது.
புகைப்படம்: ஆர்.ஆர்.ஸ்ரீனிவாசன்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago