பண்பு என்பது புத்தன்!

By ந.வினோத் குமார்

‘ஜென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெய்ன்ட்டனன்ஸ்’ நாவலை எழுதிய ராபர்ட் எம்.பிர்ஸிக், கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தனது 88-வது வயதில் காலமானார். அடிப்படையில் ‘ஜென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெய்ன்ட்டனன்ஸ்’ ஒரு தன் வரலாற்று நாவல். பிர்ஸிக் தனது 11 வயது மகன் கிறிஸ்டோபருடன் சேர்ந்து 1968-ம் ஆண்டின் கோடைக் காலத்தில் 17 நாட்கள் வடமேற்கு அமெரிக்காவில் பைக்கில் பயணம் செய்கிறார்கள். அந்தப் பயணத்தின்போது அவர்களுக்கு ஏற்படுகிற அனுபவங்கள்தான் இந்த நாவலின் மையம்.

ராபர்ட் பிர்ஸிக், சிறிது காலம் கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் போதிப்பவராகவும், டெக்னிக்கல் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். வாழ்க்கையின் உண்மையான பொருள் என்ன என்பதை அறியும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவந்தார்.

இந்தப் பயணத்தின்போது, அவர் சிகிச்சை மேற்கொண்டுவந்த நாட்களும் நினைவில் வருகின்றன. மேலும் அவர் மகனும் மனநிலைப் பாதிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தார். இந்தக் காரணங்களால், தங்களது பயண அனுபவங்களைத் தன்னிலையிலும் முன்னிலையிலும் படர்க்கையிலும் விவரித்துச் செல்கிறார். இதனால் நாவலின் சில இடங்களில் யார் எந்த விஷயத்தைச் சொல்கிறார்கள், எதைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்று குழப்பம் ஏற்படுகிறது. முதன்முறையாக இந்த நாவலை வாசிக்கும் அனைவருக்கும் இது நிகழக்கூடியதே!

அன்றாட வாழ்வினூடே தியானம்

நாவலில் பிர்ஸிக் விவாதிக்கும் பொருள், ‘குவாலிட்டி’. இந்த ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் நேரடியான அர்த்தம், ‘தரம்’. ஆனால், ‘பண்பு’ என்ற அர்த்தத்திலும் நாம் அணுகலாம். பண்பு என்றால் என்ன? எது பண்பு? உண்மையில் அப்படி ஏதேனும் இருக்கிறதா என்ற பல கேள்விகளை எழுப்பி அதற்குத் தன்னுடைய கருத்துகளை நாவலில், தனித் தனிக் கட்டுரைகளாக எழுதிச் செல்கிறார் பிர்ஸிக். ஓரிடத்தில் பண்பு என்பதை ரத்தினச் சுருக்கமாக விளக்கிவிடுகிறார் இப்படி: ‘பண்பு என்பது புத்தன்!’

‘நல்ல தன்மை என்பது நீர் மாதிரி’ என்கிறது தாவோ தே ஜிங். அதுபோல, நல்ல பண்பு என்பது புத்தனைப் போன்றது என்கிறார் அவர். ‘நல்ல பண்புக்கும் புத்தனுக்கும் இடையில் உள்ள உறவை அறிய மலை உச்சியில் அமர்ந்துகொண்டு தியானிப்பது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நமது அன்றாட வாழ்வின் துயரங்களூடே, சச்சரவுகளூடே இந்த இரண்டுக்கான உறவை அறிவதுதான் மிகவும் முக்கியம்’ என்கிறார் நூலாசிரியர்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, ‘ஜென் பற்றிய புத்தகம்’ என்று நீங்கள் நினைத்தால் அதற்கு பிர்ஸிக் பொறுப்பாக மாட்டார். இது ஜென் பற்றிய புத்தகம் அல்ல. அதே சமயத்தில், வாகனத்தை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றிய விளக்கப் புத்தகமும் அல்ல. இங்கு ‘மோட்டார்சைக்கிள்’ என்பது உருவகம்தான். அன்றாடத் தொழில்நுட்பக் கருவிகளை நாம் புரிந்துகொண்டு கையாள்வதன் மூலம், ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கை, சந்திக்கும் திருகல்கள், சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும் என்ற ஜென் நிலையை உணர்த்துவதாக இந்தப் புத்தகம் அமைகிறது.

பிர்ஸிக் நான்கு ஆண்டுகளாக எழுதிய இந்தப் புத்தகத்தை 121 பதிப்பகங்கள் நிராகரித்துவிட்டன. இறுதியில் 1974-ம் ஆண்டு வில்லியம் மோரோ அண்ட் கம்பெனி எனும் பதிப்பகம் இதை வெளியிட்டது. வெளியான வேகத்தில் 50 லட்சம் பிரதிகள் விற்று இந்தப் புத்தகம் சாதனை படைத்தது. ‘ஓர் எழுத்தாளருக்கு இரண்டு நாவல்கள் அதிகமானவை’ என்பார் அ.முத்துலிங்கம். பிர்ஸிக் இரண்டே நாவல்கள்தான் எழுதினார். அதில் முதலாவது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக ‘லீலா’ என்ற புத்தகத்தை எழுதினார். ஆனால் அது முதல் புத்தகத்தைப் போலப் பரவலாகப் பேசப்படவில்லை. ‘நீங்கள் ஏன் அடுத்தடுத்து புத்தகங்கள் எழுதவில்லை?’ என்று கேட்டதற்கு, பிர்ஸிக் இப்படிச் சொன்னார்: ‘நான் சொல்ல வேண்டியவற்றை என் இரண்டு புத்தகங்களில் சொல்லிவிட்டேன். உங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லாதபோது நீங்கள் எழுதக் கூடாது. அந்தச் சமயத்தில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஜென்னும் அதையே சொல்கிறது!’இலக்கு நோக்கிய‌ பயணங்கள் மீது ஆர்வம்கொண்ட அனைவருக்கும் இந்தப் புத்தகம் புதிய திறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

22 days ago

இலக்கியம்

22 days ago

மேலும்