ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுடன் வாழ்ந்து அவர்களின் பண்பாட்டைக் காப்பாற்றப் போராடியவர் வெர்ரியர் எல்வின். அவரது வாழ்க்கை வரலாற்றை ராமச்சந்திர குஹா விரிவான புத்தகமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை ‘வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்’ என ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வேலு.இராஜகோபால் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். இதற்கு முன்னதாக வாசகர் வட்டம்1967-ல் ’எல்வின் கண்ட பழங்குடி மக்கள்’ என்ற மொழியாக்க நூலை வெளியிட்டுள்ளது.
எல்வின் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமை. இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அவர்களின் மேம்பாட்டுக்கான அரசு அதிகாரியாகவும் செயல்பட்டவர் எல்வின்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர், கிறிஸ் துவ சமயப் பிரச்சாரம் மேற்கொள்ளவே இந்தியா வந்தார். ஆனால் காந்தியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். காந்தியவாதியாக மாறியதும், ‘கோண்டு’ பழங்குடிகளோடு தங்கி, அவர்களுக்கு சேவை செய்ய விரும்பி ஒடிசா சென்றார்.
அங்கே ‘கோசி’ என்ற கோண்டு இனப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுடனே வாழ்ந்தார்.
ஒடிசா பழங்குடிகளின் உரிமைக்காக போராடிய எல்வினின் சேவையைப் பாராட்டி பண்டித நேரு வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு அதிகாரியாக இவரை நியமித்தார். இந்தியப் பழங்குடிகள் குறித்து எல்வின் எழுதியுள்ள புத்தகங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை.
ஒடிசா பழங்குடிகளின் வாழ்க்கையைப் பற்றி கூறும்போது, துர்கா பகவத் தொகுத்த ‘மத்திய இந்தியாவின் பழங்கதைகள்’ என்ற நூலில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறார். அக்கதை பழங்குடி பண்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது!
ஒருமுறை ‘தங்களுக்காக ஏன் ஒர் அர சாங்கத்தை உருவாக்கக் கூடாது?’ என்று மரங்கள் கடவுளிடம் முறையிட்டன. கட வுளுக்கு அது சரியான யோசனையா கவே தோன்றியது. ஆகவே, அவர் பீமனை காட்டுக்கு அனுப்பி ‘வலிமை யான மரம் எது’வென தேர்வு செய்யச் சொன்னார்.
பீமனும் காட்டில் உள்ள பல்வேறு மரங் களைத் தேர்வுசெய்து விளையாட்டாக சண்டை செய்தான். புளியமரம் மற்ற மரங்களை விடவும் நன்றாக போராடியது. ஆகவே பீமனின் சிபாரிசின்பேரில் புளிய மரத்தை மரங்களின் அரசனாக கடவுள் நியமித்தார்.
ஆலமரத்தை மந்திரியாகவும், அரச மரத்தை காவல்காரனாகவும் நியமனம் செய்தார். அப் போது அரச மரத்திடம் ‘காற்று வந்தால் மற்ற மரங்களை நீ எச்சரிக்கை செய்ய வேண்டும்!’ என்று கட்டளையிட்டார். அதை அரச மரம் ஏற்றுக் கொண்டது.
அதனால்தான் இன்றும் மெல்லிய காற்று வீசினால் கூட அரசமரத்தின் இலைகள் சலசலத்து மற்ற மரங்களுக்குத் தெரிவிக்கின்றன என்கிறது இக்கதை.
புளிய மரத்தை ‘மரங்களின் அரசன்’ என்று சொல்வது முக்கியமானது. அரச மரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன . அதனாலேயே, அரச மரத்தை ‘ராஜ விருட்சம்' என்பார்கள். போதி மரம் என்பதும் அரச மரம்தான்!
அரச மரப் பட்டையில் டேனின் எனும் ரசாயனம் உள்ளது. இதன் காரணமாக தோல் பதனிடுவதற்கு இம் மரப் பட்டைகள் பயன்படுத்தப் பட்டன. இத்தனை சிறப்புகள் இருந் தும் பழங்குடி மக்களின் பார்வை யில் புளியமரம்தான் அரசன்.
கதையில் மனிதர்களைப் போலவே மரங்களுக்குள் ஒரு நிர் வாக சபை தேவைப்படுகிறது. மரங் களில் யார் மந்திரி? யார் காவலாளி என கடவுள் நிர்ணயம் செய்கிறார்.
எனது சிறுவயதில் கிராமத்தில் வேப்ப மரத்துக்கும் அரசமரத்துக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். இதில், ‘‘எது ஆண்? எது பெண்’’ எனக் கேட் டேன். ‘‘வேப்ப மரம் பெண்; அரச மரம் ஆண்’’ என்றார்கள். வேடிக்கை கல்யாண மாக அது நடந்தேறியது. ஆனால், எனக்கு அதன் பிறகு ஊரில் எந்த மரத்தை பார்த்தா லும் அது ‘ஆணா, பெண்ணா’ என்ற சந்தேகம் உருவானது. இதைப் பற்றி கேட்டால் யாருக்கும் பதில் தெரிய வில்லை. அரச மரத்தின் இலைகள் ஒய்வில்லாமல் சலசலத்துக் கொண் டிருப்பதைப் பற்றி இப்படி ஒரு கதை இருப்பது வியப்பளிக்கிறது.
புளிய மரம் கடினமானது. ஆகவே அது இறைச்சிக் கடைகளில் அடிப் பலகையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியா வில் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர்கள் புளியை சமையலில் சேர்ப்பதை விரும்பவில்லை. காரணம் அது வெண்கலப் பாத்திரங்களைத் துலக்கும் பொருள் என்றே கருதினார்கள். ஆகவே, உணவில் புளியைச் சேர்த்தால் தங்களின் வயிற்றை கெடுத்துவிடும் என அவர்கள் பயந்தார்கள்.
கோடைக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் நாட்களில் புளியும் வெல்லமும் கலந்த ‘பானகம்’ தரப்பட்டது. அதை குடித்து மயங்கிய பிறகே வெள்ளைக்காரர்கள் தங்கள் உணவில் புளியைச் சேர்த்துக்கொண்டார்கள் என்றொரு செய்தியும் இருக்கிறது
இக்கதையில் மரங்களின் வலிமையை சோதனை செய்ய கடவுள் பீமனை அனுப்பி வைக்கிறார். மகா பாரத கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் எந்த அளவு ஆழமாக பதிந்து போயிருக்கிறார்கள் என்பதற்கு, இது ஒரு சான்று. பழங்குடி மக்கள் மத்தியில் மகா பாரதத்தின் பல்வேறு கிளைக் கதைகள் உலவுகின்றன. மத் தியப்பிரதேசத்தில் ‘பீல்' பழங் குடியினரிடம் ஒரு வகை மகாபாரதம் இருக்கிறது. அதன் பெயர் ‘பீல் மகாபாரதம்’ (Bheel Mahabharat). இதன் கதை நாம் அறிந்த மகாபாரத கதையில் இருந்து பெரிதும் மாறுபட்டது.
இதில் திரவுபதி பொன்னிற கேசம் கொண்டவளாகவும் பால் போல வெண்ணிறம் உடைய வளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். அஸ்தினாபுரத்தில் ஒருநாள் அவள் உறங்கும்போது அவளது கூந்தலில் இருந்து ஒரு பொன்னிற முடி காற்றில் பறந்து பாதாள உலகம் செல்கிறது.
பாதாள உலகின் அரசனான 12 தலைகொண்ட ‘வாசுகி’ எனும் பாம்பு அரசன் மீது அந்தப் பொன் னிற முடி இழை விழுகிறது. அந்தக் கூந்தலுக்கு உரியவளை அடைந்தே தீருவேன் என பாம்பு அரசன் பூமிக்கு வருகிறான். திரவுபதியின் பொன்னிற கூந்தலைப் பற்றி கேள்விபட்டு அவளை அடைய முயற்சிக்கிறான். அப்போது தன் கணவன் அர்ச்சுனன் வந்தால் உன்னை கொன்றுவிடுவான் என திரவுபதி எச்சரிக்கிறாள்.
வரச் சொல் பார்க்கலாம் என சவால் விடுகிறான் பாம்பு அரசன். அச்சமயம் அர்ச்சுனன் வந்து விடவே, இருவருக்கும் யுத்தம் நடக்கிறது. அதில் அர்ச்சுனனை வாசுகி தோற்கடித்துவிடுகிறான். திரவுபதியிடம் பாம்பு அரசன் ‘‘இனிமேல் நீ என்னுடைய மனைவி, எனக்கு சமையல் செய்து பரிமாறு’’ என்கிறான். வேறு வழியே இல்லாமல் திரவுபதி அவனுக்கு விருந்து சமைத்துப் பரிமாறு கிறாள். வாசுகியைக் கொல்லக் கூடிய ஒரே வீரன் கர்ணன் மட்டும்தான் என்பதை அறிந்து, அவனது உதவியை நாடுகிறாள் திரவுபதி. தனது சக்தி வாய்ந்த அக்னி கோடாரியைக் கொண்டு வாசுகி யோடு சண்டையிட்டு, அதன் 11 தலைகளை வெட்டிவிடுகிறான் கர்ணன். ‘‘இனிமேல் பூலோகம் பக்கம் வரவே மாட்டேன்’’ என்று சொல்லி, மீதமிருக்கும் தனது ஒற்றை தலையோடு ‘வாசுகி' பாதாள உலகுக்குச் சென்றுவிடுகிறது.
இந்த பாம்புதான் ‘பீல்’ பழங்குடி மக்களின் தெய்வமாகக் கருதப்படுகிறது. ஆகவே, தங்களின் தெய்வத்தின் வீரசாகசத்தை சொல்ல, அவர்கள் மகா பாரதக் கதையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பழங்கால நாணயங்களை சேகரிப்பவர்கள் புழக்கத்தில் இல்லாத செல்லாக் காசுகளை இன்று ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். காரணம், அது கடந்த காலத்தின் சாட்சியம். வரலாற்று அடையாளம்! கதைகளும் அதுபோலத்தான். ஆனால், அதன் மதிப்பை நாம் இன்றும் உணரவே இல்லை!
- கதை பேசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
இணையவாசல்: >கதை சொல்வது குறித்த சிறப்பான உரைக்கு
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago