பாரதியின் சொற்கள், வாக்கிய அமைப்பு, சந்தங்கள் ஆகியவை மேற்பார்வைக்கு எளிமை போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் அவை செழுமையும் ஆழமும் நிரம்பியவை.
தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ
ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே! (154)
என்று தமிழ்வாணியை வேண்டி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சூதாட்டச் சருக்கத்தைத் தொடங்கினார் பாரதியார். இதை முதலாவது பாடல் எனக் கொண்டால், நான்காவது பாடலிலேயே வாசகனுக்குத் 'தெளிவுறவே அறிந்திடுதல்' என்ற செயல்பாட்டில் பிரச்சினை தொடங்கிவிடுகிறது.
துரியோதனின் சூழ்ச்சிவயப்பட்டு, திருதராஷ்டிரனின் அழைப்பை ஏற்று கௌரவரின் புதிய மாளிகையைக் காண, பின் சூதாட, கதிர் மங்கிடு முன்னர் ஒளி மங்கிடும் நகரான அஸ்தினாபுரத்திற்குப் பாண்டவர் வருகின்றனர். சூதாட்டம் நிகழவிருக்கும் அந்நகரத்தின் மக்கள் மகிழ்ச்சியை இரண்டு கண்ணிகளில் பாரதி விதந்து பாடுகிறார். ஊர்வலக் காட்சியின் வருணனை இது.
வாலிகன்றந்ததோர் தேர்மிசை ஏறியும்
மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலியலாம் படையோடு நகரிடை
நல்ல பவனி எழுந்த பொழுதினில்...
என்றந்தப் பாடல் போகும்.
இப்பாடலில் வாலிகன் தந்த தேரில் ஏறி மன்னன் யுதிட்டிரன் அதாவது தருமன் தன் தம்பியர் மற்றும் சிலருடன் ஊர்வலமாக வந்தான் என்ற விவரணை இடம்பெறுகிறது. தேர் தந்ததாகக் குறிக்கப்படும் வாலிகன் என்பவர் யார் என்ற கேள்வி எழுந்தது. வாலிகன் என்ற சொல் கதிரைவேற் பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, வையாபுரிப் பிள்ளை ஆகியோரின் அகராதி மற்றும் லெக்சிகனில் இல்லை. அபிதான சிந்தாமணியிலும் இல்லை. வில்லிபுத்தூரார் சொல் விளக்கப் பட்டியல் மற்றும் சில நிகண்டுகளிலும் தேடிப்பார்த்து அந்தச் சொல் கிடைக்கவில்லை என்று சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் விரிவாக்கத் திட்டத்தில் பணிபுரிந்த புலவர் ஒருவர் சொன்னார்.
‘இந்நூலை (பாஞ்சாலி சபதத்தை) வியாசர் பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது கற்பனை, திருஷ்டாந்தங்களில் எனது 'சொந்த சரக்கு' அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி' என்ற பாரதியின் முன்னுரை நினைவுக்கு வர, வியாச பாரதத்தில் அச்சொல்லைத் தேட விரும்பினேன். கும்பகோணம் ம.வீ. இராமானுஜாச்சாரியார் தன் வாழ்நாள் பணியாகச் செய்த மகாபாரத மொழிபெயர்ப்பு பற்றி அறியவந்து அதை வாங்கும் முயற்சியில் இறங்கினேன்.
குறிப்பிட்ட பகுதி அடங்கிய மகாபாரதத்தின் சபாபர்வம் மொழிபெயர்ப்பு ஒரு நாள் இரவு எட்டு மணிக்குக் கிடைத்தது. தருமன் அஸ்தினாபுரம் அடையும்போது இரவு ஒரு மணியாகிவிட்டது. அக்கினி தந்த தேரில் ஏறி தருமன் வந்ததாக வருணனை இருப்பதைக் கண்டு உள்ளம் களி கொண்டது. வால் என்பது இளமை, தூய்மை, வெண்மை என்ற பொருளில் வழங்கும் சொல். தூய்மை, வெண்மை பொருந்தியவன் வாலிகன். இச்சொல் அக்கினிக்குப் பொருந்துவது புரிந்தது, வாலியன், வாலறிவன்... என்று தொடர்ச்சியாய்ப் புரிந்தது. எப்போது விடியும் என்று காத்திருந்து காலையில், இதை மேலே குறிப்பிட்ட புலவரிடமும் இரு துணைவேந்தர்களிடமும் உறுதிசெய்தேன். உள்ளத்தில் களி வளர, ஆனந்தம் பொங்கிய அந்த இரவு நேரத்தைப் பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னால் இன்று நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது.
திருதராஷ்டிரனிடமிருந்து பாண்டவருக்குப் பாகப் பிரிவினையாகக் கிடைத்த பகுதி காண்டவப் பிரஸ்தம். அதன் அருகில் இருந்தது காண்டவ வனம். 'அந்தக் காட்டை அழித்து உன் பசியைத் தீர்த்துக்கொள்' என்று பிரம்மதேவர் நெருப்புக் கடவுளான அக்கினியிடம் கூறியிருந்தார். அக்கினி பசியாற முயன்றான். அந்தக் காட்டில் இருந்த தட்சகன் என்னும் பாம்பு இந்திரனின் நண்பன். அக்கினி காட்டை எரிக்கும் போதெல்லாம் நண்பனைக் காப்பாற்றும் பொருட்டு இந்திரன் மழையைப் பொழிவித்து நெருப்பை அணைத்துவிடுவான். நகரின் விரிவாக்கத்திற்காக கிருஷ்ணனும் அருச்சுனனும் காண்டவ வனத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தபோது, அக்கினி அவர்களோடு இணைந்துகொண்டான். இந்திரனைத் தடுக்கச் சிறப்பான வில், தேர், குதிரை வேண்டுமென அவர்கள் கேட்க, அக்கினி ஏற்பாடு செய்தது. காண்டீவம், சிறந்த தேர், குதிரைகள் முதலியவற்றை அக்கினி பலரிடமிருந்து வாங்கி வந்து தந்தான் என்று மகாபாரதம் கூறுகிறது (சபாபர்வம், ப.103). அந்தத் தேர்தான் வாலிகன் தந்த தேர் எனப் பாரதி சொல்வது. பாஞ்சாலி சபதத்தில் (அக்கனி தந்த) வில்லும் வரும், 'காண்டீவம் அதன் பேர்.'
வாலிகன் என்ற சொல்லின் பொருளை அடைய இந்தப்பாடு பட்டாயிற்று. இன்னொரு சொல் இன்னும் பாடுபடுத்தியது. பாண்டவர் ராஜசூய யாகம் நடத்துகின்றனர். அதில் பல நாட்டு மன்னர்களும் காணிக்கை செலுத்துகின்றனர். அதை பாரதி 16 பாடல்களில் வர்ணிக்கிறான். இதைப் பார்ததுப் பொறாமைப்பட்ட துரியோதனன் ஊருக்குத் திரும்பி, தந்தையிடம் நடந்ததை விவரிக்கிறான்.
மான், புதுத்தேன், கொலை நால்வாய், மலைக்குதிரை, பன்றி, கலைமான் கொம்புகள், களிறுகளின் தந்தம், கவரிகளின் தோல்வகை, பொன், செந்நிறத் தோல், கருந்தோல், திருவளர் கதலியின் தோல், வெந்நிறப் புலித்தோல், யானை, விலை உயர்ந்த பறவை, விலங்கினங்கள், சந்தனம், அகிலின் வகைகள் எல்லாம் கொண்டுவந்து கொடுத்தார்கள் என்கிறான் துரியோதனன்.
திருவளர் கதலியின் தோல் என்பதைத் தவிர மற்ற சொற்களின் பொருள்களை அகராதிகளில் கண்டு அறிய முடிகிறது. வாழை, கொடி என்று 'கதலி'க்குப் பொருள் தருகிறது ஃபெப்ரீசியல் அகராதி. கடுதாசிப்பட்டம், காத்தாடி, நேந்தாமரம், வாழை, விருதுக்கொடி எனக் கதலிக்குப் பொருள் தருகிறது கதிரைவேற் பிள்ளையின் மொழி அகராதி. கதலி என்ற சொல்லை வாழை என்றும் பொருளிலேயே மன்னும் இமயமலை என்று தொடங்கும் பாடலில் பாரதியும் பயன்படுத்தியுள்ளார். ஆட்டுக்கு இரையாகும் வாழைப் பழத் தோலையோ, மலர் தொடுக்க உதவும் வாழைப்பட்டை நாரையோ நாடாளும் மன்னர்க்கு சீர்வரிசைப் பொருளாகத் தர வாய்ப்பில்லை. அப்படியானால் இங்கே வரும் கதலி என்பது என்ன? இறுதியில் பாரதியே இதற்கு உதவினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாரதி பாடல்கள் நூலில் பாஞ்சாலி சபதத்துக்குப் பாரதி எழுதிய சொல்விளக்கக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. அதில் கதலி என்பது ஒருவகை மான் என்று உள்ளது. ஆனாலும் இப்பொருளில் இச்சொல்லாட்சி பெற்றுள்ள வேறு இலக்கியம் இருக்குமிடம் தெரியவில்லை.
'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி' எழுத விரும்பி பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தில்தான் மேலே சுட்டிய இரண்டு சொற்களும் பயின்றுள்ளன.
பாரதியின் எழுத்து எல்லோருக்கும் எல்லாக் காலத்துக்கும் எளிமையானது அன்று. புலவர்களுக்கே தடுமாற்றம் தரும் சொற்களும் துணைவேந்தர் அளவில் உறுதிசெய்ய வேண்டிய சொற்களும் அகராதிகளில் தேட வேண்டிய சொற்களும் கொண்டது பாரதியின் சொற்கள், வாக்கிய அமைப்பு, செய்யுளில் புணர்ச்சி முறைகள் அனைத்தும் மேற்பார்வைக்கு எளிமை போன்று தோற்றமளிப்பன.
சொற்கள், சொற்புணர்ச்சிகள், உருபன் அமைப்பு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றை எளிமையாக்கியதன் மூலம் தமிழை நவீனப்படுத்தியவர் பாரதி என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை மீண்டும் யோசிக்கத் தூண்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். தொடர் அமைப்பு, செய்யுளின் புணர்ச்சி முறைகள் பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளன செழுமைமிக்க பாரதி
-பழ.அதியமான், வ.ரா. ஆய்வாளர், எழுத்தாளர் - தொடர்புக்கு: athiy61@yahoo.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago