அண்ணா: தம்பிகளின் ஆசிரியர்!

By ஆசை

அண்ணாவின் பேரைச் சொன்னதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அவரது அடுக்கு மொழிகளே! ‘மாதமோ சித்திரை; மணியோ பத்தரை; உங்களைத் தழுவுவதோ நித்திரை; மறக்காது எமக்கிடுவீர் முத்திரை’ என்றெல்லாம் பேசியவர் என்று மட்டும் ஒருசிலர் கருதக்கூடும்.

அண்ணா வெறுமனே அடுக்குமொழிகளைப் பேசியவரல்ல. இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் அந்த நீரோட்டத்துக்கு முரண்படும் போக்கை மேற்கொண்டிருந்த பெரியாரின் தொண்டராக அரசியல் வாழ்க்கையில் நுழைந்தவர். தேசம், தேசியம், சுதந்திரம் என்ற பிரம்மாண்டமான செயல்திட்டங்களுக்கிடையில் பிராந்தியம், இனம், மொழி போன்ற அடையாளங்கள் அழிபடுவதற்கு எதிராகவும் சாதி, மூட நம்பிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராகவும் பெரியார் மேற்கொண்ட போரில் திறன் வாய்ந்த தளபதியாகச் செயல்பட ஆரம்பித்தவர். பெரியாரோடு முரண்பட்டுக் கட்சி அரசியல் நோக்கி வந்தவர் முன்பு இரண்டு மாபெரும் பணிகள் காத்துக்கிடந்தன. தேசத்திலும் மாகாணத்திலும் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸை எதிர்ப்பது ஒரு பணி என்றால் அதற்குத் தன் தம்பிகளைத் தயார்ப்படுத்துவது இன்னொரு பணி. சுதந்திரம் அடைந்திருந்த காலகட்டத்தில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை குறைவாக இருந்த நேரத்தில் அவர்களைத் தன்னை நோக்கி வரச் செய்வதற்கு அண்ணாவுக்கு உதவி புரிந்தது அவரது தமிழ்தான். அவரது உரைகளிலே தெறிக்கும் அடுக்குமொழிகள் எல்லாமே பாமரத் தமிழர்களுக்குக் கொடுக்கும் மாத்திரைகளில் தடவப்பட்ட தேன்தான். அந்தத் தேனைத் தனது உரைகளிலும் எழுத்துக்களிலும் திரைப்பட வசனங்களிலும் அண்ணா குழைத்துத் தந்துதான் எல்லாத் தம்பிகளையும் மந்திரம் போட்டது போலக் கட்டிப்போட்டார்.

‘கற்பி, கலகம் செய், ஒருங்கிணை’ என்று அம்பேத்கர் சொன்னதை அண்ணாவும் முழுமூச்சுடன் செய்தார். தன் தம்பிகளுக்கு எவ்வளவு கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை அவரது ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ என்ற ஏழு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். காங்கிரஸ் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டம், , சிறை அனுபவம், வெளிநாட்டுப் பயணம் என்று எதைப் பற்றிக் கடிதம் எழுதினாலும் அதில் ஆங்கில இலக்கியம், வரலாறு, தத்துவம், உலக அரசியல் சிந்தனைகள் போன்றவை தவறாமல் இடம்பெற்றிருக்கின்றன.

தஞ்சைப் பிரதேசத்தின் வடுவூரிலுள்ள படிக்காத ஏழை விவசாயி ஒருவரால் சாக்ரடீஸ் பற்றியும், ஷேக்ஸ்பியர் பற்றியும், ரஷ்யப் புரட்சி பற்றியும் கருப்பின மக்களின் போராட்டம் பற்றியும் பேச முடிந்தது என்றால் அதற்கு அண்ணாதான் காரணம். அலங்கார வார்த்தைகள், அடுக்கு மொழிகளோடு அண்ணா நின்றுகொள்ளவில்லை; அவற்றுக்குள் பொதிந்துவைத்துதான் அண்ணா ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு அறிவுச் செல்வத்தை அளித்தார். தம்பிக்குக் கடிதம் எழுதுவதைத் தன் வாழ்நாளின் மிக முக்கியமான கடமைகளுள் ஒன்றாக அண்ணா கருதியிருக்கிறார் என்பது தெரிகிறது. எப்போதாவது எழுத முடியவில்லை என்றால் அது குறித்த தனது மனவருத்தத்தை அடுத்த கடிதத்தில் வெளிப்படுத்துகிறார்.

இந்தி எதிர்ப்பு, திராவிடம், மாநில சுயாட்சி, இன்னபிற அரசியல் கோட்பாடுகள்-செயல்பாடுகள், உலக அரசியல் இவற்றையெல்லாம் தாண்டியும் அண்ணாவின் சுவாரசியமான பல பக்கங்களும் இந்தக் கடிதங்களில் கிடைக்கின்றன. அவரது சிறை வாழ்க்கையின்போதும் அண்ணா தொடர்ந்து குறிப்புகள் எழுதியிருக்கிறார். சிறையின் ஜன்னல் வழியாக நிலவைக் கண்டு ரசித்ததை அண்ணா இப்படி எழுதியிருப்பார்: “இன்று அறையினுள் அடைக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றபடி, எதிர்ப்புறம் எழிலோடு விளங்கிக்கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி இருந்தேன். அழகிய நிலவு. முழு நிலவுக்கே மறுதினம்! கிளம்பும்போது பொன்னிறம்! மேலே செல்லச்செல்ல உருக்கி வார்த்த வெள்ளி நிறம்! எனக்கு எப்போதுமே நிலவைக் காண்பதிலே பெருமகிழ்ச்சி. கம்பிகளுக்குப் பின்னால் நின்றபடி பார்க்கும்போதும், பெருமகிழ்ச்சியே! சிறைப்படாத நிலவு, அழகினைச் சிந்திக்கொண்டிருக்கிறது - சிறைப்பட்டிருக்கும் எனக்குக் களிப்பை அள்ளிப் பருகிக்கொள் என்று நிலவு கூறுவதுபோலத் தோன்றிற்று. இங்கு வந்த இத்தனை நாட்களில் இத்துணை அழகு ததும்பும் நிலவை நான் கண்டதில்லை. கடலோரத்தில், வெண் மணலின் மீதமர்ந்து கண்டு இன்பம் கொண்டிட வேண்டும் அண்ணா! சிறைக்குள் இருந்தா! என்று கேட்டுக் கேலி பேசுவர் என்பதால், அதிகம் இதுபற்றி எழுதாதிருக்கிறேன். இன்று உள்ள வானம் நிலவு அளிக்கும் ஒளியினால் புதுப்பொலிவு பெற்று விளங்குவதுபோலவே என் மனமும் எனக்குக் கிடைத்த செய்தி காரணமாக மகிழ்ச்சியால் துள்ளியபடி இருக்கிறது.”

அதேபோல் பறவைகள் மீதும் அண்ணாவுக்கு விருப்பம் இருந்திருப்பது தம்பிக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. சிறையில் படிப்பது, எழுதுவது போன்றவற்றுடன் ஓவியம் வரைவதிலும் அண்ணா ஈடுபட்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. தனது ஈடுபாடுகள், வாசிப்பு என்று எல்லாவற்றையும் தம்பிகளிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரளவு படிப்பில் லாமலேயே, அவரிடம் கற்றுக்கொண்டே ஏராளமான தம்பிகள் பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் ஆகியிருப்பதே அண்ணாவின் ஆற்றலுக்குச் சாட்சி.

‘தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்’ அண்ணாவைப் பற்றிய ஆவணம் மட்டு மல்ல, அவர் வாழ்ந்த காலத்தின் தமிழகம், இந்தியா, உலகம் ஆகியவற்றைப் பற்றிய ஆவணம் மட்டுமல்ல; அவரின் தம்பி களைப் பற்றிய ஆவணமும்கூட. இன்று அவரது தம்பிகளின் தம்பிகள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்புகள் இவை!

- தம்பி, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்

பேரறிஞர் அண்ணா

(ஏழு தொகுதிகளும் சேர்த்து) ரூ. 1750

பூம்புகார் பதிப்பகம், சென்னை-600108

தொடர்புக்கு: 044- 25267543

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்