ஈராக் நாட்டின் பாஸ்ராவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ராபியா-அல்-பாஸ்ரி. பெண் சூஃபி கவிஞர்களில் முதன்மையானவராக அவர் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கு முற்றிலும் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் பக்தி மார்க்கமாக சுதந்திரத்தை அடைய முற்பட்ட கவிஞர்களின் வரிசையில் ஆண்டாள், மீரா, லல்லா போல ராபியாவிற்கும் முக்கியமான ஒரு இடம் உண்டு. தமிழ்நாட்டில் ஆண்டாளும் ஈராக்கில் ராபியாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமான ஒற்றுமை.
வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் ராபியா. ஒரு அடிமையாகத் தனது வாழ்கையை நடத்திக்கொண்டிருந்த ராபியாவின் பக்தியை அறிந்து அவரது எஜமானர் அவரை விடுவிக்கிறார். பிறகு பக்தியும் கவிதையும் ராபியாவின் வாழ்க்கையாகின்றன. அவருக்கு முன் வாழ்ந்த பிற சூஃபி கவிஞர்கள் போல இல்லை ராபியா. இறைவனை இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும், பயத்தால் விளைவது நேசம் அல்ல என்பதில் ராபியா தெளிவாக இருக்கிறார்.
விழிகள் அமைதியை நாடுகின்றன,
நட்சத்திரங்கள் மூடிக்கொள்கின்றன.
சன்னமாக இருக்கிறது,
அதனதன் கூடுகளில் இருக்கும் பறவைகளில் ஒலிகள்.
அலைகளின் வாழும் அசுரர்களின் சப்தங்களும்.
மாற்றங்கள் அறியாத மிகப் பெரியவன் நீ.
நிலை மாறாத சமன் நீ.
மறைந்துவிடாத அழிவின்மை நீ.
அரசர்களின் கதவுகள் இப்போது தாழிடப்பட்டிருக்கின்றன,
அவற்றைப் படையினர் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உன்னைத் தேடி வருபவர்களுக்காக
உனது கதவுகள் திறந்திருக்கின்றன.
எனது கடவுளே,
இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.
நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்
போன்ற ராபியாவின் கவிதைகள் பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன.
நரகம் பற்றிய பயத்தில்
உன்னை வணங்கினால்
என்னை நரகத்தில் தீயிலிடு.
சுவர்க்கத்தின் மீதான ஆசையில்
உன்னை வணங்கினால்
சுவர்க்கத்தில் வைத்து என்னைப் பூட்டிவிடு.
உன்னை உனக்காக மட்டுமே
வணங்குவேனென்றால்
உனது முடிவில்லாத அழகை
எனக்கு மறுத்துவிடாதே..
என்கிறது ராபியாவின் ஒரு கவிதை. காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கடவுளைப் பற்றிய பூடகங்களைக் கலைத்துப் போடும் ராபியாவின் மற்றொரு கவிதை இது.
ஒரு கையில் விளக்கையும்
மற்றொரு கையில் ஒரு வாளித் தண்ணீரையும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
சுவர்க்கத்தைத் தீயிலிட்டு,
நரகத்தின் மீதான தீயை அணைக்கப் போகிறேன்.
கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்
திரை விலக்கி
உண்மையைப் பார்க்கட்டும்.
எளிமையான வார்த்தைகளில் ஆழமான ஞானத்தைக் கடத்த வல்லவை ராபியாவின் கவிதைகள்.
நீ உன்னை ஒரு ஆசிரியன் என்கிறாய்
அதனால் கற்றுக்கொள்.
...
நான் கடவுளை நேசித்துக்கொண்டிருக்கிறேன்.
சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.
போன்ற அவரது கவிதைகள் இதற்குச் சான்று.
மிகச் சாதாரணமான வார்த்தைகளில் மிக வலிமையான, காலம் கடந்து வழிகாட்டும் உணர்வுகளை படைக்க முடியும் என்பதை இதைவிட வேறு எந்தக் கவிதை சிறப்பாகச் சொல்லிவிட முடியும்?
யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி
எவ்வளவு காலம்தான் திறந்த கதவை
தட்டிக்கொண்டிருப்பாய்?
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago