1980 களின் தொடக்கத்தில் மார்க்சிய ஈடுபாட்டுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்து தற்போது அப்பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் வீ. அரசு. கலாநிதி க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் வரும் இவர் தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமான பண்பாட்டு ஆய்வுகளை ஊக்குவித்துவருகிறார்.
உங்களது பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடக்கூர் கிராமத்தில் சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். அந்தக் குடும்பத்தில் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்ற முதல் பையன் நான்தான். பியூசி படிக்கும்போது விளங்கியோ விளங்காமலோ எங்கள் பகுதியைச் சேர்ந்த தோழர் ஒருவருடன் இருந்த தொடர்பு மார்க்சியத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது.
சென்னைக்கு வந்தது எப்போது?
தஞ்சை பூண்டி கல்லூரியில் எம்.ஏ முடித்து 79இல் சென்னைக்கு வந்து பச்சையப்பன் கல்லூரியில் எம்ஃபில் முடித்தேன். 1984இல் பிஎச்டி முடித்தேன். சென்னையில் பழைய புத்தகக் கடைகள், நூலகங்கள் ஆகியவற்றில் நிறைய பொழுதுகள் கழிந்தன. சி.பி.எம். கட்சி யோடு தொடர்பு ஏற்பட்டது. சென்னையின் அறிவுவளங் களை முழுவதும் உள்வாங்கிய காலம் அது. பேராசிரியர் ந. சஞ்சீவியால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது.
ஒரு பேராசிரியராக உங்கள் பணியை எப்படி உணர்கிறீர்கள்?
ஏறக்குறைய முப்பது வருடங்களாக எனது பேராசிரியர் பணியோடு, வெளியில் உள்ள அறிவு மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் தொடர்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுடனும் தீவிரமான உரையாடல்களிலும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறேன்.
மொழிக்கல்வி படிப்பவர்கள் தொடர்பாக ஒரு தாழ்வான கருத்து உள்ளதே. தங்கள் மாணவர்கள் குறித்து உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்?
பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள்தாம் தமிழ் படிக்க வருகின்றனர். பொறியியல், மருத்துவக் கல்வி போன்றவை அவர்களுக்குக் கிடைக்காத நிலையிலேயே இங்கே வருகின்றனர். அவர்களது சொந்தப் பின்னணியையும், குடும்பச் சூழலையும் முதலில் தெரிந்துகொள்வேன். பாடத்திட்டம் பற்றி மட்டும் பேசாமல் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் மற்றும் கருத்து நிலைகள் குறித்துப் பேசுவோம்.
பொதுவாகக் கலை மற்றும் மொழித்துறை சார்ந்து படிக்க வருபவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்று ஒரு கருத்து நிலவிவருகிறது. அது தவறு. என்னுடைய மாணவர்கள், கணிப்பொறி வல்லுநர்களை விடவும் அறிவார்ந்தவர்களாக, சமூக விழிப்புணர்வு உள்ளவர்களாக, நல்ல ஆய்வாளர்களாக, சிறந்த ஆசிரியர்களாக உருவாகியிருக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் வேலைசெய்தாலும் திருப்தியுடன் உள்ளனர். ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு இதுவரை ஆய்வுக் கட்டுரை நூல்கள் பத்துத் தொகுதிகள் கொண்டுவந்துள்ளோம்.
எனது வாழ்க்கையில் சந்தோஷமான, நிறைவான பணி என்பது வகுப்பறைக்குப் போவதுதான்.
நீங்கள் ஜீவாவின் எழுத்துகளைத் தொகுத்துள்ளீர்கள். தமிழ்நாட்டு முற்போக்கு அரசியலில் ஜீவாவின் தனித்துவப் பங்களிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
ஜீவாவின் அச்சிடப்பட்ட எழுத்துகள் மட்டுமின்றி ஜனசக்தி பத்திரிகையில் அவரது பேச்சுகளாக எடுத்து எழுதப்பட்ட குறிப்புகள்வரை தொகுத்தேன். இடதுசாரிக் கருத்துகளை அந்நியப்பட்ட மொழியில் இல்லாமல், தமிழ் வாழ்க்கை, கலை இலக்கிய மரபுகளிலிருந்தே பேசிய மனிதராக அவரைப் பார்க்கிறேன். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த பல தலைவர்களும் ஆங்கிலத்தில்தான் அதிகம் புலமை பெற்றிருந்தார்கள். ஜீவா தமிழ் பேசுவதால் கட்சி வட்டாரத்தில் தலைவர்களிடம் மரியாதை இல்லாத நிலை இருந்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
19ஆம் நூற்றாண்டில் உருவான அச்சுப்பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்துக் கூறுங்கள்?
நாம் தொல் இலக்கண, இலக்கிய மரபைப் பேசுகிறோம். ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவாகி வந்த அச்சுப்பண்பாடு குறித்து தமிழ் ஆய்வுப்புலத்தில் ஈடுபாடு ஏற்படவில்லை. இதுதான் சமகால வாழ்க்கையோடு தொடர்பு டையது என்று நான் நினைத்தேன். குறிப்பாக எம்பில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பழைய இதழ் தொகுப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தினோம். ஏனெனில் அக்காலகட்டத்தில் உருவான சமூக, சமய, அறிவு இயக்கங்கள்தான் நவீன தமிழ் சமூக உருவாக்கத்திற்கு வித்திட்டவை. ‘வெகுசன மரபும், அச்சுப்பண்பாடும்’ என்ற பாடத்தையே எம்.ஏ படிப்பில் சேர்த்தோம். இப்படியான பின்னணியில் 19 ஆம் நூற்றாண்டு குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சென்னை இலௌகீக சங்கம் புத்தகப் பதிப்பின் முக்கியத்துவம் என்ன?
2000ஆவது ஆண்டில் அண்ணா அறிவாலய நூலகத்தில் நூலகர் சுந்தர்ராஜன்தான் தத்துவ விவேசினி இதழ் தொகுப்பைக் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தால் ‘பாரதிதாஸன்’ என்ற கையெழுத்து இருந்தது. பாரதிதாசன், ஆரம்ப காலகட்டத்தில் வடமொழி எழுத்தைப் பயன்படுத்தி இருந்திருக்கிறார். 1914 வாக்கில் பாரதிதாசனுக்கு அந்தத் தொகுப்பு கிடைத்து படித்தும் இருக்கிறார். அது வேறெங்கோ சுற்றி அறிவாலய நூலகத்துக்கு வந்து சேர்ந்தது. அதை நகல் எடுக்க முடியாத நிலை இருந்தது. மாணவர் களுடன் சேர்ந்து பிரதி எடுத்தோம். அந்த இதழ் பல புதிய தகவல்களையும் திறப்புகளையும் உரு வாக்கியது. இங்குள்ள ஆய்வாளர்களுக்கே அந்தப் பத்திரிகை புதிது.
சென்னை சுயக்கியானிகள் சங்கம் என்னும் அமைப்பு 1878 முதல் 1888 வரை செயல்பட்டது, அந்த இதழ்கள் வழியாகத் தெரியவந்தது. சுயக்கியானிகள் என்றால் சுயசிந்தனையாளர்கள் என்று அர்த்தம். அதுவே சென்னை இலௌகீக சங்கமாகப் பின்பு மாறியது. தி திங்க்கர் என்ற ஆங்கில இதழையும் நடத்தியிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக லண்டனில் இருந்த ‘நேஷனல் செக்யுலர் சொசைட்டி’யின் கிளை என்று தங்களை இப்பத்திரிகையில் அடையாளப்படுத்திக்கொண்டார்கள். திருச்சபைகளுக்கு எதிராக நாத்திகம் பேசிய இயக்கம் அது. அந்த இயக்கத்தின் பாதிப்பாக உருவானதுதான் சென்னை இலௌகீக சங்கம். இந்து சமயத்திற்கு எதிராகவும் சாதிய அமைப்புக்கு எதிராகவும் கடுமையான கட்டுரைகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர். காலனிய காலகட்டத்தில் இதுபோன்ற இயக்கம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை.
மார்க்சியத் தாக்கம் கொண்ட நீங்கள் பெரியாரியத்தையும், தமிழியல் ஆய்வையும் சேர்த்துக்கொள்வதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
இந்து மதம் உருவாக்கிய சாதி, சாதியை நியாயப்படுத்தும் வைதீகம் - இவற்றுக்கு எதிரான மனநிலை இயல்பாகவே எனக்கு இருக்கிறது. இடதுசாரிகள்கூட மத எதிர்ப்பைத் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. இந்த அடிப்படையில்தான் மார்க்சியத்திலிருந்து பெரியாரியத்தை நோக்கியும், தமிழின் அவைதீக மரபை நோக்கியும் நான் போகிறேன். வள்ளலாரைத் திரும்ப நினைவூட்டுவதன் மூலம் சமதர்ம சிந்தனைகளைத் திரும்ப முன்னெடுக்க முடியும். பெரியார் காலத்தில் செயல்பட்ட சிங்காரவேலரையும் பகுத்தறிவு இயக்கத்தில் முக்கியமானவராகப் பார்க்கிறேன். விஞ்ஞான மனோபாவத்தோடு நாம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லுபவர் சிங்காரவேலர். எனது மாணவர்களிடமும் இதே அணுகுமுறையையே வலியுறுத்துகிறேன். பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் என்று சொல்லிக்கொடுக்கிறேன். புலமையை விட மனிதாபிமான சிந்தனை மாணவர்களுக்கு வேண்டும் என்று கருதுகிறேன். மனிதாபிமானம் இல்லாத அறிவின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.
உங்கள் தொகுப்பு மற்றும் ஆய்வுப்பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்துகிறீர்கள் அல்லவா?
ஜீவா, புதுமைப்பித்தன், சங்கரதாஸ் சுவாமிகள் தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்துவதில் எனது மாணவர்களையும் ஈடுபடுத்தினேன். எடிட்டிங், சேகரிப்பு என எல்லா விஷயத்திலும் மாணவர்களின் உழைப்பு, எனது உழைப்புக்குச் சமமானது.
தமிழகத்தில் மீண்டும் சாதி மனநிலை மேலெழுந்துள்ளது… இந்த நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வெள்ளையர்கள் 1876 வாக்கில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார் கள். அதற்கு முன்பும் சாதி இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு அடையாளத்தின் கீழ் சேராமல் இருந்தனர். அப்போது அச்சு ஊடகங்களும் பரவலாக இருந்ததால் ஒவ்வொரு வருணத்தினரும் புத்தகங்கள் எழுதினார்கள். ஒவ்வொருவரும் தான்தான் பெரிய சாதி என்று கோரிக்கொண்டார்கள். இதன் நீட்சியாகத் தேர்தல் அரசியல் பிற்காலத்தில் உருவானது. ஒரு பிராந்தியத்தில் ஒருவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு இன்றுவரை சாதிதான் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. சாதிவெறியை ஒழிக்க சாதி மறுப்புத் திருமணங்களை தொடர்ந்து ஊக்குவிப்பதைத் தவிர வேறு தீர்வே இல்லை.
சாதியை உடைப்பதில் தகவல் தொழில்நுட்பத்திற்கும், நவீன தொடர்பு சாதனங்களும் முக்கியப் பங்கு உண்டு .
தற்போது தமிழ் ஆய்வுச் சூழல் எப்படி உள்ளது?
தமிழ் ஆய்வுச் சூழலில் தற்போது சிரத்தையாக ஆய்வுசெய்யும் பழக்கம் என்பது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஒரே ஒரு ஆய்வுக் கட்டுரைகூட எழுதாத ஒருவரை ஆய்வு நிறுவனங்களின் தலைவராக நியமிக்கும் சூழல் இருக்கிறது. வையாபுரிப் பிள்ளை தெ.பொ.மீ., வ.ஐ. சுப்பிரமணியன் போன்றோர் உட்கார்ந்த நாற்காலிகளில் எந்தத் தகுதியும் இல்லாத நபர்களை அரசியல் செல்வாக்கு காரணமாக உட்கார வைத்திருக்கிறோம்.
அதிகாரத்துவச் சிக்கல்கள், இறுக்கங்கள் அதிகம் உள்ள கல்விப் புலத்தில் நீங்கள் பல்கலைக்கழகத்திலும், மாணவர்களிடமும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்?
சந்தோஷமாகச் சொல்வேன். நான் இந்தத் துறைக்கு வருவதற்கு முன்பு ஏழெட்டு நினைவு அறக்கட்டளைகள்தாம் இருந்தன. இப்போது கிட்டத்தட்ட 24 அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளோம். பெரியார், சிங்காரவேலர், புதுமைப்பித்தன், ஜீவா தொடர்பான அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் இவர்கள் தொடர்பான சொற்பொழிவுகள் பல்கலைக்கழகத்தில் நடக்கும். கடந்த பத்து வருடத்தில் 200 சொற்பொழிவுகள் மாணவர்கள் மத்தியில் நடந்திருக்கும். இந்தப் பேச்சுகள் ஏற்படுத்திய மாற்றங்களைப் பார்க்க முடிகிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
25 days ago
இலக்கியம்
25 days ago