கடவுளின் நாக்கு 2: மனிதன் நல்லவனா?

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

எனது கிராமத்தில் மாடு மேய்க்கும் ஒரு வயதானவர் சிறுவர்களுக்கு நிறையக் கதைகள் சொல்வார். ஒருமுறை அவரிடம் அற்புதமான கதை ஒன்றைக் கேட்டேன். இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

முன்னொரு காலத்தில் காட்டுக்குள் ஒரு மனிதன் புலியிடம் மாட்டிக்கொண்டான். புலி அவனை கொல்ல முயன்றபோது, அந்த மனிதன் ‘‘நான் நல்லவன், என்னை கொன்றுவிடாதே!’’ எனக் கெஞ்சினான்.

அதைக் கேட்ட புலி ‘‘அப்படியா! நீ நல்லவன் என்று யாராவது சொன்னால், உன்னை விட்டு விடுகிறேன்’’ என்றது.

அவன் ஒரு கிளிடம் போய் ‘‘கிளியே… கிளியே! நான் நல்லவன் என்பதை சொல்!’’ என்றான்.

அதற்குக் கிளி ‘‘மனுசங்க ரொம்ப மோசமான வங்க. சுதந்திரமாத் திரியுற என்னைப் பிடிச்சு என் றெக்கையை வெட்டிக் கூண்டுல அடைக்கிறது நீங்கதானே. பின்னே எப்படி நீ நல்லவனா இருப்பே?’’ என்று கேட்டது.

உடனே புலி அந்த மனிதனைப் பார்த்து ‘‘நான் உன்னைக் கொல்லப் போகிறேன்!” என சத்தமிட்டது.

அவன், ‘எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு’’ எனக் கேட்டு அனுமதிப் பெற்றான். காற்றிடம் சென்று ‘‘காற்றே... காற்றே! நான் நல்லவன் என நீயாவது சொல்லக் கூடாதா?’’ எனக் கேட்டான்.

அதற்குக் காற்று ‘‘மனுசங்க உயிர் வாழுறதுக்கு நான்தான் காரணம். என்னையே நாசமாக்கிட்டீங்க. அதோட, ஒரு மரமில்லாம வெட்டிட்டே வர்றீங்க. பிறகு, எப்படி நீ நல்லவனா இருக்க முடியும்?’’ என்றது.

உடனே அவன் நிலத்திடம் சென்று ‘‘பூமித் தாயே! நான் நல்லவன் என்று நீயாவது சொல்லேன்…’’ என்றான்.

அதற்கு நிலம் ‘‘நான் எவ்வளவுதான் விளைச் சல் கொடுத்தாலும், என்னோட அருமை மனுஷங் களுக்குப் புரியறதே இல்ல. நிலத்தை நாசமாக் கிட்டே வர்றாங்க. நீயும் அந்தக் கூட்டத்துல ஓர் ஆள்தானே, பிறகு நீ எப்படி நல்லவனாக இருப்பே?’’ எனக் கேட்டது.

உடனே புலி அவனைக் கொல்லப் போவதாக உறுமியது.

கடைசிமுறையாக அவன் ஆற்றிடம் சென்று, ‘‘நான் நல்லவன் என நீயாவது சொல்லக் கூடாதா?’’ எனக் கெஞ்சி கேட்டுக்கொண்டான்.

அதற்கு ஆறு ‘‘காலம் காலமாக மனுசங்க குடிப்பதற்கும், குளிப் பதற்கும், விவசாயம் செய்வதற்கும் உதவி செய்திருக்கிறேன். ஆனால், நீங்கள் என்னைப் பாழடித்துவிட்டீர் கள். தண்ணீரோட மதிப்பை உண ரவே இல்லை நீங்கள். நீ மட்டும் எப் படி நல்லவனாக இருப்யாய்?’’ எனக் கேட்டது.

இதற்கு மேலும் பொறுமை இல்லாத புலி அவன் மீது கொல்லப் பாய்ந்தபோது, மரக் கிளையில் இருந்த ஒரு காகம் புலியைப் பார்த்துச் சொன்னது: ‘‘பாவம், நல்ல மனுஷன்!’’

உடனே புலி, ‘‘இவன் நல்லவன் என்று உனக் குத் தெரியுமா?’’ என காகத்தைப் பார்த்து கேட்டது

‘‘என்னைப் போன்ற காகங்களுக்கு மனுஷங்க தான் சாப்பாடு போடுறாங்க. எத்தனையோ வீட்டுல அவங்கல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடியே எங்களுக்கு சோறு படைக்கிறாங்க. மனுஷங்க எல்லாரும் நல்லவங்க. ஆகவே, இவனும் நல்லவன்தான்!’’ என்றது காகம்

உடனே புலி அவனை உயிரோடு விட்டுவிட்டது. அந்த நன்றிக் கடனுக்காகவே இன்றைக்கும் காகங்களுக்கு சோறு போடும் பழக்கம் இருந்து வருகிறது எனக் கதையை முடித்தார் கிழவர்.

எளிமையான கதை. ஆனால், நம் மண்ணை யும், தண்ணீரையும், காற்றையும் நாசமாக்கி வருவதைக் கண்டிப்பதற்காக சொல்லப்பட்ட கதை. கிராமத்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இக்கதையில் உயிருக்கு மன்றாடும் மனிதன் இயற்கையிடம், ‘நான் நல்லவனா?’ எனக் கேட்கும்போது இயற்கை ‘இல்லை!’ என்றே பதில் தருகிறது. அது நிதர்சனமான உண்மை.

அதே நேரம் காகம் மனிதனை உயர்வாக சொல் கிறது. இன்றைக்கும் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்து வருகிறது. உயிரை காப்பாற் றிய நன்றிக்காகத்தான் மனிதன் காகங்களுக்கு உணவிடுகிறான் என்பது புதிய பார்வை!

அடைத்து சாத்தப்பட்ட ஜன்னல்கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வளரும் பிள்ளைகள், பறவைகள் எதையும் காண்பதே இல்லை. வானமே அவர்களுக்குத் தெரியாது. திறந்தவெளியில் படுத்தபடி ஆகாசத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை எண்ணி விளையாடும் விளையாட்டுத் தெரியாது. உதிர்ந்து கிடக்கும் நாவல்பழத்தின் ருசி தெரியாது. புளியம் பிஞ்சின் சுவை தெரியாது. பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழங்களைப் போல பிள்ளைகள் பத்திரமாக வளருகிறார்கள். அது, ஆரோக்கியமானது இல்லை.

பள்ளிப் பாடங்களுடன் அவர்களுக்கு இயற்கையும் நேரடியாக அறி முகம் ஆக வேண்டும். பூக்களின் பெயர் தெரியாமல், விதைகளைக் காணாமல், அருவியையும் நீரோடையையும் மலைகளையும் அறியாமல் பிள்ளைகள் வளருவது சரியானது இல்லை.

கரிசலில் பிறந்த குழந்தை களுக்கு மண்ணை கரைத்து நாக்கில் வைத்துவிடுவார்கள், முதலில் மண் ருசி அறிமுகமாகட்டும் என்று. மண், கையால் தொடக்கூடாத ஒரு பொருள் எனத் தொலைக்காட்சியில் இன்று கற்றுக் கொடுக்கிறார்கள். நாம் தண்ணீரை, நிலத்தை, காற்றை நேசிப்பதற்கு பழக வேண்டும். அதற்கு இதுபோன்ற கதைகள் உதவக்கூடும்.

தமிழ் இலக்கியத்தின் பீஷ்மர் என அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்த கதை களைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார். முல்லை முத்தையா, அ.லெ.நடராஜன், நெ.சி.தெய்வசிகாமணி போன்றவர்களும் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து தொகுத் திருக்கிறார்கள்

தற்போது கழனியூரன், பாரததேவி, எஸ்.எஸ்.போத்தையா. எஸ்.ஏ.பெருமாள், கம்பீரன் என பலரும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி பதிப்பித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இதாலோ கால்வினோ, ஹெர்மன்ஹெஸ்ஸே மற்றும் கவிஞர்களான யேட்ஸ், தாகூர் போன்றவர்களும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக் கிறார்கள். தங்களின் கதை மரபைக் காப்பாற்ற வேண்டியது இலக்கியவாதிகளின் கடமை தானே!

மக்கள்

மத்தியில் வழங்கிவரும் வாய்மொழிக் கதைகளைத் தேடி சேகரிப்பது அரும்பணி. கதைகள் மக்களின் ஆதிநினைவுகளின் வடிவம். கேட்டவுடன் யாரும் கதை சொல்லிவிட மாட்டார்கள். அதற்கு கிராமத்து மக்களிடம் நட்பாக பழக வேண்டும். கூச்சம் போன பிறகுதான் கதை சொல்ல ஆரம்பிப்பார்கள்.

ஆண்களை விடவும் பெண்களே அதிகம் கதை சொல்லக்கூடியவர்கள். அதிசயமான இந்தக் கதைகளை அவர்கள் யாரிடம் கேட்டார்கள்? எப்படி நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கும்.

பல்கலைக்கழகங்களில் உள்ள நாட்டுப்புறத் துறை மாணவர்களும் தமிழ் இலக்கியம் படிக்கிற ஆய்வு மாணவர்களும்கூட நாட்டுப்புறக் கதைகள், பாடல்களைத் தேடிச் சென்று, சேகரம் செய்து காப்பாற்றி வருகிறார்கள். நம் கையில் கிடைத்திருக்கும் கதைகள் குறைவு. காற்றில் அழிந்துபோனதுதான் அதிகம்.

கிராமப்புறக் கதைகளைப் போல நகரம்சார் கதைகளையும் தேடித் தேடி சேகரிக்க வேண்டும் என கி.ரா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள மீனவ சமுதாயத் திடம் நிறைய வாய்மொழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வுசெய்து சேகரிக்க வேண்டும்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு என்றே எழுதப்பட்டதோ எனக் கருதப்படும் சின்ட்ரெல்லா கதை தொடங்கி ஸ்நோ வொயிட், ப்யூட்டி அண்ட் ஃபீஸ்ட், ஹான்சல் அண்ட் கிரேட்டல், ராபுன்ஸேல் போன்ற பல முக்கியமான தேவதை கதைகளைத் தேடி சேகரித்துக் கொடுத்தவர்கள் கிரிம் சகோதரர்கள். ஒருவர் ஜேக்கப் கார்ல் கிரிம். மற்றவர் வில்ஹெம் கார்ல் கிரிம்.

கிரிம் சகோதரர்கள் ஜெர்மானிய நாட்டுப்புறக் கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து ‘கிரிம்மின் தேவதைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டார்கள். அவை பெரும் புகழ் பெற்றன. இக்கதைகள் சிறார்களுக்கான கார்ட்டூன் படங்களாகவும் நாடகமாகவும் படக் கதைகளாகவும் வெளியாகி, இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

உங்கள் பகுதிகளில் சொல்லப்பட்டு வரும் கதைகளைத் தேடி, சேகரித்து காப்பாற்றுங்கள். அது விதைநெல்லை காப்பதைப் போன்று மிகவும் அவசியமானது.

- கதை பேசும்…

இணையவாசல்: >ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாய்மொழிக் கதைகளைப் படிக்க

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்