பிரபஞ்சனின் உலகம்: அப்பா என்றொரு மனிதர்

By பிரபஞ்சன்

குழந்தைகளை அலுங்காமல் தூக்கிச் சென்று வண்டியில் படுக்க வைத்தாயிற்று. சோறு வடிக்க மிகக் கொஞ்சமான பாத்திரங்கள், மாற்றுக்கு ஒரு புடவை, வேட்டி. புறப்படத் தயாரானது குடும்பம். கடைசியாகச் சாமி படத்துக்குச் சூடம் ஏற்றினார் தாத்தா. ‘அம்மா தாயே. மண்டையில மயிர்முளைச்ச நாளா உன்னை முன்னால வச்சித்தானே பொழச்சோம். எங்களை மோசம் பண்ணிட்டியே’ என்ற தாத்தா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“கூடைக்குள் இருக்கும் கோழிகளை அப்படியே விடு. அதுக சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா, நாம இருக்கறதா சனங்க நினைச்சுக்கும்.”

ஒரு குடும்பம் பஞ்சம் பிழைக்க, பிழைப்பு தேடிப் புறப்பட்ட கதை இது. கும்பகோணம் அரசலாற்றங்கரையில் இருக்கும் தூவாக்குடிக் கிராமத்திலிருந்து, எங்கள் மூதாதையர்தான் அவர்கள், புறப்பட்டார்கள். ஊர் எல்லையில், அம்மன் கோயிலில் மார்பில் அடித்துக்கொண்டு எங்கள் பாட்டி, ‘பழிவாங்கிட்டியே, நீ நல்லா இருப்பியாடி பாஞ்சாலியம்மா’ என்று சாமிக்குச் சாபம் கொடுத்தாள். அம்மன் வருத்தப்பட்டிருப்பாள்.

காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. எந்த ராசா ஆண்டானோ, சதா சர்வகாலமும் படைவீரர்கள் ஊருக்குள் புகுவதும் கொள்ளையடிப்பதுமாக இருந்த காலம். மக்கள் பிழைக்க ஊர்ஊராக அலைந்தார்கள்.

இப்படித்தான் எங்கள் மூதாதையர் குடும்பமும் திருப்பாதிரிப்புலியூர் வழியாக பிரெஞ்சுக்காரர்களின் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது.

தென்னை விவசாயம்தான் எங்கள் குலத்தொழில். தேங்காய் விற்பனை, கள் மரம் கட்டிக் கள் இறக்கிக் கள்ளுக்கடையில் வைத்து விற்பனை; வாடிக்கையாளர்களுக்குத் துணைப் பதார்த்தமான ஆட்டிறைச்சி, ஆட்டுக்குடல், ரத்தப் பொரியல் என்று பலவகை உணவுத் தினுசுகள் விற்பனை. குடும்பம் சௌகர்யமாக வாழ்ந்தோம். கூட்டுக்குடும்பம். பெரிய வீடு.

அப்பா, பள்ளிக்கூடமே போகாதவர். நல்லவர். மது அருந்தாதவர். பிரெஞ்சுக்கார ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய (அந்தக் காலத்து) போர்க்குண காங்கிரஸில் அவருக்கு ஈடுபாடு வந்தது. காஞ்சியார் பால் கவனம் குவிந்தது. கள், சாராய வியாபாரத்தை முடித்துக்கொண்டார். என் பெயரில் ஓட்டல் நடத்தினார். எடுத்த காரியம் அனைத்திலும் தோல்வி.

என் பிறந்த நாளில், பத்து வயது தொடங்கி, எனக்குப் புத்தகங்கள் பரிசு கொடுத்த தந்தை அவர். எங்கள் ஊரில் செல்வாக்கு செலுத்திய பிரெஞ்சு இலக்கிய ஆசிரியர்களின் தமிழ் மொழிபெயர்ப்பை, அவருடைய படித்த நண்பர்களின் யோசனையின்படி, எனக்கு வாங்கித்தருவார். மாப்பசான், எமிலி ஜோலா, அலெக்ஸாண்டர் தூமா முதலான பலரையும் பதின் வயதிலேயே படித்து முடித்தேன். ஆறாம் வகுப்பிலேயே எங்கள் ஊர் அரசு நூலகத்தில் என்னை உறுப்பினராகச் சேர்த்தார் அப்பா. அடுத்த சில ஆண்டுகளில் நான் வாசிக்காத உலக இலக்கியம் என்று நூலகத்தில் எதுவும் இல்லை.

