இத்தாலியைச் சேர்ந்த எழுத்தாளரான இடாலோ கால்வினோ (1923-1985) புதுப்புது வடிவங்களில் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிப் பார்த்தவர். எழுத்து பற்றி நிறைய உரையாடியவர். திரைப் படங்களிலும் கவனம் கொண்டிருந்தவர். பாசிச எதிர்ப்பு அணியில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்போது 20 மாதங்கள் போராடியவர். சேகுவேராவைச் சந்தித்து இதய நெகிழ்ச்சியுடன் தன் பாராட்டுதலைப் பதிவுசெய்தவர்.
குழந்தைப் பருவம்
குழந்தைப் பருவத்தில் ஆங்கிலம் தெரியாத நிலையில், அமெரிக்க காமிக்ஸ் தொடர்களை வாசிப்பதில் மோகம் கொண்டிருந்த கால்வினோ, உரையாடலைத் தவிர்த்துவிட்டு, சித்திரங்களை அடுக்கியே தன் போக்கில் ஒரு கதையை உருவாக்கிப் புரிந்துகொள்வார். அவரின் இந்த ஈடுபாடு பின்னர், “டேரட்” என்னும் சீட்டுப் படங்களிலிருந்து கதைகளை வரவழைத்து ஒரு நாவலை உருவாக்கும்வரை விரிந்து சென்றது.
உலகம் சுற்றி வந்த பயணி மார்க்கோபோலோவும் சீனச் சக்கரவர்த்தி குப்ளாய்கானும் நடத்தும் உரையாடலில், நகரங்களின் பல்வேறு முகங்களை வெளிப்படுத்துவதாகப் “புலப்படாத நகரங்கள்” என்றொரு நாவல் எழுதினார்.
கால்வினோவின் தந்தை மரியோவும் தாய் ஈவாவும் விஞ்ஞானிகள். மரியோ ஒரு சமயத்தில் மெக்ஸிகோவிலுள்ள வேளாண் அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார். இரண்டாம் உலகப்போரின்போது பாசிச ராணுவத்தில் தங்கள் மகனைச் சேர்க்க மறுத்தமைக்காகப் பிணைக்கைதிகளாக இருந்தவர்கள். பாசிச எதிர்ப்பு முகாமில் இருபது மாதங்கள் இருந்து போராடிய கால்வினோ, பின்னர் இது பற்றி இப்படி நினைவுகூர்கிறார் : “எஸ்எஸ் மற்றும் ராணுவப்படை முன்பு கண்ணியத்துடனும் திடசித்தத்துடனும் நடந்துகொண்ட அவள் (தாய் ஈவா) விடாப்பிடியான தன்மைக்கும் தீரத்திற்கும் உதாரணமாய் இருந்தாள்;
பிணைக்கைதியாக நீண்ட நாட்கள் அவள் வைக்கப்பட்டிருந்தபோது, அவளது கண் முன்னே மூன்று முறை அவளது கணவரைச் சுட்டுவிடப்போவதாக நாஜிகள் பாவனை செய்தபோதும், கிஞ்சித்தும் பயந்துவிடவில்லை. தாய்மார்கள் பங்கேற்கும் வரலாற்று நிகழ்வுகள், இயற்கை நிகழ்வின் மகோன்னதத்தையும் வெல்லப்படாத தன்மையையும் பெற்றுவிடுகின்றன.”
மக்களிடமிருந்து மரியாதையை வரவழைக்க வேண்டும் என்ற உத்தேசத்தில், சர்வாதிகாரி முசோலினியின் உருவப் படங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் இல்லங்கள் போன்ற எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டன. ஆனால் அவரது வீழ்ச்சி காலத்தில் அவற்றில் மக்கள் காறி உமிழ்ந்ததையும், கேலிச் சித்திரங்கள் வரைந்து பரிகசித்ததையும் ஒரு கட்டுரையில் நையாண்டி கலந்த வேதனையுடன் எழுதினார்.
20-ம் நூற்றாண்டுக்குக் கொடுக்க வேண்டியவை
அரசியல் நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள், குடும்பச் சிக்கல்கள் என்னும் பாரம் நிறைந்துள்ள நாம், இருபத்தோராம் நூற்றாண்டிற்குக் கையளிக்க வேண்டியவை இலகுத் தன்மை, துரிதம், துல்லியம், புலப்படும் தன்மை மற்றும் பன்முகத் தன்மை.
புத்தாயிரம் ஆண்டில் எதையும் புதிதாகக் கண்டறிவோம் என்னும் நம்பிக்கை இல்லாததால், இதையாவது செய்வோம் என்று மேற்கண்ட தலைப்புகளில் ஒரு சொற்பொழிவு வரிசைக்குக் குறிப்புகள் தயாரித்திருந்தார். ஆனால் சொற்பொழிவுகளை நிகழ்த்தும் முன்பே மூளை நரம்பு வெடித்து மடிந்துபோனார்.
கிரிம் சகோதரர்கள் ஜெர்மனியில் தொகுத்தது போன்ற வாய்மொழிக் கதைகள் உண்டா என்று கேட்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 200 கதைகளைப் பல்வேறு கிளை மொழிகளிலிருந்து தொகுத்து ‘இத்தாலிய நாட்டுப்புறக் கதைகள்’ புத்தகமாக வழங்கினார் கால்வினோ.
பால்யத்தில் தன் தம்பி ஃப்ளோரியானோவுடன் (மண்ணியல் விஞ்ஞானி) சேர்ந்து மரக்கிளைகளில் அமர்ந்து கிப்ளிங்கின் The Jungle Book–லிருந்து படக்கதைகள் வரை வாசித்துக்கொண்டிருந்தது கால்வினோவுக்கு எப்போதைக்குமான பசுமையான அனுபவம்.
அரசியல் தளத்தில் பயங்கர அனுபவங்களைக் கொண்டிருந்த அவர், இலக்கியத் தளத்தில் கதையில்லாமலே புனைவிலக்கியம் தர முடியும் என்று இயங்கியவர். அவரது சிறுகதைகளும் புதினங்களும் இறுக்கமான விவரிப்பின்றி, வாசகனைக் குதூகலத்துடன் பங்கேற்க வைப்பவை.
பிரபஞ்சம் எவ்வாறு உருவானது, மனிதனும் சமூகமும் இயற்கையும் உருவாவதன் முன் எப்படி நிகழ்ந்தது என்று அறிவியல் கற்பனையாக எழுதுவார்; கூடவே ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாகக் காதல் விளையாட்டைச் சேர்த்துக்கொள்வார்.
அவரது இறுதிப் புதினமான ‘திருவாளர் பலோமர்’ இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுநிலையைப் பேசுகிறது. பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ஒன்றாகும் தருணம் உண்டா, மனித அகங்காரம் இல்லாது பார்க்கப்படுதல் சாத்தியமா என்றெல்லாம் விசாரம் செய்வதாகத் தொடங்குகிறது அந்த நாவல். பிரபஞ்சத்தின் நண்பனாயிருக்கும் மனிதனுக்கு, பிரபஞ்சம் நண்பனாக இருக்கிறது என்று சொல்கிறது அக்கதை.
“இலக்கியம் மாற்ற முடியாத இயற்கையின் துணையாகவே பெரிதும் இருந்து வந்திருக்கிறது. உலகம் மற்றும் அதனை நாம் நோக்கும் விதத்தின் விமர்சகனாக மாறும்போதே, அதன் உண்மையான விழுமியம் எழுகிறது”.
கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago