ஊகத்தின் அடிப்படையில் வரலாறு உருவாக்கப்படுகிறது: சீனி.விசுவநாதன்

By செய்திப்பிரிவு

சீனி.விசுவநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து பாரதி குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறார். பாரதி குறித்து அச்சில் வராத பல அரிய தகவல்களையும் எழுத்துகளையும் இவர் பதிப்பித்துள்ளார். கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பாரதி நூற்பெயர்க் கோவை ஆகிய நூல்கள் இவரது அருஞ்சாதனை.

பாரதி குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்னும் எண்ணம் எப்போது வந்தது?

1957 ஆம் ஆண்டு நான் துணை ஆசிரியராகப் பணியாற்றிய சங்கப் பலகை நின்றுபோனது. அதற்கு ஆசிரியராக இருந்த சின்ன அண்ணாமலை வழிகாட்டுதலின் பெயரில் 1961இல் சிதம்பரம் செட்டியாரின் பாரதி பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு சில ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு மேகலை என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கினேன். சின்ன அண்ணாமலை கூட்டங்களில் பேசும்போது சுவாரசியமான கதைகள் சொல்வார். அவற்றைப் புத்தகமாகத் தொகுத்து ‘சிரிப்புக் கதைகள்’ என்னும் பெயரில் வெளியிட்டேன். அதுதான் என் முதல் புத்தகம். அதன் பிறகு 1962இல் சென்னை மாகாண அரசு, பாரதியின் 80ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட முடிவெடுத்தது. அதை ஒட்டி ‘தமிழகம் தந்த மகாகவி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் கொண்டு வந்தேன். அதில் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ராஜாஜி, ஜீவா, பாலதண்டாயுதம் எனப் பலரிடம் கட்டுரைகள் வாங்கிப் பதிப்பித்தேன். கிட்டத்தட்ட புத்தகம் முழு அச்சும் ஆன பிறகு பாரதிதாசனின் கட்டுரைக்காகக் காத்திருந்தேன். பாரதிதாசன் ஏற்கனவே வந்திருக்கும் கட்டுரைகளைக் கேட்டார். அதைப் படித்துப் பார்த்துவிட்டுக் கட்டுரை தருவதாகச் சொன்னார். அச்சு ஆகியிருந்த புத்தகத்தை அவரிடம் காண்பித்தேன். அவற்றை வாசித்த பிறகு கட்டுரை தந்தார். பிறகு அதையும் சேர்த்து வெளியிட்டேன். பாரதிதாசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பாரதிதாசன் பாரதியைச் சந்தித்த காலம் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன…

1908இல் பாரதி-பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரதி 1916 அக்டோபர் 27இல் சுதேசமித்ரனில் தராசுக் கடை பகுதியில், ‘இன்று ஒரு தமிழ்க் கவிராயர்’ தன்னைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தத் தமிழ்க் கவிராயர் சுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன். பாரதியின் கூற்றில் அடிப்படையில் 1916ஆம் ஆண்டு நடந்த இந்தச் சந்திப்புதான் முதல் சந்திப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பே வேணு நாயக்கர் திருமணத்தில் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வேணு நாயக்கர் திருமணம் நடந்த ஆண்டைப் பற்றி காலக் குறிப்பும் இல்லை.

பாரதி ஆய்வில் நீங்கள் முதலில் கொண்டுவந்த நூல் எது?

சக்கரவர்த்தினிக் கட்டுரைகளைச் சொல்லலாம். ஏ.கே.செட்டியார் நடத்திவந்த குமரிமலர் வாரப் பத்திரிகையின் மூலம் பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய சக்கரவர்த்தினி பற்றித் தெரிந்துகொண்டேன். அந்தப் பத்திரிக்கையில் சக்கரவர்த்தினி கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டார்கள். சக்ரவர்த்தினி ஒரு பெண்கள் மாத இதழ். இதில் 13 மாதங்கள் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சக்கரவர்த்தினிக் கட்டுரைகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். இதற்காகப் பழைய புத்தகக் கடைகள் பலவற்றுக்கும் அலைந்தேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்தேன். அவரும் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் கடைசியில் வேறு ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். அவை குளித்தலை தமிழ் கா.சு. நினைவு நூலகப் பொறுப்பாளர் இளமுருகு பொற்செல்வியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து பெற்று சக்கரவர்த்தினி கட்டுரைகள் நூலை 1979இல் பிரசுரித்தேன். பாரதி இயலுக்கு இந்நூல் முக்கியமான வரவாக இருந்தது.