தினசரி படுக்கப்போகும்போது அப்பா, ‘இன்று என்ன படித்தாய்?’ என்பார். நான் பெரும்பாலும் பொய் சொல்வதில்லை. இப்படிச் சேர்ந்த படிப்பு மனசை அடைத்துக்கொண்டது. அது வெளியேற வேண்டுமே! எனக்கு எழுத வந்தது. ஆகவே எழுதினேன். எழுத வருகிறது என்று சொன்னார்கள். ஆகவே எழுதினேன். நன்றாக இருக்கிறது என்றார்கள்.

பிரான்ஸிலிருந்து அழகான நோட்டுப் புத்தகங்களும் அருமையான பேனாக்களும் எங்கள் ஊருக்குள் புழங்கும். அப்பா, எனக்கு பேரழகான நோட்டுப் புத்தகமும் பேனாவும் அன்பளித்தார். இருநூறு பக்க நோட்டு. அப்போது எனக்குள் காதல் பற்றியெரியத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் வெடிப்புறப் பேசிப் பழகும் பெண்களுக்கு இரவோடு இரவாக அமர்ந்து காதல் கடிதம் எழுதி மறுநாள் கொடுத்துவிடுவேன்.

இருநூறு பக்கமும் சில மாதங்களில் தீர்ந்து போயிற்று. கருப்பு மையில் எழுத்து. பச்சை மையில் கையெழுத்து. மறக்காமல் சிவப்பு மையில் இருதயம், அதன் மையத்தில் அம்பு ஊடுருவும். அம்பின் நுனியில் ரத்தத் துளிகள் கட்டாயம். ஒரு பெண், அதைப் படித்துவிட்டு, அவள் அம்மாவிடமும் படித்துக்காட்டி, அம்மா அதை எடுத்துவந்து என் அப்பாவிடமும் படித்துக் காட்டியதை நானே கேட்க நேர்ந்தது. அப்பா மகா கோபக்காரர். விபரீதம் நடக்கும் என்று நான் நடுங்கிப் போனேன். நிதானமாக அப்பா என்னிடம் சொன்னார். “தம்பி. படிப்பை வீணாக்கக் கூடாதுப்பா. உருப்படியா எழுது. மரியாதை வருவது மாதிரி எழுது.”

அப்பா சொன்னதை முடிந்தவரை காப்பாற்றுகிறேன்.

அப்பாவுக்குப் புதுவை அரசியலில் செல்வாக்கு இருந்தது. என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். ‘சீட்’ அவருக்குச் சுலபம்தான். நான் தமிழ் படிக்கப் போகிறேன் என்றேன். சரி என்றார். ஒன்றாம் தேதியே எனக்குச் செலவுக்குப் பணம் வரும். உண்மை என்னவென்றால் அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு வேளைதான் உணவு. எந்த வருத்தமும் வெளிக்காட்டாத புன்சிரிப்போடு இருந்த அம்மா. திருமணம் ஆகி, என் குழந்தைகளையும் உணவிட்டுப் படிக்கவைத்தவர் அப்பாதான்.

பிரமிளா ராணிக்கும் எனக்கும் 1970-ல் திருமணம் ஆயிற்று. எங்களுக்கு மூன்று பிள்ளைகள். இருவர் பிரான்ஸில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற பெண்களைத் திருமணம் செய்துகொண்டு சுகமாக வாழ்கிறார்கள். ஒருவர் ஓவியர். என்னுடன் இருக்கிறார்.

எழுத்து என்னை முழுவதுமாக மாற்றியிருக்கிறது. எனக்கு யார் மேலும் பகை இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கவே செய்கிறேன். இழிவு என்று நான் நினைப்பதை நான் எழுதியதில்லை. எனக்கு வகுத்தளிக்கப்பட வேண்டிய பங்கு பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. பாரதியைக் காட்டிலும் புதுமைப்பித்தனை விடவும் நான் நன்றாக இருக்கிறேன். அடுத்த தலைமுறை எழுத்தாளர், என் பங்குகளையும் சேர்த்துப் பெறுவார், பெற வேண்டும் என்பது என் ஆசை.

27.04.1945-ல் பிறந்த எனக்கு சமீபத்தில் 72 வயது நிறைவுபெற்றது. யோசிக்கும் வேளையில் காலம் என் மேல் கருணை கொண்டிருக்கிறது என்பதும், சமூகம் எனக்குத் துணையாக இருந்தது என்பதும்தான் நான் நன்றியுடன் நினைவுகூரும் தருணங்கள்.

(தொடரும்)

-பிரபஞ்சன், மூத்த தமிழ் எழுத்தாளர், ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ முதலான நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: writerprapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

மேலும்