உங்களுடைய மகாகவி பாரதி வரலாறு நூலுக்கு முன்பும் பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல்கள் வந்துள்ளன. அவற்றில் இருந்து இது எவ்வகையில் முழுமையாகிறது?

1922இல் செல்லம்மா பாரதி, சுதேச கீதங்களை இரு தொகுதிகளாகக் கொண்டுவந்தார். அதன் முதல் தொகுதியில் பாரதியின் நண்பரான சோமசுந்தர பாரதி, பாரதியின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் இரண்டாம் தொகுதியில் தொழிற்சங்கவாதியான சக்கரைச் செட்டியார், பாரதியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் எழுதினர். இவை இரண்டும் மிக முக்கியமான ஆதார நூல்கள். பிறகு பாரதி வாழ்க்கை குறித்துப் பல நூல்கள் வந்தாலும் அவை காலக் குறிப்பு குறித்த வலுவான ஆதாரமில்லாமல் செவிவழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தன. ‘மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு’ நூல், பாரதியின் அரசியல் பங்களிப்பு, பாரதியின் தகப்பனார் சின்னச்சாமி ஐயர் நிறுவிய எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பாக்டரியின் கணக்கு விவரங்கள், சின்னச்சாமி ஐயர் இறந்த பிறகு பாரதியின் படிப்புச் செலவுக்காக பாகீரதி அம்மையாரின் பேரில் வாங்கிய கடன் பத்திரம், சென்னை ஜன சங்கத்தில் பாரதியின் பங்களிப்பு போன்ற பல அரிய தகவல்களை ஆதாரத்துடன் பதிவுசெய்கிறது.

இந்த நூலுக்கான ஆதாரங்களை எப்படிப் பெற்றீர்கள்?

பாரதியின் தகப்பானாரின் இரண்டாம் தார மனைவியின் மகனான விசுவநாத ஐயரிடம், பாரதியின் வரலாற்றை எழுதச் சொல்லி அவரைத் தொடர்ந்து வலியுறுத்தியபடி இருந்தேன். 1980இல் தமிழக அரசு, பாரதி நூற்றாண்டை ஒட்டி பாரதி படைப்புகளையும், பாரதியின் வாழ்க்கை வரலாறையும் பதிப்பிக்க முடிவெடுத்தது. தமிழக அரசே வரலாற்று நூலைக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்று விஸ்வநாத ஐயர் தெரிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு 1981இல் அந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்தார். எனக்கு ஆதாரங்களை அளித்தார். புதுதில்லி நேரு நினைவு நூலகம், கல்கத்தா தேசீய நூலகம், புதுச்சேரி போன்ற இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி ஆதாரங்களைப் பெற்றேன்.

பாரதி ஆய்வில் உங்களுக்கு முன்னோடிகள் யார்?

பெ.தூரன், ஏ.கே.செட்டியார், ரா. அ.பத்மநாபன், தொ.மு.சி ரகுநாதன் போன்றோர்கள் என் முன்னோடிகள். அவர்களின் ஆய்வுகள் பாரதி இயலுக்கு மிக முக்கியமானவை.

இதுவரை வெளியாகியுள்ள பாரதியியல் ஆய்வுகளில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

தக்க ஆதாரமில்லாமல் ஊகத்தின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கக் கூடாது என்று என்னுடைய ஞானாசிரியர் விஸ்வநாத ஐயர் கூறுவார். ஆனால் இங்கு பெரும்பாலான ஊகத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றன. இதைப் பற்றி பாரதி ஆய்வும் சில சிக்கல்களும் என்னும் தனியாகப் புத்தகமே கொண்டு வந்துள்ளேன். உதாரணமாக பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதி ஆய்வு நூலில் சக்கரவர்த்தினி பத்திரிகையின் தலைப்பு அலெக்சாண்டர் ராணியைக் குறிப்பதாகச் சொல்கிறார். ஆனால் அது விக்டோரிய மகாராணியைத்தான் குறிக்கிறது. 1905ஆம் ஆண்டு சக்ரவர்த்தினி தலையங்கத்திலேயே பாரதி விக்டோரிய சக்ரவர்த்தினி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசோ பெரிய நிறுவனமோ உங்கள் பணிகளுக்கான வரவேற்பும் உதவியும் எப்படி இருந்தன?

நல்ல வரவேற்பு இருந்தது. அறிஞர்கள் பலரும் பாராட்டினார்கள். க. கைலாசபதி, பாரதிதாசன், ராஜாஜி, ரா.அ.பத்மநாபன், கண்ணதாசன் போன்றோர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1981ஆம் ஆண்டு பாரதி நூற்பெயர்க் கோவையை வெளியிட்டேன். அதில் அதுவரை வெளிவந்த பாரதியின் 370 நூல் குறித்த விவரங்களைத் தந்துள்ளேன். என்னுடைய இந்த நூல் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நூலைப் பாராட்டி சுந்தர ராமசாமி கடிதம் எழுதினார். 2004ஆம் ஆண்டு தமிழக அரசு பாரதி விருதை வழங்கிக் கெளரவித்தது. பின்னாட்களில்தாம் மத்திய அரசின் ஆய்வுநல்கை கிடைக்கப்பெற்றேன். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நல்லி குப்புசாமி செட்டியார், நீயூஜெர்ஸியைச் சேர்ந்த கபாலீஸ்வரன், முருகானந்தம், சிவக்குமார் ஆகியோர் உதவினர். என்னுடைய மனைவி சுலோச்சனாயின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தகுந்தது. அதுபோல என் மகன் பாலாஜி தன் பணியைத் துறந்துவிட்டு எனக்காக ஆய்வுப் பணியில் உதவினான்.

நீங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலான பாரதி ஆய்வில் பாரதியை எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

பாரதி ஒரு கவிஞன் என்பதைத் தவிர பொதுவெளியில் கவனம் பெறவில்லை. ஆனால் பாரதி ஒரு பத்திரிகையாளன். மொழிபெயர்ப்பாளன். பல முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். தொடர்ந்து பத்திரிகையாளனாகக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பிறகு பாரதியின் வறுமை பற்றிக் கூறுகிறார்கள். அது அவரே உருவாக்கிக்கொண்ட வறுமைதான். அதுபோல பாரதியின் வீச்சை அன்றைக்கு பிரிட்டிஷார் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள் எனலாம். 1908ஆம் ஆண்டு சுதேச கீதங்கள் வெளிவந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் அச்சகத்தில் இருந்தே வாங்கிச் சென்று மொழிபெயர்த்து அதில் தேச விரோதக் கருத்துகள் இருக்கிறதா எனச் சோதித்துள்ளனர். ஆஷ் கொலை வழக்கு விசாரணையை ஒட்டி சுதேச கீதங்கள் 1912இல் திரும்பவும் மொழிபெயர்க்கப்பட்டது. 1910இல் புதுச்சேரியில் இருந்து வெளியிடப்பட்ட கனவு, ஆறில் ஒரு பங்கு புத்தகத்திற்கும் பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது.

50 ஆண்டுக்கால பாரதி ஆய்வு உங்களுக்கு நிறைவாக உள்ளதா?

நிறைவாக உணர்கிறேன். என்னளவில் நிறைவாகச் செய்துவிட்டேன். என் மனைவி ஆய்வுக்காகப் பெரிதும் துணை நின்றவர். அவர் சென்ற ஆண்டு மரணமடைந்து விட்டார். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாது. இனி என்னால் இயங்க முடியாது. ஆனால் பாரதி ஆய்வில் இன்னும் கண்டறியப்பட வேண்டியது ஏராளம் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்